Saturday, May 31, 2008

சம்பிரதாயங்கள் தகர்கின்றன பெண்கள் பிணம் சுமந்து சுடுகாடு சென்றனர்


புதுக்கோட்டை மாவட்டம் தொண்டமாநல்லூர் கிராமத்தில் இறந்துபோன பெண் ஒருவரை அவரது உறவுக்காரப் பெண்களே சுமந்து சென்று சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. ஆண்கள் மட்டும் தான் இந்தச் சடங்கைச் செய்யவேண்டும் என்றிருந்ததை மாற்றியுள்ள இம்மாதிரி நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் சீரங்கத்தில் திராவிடர் கழக மகளிரால் நிகழ்த்தப் பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளது. மயிலாடுதுறையிலும் இதுபோல் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் திருச்சி, தமிழ் கலை இலக்கியப் பெருமன்றப் பொறுப்பாளர் கவித்துவனின் துணைவியார் சுகுணாவின் முயற்சியால் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை உறவினர் களும், ஊர்க்காரர்களும் எதிர்த்துள்ளனர். சுடுகாட்டுக்குப் பெண்கள் வரக்கூடாது என்றனர். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறி கவித்துவன் கிராம மக்களைச் சம்மதிக்கச் செய்தார்.

கவித்துவனுடைய வாழ்விணையரும் பகுத்தறிவாளர். இறந்த உடலைப் பெண்கள் தூக்கிச் செல்வது தவறல்ல என்று கூறினார். முதலில் எதிர்த்தவர்களே, பின்னர் பாராட்டினர் என்கிற செய்தியை சுகுணா தெரிவித்தார். அவருடன் குமாரி, அனுராதா, பெர்சியா, பாவனா ஆகியோர் உடலைச் சுமந்தனர்.

Thursday, May 29, 2008

வைதீக திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் மு.க. ஸ்டாலின் பேச்சு


வைதீக திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்
சுயமரியாதைத் திருமணங்களில் மட்டுமே கலந்து கொள்வேன்
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சுவைதீகப் புரோகிதத் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன். சுயமரியாதைத் திருமணங்-களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்று நெல்லையில் நடைபெற்ற ஒரு மணவிழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி விளக்கமளித்துப் பேசினார்.


இந்தத் திருமணம் வைதீக முறைப்படி நடந்திருந்தால் நான் கட்டாயம் கலந்து கொண்டு இருக்க மாட்டேன். இங்கு வாழ்த்திப் பேசிய பலர் வாழ்த்திப் பேசி இருக்க முடியாது. இங்கு ஒரு புரோகிதர் இருந்து நெருப்பை மூட்டி புகையை உருவாக்கி அனைவரையும் கண்ணீர் வடிக்கச் செய்து கொண்டிருப்பார். அப்போது சில மந்திரங்களை சொல்வார். அது யாருக்கும் புரியாது. அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டால் அவருக்கே தெரியாது. யாரும் புரியாத நிலையில் தான் அந்தத் திருமணம் நடக்கும்.

ஆனால் சீர்திருத்த திருமணத்தில் மணமக்களை நாங்கள் வாழ்த்துகிறோம். இது எல்லோருக்கும் புரிகிறது. இந்தத் திருமணத்தில் தமிழில் வாழ்த்துகிறார்கள். எனவே இதை தமிழ் திருமணம் என்று அழைக்கலாம். இதனால் தான் தற்போது சீர்திருத்த திருமணம் அதிக அளவில் நடைபெறுகிறது
.

தமிழகத்தில் தற்போது உங்கள் ஒத்துழைப்புடன் சிறப்பான நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளான ரூ.2+க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி, சத்துணவில் வாரத்தில் 2 முட்டை, இலவச கலர் டி.வி. என அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும். இதற்கு நிதிகள் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நினைக்கலாம் நம்ம பக்கத்து கிராமத்தில் உள்ளவர்களுக்கு டி.வி. கிடைத்து விட்டதே, நமக்குக் கிடைக்கவில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. அனைவருக்கும் கலர் டி.வி. கிடைக்கும். ஒரே நேரத்தில் கொள் முதல் செய்து கொடுக்க முடியாது என்பதால் தான் படிப்படியாக கொடுக்கப்படுகிறது. திருமண வீட்டிற்கு ஆயிரம் பேர் வந்திருப்பீர்கள் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

இதனால் பலர் பந்திக்குக் காத்திருக்கிறார்கள். அது போல காத்து இருங்கள். கட்டாயம் அனைவருக்கும் டி.வி. கிடைக்கும். சொன்னதையும் சொல்லாததையும் செய்யும் இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதம் ஓர் அடிமைக் கருவி
``நான்காவது, அய்ந்தாவது சாதியாக்கி, பார்ப்பனரல்லா மக்களை மடமையில் அழுத்தி வைக்கவே வேத, புராண, மதம் வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சித்தாலும், `நா°திகன்’, `மதத் துவேஷி’, `வகுப்புத் துவேஷி’ என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்துவிட்டால் என்ன அர்த்தம்?’’

--------- தந்தைபெரியார் ``விடுதலை’’, 17.5.1957

Tuesday, May 27, 2008

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்

உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன. அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன. அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார். உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

----------தந்தைபெரியார் - "குடிஅரசு" -6-12-1947

Wednesday, May 21, 2008

சுப்பிரமணியசாமியை கைது செய்ய வேண்டும்

தன்னிடம் இன்னும் பல அமைச்சர்கள் பேசிய தொலைபேசிப் பேச்சின் குறுந்தகடுகள் உள்ளன என்று மிரட்டும் சுப்பிரமணியசாமி யைக் கைது செய்து அவருக்கு அவை எப்படிக் கிடைத்தன என்று விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் இது பற்றி பேசியது:

தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது அநாகரீகமானது சட்ட விரோதமானது தனி மனித உரிமைக்கு எதிரானது. இதனை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் தொலை பேசிகளை ஒட்டுக் கேட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, இதில் சம்பந்தப்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது தவறான முன்மாதிரியாகிவிடும்.

இன்னும் பல அமைச்சர் களின் சி.டி. தன்னிடம் இருப்ப தாக சுப்பிரமணியசாமி மிரட் டுகிறார். எனவே சி.டி.க்கள் அவருக்கு எப்படிக் கிடைத்தன என்பது பற்றி அவரைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.

- இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

வரதராசன் வருத்தமும்-கலைஞர் விளக்கமும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மதிப்புக்குரிய தோழர் வரதராசன் அவர்கள்; அவர் களின் கட்சி ஏடு "தீக்கதிரி"ல் எழுதி யுள்ள "மனம் திறந்து ஒரு வாழ்த்து!" என்ற கட்டுரையைப் படித்தேன்.

"கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை" என்று நான் எனது அறிக்கை ஒன்றில் "குமுறியிருப் பதை"; அவர் தனது கட்சிக்கும் சேர்த்துத் தவறாக எடுத்துக் கொண்டமைக்காக நான் மிகவும் வருந்துகிறேன். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்க வேண்டுமே தவிர; விருப்போ வெறுப்போ அதனை வெளிப்படையாகக் கூறி நயம்பட இடித்துரைத்துத் திருத்துகின்ற நிலை யில் "கூட்டணி தர்ம"த்தை எல்லா கட்டங்களிலும் கலந்துபேசி கடைப் பிடிக்கிற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என் அறிக்கையில் காணும் அந்த வாசகத்திற்குத் தங்களுக்குப் பொருந்தாத பொருளை ஏன் காண வேண்டும் என்பதே என் கவலை!

மற்றபடி; மனம் திறந்து அவர் எழுதியுள்ள என்னைப் பற்றிய வாழ்த்துக் கட்டுரையை (மேற்கண்ட இந்த ஒரு விளக்கத்தைத் தவிர வேறெதுவும் கூறாமல்) வரிக்குவரி அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

- மு.கருணாநிதி

இதோ; வரதராசன் அவர்களின் வாழ்த்துரை:

"தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி, வரும் ஜூன் 3ந்தேதிய தனது 85-வது பிறந்த நாள் தொடர்பாக விடுத்துள்ள இரண்டு அறிக்கைகள் பொருள் பொதிந்தவை.

‘என் மனநிலை கருதியும், உடல்நிலை கருதியும், வாழ்த்துக்களை ஏற்றிடும் பணி யிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டுமென்று உற்ற நண்பர்களையும், உயிரனைய உடன் பிறப்புக்களையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்பது கலைஞரின் முதல் அறிக்கை வாசகம்.

கலைஞர் தலைமையிலான இன்றைய தமிழக அரசு இரண்டாண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நாளில் வெளியான அறிக்கை இது.

அன்றைய தினம் தமிழக சட்டமன்றப் பேரவையில் இந்த ஆட்சிக்கான வாழ்த்துக்களை இதர பல கட்சியினரோடு மார்க்சிஸ்ட் கட்சியும் தனது சட்டமன்றக் குழுத் தலைவர் சி.கோவிந்த சாமியின் உரை வழியாகப் பதிவு செய்தது.

ஆனால், இன்றைய தமிழக ஆட்சியில் ‘இரண் டாண்டு சாதனைப் பட்டியலை விட வேதனைப் பட்டியல்தான் அதிகம்’ என்று ஒரு ‘தீர்ப்பையே’ வழங்கியுள்ள தினமணி நாளேட்டின் தலையங்கம்(மே-15) கீழ்க்கண்ட கேள்விகளை முதல்வருக்கு முன்வைத்து அவர் தெளிவுபடுத்தக் கோரியது:

‘அவரது (முதலமைச்சரது) மனநிலையைப் பாதிக்கும் பிரச்சனை குடும்பத்திலுள்ள குழப்பங்களா, தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது அதிருப்தியா, இல்லை தோழமைக் கட்சிகளின் செயல்பாடா? இதையும் அவரே தெளிவுபடுத்தினால் நலம்!’ என்று அந்தத் தலையங்கத்தை நிறைவு செய்திருக்கிறார் தினமணி ஆசிரியர்.

கலைஞரின் இரண்டாவது அறிக்கை அதே நாளில் ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. தினமணியின் கேள்விகளை எதிர்பார்த்து அதன் கேள்விகளுக்கு விடை பகருவது போலவே இந்த அறிக்கை அமைந்துள்ளதுதான் தற்செயலாக நடந்துள்ள விசித்திரம்!

எனினும் ‘பிறந்த நாள் கொண்டாட வேண்டாம்’ என்ற கலைஞரின் வேண்டுகோளுக்குப் பல்வேறு பிரச்சனைகளால் அவருக்கு எழுந்துள்ள மன உளைச்சல்களே முக்கிய காரணம் - உடல்நிலை அல்ல என்பதை இந்த அறிக்கை தெளிவாக்கி யிருக்கிறது.

‘சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் விடப் பட்டிருப்பது; விபரீத தீவிரவாதம் தலைவிரித்தாடி கொண்டிருப்பது’ ஆகிய இரண்டும் கலைஞரின் ஏக்கப் பெருமூச்சுக்கு காரணமாக அமைந் திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சொல்லப் போனால், இந்தப் பிரச்சனைகளில் அவருக்குள்ள ஆதங்கத்தை, மார்க்சிஸ்ட் கட்சி பகிர்ந்து கொள்ளவே செய்கிறது. பெரும்பாலான தமிழ் மக்களும் அதே உணர்வைத்தான் வெளிப் படுத்துவார்கள்.

‘என்னுடன் இருப்போர் தன்னலம் மறப்போர் - தாயக நலத்துக்காக உயிரையும் துறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில் எனக்கு ஏன் பிறந்த நாள் விழா?’ என்று கலைஞரின் அறிக்கை வாசகம் தனது உடன்பிறப்புகளைப் பற்றிய அவரது கவலை. இந்தக் கவலையை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டிய எல்லைக்கு நிலைமை சென்றிருப்ப தாகக் கலைஞர் கருதியிருக்கிறார் என்றால், தி.மு.க நண்பர்கள் இதை ஓர் எச்சரிக்கை மணியொலியாக எடுத்துக் கொள்வது நல்லது.

ஆனால், ‘கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை’ என்று கலைஞரின் அறிக்கை, தோழமைக் கட்சியினரது செயல்பாட்டை - இன்ன கட்சிகள் என்று சுட்டப்படாத நிலையில் பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

‘நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க’ என்ற உயரிய நோக்கங்கள் எல்லா அரசியல் இயக் கங்களுக்கும் பொதுவானவை. இந்த நோக்கங்கள் நிறைவேற வேண்டுமென்றால் ‘யார் ஆட்சிக்கு வரக்கூடாது’ என்ற மதிப்பீட்டின் விளைவாகத் தோழமைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசியல் போராட்டத்தில் - அது தேர்தலின் போதானாலும் சரி, இதர சந்தர்ப்பங்களிலும் சரி - கூட்டணியாக அமைகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மத்திய அரசில் வகுப்புவாத - மதவெறி சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உணர்வோடுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் ஆதரவைத் தொடர்கிறது. அந்த அரசின் - சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட - தவறான கொள்கைகளில் மாற்றம் கண்டிட தி.மு.க.வுடன் தோழமையைத் தொடர்ந்து வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ‘கடந்த கால மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சியைத் தூக்கியெறிய வேண் டும்’ என்ற அறைகூவலோடுதான், தி.மு.க.வுடன் தோழமைக் கரம் கோர்த்துத் தேர்தல் களத்தில் நின்றோம். இந்த ஆட்சியை குறுக்கு வழியில் வீழ்த்திட துடிக்கும் தீய சக்திகளின் முயற்சியை முறியடிப்பதிலும் துணை நிற்கிறோம்.

ஆனால் ‘கூட்டணி’, ‘தோழமைக் கட்சி’ என்பதிலேயே மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கிடை யிலும், பொதுவான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து என்பது அடங்கியிருக்கிறது அல்லவா? அதனால்தானே தோழமை நீடிக்கிற போதும், தனித்தனிக் கட்சிகளாக நாம் அவரவர் செயல் பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்! எனவே, ஆட்சிக்கு ஆதரவும், தோழமையும் ஒரு பக்கம் நீடிப்பதும், மக்கள் பிரச்சனைகளில் சுயேட்சையான நிலைப்பாட்டையும், இயக்கத்தையும் மேற்கொள்ளுவதும், ஒரு ஜனநாயகக் கடமையே என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

எனவேதான், கலைஞரின் இதர பல கவலை களையும், ஆதங்கங்களையும் பகிர்ந்து கொள்கிற போதே ‘கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை’ என்ற அவரது கூற்றுக்கு அப்பால் நிற்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தமிழ்நாட்டில் தோழமைக் கட்சிகளாக இருப்பதிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது மார்க்சிஸ்ட் கட்சி. இதர மூன்று இடதுசாரிக் கட்சிகளோடு கொண்டுள்ள தோழமை மேற்குவங்கம், திரிபுரா, கேரள மாநிலங்களில் ஒரு பொதுவான இடதுசாரித் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஆட்சியிலேயே நீடிக்கிற தோழமை அது. ஆனால், இந்த இடதுசாரிக் கட்சிகளேகூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சுயேட்சையான நிலைப்பாட்டை எடுத்ததையும், ஏன் கடுமையான விமர்சனக் கணைகளையும் தொடுத்ததையும், நாடறியும் அல்லவா? அதற்காக தோழமை இடதுசாரிக் கட்சிகளை சி.பி.ஐ (எம்) சினந்ததோ, முனிந்ததோ இல்லையே! கருத்து வேறுபாடுகளைக் களைய ஜனநாயக ரீதியில் விவாதம் அல்லவா நடத்துகிறோம்!

இவற்றை நாம் இங்கே எடுத்து வைப்பது, கலைஞரின் அறிக்கைக்கு ஒரு பதிலாக அல்ல.

‘தோல்வி கண்டு துவளாமை;

துரோகம் கண்டு தளராமை’

- என்பதுதான் கலைஞரின் அரசியல் முதிர்ச்சிக்கான அடையாளங்கள்.

எனவே, 85வது பிறந்த நாளில் தளர்வுக்கும், சலிப்புக்கும் இடந்தராமல் மக்கள் தொண்டினைத் தொடருங்கள் என்ற வேண்டுகோளோடு, இந்த மனம் திறந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கு கிறோம். நகுதற் பொருட்டன்று நட்பு என்பது வள்ளுவன் வாக்கு! "

- என். வரதராசன்

மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

----------- நன்றி: முரசொலி

Monday, May 19, 2008

கடவுளுக்கு அறிவு உண்டா? - சார்லஸ் பிராட்லா

எல்லாம் அறிந்தவர் என்று கூறப்படும் கடவுள் கண்டு அறியும் ஆற்றல் உள்ளவராக இருக்கமுடியாது

மாபெரும் கண்டு அறியும் ஆற்றலை ஒரு மனிதன் பெற்றிருக்கும் அதே நேரத்தில், மிகக் குறைந்த நினைவாற்றலையும் அவன் பெற்றிருக்கக் கூடும்; அல்லது அதிக நினைவாற்ற-லையும், குறைந்த கண்டறியும் ஆற்றலையும் பெற்றிருக்கக்கூடும். என்றாலும் இக் கண்டறி-யும் ஆற்றல், நினைவாற்றல் இரண்டும் நுண்ணறிவில் சேர்க்கப் பட்டுள்ளன. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட காட்சிகளைக் கண்டு ஒப்பிடும் ஆற்றல், மதிப்பீடு செய்யும் ஆற்றல், எதிர்வினையாற்றும் ஆற்றல் ஆகிய அனைத்தையும் இதே போன்று குறிப்பிடலாம். இவை அனைத்தும், மனதின் அனைத்து நிலைகளும் நுண்ணறிவு என்னும் சொல்லில் சேர்க்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற சொல் என்ன பொருள் தருவதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கடவுள் நுண்ணறிவு பெற்றதாக இருக்க முடியாது என்று நாம் பதில் அளிக்கிறோம். கண்டு அறியும் ஆற்றல் என்பது ஒரு புதிய கருத்தைப் பெறுவது ஆகும் என்ப-தால், அவரால் எப்போதும் எதையும் கண்டு அறியமுடியாது. ஆனால் கடவுளோ அனைத்-தும் அறிந்தவர் என்று கூறப்படுகிறது; அதனால் அவரது கருத்துகள் அனைத்தும் எப்போதுமே நிலையானவையாகத்தான் இருக்க முடியும். ஒன்று அவர் எப்போதும் கண்டு அறிந்து கொண்டவராகவும், அறிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும் அல்லது எதையும் கண்டு அறியாதவராக இருக்க வேண்டும். கடவுள் எப்போதும் எதையும் கண்டு அறிபவராக இருக்க முடியாது; அவ்வாறு அவர் இருந்தால், எப்போதும் அவர் புதிய அறிவைப் பெறு-பவராகவே இருப்பார். ஏதேனும் ஒரு நிலையில் அவர் இப்போது பெற்றிருக்கும் அறிவை விடக் குறைந்த அறிவையே பெற்றிருக்கும் நிலை இருந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர் முழுமையான அறிவைப் பெற்றவராக இருந்திருக்கவில்லை. அப்படியானால் அவர் கடவுளாகவே இருக்க முடியாது.

புரிந்து கொள்ளும் பகுத்தறிவு அற்ற முழுமையான நுண்ணறிவு இருக்க முடியுமா?
எதையும் கடவுளால் மறக்கவோ, நினைவு கூறவோ , ஒப்பிட்டுக் காணவோ, எதிர்வினை-யாற்றவோ, மதிப்பிடவோ இயலாது. புரிந்து கொள்ளுதல் என்பது இல்லாமல் முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கலிரிட்ஜ் கூறுகிறார்: “புலன் அறிவுகளால் மதிப்பீடு செய்யும் ஆற்றலே நுண்ணறிவு என்பதாகும்.” எவருடைய ஆற்றல்? யாரோ ஒருவரின் ஆற்றல்? கடவுள் தன் உணர்வால் கண்டு அறிவும்படியானதாக, கடவுளைத் தாண்டி இருக்கும் ஏதேனும் ஒன்று உள்ளதா? பகுத்தறிவு இன்றி முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கடந்த காலத்தைப் பற்றி அறிந்திருந்து, நிகழ்கால பட்டறிவு கொண்டு, எதிர்காலத்தில் ஏற்பட இயன்ற பட்டறிவை ஏறக்குறைய முன்னதாக ஊகித்துக் கூறும் மனநிலையையே பகுத்தறிவு என்று நாம் குறிப்பிடுகிறோம். கடவுளைப் பொறுத்தவரை அவருக்குக் கடந்த காலமும் , எதிர் காலமும் இருக்கமுடியாது. அதனால் பகுத்தறிவு என்பது அவருக்கு இயலாத ஒன்று. மனஉறுதியும், விருப்பமும் இல்லாமல் முழுமையான நுண்ணறிவு என்பது இருக்க முடியாது. கடவுளுக்கு இது உள்ளதா? கடவுள் உறுதியாக விரும்-பினால், அனைத்து ஆற்றல் பெற்ற அவரின் விருப்பம் தடை செய்ய முடியாததாக இருக்க வேண்டும். எல்லையற்றவரின் விருப்பம் மற்ற அனைத்து விருப்பங்களையும் நீக்கிய-தாகத்தான் இருக்க வேண்டும்.

நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ கடவுளுக்கு இருக்க முடியாது
கடவுள் எதையும் எப்போதும் கண்டறிய-முடியாது. கண்டு அறிவதும், புலன்களால் உணர்வதும் ஒன்று போலானவை. ஒவ்வொரு உணர்வும் ஒன்று மகிழ்ச்சி அளிப்பதாகவோ அல்லது துன்பம் அளிப்பதாகவோ இருக்கிறது. கடவுள் மாற்ற முடியாதவர், மாற இயலாதவர் என்றால் அவரை மகிழ்ச்சி அடையவோ துயரம் அடையவோ செய்ய இயலாது. ஒவ்வொரு புதிய உணர்வும் மன, உடல் நிலை-யில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். மாற்ற முடியாத வராக இருக்கும் கடவு-ளால் மாற இயலாது. உணர்ந்து அறிவது என்பதே அனைத்துக் கருத்துக்களுக்கும் தோற்று வாயாகும். ஆனால், மனதிற்கு வெளி-யே உள்ள பொருள்களை மட்டுமே உணர்ந்து அறிய முடியும். கடவுள் எல்லையற்றவராக இருந்தால், அவருக்கு வெளியில் எந்தப் பொருளும் இருக்க முடியாது. எனவே உணர்ந்தறிவது என்பது அவரால் இயலாதது. ஆனால், கண்டறியும் ஆற்றல் இன்றி நுண்ணறிவு எங்கேயிருந்து வந்தது?

மாற்றமற்றதாகக் கருதப்படும் கடவுளுக்கு மதிப்பீடு செய்யும் ஆற்றலும் இருக்க முடியாது
மாற்ற இயலாத கடவுளுக்குக் கடந்த காலம், எதிர்காலம் என்பது இல்லை என்பதால், கடந்த காலத்தைப் பற்றிய நினைவாற்ற-லையோ, எதிர்காலத்தைப் பற்றிப் பகுத்தறியும் ஆற்றலையோ கடவுள் கொண்டிருக்க முடியாது. கடந்த, நிகழ், எதிர் என்னும் சொற்கள் மாற்றத்-தைக் குறிப்பனவாகும். காலம் கடப்பதை அவை உறுதிப்படுத்துகின்றன. மாற்ற முடி-யாத கடவுளிடம் மாற்றம் ஏற்படுவது என்பது இயலாதது. கண்டறியும் ஆற்றலோ, நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ இன்றி நுண்ணறிவு என்பதை நீ கொண்டிருக்க முடியுமா? மதிப்பீடு செய்யும் ஆற்றலைக் கடவுள் பெற்றிருக்க இயலாது. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சிந்தனைகளை இணைத்துக் காண்பதோ, பிரித்துக் காண்ப-தோ மதிப்பிடும் செயலில் அடங்கியுள்ளது. இதற்கு மனநிலை மாற்றமும் தொடர்பு கொண்டது. மாற்ற முடியாத கடவுளிடம் மாற்றம் என்பது இருக்கமுடியாதது. கண்டு-அறியும் ஆற்றலோ, நினைவாற்றலோ, பகுத்தறியும் ஆற்றலோ, மதிப்பிடும் ஆற்றலோ இன்றி நுண்ணறிவை மட்டும் நீ எவ்வாறு பெற்றிருக்க இயலும்? கடவுளால் சிந்திக்க முடியாது. நினைக்கப்படும் பொருள், நினைக்கப் படாத பொருளில் இருந்து பிரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே சிந்தனை என்பதன் விதியாகும். வேறு வகையில் சிந்திப்பது என்று சொன்னால், ஏதுமில்லாத-தைப் பற்றி சிந்திப்பதாகும்; எந்த தெளிவான குறியீடும் இன்றி ஒரு கருத்தைக் கொள்வது என்பது எந்தக் கருத்துமே அற்றதாகும். என்றாலும் இவ்வாறு பிரித்துக் காண்பது மாற்றத்தை உள்ளடக்கியது. மாற்ற முடியாத கடவுளிடம் மாற்றம் என்பது இருக்க முடியாது. நினைவாற்றலில், நினைவு கூறப்படும் பொருள் மறந்துபோன பொருள்களிடமிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவே வேறு-படுத்திக் காணப் பட வேண்டும். கடவுளால் மறக்க இயலுமா? சிந்தனை என்பது இன்றி நுண்ணறிவை உன்னால் பெற்றிருக்க இயலுமா?- தெய்வத்தின் ஆற்றல்களில் ஒன்றாக எல்லை-யற்ற நுண்ணறிவைத் தான் குறிப்பிடவில்லை என்றும், மனித இனத்தில் ஓரளவு எல்லையற்ற நுண்ணறிவு காணப்படுகிறது என்று குறிப்பிடுவதாகவும், ஆத்திகர் இதற்கு பதில் அளித்தால், நுண்ணறிவு என்று வேறு எதை அவர் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவாகவும், குறிப்பாகவும் விளக்க அவர் கடமைப்பட்டுள்ளார். இதைச் செய்யாதவரை, மேலே கூறப்பட்டவைகளுக்கு விடை தேவை.
காரண காரிய தத்துவம் இனியும் செல்லுபடியாகாது

வேறொரு ஆன்மீகக் கோட்பாடு இவ்வாறு கூறுகிறது: “ஒவ்வொரு காரியத்துக்கும் ஓர் காரணம் இருக்க வேண்டும். முதற் காரணமான பிரபஞ்சம் எல்லையற்றதாக இருக்க வேண்டும்; அந்த முதற்காரணமான பிரபஞ்சமே கடவு-ளாக இருக்கவேண்டும்.” கடவுள்தான் முதல் காரணம் என்று கூறுவதற்கொப்பாகும் இது. காரணம் என்பதால் என்ன புரிந்து கொள்ளப்-படுகிறது? முழுமையாக விளக்குவதானால், அச் சொல்லுக்கு எந்த மதிப்புமே இல்லை. அதனால் காரணம் என்பது எல்லையற்றதாக, முடிவற்றதாக இருக்க முடியாது. முதல் காரணம் என்பதால் அறிந்து கொள்ளப்படுவது என்ன? ‘வட்ட முக்கோணம்’ என்ற சொற்-றொடர் என்ன பொருள் அளிக்குமோ அதை விட அதிகமான பொருளை ‘முதல் காரணம்’ என்ற சொல் நமக்கு அளித்துவிடவில்லை. காரணமும் காரியமும் தொடர்புடைய சொற்கள். ஒவ்வொரு காரணமும் ஏதோ சில முன்நிகழ்வுகளின் பாதிப்பாகும்; அவ்வாறே ஒவ்வொரு பாதிப்பும் அதன் தொடர்-விளைவாகும். முதன்மையான, தொடக்க காரணம் ஒன்றினால் உயிர்வாழ்ந்திருப்பது முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்கவே முடியாது.

உயிரினத் தோற்றத்தின் தொடக்கத்தைக் கண்டறிவது அவ்வளவு எளிதானதல்ல
பிரபஞ்சத்தின் தொடக்கம் என்று கூறப்-பட்டுள்ளதை ஆத்திகர் சிந்தித்துப் பார்க்கவே இல்லை; ஆனால் சிந்தித்துப் பார்க்காமலே ஒப்புக் கொள்ளப்பட்டதாகும் அது. மோன்-டக்னியின் மொழியில் கூறுவதானால், “தாங்கள் நம்புவதை மனிதர்கள் அவர்களாகவே தங்களை நம்பச் செய்து கொள்கிறார்கள்.” படைப்பு என்று அழைக்கப் படுவதை நம்புவது என்பது, அறியாத ஒன்றின் தலைவாயில் முன் நுண்ணறிவு என்பது விழுந்து வணங்குவதைத் தவிர வேறொன்றுமில்லை. தொடர்ந்த, முடிவற்ற உயிரினத் தோற்றத்தின் வழியில் உயிர் வாழ்ந்திருத்தல் என்ற கோட்பாடே தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்பதை மட்டும் நம்மால் அறிய முடிகிறது. இந்த வழியில் தொடக்கம் என்று எதுவும் நமக்கு இருக்கவில்லை; இருள் சூழ்ந்த கடந்த காலத்தில் அதனை நாம் தேடுகிறோம். ஆனால் நம்மால் சிறிது தொலைவுதான் செல்லமுடிகிறது; நாம் எவ்வளவு தூரம் சென்றாலும், இன்னும் செல்லவேண்டிய தூரம் மிக அதிகமானதாகவே உள்ளது.

வரையறைக்குட்பட்ட பாதிப்பிலிருந்து எல்லையற்ற முதற்காரணத்தை எவ்வாறு ஊகித்தறிய முடியும்?

‘பிரபஞ்ச காரணம்’ என்று பின்னர் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? அதன் முழுமையான முக்கியத்துவத்துடன் காரணம் என்பதற்கு °பினோசா கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கிறார்: “ காரணம் என்று சொல்வதன் மூலம் நான் புரிந்து கொள்ள இயன்றது, உயிர் வாழ்ந்திருத்தல் என்பதில் அடங்கியிருக்கும் உட்கருத்து என்றோ அல்லது அதன் இயல்பு உயிர்வாழ்ந்திருத்தல் என்று மட்டுமோ கருத இயன்றது என்பதுதான்.” காரணம் மற்றும் உயிர்வாழ்ந்திருத்தல் என்ற இரு சொற்களும் ஒரே பொருளை அளிப்பவையாக °பினோசா கருதுகிறார். இவ்வாறு இச்சொற்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், “நோக்கங்களும் அவற்றை எட்டுவதற்கான வழிகளும்” என்று கூறும் இதே போன்ற சொற்றொடருக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அதிக பொருள் எதையும் அது பெற்றிருக்கவில்லை. “ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.” ஒவ்வொரு காரியம் என்று கூறுவது காரியங்கள் என்ற பன்மையைக் குறிக்கிறது. ஒவ்வொரு காரியமும் முடிவற்றதாக இருக்க வேண்டும்; அப்படியானால், வரையறை கொண்ட பாதிப்பிலிருந்து, உலகளாவிய, எல்லையற்ற முதற்காரணத்தை தத்துவ ரீதியாக எவ்வாறு ஊகித்தறியமுடியும்?

மருத்துவர் ராமதாசுக்கு அமைச்சர் க. பொன்முடி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பதில்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர் களுக்குப் பதில் அளிக்கும் வகையி லும், உயர்கல்வித் துறையின் சிறப் பான செயல்பாடுகள்பற்றி பொது மக்கள் தெரிந்துகொள்ளும் வகை யிலும் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் க. பொன்முடி அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

அதுபற்றிய செய்திக் குறிப்பு வருமாறு:-

1. பல்வேறு சட்டச் சிக்கல் கள் - சூழல்களை சமாளித்து தொழிற் படிப்பிற்கான நுழை வுத் தேர்வு ரத்து செய்யப்பட் டது. - இதனால் கடந்த ஆண்டை விட கிராமப்புற மாணவர்கள் 43.9 சதவிகிதம் பேர் முன்பைவிட கூடுதலாகப் பயன்பெற்றனர்.

சுயநிதிக் கல்லூரிகள்

2. கடந்த ஆட்சியில் சுய நிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சத விகிதம் நிர்வாக ஒதுக்கீடு 50 சதவிகிதம் என்றி ருந்ததை மாற்றி, அரசு ஒதுக் கீடு 65 சதவிகிதம், நிர்வாக ஒதுக் கீடு 35 சதவிகிதம் என நிர்ண யித்ததால் 2007-2008இல் மட் டும் மேலும் 56,041 மாணவர் கள் பயன் பெற்றனர். தனியார் கல்லூரிகள் உயர்நீதி மன்றத் தில் இதற்கு எதிர்ப்பான தீர்ப் பைப் பெற்ற போதும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் மூலம் மீண்டும் 65 - 35 தொடர்ந்தது.

3. கடந்த ஆட்சியில் அரசு நிதி உதவியோடு பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் துவக்கப்படவில்லை. ஆனால் கலைஞர் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளில் மேட்டூர், வால் பாறை, பெரம்பலூர், ஒரத்த நாடு, சுரண்டை, குளித்தலை ஆகிய ஆறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

கட்டண ரத்தால் பலன்

4. அரசு கல்லூரி மாணவர் களுக்கான கல்விக் கட்ட ணத்தை அறவே ரத்து செய்த தன் மூலமாகவும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கியதன் மூல மாகவும் அனைத்து அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை'' கொண்டு வந்ததன் மூலமாக வும், அரசுக் கல்லூரிகளிலும் கலந்தாய்வு முறையில் மாண வர் சேர்க்கை கொண்டு வந்த தாலும் கடந்த இரண்டு ஆண் டுகளில் 1,57,957 பேர் அதிக மாக கல்லூரிகளில் சேர்ந்துள் ளதை ராமதாஸ் அறிவாரா?

உயர் கல்வியில் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் வித்தியாசமே இல்லை - என்று உள்நோக்கமே இல்லாத உண்மை விளம்பி'' கூறுகிறார்.

கடந்த ஆட்சியில் அரசு கல்லூரிகளில் உருவாக்கப் பட்டு அதிக நிதிக் கட்டணம் வசூலித்த சுயநிதிப் பாடப் பிரி வுகள் பொது வகைப் பாடப் பிரிவுகளாக மாற்றப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான் என்பது தெரியுமா?

அரசுப் பொறியியல் கல் லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ. 12,550 லிருந்து ரூ. 7,550 ஆக குறைக்கப்பட்டதும் இந்த ஆட்சியில் தான் என்பதாவது தெரியுமா?

பாலிடெக்னிக்குக்கும் கட்டணம் ரத்து!


சென்ற ஆண்டு முதல் அனைத்து அரசு கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்ததால் 3,74,254 மாணவ மாணவியர் பயன் அடைந்தது மட்டுமின்றி இந்த ஆண்டு அந்தச் சலுகை அரசு பாலிடெக்னிக் களுக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைய உள்ளதாவது தெரியுமா? அவர்களுக்கு சென்ற ஆண்டு முதல் இல வசப் பாடப் புத்தகம் வழங்கப் படுவதையாவது அறிவாரா?

கடந்த ஆட்சியில் கெஸ்ட் லெட்சரர் என்று சொல்லி ஆசிரியர்கள் அவமானப்படுத் தப்பட்டதோடு பணி நியம னமே தடை செய்யப்பட்டதே! அத்தடையை நீக்கி 2007-2008இல் 914 விரிவுரையாளர் களும் - அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2,600 விரிவுரை யாளர்களும் நியமனம் செய்யப் பட்டு இந்த ஆண்டில் தாழ்த் தப்பட்டவர்களுக்கான 522 பின்னடைவுப் பணியிடங்க ளோடு மேலும் 540 விரிவுரை யாளர்கள் நியமிக்கப்பட விருக்கிறார்களே, அது டாக் டர் ராமதாசுக்குத் தெரியாதா?

அண்ணா பல்கலைக் கழ கம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு பரவலாக்கப் பட்டுள்ளதை அறியாரா?
மேலும் இந்த ஆண்டில் இப்பல்கலைக் கழகங்களின் மூலமாக திண்டி வனம், விழுப் புரம், பண்ருட்டி, நாகப்பட்டி னம், ராமநாதபுரம், அரியலூர் ஆகிய ஆறு இடங்களில் அரசு கட்டணத்தோடு (7550 ரூபாய்) பொறியியல் கல்லூரி கள் தொடங்கப்பட்டு புதிய தாக 1440 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது ராம தாசுக்குத் தெரியாதா?

மேலும் சென்ற ஆண்டே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் படிப்புகள் காலி இருந்ததைத் தவிர்க்கவும், மேலும் பலர் சேரவும், கிரா மப்புற மாணவர்கள் பயன் பெறவும், குறைந்த பட்ச மதிப் பெண்களை குறைத்ததற்கு கூட உள்நோக்கம் கற்பிக்க முனையலாமா?

மூன்று மத்தியப் பல்கலைக் கழகங்கள்

கல்வியாளர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் முதல் அமைச்சருக்கு 11.5.2008 அன்று எழுதிய கடிதத்தை டாக்டர் ராமதாஸ் ஒரு முறை யாவது படிக்க வேண்டுகிறேன். 13.5.2008 நாளிட்ட இந்து'' நாளேட்டில் தலைவர் கலைஞர் டெல்லியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் அவர்களோடு கொண்ட தொடர்பால் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கின்ற மூன்று மத்திய பல்கலைக் கழகங் களைப்பற்றி - அந்தப் பத்திரி கையின் செய்தியாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையையும் தயவு செய்து எல்லாம் தெரிந்த டாக்டர் ராமதாஸ் படிக்க வேண்டுகிறேன்.

மேலும் தமிழகத்தில் அறி விக்கப்பட்டுள்ள ஏழு புதிய ஒருமைப் பல்கலைக் கழகத்தைப் பற்றியும் அவரும் வேறு கட்சியினரும் பல்வேறு கருத் துகளை கூறி வருகின்றனர். மத்திய அரசின் தேசிய அறிவு சார் ஆணையம் (National Knowledge Commission) இந்தி யாவில் 1500 பல்கலைக் கழகங் களாவது தோன்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். கல் வித்தரம் உயர, சிறந்த கல்லூரி கள் ஆராய்ச்சியை வளர்க்க பல்கலைக் கழகங்களாக உயர்த் தப்பட வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். இதில் தனி யார் மற்றும் அரசு பல்கலைக் கழகங்கள் அடங்கும்.

கல்வியியற் பல்கலைக் கழகம்

டாக்டர் ராமதாஸ் 'அரசு கல்லூரிகளை விட்டு விட்டு தனியார் கல்லூரிகள் மீது என்ன கரிசனை' என்கிறார். அய்ந்து அரசு கல்லூரிகள் - மாநிலக் கல்லூரி - ராணி மேரிக் கல்லூரி - குடந்தை கல்லூரி (ஆண்கள்-பெண்கள்) கோவை கல்லூரி - இவை அய்ந்தும்- ஒருமை (Unitary) பல் கலைக் கழகங்களாக மாற்றப் படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரி விக்கிறேன்.

மேலும் 'கல்வியி யற் பல்கலைக் கழகமும்' இந்தி யாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது அவருக்குத் தெரியாதா? மேலும் சில சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இது குறித்துக் கருத்துகளை தெரி வித்துள்ளன. இவைகள் பல் கலைக் கழகங்களாக மாற்றப் படுவதால் தற்போது அவை களுக்கு அரசு கொடுத்து வரும் நிதி கண்டிப்பாக நிறுத் தப்பட மாட்டாது. மேலும் புதிய பல்கலைக் கழகங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் நிதியும் கிடைக்கும், மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்பும் பெருகும். தற்போது அரசுக் கல்லூரிகளுக்கு உள்ள சலுகைகள் அனைத்தும் இப் புதிய ஒருமைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கும், ஆசி ரியர்களுக்கும் தொடரும். ஆகவே தான் கல்வியின் தரத்தை உயர்த்தவும் ஆசிரி யர்களின் நிலையை மேம் படுத்தவும், பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரை களின்படியும் தேசிய அறிவு சார் ஆணையக் கருத்தின் படி யும் ஏழு புதிய பல்கலைக் கழ கங்கள் அறிவிக்கப்பட்டுள் ளன. இவைகளின் நிறைகுறை களைப் பற்றி ஆர்வமுடையவர் களுடனும், சட்டமன்ற ஆய் வுக் குழுவுடனும் (Select Committee) இந்த அரசு விவா தித்து விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்ப தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, May 17, 2008

மருத்துவர் ராமதாஸ் பெயில் மார்க் போடுவதால் ஒன்றும் குறைந்துவிடாது

அரசியல், சமுதாயத் தேர்வுகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரிடம் பாஸ் மார்க் வாங்கியுள்ளேன். மருத்துவர் ராமதாஸ் பெயில் மார்க் போடுவதாலேயே எனக்கு ஒன்றும் குறைந்து விடாது என்று முதல்வர் கலைஞர் அவர்கள் செய்தியளாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் நீங்கள் பாஸ் மார்க் பெறவில்லை என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே, இதற்கு உங்கள் பதில் என்ன?

கலைஞர் : நான் ஏற்கெனவே எல்லாப் பாடங்களிலும் பொதுவான அரசியல், சமுதாயத் தேர்வுகளில் தந்தை பெரியாரிடமும், பேரறிஞர் அண்ணாவிடமும், ஏன் பெருந்தலைவர் காமராஜரிடமும் கூட பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன். மருத்துவர் ராமதாஸ் எனக்கு பெயில் மார்க் போடுவதாலேயே ஒன்றும் குறைந்துவிடாது. நான் எஸ்.எஸ்.எல்.சி. யிலேயே பெயில் ஆனவன். அதனால்தான் இயக்கத்திலும், பொது வாழ்விலும் ஈடுபட்டு முதலமைச்சராகவே ஆகியிருக்கிறேன். மருத்துவர் ராமதாஸ் சொல்வதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. அதை ஒரு Credit ஆகவே கருதுகிறேன்.

செய்தியாளர் : அமைச்சரவையில் மாறுதல் செய்யப் போகிறீர்களா?

கலைஞர்: உண்டென்றும் சொல்வதற் கில்லை; இல்லை யென்றும் சொல்வதற்கில்லை.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Friday, May 16, 2008

ராமதாஸுக்கு செலக்டிவ் அம்னீஷியா!

தி.முக.வைத் தாக்கிக் கொண்டிருந்த ராமதாஸ் சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியையும் தாக்கிப் பேசியிருக்கிறார். ராமதாஸ் சொன்ன புகாருடன் கி. வீரமணியை பெரியார் திடலில் சந்தித்தோம். அர்த்தத்துடனும் ஆவேச அனலுடனும் பேசினார்.

திமுகவுக்கும் ராமதாஸுக் கும் தான் பிரச்னை என்று நினைத்திருந்தோம். இப் போது ராமதாஸ் உங்களை யும் தாக்குகிறார்? உங்களுக் கும் அவருக்கும் என்ன பிரச்னை?

``ராமதாஸ் திடீரென்று நினைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் தாக்கு வார். இது அவரது அண்மைக் கால வழக்கமாக இருக்கிறது. துணை நகரம் அமைப்பது தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் அவருக்குக் கோபத்தை வரவழைத்திருக் கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாநகரங்கள் எல்லாவற்றுக்கும் குறிப்பாக சென்னைக்கும் துணைநகரம் அவசியம். இதுபோன்ற வளர்ச் சித் திட்டங்கள் காலத்தின் கட்டாயம். இதைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி என்னையும் முதல்வரையும் சேர்த்து உள்நோக்கம் கற்பிக் கிறார் ராமதாஸ்.

மலேசியாவிலும், சிங்கப் பூரிலும் உள்ள தொழிலதிபர் களுக்கு நிலம் வாங்கிக் கொடுப் பதற்காக, துணைநகரம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதாக அவர் குறிப்பிட் டிருக்கிறாரே?

``பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியின் நிறுவன ரான ராமதாஸ் பொறுப்போடு அரசியல் கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா? என் மீது குற்றம் சொல்லும் இவர் ஆதாரங்களோடு அதை நிரூ பிப்பாரா? நிரூபிக்க முடியா விட்டால் அவர் நிலைப்பாடு என்ன? ராமதாஸுக்கு எப்போதுமே ஒரு பழக்கம். தனக்குத் தோன்றுவதையெல் லாம் பேசுவார். இப்டியெல் லாம் பேசினோமே என்று பின்பு யோசிக்க மாட்டார். உதாரணத்துக்கு முதலில் அரசியலில் ஈடுபட மாட் டேன் என்றார், சாட்டையைச் சொடுக்குவேன் என்றார். குடும்பத்தாரை அரசியலில் இழுக்க மாட்டேன் என்றார், இப்படியெல்லாம் பேசிய வரின் இன்றைய நிலையை யோசித்துப் பாருங்கள். இப் படிப்பட்ட பெருமைக்குரிய வர்தான் ராமதாஸ்.
இன்னொரு விஷயம். நான் துணைநகரம் வேண்டும் என்று சொன்னபோதுகூட அது எங்கே எந்தப் பகுதியில் எப்படி அமைய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறிப்பிட்ட பகுதியில் அமை யக்கூடாது என்று வேறு சிலர் தான் சொல்லுகிறார்கள். அவர்கள் பின்னணியில்தான் நில தாதாக்கள் இருப்பார் களோ என்ற சந்தேகம் நிச்சயம் மக்களுக்கு வரும்.

அதிமுக ஆட்சியின்போது அந்தக் கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளராக இருந் தீர்கள் என்றும் இப்போது திமுகவுக்கு கொ.ப. செ.யாக இருக்கிறீர்கள் என்றும் அவர் கூறுகிறாரே?

``தந்தை பெரியார் காலத் திலிருந்தே மதவெறி கட்சி களை திராவிடர் கழகம் ஆதரித்தது கிடையாது. அதே அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமான பி.ஜே.பி., தலைமையில் அமைந்த கூட்டணியில் யார் இருந் தாலும் திராவிடர் கழகம் ஆதரிக்காது.
என்னை அணி மாறியவர் என்று சொல்லக் கூடிய மருத்துவர், தன்னைப் பற்றியும் தன் கட்சியைப் பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக மாறி மாறி அவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவற்றை நான் நினைவூட்டி னால் அவருக்கு மிகுந்த சங்கடம் ஏற்படும். சகோதரி யிடம் புதுவை ஒப்பந்தம் செய்தபிறகு, பட்டை நாமத்தை நெற்றியில் சுமந்து கொண்டு வெளியேறியது. இப்போது அவருக்கு நினை வில்லை போலும்.
டாக்டருக்கு அடிக்கடி `செலக்டிவ் அம்னீஷியா வந்து விடுகிறது. ராமதாஸின் அறிககைகயைப் பார்த்த போது கலைஞருடைய ஒரு வசனம்தான் எனக்கு நினை விற்கு வருகிறது. `மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது என்பதே அது.
தி.மு.க.விற்கு கொள்கை பரப்புச் செயலாளராக இருக் கிறேன் என்று ராமதாஸ் சொல்கிறார். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன். திராவிடர் கழகம் தாய்க் கழகம். திமுக அதன் அரசியல் வடிவம். சேய்க் கழகம் ஐந்தா வது முறையாக ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர். 84 வயதிலும் ஒரு இளைஞனைப் போல் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார். நித்தம் நித்தம் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் உதவிக் கொண் டிருக்கிற கலைஞருக்கு ஆதர வாக இருப்பதில் தவறில்லை.

பிற்படுத்தப்பட்டோருக்கு ஐம்பது சதவீத இடஒதுக் கீட்டை எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த போது பெற்றுத் தந்தது தி.க.வும், திமுகவும்தான். அதில் 20 சதவீதத்தை மிகவும் பிற்படுத் தப்பட்டவருக்காக ஒதுக்கியது கலைஞர். அதில் ராம தாஸுக்கு துளியும் சம்பந்த மில்லை. இதற்காக கலைஞ ருக்கு நன்றி சொல்லலாம்.

எந்தக் கூட்டணியிலும் சேராமல் பா.ம.க., தனித்து நின்றால் தேர்தலில் எத்தனை இடங்கள் பிடிக்கும் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

``எனக்கு ஆரூடத்திலோ ஜோதிடத்திலோ நம்பிக்கை இல்லை. அப்படிச் சொல்லப் பழக்கப்பட்டவனும் இல்லை. ஆனால் அந்த அனுபவம் அவ ருக்கு ஏற்கெனவே இருக் கிறதே (முகத்தில் புன்னகை) புதுவையில் கூட்டணியில் லாமல் தனித்து நின்றபோது ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியாமல் போனதை மறக் காமல் இருந்தால் சரி; (மீண்டும் புன்னகை).

- திருவேங்கிமலை சரவணன்
நன்றி: `குமுதம் 12.9.2007

"அக்கிரம - விக்கிரம சாமியாரின் லீலைகள்

அந்த அக்கிரம சாமியாரின் பெயர் விக்கிரமன். அவரை நம்பிய எனக்கு ஐம்பது லட்ச ரூபாய் பணம் போச்சு. கூடவே என் வாழ்க்கையும் போச்சு’’ என்று ஒரு பெண்ணிடமிருந்து நம் செல்போனுக்கு புகார் வர, மறுநிமிடம் அந்தப் பெண்ணின் பங்களாவில் நாம் இருந்தோம். அவர் மடமடவென பேசத் தொடங்கினார்.

‘‘என் பெயர் சாந்தி விஸ்வநாதன். அப்பா அரசுத் துறையில் உயர் பதவியில் இருந்தவர். அதோடு எம்.ஜி.ஆருக்கு அவர் நண்பர். 1991_ல் என் தந்தை எதிர்பாராதவிதமாக இறந்து போனார். அப்போது நான் வங்கிப் பணியில் இருந்தேன். தந்தை இறந்த சோகத்தில¢ இருந்து விடுபட, வங்கியின் சக அதிகாரி ஒருவரின் யோசனையைக் கேட்டு நங்கநல்லூரில் உள்ள அந்த ஹைடெக் அக்கிரம சாமியார் விக்கிரமனைப் பார்க்கப் போனேன். நான் சொல்லாமலேயே என் தந்தை இறந்து போனதைப் பற்றி அவர் குறி சொன்னதால் அந்த நிமிடத்திலிருந்து அவரது தீவிர பக்தையானேன்.

ஆண்டுதோறும் சாமியார் நடத்தும் அனுமன் ஜெயந்தி விழாவில் நான் பரதநாட்டியம் ஆடுவேன். ஆரம்பத்தில் வண்ணாரப்பேட்டையில் ஒரு குடிசையில் இருந்த விக்கிரமன் சாமியார் பெரிய மண்டபம் கட்டி அதில் குடியேறினார். அதற்கு நன்கொடை கொடுத்தவர்களில் நானும் ஒருத்தி. 1997_ல் நடந்த என் தம்பியின் திருமணத்துக்கு சாமியார் குடும்பத்துடன் வந்திருந்தார். சொந்த இணையதளம், வெளிநாட்டுப் பயணம் என்று இருந்த சாமியாருக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. பஜனையில் இவர் புல்லாங்குழல் வாசித்து பக்தர்களைக் கவருவார். அதனால் புல்லாங்குழல் சாமியார் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

‘நீ வங்கி வேலையை ராஜினாமா செய்யப் போகிறாய். உனக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது’ என்றெல்லாம் அவர் எனக்குக் குறி சொன்னார். அதன்படி, ஒருகட்டத்தில் நான் வேலையை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ‘உனக்கு விரைவில் திருமணம் நடக்கும்’ என்றும் சாமியார் குறி சொன்னார். அவரது ஆலோசனையின் பேரில் 2005 நவம்பரில் ஹிந்து நாளிதழில் ‘மணமகன் தேவை’ பகுதியில் விளம்பரம் செய்தேன்.. ‘உனக்கு ‘எஸ்’ அல்லது ‘எம்’ என்ற எழுத்தில் தொடங்கும் மாப்பிள்ளைதான் வருவார்’ என்று விக்கிரமன் குறி சொன்னார். அதை நான் தெய்வ வாக்காக நம்பிவிட்டேன்.

எதிர்பார்த்தபடியே அந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, முரளி என்பவர் முதலில் பேசினார். அவர் பெயர் ‘எம்’மில் தொடங்குவதால் அவரையே நான் மணவாளனாக நினைத்தேன். ஆனால் அவரது பேச்சு அநாகரிகமாக இருந்ததால் அவரை ஒதுக்கி விட்டேன். அடுத்ததாக பார்த்தசாரதி என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். ‘சாரதி’ என்று அவரைச் சுருக்கமாக அழைப்பார்கள் என்றார். அதில் சாமியார் சொன்ன ‘எஸ்’ முதல் எழுத்தாக வருவதால், அவரை 2005 டிசம்பர் 11_ம்தேதி, ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் சந்தித்தேன்.

‘நாம் சரவணபவனுக்குப் போய் சாப்பிடலாமா?’ என்றார். என்ன ஆச்சரியம்? ‘உன்னைத் திருமணம் செய்து கொள்பவருக்கு சரவணபவன் சாப்பாடுதான் பிடிக்கும்’ என்று சாமியார் ஏற்கெனவே எனக்கு குறி சொல்லியிருந்தார். அது அப்படியே பொருந்தி வருகிறதே என்று நான் ஆச்சரியப்பட்டு பார்த்தசாரதியை என் வீட்டுக்கு கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தேன்.

பார்த்தசாரதி ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகச் சொல்லியிருந்தார். என் சகோதரர்கள் விசாரித்ததில் அவர் தென்னக ரயில்வேயில் கமர்ஷியல் சூப்பர்வைசர் என்பது தெரிய வந்தது. கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் நாங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ‘டில்லியில் இருந்து மாற்றலாகி வந்திருக்கிறேன். தங்க இடமில்லை’ என்றார். அதை நம்பி, எங்கள் வீட்டிலேயே தங்க வைத்தோம். அவரை ஒருமுறை சாமியாரிடம் அழைத்துப் போனபோது, ‘சாமியார் நம் கழுத்தில் மாலை போடுவார் பார்’ என்று பார்த்தசாரதி சொன்னார். அதேபோல் சாமியார் எங்கள் கழுத்தில் திடீரென மாலை போட்டார். ‘சுவிஸ் பேங்கே உனக்குக¢ கிடைத்திருக்கிறது. வைத்துப் பிழைத்துக் கொள்’ என்று பார்த்தசாரதியிடம் பூடகமாகச் சொன்னார் சாமியார்.

2006 ஜனவரி 27_ம்தேதி எங்கள் திருமணத்துக்கு சாமியார் நாள் குறித்துக¢ கொடுத்தார். ஆனால், அந்த நாளில் சாமியார் கேரளத்தில் இருந்ததால் எங்கள் வீட்டிலேயே எளிய முறையில் மாலை மாற்றி நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டோம். ‘தாய் உயிருடன் இல்லை; வயதான தந்தையால் வரமுடியாது’ என்று சொல்லி சமாளித்தார் பார்த்தசாரதி.

அதன்பின்பு நிரந்தரமாக எங்கள் வீட்டில் தங்கத் தொடங்கினார். வேலைக்குப் போவது போல தினமும் வெளியே போகும் அவர், வெளியே சென்றதும் செல்போனை ஆஃப் செய்துவிடுவார். இந்த நிலையில் நான் கழற்றி வைத்திருந்த சில நகைகள் காணாமல் போயின. அதையே சாக்காக வைத்து எனது வைரக்கல் பதித்த நெக்லஸ் உள்பட நாற்பது பவுன் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதாகக் கூறி வாங்கிச் சென்றார். சிட்டி பேங்க¢., ஐ.சி.ஐ.சி.ஐ., ஜெயின் ஃபைனான்ஸ், சிட்டி ஃபைனான்ஸ் ஆகிய வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டு மூலமும் கடனாகவும் ஏறத்தாழ 40 லட்சம் வரை அவருக்குப் பணம் பெற்றுக¢ கொடுத்தேன். இதுதவிர என் கிரெடிட் கார்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள், டிரெஸ் என அடிக்கடி வாங்குவார்.

மே 22_ம் தேதியிலிருந்து பார்த்தசாரதி திடீரென மாயமாகி விட்டார். எங்கள் வீட்டில் இருந்த எனது சொத்துப் பத்திர நகல்கள் காணவில்லை என்பதால், சந்தேகப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். பார்த்தசாரதி தென்னக ரயில்வேயில் கமர்ஷியல் சூப்பர்வைசராக இருந்து அலுவலகப் பணத்தை கையாடிய விவகாரத்தில் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 2002_ல் விருப்ப ஓய்வில் பணியில் இருந்து விலகியிருக்கிறார் என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் ஐயப்பன்தாங்கலில் முதல் மனைவி பத்மா, வளசரவாக்கத்தில் இரண்டாவது மனைவி உஷா, மேற்கு மாம்பலத்தில் மூன்றாவது மனைவி வசந்தி ஆகியோருடன் வசித்து வந்ததும் அம்பலமானது. அப்போது நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நான் பயணம் செய்யும் ஆட்டோ டிரைவர் சந்திரசேகர் என்பவர் மூலம் பார்த்தசாரதியைப் பிடித்து ஜூன் 21_ம் தேதி போலீஸில் ஒப்படைத்தோம்.

சிறையில் அடைக்கப்பட்ட பார்த்தசாரதி, பிறகு ஜாமீனில் வெளிவந்து விட்டார். போலீஸார் முறையான விசாரணை நடத்தாததால், நான் பறிகொடுத்த பணம், நகை எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. தனியார் துப்பறியும் நிறுவனங்கள் மூலம் நான் விசாரித்த போதுதான் அந்தத் திடுக்கிடும் உண்மை எனக்குத் தெரியவந்தது. என்னிடம் இருந்து நகை, பணம், சொத்துக்களைச் சுருட்ட, பார்த்தசாரதியை என்னிடம் அனுப்பி வைத்ததே விக்கிரமன் சாமியார்தான் என்பதுதான் அந்த அதிர்ச்சிகர உண்மை. ஆண்டவனுக்கு இணையாக நான் நம்பிய சாமியார் விக்கிரமனா இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பார்த்தசாரதி மீது நான் கொடுத்த புகாரில் சாமியார் விக்கிரமனையும் ஒரு சாட்சியமாகக் குறிப்பிட்டிருந்தேன். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, ‘சாந்தியைச் சந்தித்தே பல ஆண்டுகள் ஆகிறது. பார்த்தசாரதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சாந்தியை முன்கூட்டியே எச்சரித்தேன்’ என்று புளுகியிருக்கிறார் சாமியார்.

சாமியார் பற்றி நான் மேலும் விசாரித்த போது பல அதிர்ச்சித் தகவல்கள் எனக்குக¢ கிடைத்தன. குடிசையில் இருந்த விக்கிரமன் என்னைப்போல பலரை ஏமாற்றித்தான் இன்று கோடிக¢கணக்கில் சொத்து சேர்த்திருக்கிறார் என்று தெரியவந்தது.

நான் சாமியாரின் தீவிர பக்தையாக இருந்தபோது ஒருநாள் பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவனில் நூடுல்ஸ் வாங்கி ஆட்டோவில் அமர்ந்து சாப்பிட்டேன். பின்னர், நான் நங்கநல்லூர் மண்டபத்துக்குச் சென்றபோது சாமியார் நான் நூடுல்ஸ் சாப்பிட்டதைக் கூறினார். நான் நம்ப முடியாத ஆச்சர்யத்தில் அவர் காலில் விழுந்து வணங்கினேன். ஆனால் என் பின்னால் ஆட்களை அனுப்பி அவர்கள் தந்த தகவலை வைத்துத் தான் சாமியார் ‘குறி’ சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது.

சாமியாரின் இணைய தளத்தை வெளிநாட்டில் உள்ள ஒருவர் நடத்துகிறார். இண்டர்நெட்டில் அகப்படும் அறிவியல் செய்திகளைச் சேகரித்து பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவு என்ற பெயரில் விக்கிரமன் பேசுவார். சில நாட்களில் அந்தத் தகவல்கள் நம்மூர் செய்தித் தாள்களில் வரும்போது சாமியார் சொன்னது போலவே நடந்து விட்டதாக மண்டபத்தில் உள்ளவர்கள் பிரசாரம் செய்வார்கள்.

அக்கிரம சாமியார் விக்கிரமன் பற்றி நான் காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். இதனால் சாமியார் எனக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வருகிறார். நான் வயதான தாயாருடன் கஷ்டப்பட்டுக¢ கொண்டிருக்கிறேன். அந்த சாமியாரின் முகமூடியைக் கிழித்து அவரது நிஜமுகத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன்’’ என்று ஆவேசமாகப் பேசிமுடித்தார் சாந்தி.

சாந்தியின் வழக்கறிஞரிடம் நாம் பேசினோம். பெயர் வேண்டாம் என்ற அவர், ‘‘சாந்தியின் நிலை மிகவும் பரிதாபம். இனியும் அவரை வேறு யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வழக்கை என் சொந்த விருப்பத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இந்த வழக்கை போலீஸார் ஒழுங்காக விசாரித்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். இந்த விவகாரத்தில் காவல்துறை யாரையோ காப்பாற்ற முயல்கிறது’’ என்று வேதனைப்பட்டார் அந்த வழக்கறிஞர்.

சாந்தியின் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ‘‘அந்தப் பெண்ணை சிலர் நூதனமாக ஏமாற்றி பணம் பறித்தது உண்மைதான். இந்தப் பிரச்னையால் அவர் மனதளவில் சற்று அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளார். இப்போதும் கூட ஜோசியர், குடும்ப நண்பர்கள், பூஜை என்று அவருடன் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு சாமியார் மீது இருந்த தீவிர பக்தி பிடிக்காமல் உடன் பிறந்த சகோதரர்களே சற்று விலகிப் போய்விட்டார்கள். இனியாவது, அவர்கள் முன்வந்து சாந்திக¢குத் துணையாக இருந்து மீதமிருக்கும் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்றார் அவர்.

------ நன்றி: "குமுதம் ரிப்போர்ட்டர்"

என் அனுபவம்

சாதாரணமாக, சிந்திக்கத் துவங்கிவிட்டோமானால், எந்தச் சங்கதியையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்கிற பழக்கத்துக்கு வந்து-விட்டோமானால் - அப்புறம் தானாக எல்லாச் சங்கதிகளின் குறைகளையும் போக்கிக் கொள்ள முடியும். என்னைப் பற்றியே எடுத்துக் கொண்டால் - நான் சிறு வயதிலேயே 10, 11 வயதி-லேயே வியாபாரத்துக்கு வந்து விட்டேன். இயற்கையிலேயே, சிறு வயதிலிருந்து நான் கொஞ்சம் துடுக்காயும், எந்தச் சங்கதியையும் - ஏன், எப்படி என்று கேட்டுக்கொண்டே இருப்-பவனுமாய் இருந்ததோடு, வியாபாரத் துறை-யில் வேறு இருந்ததால் பலரிடம் பழகும் வாய்ப்-புக் கிடைத்தது; அதன் மூலம் பல அனுபவங்-களும், உண்மைகளும் தெரியவந்தன. சாதாரண-மாகச் சொல்லுவார்கள், ‘பையன் மந்தமாய் இருந்தால், அவனை வியாபாரத்தில் போட்-டால் புத்திசாலியாகி விடுவான்; இல்லாவிட்டால் சுங்கக் ‘கேட்’டில் போட்டால் திருந்தி-விடுவான்’ என்று. ஏன் என்றால், இவைகளில் பலதரப்பட்ட மனிதர்களுடன் அவன் பழகவும், அவர்களிடம், அவரவர்களுக்குத் தகுந்த மாதிரயான காரியம் செய்துகொள்ளவும், சமாளித்துக் கொள்ளவும் வேண்டும்.

அப்படியிருக்கிறபோது, அவனுக்குத் தானாக அறிவு வந்துவிடும் என்கிற கருத்தில் சொல்லுவார்கள். இன்னும் தேவடியாள் வீட்-டுப் பிள்ளைகள் புத்திசாலிகளாக இருப்பதற்-குக் காரணம் என்னவென்றால், அவர்களும் பல ரகமான மனிதர்களிடம் பழகவும், காரியம் சாதித்துக் கொள்ளவும் வேண்டியிருப்பதனால் இயற்கையாகவே அறிவு வந்து விடுகிறது.
எதற்குச் சொல்கிறேன் - ‘இதைச் சிந்தித்தால் பாவம், இந்தக் காரியத்தை ஆராய்ந்தால் பாவம்’ என்று சொல்லிச் சொல்லி நம்மைப் பயமுறுத்திவிட்ட காரணத்தினால் இப்போது
எந்தச் சங்கதியையும் நம்மால் ஆராயமுடியாமல் போய்விட்டது. கொஞ்சம் துணிச்சலாக இந்தப் பக்கம் திரும்பிவிட்டோமானால் அப்புறம் வேகமாக வளர்ச்சி காணமுடியும்.
இப்போது நாம் வாழ்கிற இந்தக் காலம் மிகவும் புரட்சிகரமான காலமாகும். கடந்த 50 வருட காலத்துக்குள் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

----------- தந்தைபெரியார் - மாயவரத்தில், 6.6.1954-ல் சொற்பொழிவு, ‘விடுதலை’, 11.6.1954

Tuesday, May 13, 2008

பார்ப்பனர் மாத்திரம் சின்ன பையன்களுக்கெல்லாம் கலியாணம் செய்து வைப்பது ஏன்?

கருப்பண்ணன் என்ன சுப்பண்ணா! இந்த பார்ப்பனர் மாத்திரம் சின்ன பையன்களுக்கெல்லாம் கலியாணம் செய்து விடுகிறார்கள். அதென்ன சங்கதி?

சுப்பண்ணன் ஓ! இது உனக்குத் தெரியாதா? இவர்களுக்கு பிச்சை வாங்கிப் பிழைப்பதுதானே வேலை. ஆதலால் நம்முடைய பெரியவர்கள் கலியாணமானவனுக்கு ஒரு அணா,கலியாணமாகாதவனுக்கு காலணா கொடுக்கிற வழக்கம். ஆதலால் சின்னப் பையனுக்கும் சின்னப் பொண்ணுக்கும் ஒரு அணா கிடைக்கட்டுமென்று கலியாணம் செய்து விடுகிறார்கள்.

கருப்பண்ணன் அப்படியா! இதற்காகத்தானா இவ்வளவு பெரிய அநியாயம்.பிச்சை கொடுப்பவர்களுக்கு எப்படி கலியாணம் ஆனதும் ஆகாததும் தெரியும்.

சுப்பண்ணன் கலியாணமான சின்னப் பையன்கள் வடக் கயிறு போல் பூணூலை மொத்தமாகப் போட்டிருப்பார்கள். கோவணம் வைத்து வேஷ்டி கட்டிக் கொள்ளுவார்கள். அந்தச் சிறு பெண்களும் கோவணம் போட்டு சீலை கட்டிக் கொள்ளுவார்கள். தாலியை நன்றாய் வெளியில் காட்டிக் கொள்ளுவார்கள்.

கருப்பண்ணன் சரி,சரி. இப்பொழுது எனக்கு நன்றாய் விளங்கிற்று. இந்த பிச்சைக் காசுக்காக எத்தனை பார்ப்பனப் பெண் தாலியறுப்பது. அநியாயம், அநியாயம்.

------------- தந்தைபெரியார் -"குடிஅரசு" 5.9.26

Monday, May 12, 2008

கோயிலுக்கு முன் பெரியார் சிலை
கோயிலுக்கு முன் பெரியார் கம்பீரமாக நின்று கொண்டு கடவுள் பித்தலாட்டங்களை தோலுரிக்கும் காட்சி.

``பிராமணத் தந்திரங்களில் ஒரு விநோதத் தந்திரம்

தென்னந்தியாவில் சில காலமாகச் செய்யப்பட்டு வரும் பிராம்மண ரல்லாதவரின் கிளர்ச்சிக்குத் தலைவர்களாயுள்ள வர்களில் மிஸ்டர் டி.எம். நாயர் அவர்களும் மிஸ்டர் பி. தியாகராஜ செட்டியார் அவர்களும் முக்கியமானவர்கள் என்பது பிரசித்தம்.

அம்மகான்களைப்பற்றி தென்னிந்தியப் பிராமணர்களிற் சிலர் மனம்போன போக்கில் நிந்தித்தும் கைபோனபோக்கில் கடிந்தும் எழுதி வருகின்றனர். ``ஒருவர் எந்தவிதமாகவோ அபகரித்து அனுபவித்து வந்த மற்றொருவருடைய பாத்யதையை இழந்து விட நேரும்போது வருத்தப்பட்டுப் பிதற்றுவது சகஜம்தான். இது நிற்க, டாக்டர் டி.எம். நாயரும், மிஸ்டர் பி. தியாகராஜ செட்டியாரும் சட்டசபையில் இடம் பெறத் தடைப்பட்டுப் போனதின் காரணமாக அவர்களாலேயே இக்கிளர்ச்சி யுண்டாக்கப்பட்டிருப்பதாய்ப் பிராமணர்களிற் சிலர் `வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பார் போலவும், `வெள்ளரிக்காய்க்கு வெங்கலப் பூண்கட்டும் விசித்திரம் போலும் பேசி வருகின்றார்கள். இப்படி இவர்கள் பேசி வருவது பிராமண தந்திரங்களில் ஓர் விநோத தந்திரம் போலும்.

பிராம்மணரல்லாதவரின் கிளர்ச்சிக்கு சட்ட மெம்பர் ஸ்தானம் கிடைக்கப் பெறாத டி.எம். நாயரும், பி. தியாகராஜ செட்டியாரும், காரணமாவார்களென்றால், ஹோம்ரூல் கிளர்ச்சிக்கு அவர்களைப் போல் சட்ட மெம்பர் ஸ்தானம் கிடைக்கப் பெறாத பிராமணர்களும் அதன் காரணம்பற்றி அவர்களைச் சேர்ந்த மற்றப் பிராமணர்களும், காரணமா வார்கள். மீண்டும் அபேக்ஷகராயிருந்து மெம்பர் ஸ்தானம் கிடைக்கப் பெறாதவர்களில்லையா? புதிதாய் அபேக்ஷித்தும் கிடைக்காத பகீரத கனவான்கள் இப்பொழுது மிருக்கிறார்கள். அவர்கள், தற்காலத்தில் செய்யப்பட்டு வரும் ஹோம் ரூல் கிளர்ச்சியிலும் சேர்ந்திருக்கிறார்களல்லவா? இதைப் பிராமணர்கள் உணரவில்லை போலும்.

அன்றியும், அநேக வருஷங்களாக மகம்மதிய சகோதரர்கள் ஹிந்துக்களுக்கு விரோதமாக இராஜீய விஷயத்தில் கிளர்ச்சி செய்துவந்தன ரல்லவா? எந்த சட்டசபையில் இடம் பெறாத காரணத்தால் அவ்விதம் செய்து வந்தனர்?

சமீப தருணத்தில் பம்பாயில்கூடிய பொதுக் கூட்டத்தில் சுதேசிய விரதத்தைப் பற்றிய பிரஸ்தாபம் எழுந்த உடனே மிஸ்டர் டின்ஷாவாச்சா அச்சபையைவிட்டு எழுந்து போயினரன்றோ? அதன் காரணம் என்ன? எந்தப் பிரதிநிதித்வம் கிடைக்காமை யினால்?
சூரத் நகரத்தில் கூட்டப் பெற்ற காங்கிரஸ் மஹாசபையில் மகான் கோபாலகிருஷ்ண கோகேல், சர். பிரோஜிஷா மேடா, கனம் ராஜ்பிகாரிகோஷ், ஆகிய இவர்களும், இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பிரமுகர்களும் காலோசிதப்படி ராஜீய சம்பந்தமான அமிதக் கொள்கைகளுக்கு இடங்கொடா மல் பேசினார்களன்றோ? எதிர்பார்த்திருந்த எவ்வித உன்னத பதவி கிடைக்காமையினால் அவ்விதம் பேசினார்கள்? ஆகையால் பிராமணர்கள் இனியேனும் நிந்தனைக்குரிய குயுக்திகளை விட்டு விடுவார்களென்று நம்புகிறோம்.

----- - --- - என்.வி.என்.,

ஆரியர்களியற்றிய ஆசாரணைகள்

இந்த ஆரிய சிகாமணிகள் நமது தென்னாட்டில் பிரவேசித்த பிறகே, அவர்கள் நிஷ் கபடிகளாகிய திராவிடர்களுக்குப் பல ஆசாரணைகளைப் புகட்டிக் கொண்டு தாங்கள் உயர்ந்த அந்தஸ்துக்களை வகித்தவர்களாயினர். அவ்வாசரணைகளை யறிந்த மட்டும் இங்கெடுத்து விளக்குவாம்: அவை யாவன: குழந்தை கல்யாணம், உடன் கட்டையேறல், தீப்பாய்தல், துர்க்கை, காளி, முனி, பிடாரி முதலிய தேவதா பூஜைகள், அஸ்வமேதயாகம்; மேஷ யாகம், பௌண்டாயாகம் ஆக முதலிய பாகாதி கர்மங்கள், சக்தி பூஜை, நிர்வாணக்கூத்து, செடிலாடல் பிராண தோஷணிக் கிரந்தம் படித்தல், கெங்கை குழந்தைகளை பலியிடுதல், தோடிச் சக்கரத்தில் பிராண பலி கொடுத்தல், இறந்தவனது திதியில் விதவையைப் பிராமணக் குருவுக்குச் சமர்ப்பித்தல், வேதியரது ஆலயத்துக்கு ஸ்திரிகளைத் தானியாக் குதல், குலஸ்திரீகளை நடனமாட வைத்தல், வாய்ப்பூட்டு போடல், உண்டி கட்டுதல், முதலிய ஆசரணைகளை தென்னிந் தியத் திராவிடர்களனு சரிக்க போதித்து, போதுமானத் திரவியங்களைச் சம்பாதித்து வந்த ஆரியர்களது கூற்றதிகமாகி மனிதன் பிறந்து இறக்கும் வரையில் பிரம்மாண்ட வரிகளை வசூல் செய்து ஏமாற்றிய சமத்காரர்களென்போம். மஹா தந்திரசாலிகளாகிய விப்பிரர்கள் இக்கலிகாலத்திலும் கொண்ட மட்டும் திராவிடர்களிடமிருந்து அபிமானிகளை விடுவிக்கப் பொருளையும், சுய காரியங்களுக்காகக் கையொப்பத் தொகைகளையும் பெற வேதியர்களே முன்வருதலைக் காண்க. வேதியர்களுக்குள் அர்ச்சகத் தொழிலாளிகளைக் கேவல மாக்குவதினாலேயேப் பிரதி ஆராதனைகளை மறுக்கப் பட்டதாக விளங்குகின்றது. நிற்க, ஓர் ஓர் விஷ்ணு ஆலயத்திற்குப் பிரவேசித்துத் தரிசித்தபோது அக்கோவில் வைணவ அர்ச்சகர் `சடகோபத்தை எங்கள் சிரசுகளில் வைத்தனர். இதைக்கண்ட சில வைணவவிப்பிரர்கள் அதைத் தடுத்து பிராமணரல்லாதவர் களுக்குச் சடகோபமேற்றலாகாதென வாதாடினார்கள். இவ்திசயத்தை யாம்கவனித்து அப்பிராமணர்களை நோக்கி, ஹே வைணவ! நும் பூர்வாசாரியரது விசிஷ்டாத் வைதப்படி ஜாதி வேற்றுமைகளின்றியிருக்கையில் யாம் வைணவரென்று நீவிர் அறிந்திருந்தும் நும் கொள்கைக்கு மாறுபடுகின்றீர்களென யாம் புகன்றபோது, அசட்டை செய்து தம் பிராமணக் குல வதி காரத்தை மேற்கொண்டனர். இதை வாசிக்கும் திராவிட நண்பர்களே கவனியுங்கள். இவ்வாறு பொது ஆலயங்களிலும் வேளாளத் திராவிடர்களை அவமதிக்கும்படியான சுதந்தரங் களை நாமே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு விழிக்கி றோமல்லவா? இத்தகைய விப்பிரர்களை நாம் நம்பி அவர்கள் கோரும் சுய ஆட்சிக்கு இடந்தருவ தென்றால் எவ்வாறு முடியும்? ஒருக்காலும் நாம் ஏமாறலாகாது. ஏமாந்தாலோ மனுதருமநூல் மானிடத் தன்மையைக் குறைத்து விடும். எப்போது நீதிநூலை நாம் கையாளக் கருதுகிறோமோ அப்போது ஜாதி, மதவேற் றுமைகளொழிந்து! சரியான ஒற்றுமையடைப் நேரிடுமென்க. ஆகவே ஆரியர்களாலியற்றிய ஆசரணைகைள இன்றே வொழித்துத் தந்யர்களா வேண்டும்.


- ----- திராவிடநேசன்
ஆதாரம்: திராவிடன் 17.8.1917

-------------நன்றி-"விடுதலை"

Tuesday, May 06, 2008

உடைக்க முடியாத பெரியார் ‘கோடு’

நன்றியை எதிர்பாராது காலமெல்லாம் தங்களுக்காக வாழ்ந்து, தன் இறுதி மூச்சடங்கும் வரை தங்களுக்காக உழைத்து, மறைந்து 35 ஆண்டுகள் ஆனாலும் கூட ஆரியத்திற்கு அடங்காத எதிர்ப்பலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் என்னும் மகத்தான மாமனிதருக்கு தமிழர்கள் தங்கள் நன்றிகளைக் காட்டாத நாளில்லை; நினைக்காத நொடியில்லை.

கடுமையான கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்தாலும், தங்கள் தலை நிமிர்வுக்குக் காரணம் இவரே என உணர்ந்த மக்களால் தந்தை பெரியாரைப் போல கொண்டாடப்பட்ட தலைவர் வேறு எவரும் இருக்க முடியாது. பெரியாரின் பெயர் சுமக்காத ஊர்கள், நகரங்கள், சிற்றூர்கள் எதுவும் இல்லை தமிழ்நாட்டில். தங்கள் வீட்டுக்கு, வீதிக்கு, நகருக்கு, குழந்தைக்கு, நிறுவனத்துக்கு பெரியார் என்ற தங்கள் அடையாளத்தைச் சூட்டி அழகு பார்த்தனர் தமிழர்! காவியுடுத்திய குன்றக்குடி அடிகளாரும் பெரியார் முந்திரி தொழிற்சாலை அமைத்து பெரியாரை நினைவு கூர்ந்தார்.

அறிவியல் சிந்தனைகளைப் பரப்பிய பெரியாரின் பெயரையே தங்கள் கண்டுபிடிப்புக்குச் சூட்டி பெருமைப்பட்டதும் தமிழர்களே! சென்னைப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஜி.சுந்தரராசுலு ஆட்ரியாடிக் கடல் பகுதியில் கணுக்கால்களின் மூதாதை என்று கருதப்படும் புதிய உயிரியைக் கண்டுபிடித்தார். தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் விதமாக அதற்கு “LOBO Padus Periyar” என்று பெயரிட்டார்.

அந்த வரிசையில் இன்னொரு தமிழச்சி! இவர் அய்.அய்.டி.யைக் கிடுகிடுக்க வைக்கும் சமூகநீதிப் புயல்! அசந்தால் ஆளை விழுங்கும் அய்.அய்.டி. பாம்புகளை அசராமல் அடிக்கும் பெரியாரின் கைத்தடி. இவரது சமூகநீதிப் போராட்டங்களுக்காகவே தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது வென்ற வீராங்கனை. தகுதி திறமை பேசி இடஒதுக்கீட்டை மறுக்கத் துடிக்கும் அய்.அய்.டி., வளாகத்துக்குள் இவருக்குள்ள தகுதி எந்தப் பார்ப்பானுக்கும் கிடையாது.

633 ஆராய்ச்சிக் கட்டுரைகள், 33 புத்தகங்கள், 11 முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள், 57 முதுகலை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டி என இவருக்கிருக்கும் தகுதிப் பட்டியலுக்கு தனிப்புத்தகம் போடலாம். கணக்குக்காக இவர் எழுதும் எண்கள் மட்டுமல்ல. இவரது ஆய்வுகளின் எண்ணிக்கையே நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

தந்தை பெரியார் எனும் வரலாற்றுப் புரட்சியாளரை கணக்கு முறையில் ஆய்வு செய்ய முடியுமா? என புருவம் உயர்த்தியோரை, தனது “Fuzzy and Neutrosophic analysis of Periyar’s views on untouchability” நூலின் மூலம் மேலும் வியக்க வைத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தந்தை பெரியார் பாடுபடவில்லை என்று புரட்டுவாதிகள் பொய் விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தபோது, அதற்கு பதில் தரும் விதமாக வந்தது இந்நூல். நூல் வெளிவந்த இரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு படிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஜனவரி மாதத்தில் மட்டும் 4,304 பேர் இந்நூலைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் எனில் இதன் சிறப்பு விளங்கும்.

அதன்பிறகு வேத கணிதம் என்று இந்துத்துவாவினர் பரப்பும் பொய்யுரையை சந்தியில் நிறுத்தி வேதமா? கணிதமா? எனக் கேள்விகேட்டு, ஆய்வாளர்கள் மத்தியில் வேத கணிதம் (?) என்பதன் தன்மையை விளக்கிய “Vedic Mathematics: Vedic or Mathematics: A Fuzy and Neurosophic Analysis” நூல் ஆரியம் பூச நினைத்த அறிவியல் சாயத்தை வெளுக்கச் செய்தது.

அதனைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள நூல் “New Classes of codes for Cryptologists and Computer Scientists”. இந்நூலில் கணினி வல்லுநர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும், பயன்படக் கூடிய புதிய ரகசியக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். கணிதவியலாளர்களுக்கு மட்டுமன்றி ரகசியக் குறியீடுகளை உருவாக்குவோருக்கு இந்நூல் பெரும் பயன்தரும். தகவல் பரிமாற்றத்திலும், பாதுகாப்பு காரணங்களுக்கும் பயன்படப்போகும் இந்தப் புதிய குறியீட்டினை, அவ்வளவு எளிதில் யாராலும் உடைத்துவிட முடியாது. குறியீட்டை உடைக்கும் திறன்பெற்றவர்களுக்கு சவால் விடும் இந்தப் புதிய குறியீட்டு முறைக்கு தந்தை பெரியாரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் லீனியர் கோட் (Periyar Linear Code) என்று பெயரிட்டுள்ளார்.

சமூகத்தில் மனித நேயக் கருத்துகளைப் பரப்பி பெரியார் ஆற்றிய தொண்டை நினைவு கூறும் வகையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் வசந்தா கந்தசாமி. தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் நினைவாக பெயரிடப்பட்ட இப்புதிய குறியீட்டு முறையை எகிப்து, அமெரிக்கா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் முறையே பேரா.முனைவர் அடெல் ஹெல்டு பிலிப்ஸ், பேரா.பால்பி. வாங், பேரா.டீகோ லூசியோ ரேபோபோர்ட் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வுகளுக்கு உட்படுத்தி இது சரியானதுதான் என ஒப்புக் கொண்டுள்ளது.

அதனால் இந்நூல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2008இன் தொடக்கத்தில் வெளிவந்துள்ளது. உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரியார் லீனியர் கோட் பற்றிய தனிப் புத்தகம் ஒன்றும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தயாராகி வருகிறது. விரைவில் அதன் வெளியீடும் இருக்கிறது. இந்நூல் வேதத்திலும், புராணத்திலும் அறிவியல் இருக்கிறது; அணுகுண்டு பார்முலா இருக்கிறது என்று கழிவுகளில் அரிசி தேடும் ஆரியக் கூத்துகளின் மத்தியில் தனிப் பெரும் ஆய்வாளராக புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதற்குத் தன் நன்றி அடையாளமாக பெரியார் பெயரைச் சூட்டியுள்ள திருமதி வசந்தா கந்தசாமி அறிவியல் வரலாற்றில் மட்டுமல்ல; சமூகநீதி வரலாற்றிலும் தனி இடம் பெறக்கூடியவர்.

------------------- நன்றி: "உண்மை" மாதமிரு இதழ்

Monday, May 05, 2008

முனிசிபாலிட்டியில் சுயராஜ்யம்

கொஞ்ச நாளாக எங்கு பார்த்தாலும் முனிசிபல் சேர்மென்கள் வசூல் செய்யத் தவக்கப்பட்ட காரணத்தினால் முனிசிபாலிட்டிக்கு ஏற்பட்ட வரி நஷ்டத்தை அவ்வித சேர்மென்களிடமிருந்து வசூல் செய்யப்படவேண்டுமென்று கவர்ன்மெண்டார் உத்திரவு போட்டு வருகிறார்கள். ஆனால் சேர்மென்கள் திருடுகிற-திருடிக் கொண்ட பணத்தை வசூல் செய்யவும் அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தவும் அதிகாரிகளும் கவர்ன்மெண்டாரும் கவலைப்படுவதேயில்லை போலிருக்கிறது. அதிகாரிகளைக் கண்டு "சேர்மென்கள் இம்மாதிரி கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே இது சரியா? என்று கேட்டால், நாங்கள் என்ன செய்வோம்; நீங்கள் தானே சுயராஜ்யம் கேட்டவர்கள்; நாங்கள் சுயராஜ்யம் கொடுத்து விட்டோம்; அந்த நிர்வாகம் உங்கள் மந்திரிகளிடம் இருக்கிறது; அவர்களைப் போய்க் கேளுங்கள். நீங்கள் கேட்ட சுயராஜ்யத்தை நீங்கள்தானே அநுபவிக்க வேண்டும்? எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்" என்கிறார்களாம். கவர்ன்மெண்டார் என்கிற மந்திரிமார்களை இதைப் பற்றி கவனிக்கும்படி சொன்னால் "நீங்கள் தெரிந்தெடுத்த சேர்மென் தானே, அவரால் ஏற்படும் சுக துக்கத்தை நீங்களே அநுபவியுங்கள்" என்று சொல்லுகிறார்களாம். "நாங்கள் தெரிந்தெடுக்கவில்லை, ஏமாற்றி விட்டார்கள்" என்று சொன்னால் 'கோர்ட்டுக்குப் போங்கள்' என்று சொல்லுகிறார்களாம். ஊரில் சிநேகிதமாய் உள்ள சிலரிடம் சொல்லி யாவது இதைத் திருத்தலாமென்றால் சேர்மெனின் நண்பர்கள் "இதனால் என்ன முழுகிப் போய்விட்டது. அவரும் ஒரு பார்ப்பனரல்லாதார் (நான் பிராமின்) தானே, சாப்பிட்டுப் போகட்டுமே. இதனாலேயா முனிசிபாலிட்டி முழுகிப் போய் விடும்?" என்று சொல்லி விடுகிறார்களாம்.

சாட்சிக்காரர்கள் காலில் விழுவதை விட சண்டைக்காரர் காலிலேயே விழுந்த விடலாமென்று சேர்மெனிடம் போய் "ஐயா! இப்படிச் செய்கிறீர்களே, இது யோக்கியதையா? உம்முடைய அக்கிரமத்தினால், சுயராஜ்யம் என்றாலே ஜனங்கள் பயப்படும் படியாயிருக்கிறதே, கொஞ்சமாவது சர்க்காருக்கு மேலதிகாரம் இருக்கும் போதே இப்படிக் கொள்ளையடித்தால் சர்க்கார் சுத்தமாய் விலகி விட்டால் முனிசிபாலிட்டியார் கதியென்னாவதென்று ஜனங்கள் நினைக்கும்படி செய்கிறீர்களே" யென்று கெஞ்சினால், சேர்மென்கள் "அதெல்லாம் சரி, அந்த தர்ம நியாயம் எனக்கும்தான் தெரியும். ஆனால் எனக்கு சோத்திற்கு வேறொரு வழிகாட்டுங்கள். நானும் உங்களோடு தர்ம நியாயம் பேசுகிறேன். எனக்கு பெண்டு - பிள்ளை - நல்லது - கெட்டது இவைகளில்லையா? எந்த ஊரில் பிறந்து இந்த ஊருக்கு வந்து சும்மா உழைக்க நாமென்ன முட்டாளா? உங்கள் தகப்பன்மார் காலந்தொட்டு நான் இப்படித்தான் நடக்கிறேன்" என்றும் "ஒரு சம்பளச் சேர்மென் வைத்தாலும் மாதம் 500 ரூபாய் செலவாகுமல்லவா? அதற்கு மேலாகவா என்னால் முனிசிபாலிட்டிக்கு செலவாகிவிடுகிறது?" என்று சொல்லி வருத்தப்படுகிறார்களாம்.

இந்நிலைமையில் கஞ்சிக்குங்கூட வழியில்லாத ஆட்களை சேர்மென் உத்தியோகத்தில் போட்டு அவர்கள் மீது இம்மாதிரி குற்றங் குறை சொல்லுவதைவிட, சேர்மென் வேலைக்கு வருகிறவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வரையில் படி உண்டென்று ஏற்பாடு செய்துவிட்டால் இம்மாதிரி கஷ்டங்கள் ஏற்படாததோடு முனிசிபாலிட்டிக்கும் அதிக நஷ்ட மேற்படாது. இல்லாவிட்டால் சேர்மென் மாதம் 500 ரூபாய் சம்பாதிக்க வேண்டியிருந்தால் முனிசிபாலிட்டிக்கு எவ்வளவு ரூபாய் நஷ்ட மேற்படுகிறது? பணம் சம்பாதிப்பதற்காக அவசியமில்லாத வேலைகள் எல்லாம் செய்ய வேண்டி நேரிடுகிறது.

உதாரணமாக, சேர்மெனுக்கு ஒரு 100 ரூபாய் வரும்படி வர வேண்டுமானால் கான்ட்ராக்டருக்கும் 200 ரூபாய்க்குக் குறைவில்லாமல் லாபம் இருக்கவேண்டும். இவைகள் தவிர ஆபிஸ் சிப்பந்திகள் ஓவர்சீயர் முதலியவர்களுக்கும் 50 ரூபாய்க்குக் குறையாமலாவது வரும்படி இருக்கவேண்டும். இதற்காகத்தான் குறைந்தது ஒரு 2000 ரூபாய் வேலையையாவது உற்பத்தி செய்ய வேண்டும் . இம்மாதிரி இவர்கள் சாப்பிடுவதை அனுமதிக்கிறதற்குக் கவுன்சிலர்களுக்கு நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கும் பல செளகரி யங்கள் செய்து கொடுக்கவேண்டும். அவர்களில் யாராவது இரண் டொரு கவுன்சிலர்கள் சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள் வர நேர்ந்து விட்டால் அவர்களுக்கும் மாதம் 100,50 கிடைக்கும்படி செய்ய வேண்டும். இவ்வளவுமில்லாமல் தன்னைத் தாங்கிப் பேச ஊரில் சில ஆட்களைச் சுவாதீனம் செய்து கொள்வதற்காக அவர்களுக்கும் வேறேதாவது உத்தியோகமோ கான்ராக்டோ, வரி குறைவோ முதலிய உதவிகள் செய்ய வேண்டும். இவ்வளவையும் பார்த்துக் கொண்டி ருக்கிற முனிசிபல் சிப்பந்திகள் சும்மா இருக்க முடியுமா? ஒருக்காலும் முடியாது. ஆதலால் அவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவுமல்லாமல் ஊர் ஜனங்களிடம் பணம் வாங்க ஆரம்பித்து அவர்களுக்கும் முனிசிபல் வரியோ, சொத்தோ உதவ வேண்டும். ஆட்களிடம் பணம் பெற்றாக வேண்டும். இம்மாதிரி சேர்மெனுக்கும் சிப்பந்திக்கும் பணம் கொடுத் தும் சிபார்சு பிடித்தும் உத்தியோகம் பெறுபவன் யோக்கியதையும் தகுதியுள்ளவனாயுமிருப்பானா? ஒருக்காலும் இருக்க முடியாது. ஆகவே, எவ்வெவ் விதங்களில் நமது சுயராஜ்யம் பெற்ற ஸ்தாபனங்கள் கஷ்டப்படவேண்டியிருக்கிறது என்பதை பொது ஜனங்கள் அறிவார்களாக.

----------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை --- "குடிஅரசு" 1-8-1926

Saturday, May 03, 2008

சாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா?

பார்ப்பனர்கள்தான் எவ்வளவுக் “கெட்டிக்காரர்கள்!” கெட்டிக் காரர்கள் என்று நாம் சொல்லுவது நயவஞ்சகமாக எப்படியெல்லாம் காய்களை நகர்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும்.

சில தலைவர்கள் பற்றி சுருக்கமாக வரலாறுகளைக் கூறுவது போன்ற சந்தடி சாக்கில், அவாளின் இஷ்ட தெய்வமான ஆசாமிகளை ஓகோ என்று உருவகப்படுத்திக் காட்டி விடுவார்கள்.

அதிலே “தினமலர்” ஏட்டுக்குத்தான் முதல் பரிசு!

“யார் இவர்கள்?” என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, ராஜீவ் காந்தி, ராஷ் பிகாரி போஸ், ஜவகர்லால் நேரு இவர்களைப்பற்றி குறிப்புகளைத் தந்துவிட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் சாவர்க்காரும் திணிக்கப்பட் டுள்ளார். அதன் விவரம் இதோ:
“வீர சாவர்க்கர் (1883-1966): விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற முழுப் பெயருடைய இவர் புரட்சிவாதி. ரஷ்யா, அயர்லாந்து, எகிப்து மற்றும் சீனா வரை இவரது புரட்சி இயக்கத்தின் தொடர்பு பரவியிருந்தது. பிரிட்டிஷ் அரசு விதித்திருந்த தடையை மீறி பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இவரது புத்தகங்களை வெளியிட்டன. 1910-இல் நாசிக் கலெக்டர் ஜாக்சன் துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை மேல் விசாரணைக்காக கப்பலில் அழைத்து வந்தனர். அதிலிருந்து தப்பிய இவர் கரையை அடைவதற்குள் ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷ், பகத்சிங் போன்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். இந்தியா விடுதலை அடைந்த பின் இவர் இந்து மகாசபை கட்சியை நிறுவினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது வரலாறு என்ற பெயரில் சிப்பாய் கலகத்தின்போது நடைபெற்ற வரலாற்றுக் குறிப்புகளை பதிவு செய்தார்.

இது “தினமலர்” (26.4.2008) வெளியிட்டுள்ள குறிப்பாகும்.

இதனைப் படிப்போர் என்ன கருதுவார்கள்? சுபாஷ் சந்திரபோசுக்கும், பகத்சிங்குக்கும் முன்னோடி இந்த வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்று தானே கருதுவார்கள்?
பெயரில்தான் “வீர” சாவர்க்கார் என்று இருக்கிறதே தவிர - இவர் எத்தகைய கோழை என்பதை உண்மையான தகவல்களை அறியும் எவரும் முடிவுக்கு வருவார்கள்.
அந்தமான் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். 50 ஆண்டுகள் அவருக்குத் தண்டனை என்றெல்லாம் புகழ் புராணம் படிக்கிறார்களே - இவர் 50 ஆண்டுகாலம் சிறையில் கழித்தாரா? அப்படி கழிக்கவில்லையானால், அவர் சிறையிலிருந்து எப்படி வெளியில் வந்தார்? இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலில்தான் உண்மையான சாவர்க்கார் வெளிச்சத்துக்கு வருகிறார்.
அந்தமான் சிறையில் இருந்த அந்த மூன்று ஆண்டுக்குள் ளேயே நான்கு முறை மன்னிப்பு எழுதிக் கொடுத்த கடைந்தெடுத்த கோழை மனிதர்தான் இந்த சாவர்க்கர். அந்த மன்னிப்புக் கடிதத்திலும் அவர் என்ன குறிப்பிட்டு இருந்தார்? “என்னை விடுதலை செய்தால் நான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாச மாக இருப்பேன்”
என்றல்லவா எழுதிக் கொடுத்தார். இல்லை என்று இந்தத் “தினமலர்”, “தினமணி”, “சோ” வகையறாக்களால் மறுக்க முடியுமா?
இவரைப் போய் பகவத்சிங்குக்கு முன்னோடி என்று கூறுவது - மாவீரன் - நாத்திகச் செம்மல் பகவத் சிங்கைக் கொச்சைப்படுத்து வதாகும்.

தூக்குக் கயிறை முத்தமிட்ட அந்தக் கடைசி நேரத்தில்கூட பகத்சிங் கம்பீரமாகவே நின்றான். அரசிடம் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டான். பாச உணர்வின் காரணமாக தனது தந்தையார் கருணை மனு அனுப்பியதற்காக அவரை மிகவும் கடிந்து கொண்டு இருக்கிறார்.
தன்னை விடுதலை செய்யவேண்டும் என்பதற்காக பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சரணாகதி அடைந்த சாவர்க்காரை அந்த மாவீரனோடு ஒப்பிடலாமா? அப்படி ஒப்பிடுவது கடைந்தெடுத்த மோசடியல்லவா? சுண்ணாம்பை வெண்ணெய் என்று காட்டும் கயவாளித்தனம் அல்லவா?

அதேபோல மாவீரர் சுபாஷ் சந்திரபோஸோடு ஒப்பிட்டு “தினமலர்” எழுதுகிறது. பாமர மக்கள்தானே “தினமலரை”ப் படிக் கிறார்கள். படித்தவற்றையெல்லாம் அப்படியே நம்பி ஏமாறக்கூடிய வர்கள் இந்தப் பாமரர்கள் என்கிற திமிர் பிடித்த எண்ணம்தான் இப்படியெல்லாம் தகிடுத்தத்தமாக இந்தக் கூட்டத்தால் செய்திகளை வெளியிட முடிகிறது.

மதச்சார்பற்ற சக்திகள் இதில் விழிப்பாக இருந்து இதுபோன்ற புரட்டுச் செய்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்து கிறோம்.

----- "விடுதலை" தலையங்கம் 2-5-2008