Monday, April 28, 2008

பிராமணர்கள் அகந்தையும் சென்னை நகர பரிபாலன சபையும்

காங்கிரஸின் பெயரையும், காந்தியடிகள் பெயரையும், ஜெயிலுக்குப் போய் கஷ்டப்பட்ட தேசபக்தர்களின் பெயரையும், சிறீமான் சீனிவாசய்யங்கார் பணத்தையும், சில பிராமணரல்லாத வயிற்றுப் பிழைப்புத் தலைவர்களின் சமூகத் துரோகத்தையும், கஞ்சிக்கு வகையற்ற சில தொண்டர்களின் காலித் தனத்தையும் ஆதாரமாய் வைத்துக் கொண்டு சென்னை நகர பரிபாலன சபையாகிய கார்பொரேஷனுக்குப் போன சுயராஜ்யக் கட்சி மெம்பர்களில் சில கனவான்கள், கார்பொரேஷனையே குட்டிச் சுவராக்குவதோடு இந்தியர்கள் சுய ஆட்சிக்கு கொஞ்சமும் அருகரல்லர் - மானமுடையவரல்லர்- விடுதலை அடையத் தகுதியற்றவர் என்பதை வைரக்கல்லில் பொன் எழுத்தால் எழுதப் பாடுபட்டு வருகிறார்கள்.

சுயராஜ்யக் கட்சியார் என்று சொல்லிக் கொண்டு கார்பொரேஷனுக்குச் சில பிராமணரல்லாத கனவான்கள் போயிருந்த போதிலும், அதற்குப் பிராமணர்கள் பணமும் பிராமணப் பத்திரிகை களின் பிரசாரமுமேதான் முக்கியமாயிருந்தபடியால், இவர்களும் அப்பிராமணர்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆட வேண்டியதாய்ப் போயிற்று. அதன் பலனாகவே கார்பொரேஷன் கமிஷனரான சிறீமான் வெங்கிட்டநாராயண நாயுடு என்கிற பிராமணரல்லாத கார்பொரேஷன் கமிஷனர் ஒருவரை எப்படியாவது ஒழித்து அந்த ஸ்தானத்தில் ஒரு பிராமணரையோ அல்லது தங்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடும் பிராமணரல்லாத ஒரு சமூகத் துரோகியையோ கொண்டுவந்து வைக்கத் தங்களால் கூடுமான அக்கிரமங்களையெல்லாம் செய்து வருகிறார்கள். இதைப்பற்றி பிராமணப் பத்திரிகைகளில் வரும் விஷயங்களைப் பார்த்தாலே அதன் சிறுமைக்குணம் நன்றாய் விளங்கும். கார்பொரேஷனுக்கு மெம்பராய் போயிருப்பவர்கள் யோக்கியதையையும், தாங்கள் என்னென்ன விதமான நடவடிக்கை களால் இந்த ஸ்தானம் பெற்றோம் என்கிற விஷயத்தையும் தங்கள் நெஞ்சில் கையை வைத்துப் பார்ப்பார்களானால் இவ்வித சிறுமைக் குணத்திற்கு தாங்கள் அருகர்கள்தான் என்பதைத் தவிர வேறொன்றும் விளங்காது. சிறீமான் வெங்கிட்ட நாராயணா சம்பளத்தில் பொறாமைப் பட்டு அவர் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று சிறீமான் சத்தியமூர்த்தி பிராமணர் சட்டசபைக்கு ஒரு தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார். அல்லாமலும் , கார்பொரேஷன் கமிஷனரை சர்க்கார் நியமிக்கக்கூடாது, தாங்களே (தங்கள் அடிமையை) நியமிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானமும் கொண்டு வந்திருக் கிறார்கள். அல்லாமலும், அற்ப விஷயங்களையெல்லாம் வேண்டுமென்றே அதிகப்படுத்தி கார்பொரேஷன் சபையை ஒடக்கால் தெரு மாதிரி செய்கிறார்கள்.

கமிஷனர் வீட்டில் ஒரு குழாய் மாற்றி வைத்ததற்காகவும், அவர் வீட்டில் இருந்த தண்ணீர் தேக்கத்தை கார்பொரேஷன் சிப்பந்திகளைக் கொண்டு வெளியாக்கியதற்காகவும், இந்தியர்களின் யோக்கியதையை பாதிக்கும்படியாய் ஆயிரக்கணக்கான கேள்விகளும் பிராமணப் பத்திரிகைகளில் "இந்தக் கமிஷனர் இனி உதவாது" என்கிற தலையங்கத்தின் கீழ் இழிவுப் பிரசாரங்களும் நடக்கிறது. இந்த உத்தியோகத்தில் சிறீமான் வெங்கிட்ட நாராயணாவுக்கு முன் இருந்த ஐரோப்பியர், இந்தியர் முதலிய கமிஷனர்கள் காலத்தில் இருந்த சம்பளமும்- நியமனமும் முனிசிபல் சிப்பந்திகள் குடும்ப சகிதமாய் கமிஷனர்கள் வீட்டுக்குப் போய் வேலை செய்ததும், அவர்கள் இஷ்டம் போல் எல்லாம் ஆடினதும் இவர்களுக்கு கொஞ்சமும் கவலையை உண்டு பண்ணவேயில்லை . ஆனால் சிறீமான் வெங்கிட்ட நாராயணா பிராமணரல்லாத இந்துவாகிவிட்டதால் பிராமணர்களுக்குப் பொறுக்கமுடியவில்லை. மற்றபடி பிராமண அதிகாரிகள் ஒவ்வோரிடங்களில் செய்யும் கொடுமைகள் கணக்கு வழக்கில்லை . உதாரணமாக, சென்ற ஒரு வருஷத்திற்குள்ளாக கவர்மெண்ட் பிராமண அதிகாரிகளில் சிலர் ராமகிருஷ்ணா ஹோம் நிதி என்னும் பெயரால், நாடகமாடிக் கொண்டு ஆங்காங்குள்ள சர்க்கார் சிப்பந்தி களைக் கொண்டு 1000, 5000, 10000 ரூபாய்களுக்கு டிக்கட் விற்றுக் கொடுக்கும்படி செய்து, கிராம அதிகாரிகளையும், குடித்தனக் காரர்களையும், வியாபாரிகளையும் நெருக்கி டிக்கட் 1 - க்கு 10 ரூ. வீதம் ஆள் ஒன்றுக்கு 2,4-5,10 டிக்கட்டுகள் வீதம் கட்டாயப்படுத்தி அவர்கள் தலையில் கட்டி, தெண்டம் வசூல் செய்வது போல் பணம் வசூல் செய்தார்கள்- செய்கிறார்கள்-செய்யவும் போகிறார்கள். இதைப் பற்றி கேட்பதற்கு ஒரு பிராமணனையும் காணோம். ஒரு சுயராஜ்யக் கட்சி மெம்பரையும் காணோம். ஏன்?

நாடக அதிகாரி பிராமணர் - வசூலிக்கும் அதிகாரிகள் பெரும்பாலும் பிராமணர்கள் - இந்தப் பணத்தை அநுபவிப்பதும் ராமகிருஷ்ணா மடம் என்று சொல்லப்படும் பிராமண ஆதிக்கமுள்ள பிராமண மடம். இது நிற்க, கவர்னர் முதலியவர்களுக்கும் ஐ.இ.ந உத்தியோகஸ்தர்களும் ஆகிய வெள்ளைக்காரர்கள் இதைவிட அதிகமாகச் செய்வதை கேட்பதற்கும் ஆளில்லை. ஏனென்றால் பெரும்பாலும் இந்த பிராமணர்களே இருந்து பல ஆபாசங்களை நடத்திக் கொடுக்கிறார்கள். இம்மாதிரி நாம் எழுதுவதால் சிறீமான் வெங்கிட்ட நாராயணாவோ மற்றும் பல பிராமணரல்லாத அதிகாரிகளோ பொதுச் சொத்தையனுபவிக்க வேண்டும். அதைப் பிராமணர்கள் விட்டுவிடவேண்டும் என்பது நமது அபிப்ராயமல்ல. குரோதத்தையும், துவேஷத்தையும், பொறாமையையுமே முக்கியக் காரணமாக வைத்துக்கொண்டு அற்ப விஷயங்களில் பிரவேஷித்து ஒரு மனிதன் பிராமணரல்லாதாரராய் இருப்பதால் அவரைக் கெடுக்க வேண்டும் என்கிற குஷியின் பேரில் செய்யும் அயோக்கியத்தனமான காரியங்களை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது. அல்லாமலும், நமது பிராமணர்களுக்குக் கார்பொரேஷனில் கொஞ்சம் செல்வாக்கு ஏற்பட்டவுடன் ஒரு பிராமணரல்லாத அதிகாரியை அதுவும் லஞ்சம் லாவணம், பொய் புரட்டு இல்லாத கண்டிப்புவாதியானவரும் கெட்டிக்காரரும் என்று பிராமணர்களாலேயே சொல்லப்பட்டு வந்தவரான ஒரு முக்கியஸ்தரையே ஒழிக்கப் பார்ப்பார்களானால் , இவர்கள் கைக்கு மந்திரி உத்தியோகமும் சட்டம் செய்யும் அதிகாரமும் வந்துவிட்டால் கபடம், சூது அறியாத பிராமணரல்லாத பாமர மக்களின் தலையெழுத்து என்ன ஆகும் என்பதைப் பிராமணர்கள் பின்னால் கவிபாடிக் கொண்டும், அவர்களை தலைவராக்கிக் கொண்டும் பிழைக்க நினைக்கும் பிராமணரல்லாத குள்ள நரிகளையும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து பிராமணர்களுக்கு ஆக்கம் தேடிக்கொடுத்து பதவி அடைய நினைக்கும் பிராமணரல்லாத சுயகாரியப் புலிகளையும் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

------------------ தந்தைபெரியார் - "குடிஅரசு" - 14.2.26

Sunday, April 27, 2008

கோவை ஜில்லா செங்குந்தர் மகாநாடு

நமது நாட்டில் செங்குந்தர் குலமானது தக்க பெருமையுடனும், செல்வாக்குடனும் இருந்து வருகிறது. ஆனாலும், அதில் பெண்களை கோவில்களின் பேரால் பொட்டுக்கட்டி தாசி வேசித் தொழில் செய்ய அநுமதிப்பதால் அக்குலத்திற்கு ஒரு இழிவு இருக்கிறது என்பது மறைக்க முடியாத காரியமானாலும், இச்சங்கம் ஏற்பட்ட சென்ற 10 வருஷங்களுக்குள்ளாக எவ்வளவோ சீர்திருத்தமடைந்துவிட்டது. இவ்வளவு தூரம் முன்னேற்றமடையும்படியான காரியம் வேறு எந்த குல சங்கமும் செய்யவேயில்லை. இக் குல முன்னேற்றத்திற்கு இச்சங்கத்தின் மூலமாய் பல குலாபிமானிகள் உண்மையில் பாடுபட்ட தனால்தான் இந்த யோக்கியதைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனாலும், இது மாத்திரம் போதாது. இக் குலத்தின் சில ஆண் களிடமும் உள்ள சில குறைவுகளையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதாவது, நமது நாட்டில் இக் குலத்தாரில் சிலர் மேளம் வாசிக்கும் தொழிலை ஜீவனமாய்க் கொண்டிருப்பதால் ஒரு குறைவான பெயர் இருந்து வருகிறது. இத் தொழில் காரணமாகவே ஆண்கள் சுயமரியா தையைக் கவனிக்காமல் தங்களுக்குள்ளாகவே சிலர் தங்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதிக் கொண்டு மிகவும் ஒடுங்கியும் பதுங்கியும் நடந்து கொள்கிறார்கள் என்றும், மணி ஒன்றுக்கு 100 ரூ. பெறக்கூடிய நாகசுர வித்துவானும் சபைகளில் சங்கீத ஞானமே இல்லாத ஒரு தற்குறியைக் கண்டாலும் அனுமார் போல் ஒடுங்குவதும் கும்பிடுவதும் தனது குலதர்மம் என்று எண்ணுகிறார் என்றும், தேவக் கோட்டையில் ஒரு ஊர்வலத்தில் 350 ரூ. பேசி நாகசுரம் வாசிக்க வந்த ஒரு நாகசுரக்காரர் வேர்வையைத் துடைக்க தனது தோளின் மேல் ஒரு சிறு துணியை போட்டுக்கொண்டு வாசித்ததில், அந்த மேல் துணியை எடுக்காமல் வாசிக்கக் கூடாது என்று அவ்வூரில் சிலர் சொன்னார்கள் என்றும், சங்கீதம் கேழ்க்க 350 ரூபாயும் 2-வது வகுப்பு படியும் கொடுத்த ஒரு வித்துவானை தோளில் துண்டு போட்டுக்கொண்டுகூட வாசிக்கக் கூடாது என்று சொல்லும்போது நமது பிரபுக்கள் சங்கீதத்தை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பது தெரிகிறதென்றும், ஆதலால் அத்தொழிலை விட்டுவிட வேண்டு மென்றும், சங்கீதத்திற்கு யோக்கியதை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும், நமது ஜனங்களுக்கு இன்னமும் பகுத்தறிவு கிடையாது என்றும், உதாரணமாக ஒரு பிராமணன் ஒத்து ஊதினாலும் ஒரு தாசிக்கு பின்னின்று கொண்டு ஆர்மோனியம் மீட்டினாலும், நட்டுவாங்கம் செய்தாலும், அத் தாசிக்கு ஒரு நாயகனைப் பிடித்து கொடுப்பதற்கு தூது நடந்தாலும் அவனைப் பார்த்து சுவாமி என்றுதான் கூப்பிடுகிறார்கள். தூதுக் கடிதம் வாங்கும் போதே எழுந்து நின்றுதான் வாங்குகிறார்கள் என்றும், ஆதலால் இவ்வறியாமை நிலைமை யிலுள்ள ஜனங்கள் முன்னிலையில் வித்துவானாயிருந்து மேளக்காரன் என்கிற பெயர் வாங்குவதைவிட வீதியில் கல் உடைத்தோ, தெருக் கூட்டியோ முதலியாராய் வாழ்வது மேலென்றும், அல்லாமலும் சுபாவத்திலேயே நமக்கு ஆண்மைத்தனம் வேண்டுமென்றும், அநாவசியமாய் நாம் தாழ்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டு ஒருவரைக் கும்பிடக் கூடாது என்றும், பிராமணர்கள் முதலியவர்கள் நமக்கு மேலான ஜாதி என்று எண்ணுவதே பெரிய நரகமென்றும், பிராமணனுக்குப் பணம் கொடுப்பதால் நமது பாவம் போய்விடு மென்பதும், பிராமணனுக்குப் பணம் கொடுப்பதால் தமது பெற்றோர்கள் மோட்சத்திற்குப் போவார்களென்பதும் அவர்கள் படுக்கை விரித்தால்தான் நல்ல சந்தானம் உண்டாகுமென்பதுமாகிய எண்ணங்கள்தான் நமது சுயமரியாதையைக் கெடுத்து விடுகிற தென்றும், அதோடு நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம் என்றும், நமக்குக் கீழ் ஒருவரில்லை என்று உண்மையாய் நினைப்போமானால் நமக்கு மேலாக ஒருவன் இருக்கவே மாட்டான் என்றும், நாம் அவற்றைக் கவனியாமல் நமக்கு உதவி செய்பவர்களையும் பல வழிகளிலும் நன்மை செய்கிறவர்களையும், நம்மை பரிசுத்தமான காற்றை சுவாசிக்கும்படி செய்பவர்களையும், சாதுக்களையும் நமக்குக் கீழானவர்கள் என்று எண்ணின குற்றத்தின் கரும பலன் தத்துவத்தில் நம்மைவிட ஒரு விதத்திலும் மேலான யோக்கியரல்லாதவர்களும், கீழ் மக்களும் நமது இரத்தத்தை உறிஞ்சியே ஜீவனம் செய்ய வேண்டியவர்களும், நமக்கு மேலான ஜாதியாரென்றும் அவர்களை வணங்க வேண்டியது நமது மோட்ச சாதனமென்றும் நினைக்கும்படி செய்து விட்டது. இக்குறைகள் நீங்கின நிலைதான் சமத்துவ மென்பதும், சமூக முன்னேற்றமென்பதும் என்பதாக நான் நினைக்கிறேன்.

------ தனதைபெரியார் - "குடிஅரசு" - 10.1.26

Thursday, April 24, 2008

இடி அல்லது இடிப்போம்...: ஆதவன் தீட்சண்யா

நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.


இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’

Tuesday, April 22, 2008

கடவுளும், அரசனும், ஜனநாயகமும், சர்வாதிகாரமும்!

மக்கள் மடையர்களாக, மூடநம்பிக்கைக்காரர்களாக, சிந்தனா சக்தி இல்லாதவர்களாக உள்ளவரைதான் கடவுளுக்கும் அரசனுக்கும் மதிப்பு இருக்க முடியும்; அவர்களிடத்தில் மக்களுக்கு பயம் இருக்க முடியும். ஏனெனில் இவர்களுக்கு இயற்கையான சக்தி கிடையாது. இவர்களது ``சக்தி'' செயற்கைச் சக்திதான். அதாவது புருஷனுக்கு பெண்டாட்டி பயப்படுவதுபோல ஒரு கட்டுப்பாட்டினால் தேவையைப் பொறுத்து ஏற்படும், ஏற்படுத்திக் கொள்ளும் சக்திதான்.

உதாரணமாக கடவுள் பயம் மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வந்து இன்று சம்பிரதாயத்துக்காக அல்லாமல் மற்றபடி எவருக்குமே இன்று கடவுள் பயமோ - நம்பிக்கையோ அடியோடு இல்லாமல் போய்விட்டதுடன் இன்று மடையர்களிடமும் அயோக்கியர்களிடமுமே தேவையைப் பொறுத்து இருந்து வருவதையே பார்க்கிறோம். அதாவது ஒரு பூசாரிக்கு அர்ச்சகனுக்கு இருந்து வருகிற நம்பிக்கைப்படி. அதுபோலவேதான் - அரசன் நிலைமையும் இன்று அடியோடு மறைந்துவிட்டது. உலகில் இன்று எங்குமே உண்மையான அரசன் இல்லை; உலகில் எங்குமே இன்று அரசனை மதிக்கும் மக்களும் இல்லை.

அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாக கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும் பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும் அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும் அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது. இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு ``அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை.

மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்'' என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனமேயாகும்.

இதன் பயன் என்னமாய் முடியுமென்றால் மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல் வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்காரகாலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடுவதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானதோ அவ்வளவு முட்டாள்தனமான கருத்தும் காரியமுமேயாகும் ஜனநாயகம் என்பதும், ஆனால், சில அயோக்கியர்களுக்கும், கீழ்த்தர மக்களுக்கும் இதில் பயன், சுயநலம் இருப்பதாக இவர்களால் எளிதில் மக்களை ஏமாற்றிப் பயன்பெற முடிகிறது.

இன்று உலகில் எந்த நாட்டில் ஜனநாயகம் ஒழுங்காக யோக்கியமாக நடைபெறுகிறது என்று சொல்ல முடியும்? அரசன் நாயகன், அரசன் ஆட்சி என்று சொல்லப்படுவதற்கு சக்தி இருப்பதற்குக் காரணம்,

1. அரசன் என்கின்ற மதிப்பு

2. அரசன் நடுநிலை உள்ளவன் என்கின்ற நம்பிக்கை

3. அரசனது அதிகார பலம், இவற்றோடு

4. பரம்பரையாக யார் தயவுமில்லாமல் பதவிக்கு வரும் இயற்கை உரிமை.

இந்த காரணங்களால் அரசனது ஆட்சியை குடிகள் யாரும் எதிர்க்கவும் குறை கூறவும் முடியாமல் இருக்க முடிந்தது.

ஜனநாயக ஆட்சியாளருக்கு இவ்வித தகுதி ஏதாவது உண்டோ? மக்களுக்காவது இதற்கேற்ற பண்பாடு ஏதாவது உண்டோ? கடவுளுக்கு சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து கடவுள் பெண்டாட்டியின் தலையையும், சேலையையும் திருட்டுக் கொடுத்துவிட்டு வந்த ஒருவன் மற்றவனைப் பார்த்து, ``அடே, கடவுள் கெடுத்து விடுவாரடா'' என்று சொல்லி மிரட்டுகிறதைப் போல்தானே இருக்கிறது நமது ஜனநாயக அமைப்பு!

1. காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான்.
2. காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான்.
3. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான்.
4. ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்கு பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான். இவ்வளவுதானா?

ஜாதிப் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறான்; (தன்) ஜாதியான் என்பதற்காக ஓட்டுப் போடுகிறான். இவை ஜனநாயக பிரதிநிதித்துவ நிலைமை என்றால் நாட்டின் நிலைமையோ மக்கள் ஒருவனை ஒருவன் தொட முடியாத நான்கு ஜாதி, ஒருவருக்கொருவர் உண்ணல் கொடுக்கல் வாங்கல் இல்லாத 400 உள்பிரிவு, ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொண்ட பல மதம், கடவுள்கள், பல வேதங்கள், பல தர்மங்கள், இவற்றுள் பல ஜாதித் தொழில்கள், அவற்றின் படி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள பல இலட்சியங்கள், சூழ்ச்சிகள் இவை மாத்திரமேயல்லாமல் பெரிதும் கொள்கையே இல்லாத பல பதவி வேட்டைக் கட்சிகள்; இவற்றிற்கு ஏற்ற பத்திரிகைகள்; சாக்கடை கழுவுகிறவன் முதல் அய்க்கோர்ட் ஜட்ஜ், சீப் செகரட்டரி வரை ஜாதி உணர்ச்சி, ஜாதி அகம்பாவம், மற்ற ஜாதியை ஆள வேண்டுமென்கிற உணர்ச்சியை மூச்சாகக் கொண்ட சிப்பந்திகள், பதவியாளர்கள், பதவியையும் சம்பளத்தையும் வருவாயையுமே முக்கிய இலட்சியமாகக் கொண்ட மந்திரிகள், பிரசிடென்ட்கள், சட்டசபை, பார்லிமென்ட் மெம்பர்கள். இந்த நிலையில் ஜனநாயகம் என்றால் இதற்குப் பொருள் கடவுள் என்பதற்கு உண்டான பொருள் அல்லாமல் ஜனநாயகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புவது போன்றவர்கள் என்பது அல்லாமல் வேறு என்ன? ஆகவே ஜனநாயகம் ஒழிந்து கொடுமையான சர்வாதிகாரம் ஏற்பட்டாலும் குடிமக்களுக்கு ஒருவனுடைய தொல்லைதான், ஒருவனுடைய நலத்திற்கு ஏற்ற கேடுதான் இருக்கலாமே ஒழிய ஜனநாயகப்படியான முள்ளுப் பீப்பாயில் போட்டு உருட்டுவது போன்ற தொல்லைகள் குடிமக்களுக்கு இருக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் "விடுதலை" 3.11.1968

கிழிந்து தொங்கும் "ஞாநி"யின் முற்போக்கு முகமூடி

பார்ப்பனர்களின் குணம் பற்றி பல அறிஞர் பெருமக்கள் சொல்லியுள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். ஏன் என்றால் முற்போக்கு பேசும் பார்ப்பனர்கள்,அவர்கள் என்னதான் முற்போக்கு பேசினாலும் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய உண்மையான பார்ப்பனிய குணாம்சத்தை காட்டி விடுவார்கள். இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உண்மைகள். தற்போது ஞாநி என்ற பார்ப்பனர் குமுதம் இதழில் உண்மைகளை எல்லாம் தலைகீழாகப் புரட்டிப் போட்டு கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆனந்த விகடனில் இருப்பார்; அப்புறம் திடீரென்று குமுதத்துக்கு போவார். குமுததின் மீது குற்றம் சாட்டி விட்டு தனியாக பத்திரிக்கை ஆரம்பிப்பார். அப்புறம் குமுதத்துக்கே வந்து விடுவார். என்ன குழப்பமாக இருக்கிறதா? பார்ப்பனியம் என்பதே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதானே! இந்த ஞாநி ஒரு காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் முற்போக்கு முகமூடியுடன் "அய்யா" ( பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்) எடுத்து பெரியாரின் தொண்டர்களுடன் ஊரெல்லாம் சுற்றுப்பயணம் செய்து தன் முற்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை வசப்படுத்தப் பார்த்த கதைகள் எல்லாம் உண்டு.

இப்போது குமுததில் தன்னுடைய பார்ப்பனிய மையை ஊற்றி தமிழர்களுக்கு விரோதமாக எழுதிவருகிறார். சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு தோழர் அதிஅசுரன் இரண்டு மறுப்புக் கட்டுரைகளை சரியான ஆதாரங்களுடன் எழுதி இணையத்தில் உலவவிட்டுள்ளார். பல தோழர்கள் படித்து உண்மையை உனர்ந்து வருகின்றனர். தோழர் அதிஅசுரனுக்கு நமது பாராடுதழ்களையும் நன்றிகளையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

ஞாநியின் முற்போக்கு முகமூடிகளை அம்பலப்படுத்தி பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். படியுங்கள். உண்மையை உணருங்கள். பார்ப்பனர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

1.'ஓ போடலாமே!'

தோழர் ஞானி - `ஆனந்த விகடனை விட்டு `குமுதம் கிளைக் குத் தாவியுள்ளார்.
இவர் `குமுதம் கிளைக்குத் தாவி யதுகூட அவரின் அறிவு நாண யத்தின் சேதாரத்தைத்தான் வெளிப் படுத்தும்.

அவர் சில நாள்கள் `தீம்தரிகிட என்ற ஒரு இதழை நடத்திப் பார்த்தார் - 1982-இல் மூன்று, இதழ்கள்.
1985-இல் ஆறு இதழ்கள், 2002-இல் மீண்டும் துளித்தது, வழக்கம்போல் கண் மூடி விட்டது. கொள்வார் இல்லாமையால் கடையைக் கட்டிக் கொண்டு விட்டார்.

ஏப்ரல் - மே 2002 இதழில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்.

`தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமை உடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம்; குமுதம் குழும இதழ்களைத் தவிர - என்பதுதான் அந்த அறிவிப்பு.சரி, எதற்காக அந்த அறிவிப்பு? அதே இதழின் 22-ஆம் பக்கத்தில் அதற்கான காரணம் கூறப்பட்டது.

குமுதம் இதழில் ஆசிரியர் குழு பிரசுர விவரங்கள்பற்றிய குறிப்பில் படைப்பாளிகளின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் அறிவிப்பு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. குமுதம் இதழில் வெளிவரும் படைப்புகளின் உரிமை குமுதத்தில் வெளியீட் டாளருகே உரியதாம்.
திரும்ப அதை நூலாகவோ, வேறு எந்தவிதத்திலோ படைப்பாளி பயன்படுத்த வேண்டுமென்றால், குமுதம் வெளியீட்டாளரிடம் அனுமதி பெற வேண்டுமாம். அதாவது குமுதத்தில் எழுதும் பிரபஞ்சன், பாலகுமாரன், அப்துல்கலாம் யாரானாலும் சரி, அவர்கள் எழுதியதன் உரிமை குமுதத்துக்குப் போய் விடுகிறது! பிரபஞ்சனின் சிறு கதைகள் தொகுப்பாக வெளி வரும் போதோ தொலைக் காட்சிக்குத் தரப்படும் போதோ அவர்தான் எழுதிய கதைக்குக் குமுதத்திடம் போய் அனுமதி கேட்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம். நடைமுறையில் இதைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியமல்ல. இப்படி அறிவிப்பு செய்ததே தவறானது. படைப்பாளிகள் சார்பாக இதற்கான தார்மிக எதிர்ப்புதான் எங்கள் அறிவிப்பில் உள்ள நிபந்தனை உள்ளபடியே மனிதன் சுயமரியாதைச் சூடு பறக்கத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒரு `ஓ கூடப் போடலாம்.

அது சரி.. அப்படிப்பட்ட எழுத்தாளரின் உரிமையை ஊனப் படுத்தும் குமுதத்தில் சேர்ந்து கொண்டு இப்பொழுது `ஓ போடுகிறாரே அது எப்படி?

ஓகோ! எழுத்தாளரின் உரிமை `காசுக்குச் சலாம் வைத்து விட்டதோ! ஞானியின் சுயமரியாதை இப்பொழுது; எங்கே போய் முக்காடு போட்டுப் பதுங்கிக் கொண்டது? தார்மீகம் தார்பூசிக் கொண்டு விட்டதா?

தான் மட்டுமே எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாத கம்பீரமான எழுத்தாளர் என்பது போல காட்டிக் கொண்டவரின் கவட்டுத்தனம் இப்பொழுது அம்பலமாகி விட்டதே!

சரி... இன்னொரு செய்தி; இவ்வார குமுதத்தில் (2.4.2008) `நாறும் தேச பக்தியைப்பற்றி அலசிவிட்டு, இடை இடையே சில பெட்டிச் செய்திகளையும் உலவவிட்டுள்ளார்.
அதில் ஒன்று.. கலைஞர் மகள் கனிமொழியைப் பற்றியது. ஞானி யின் ஒரே இலக்கு கலைஞர்மீது பாணம் தொடுப்பதே!திராவிட இயக்கக் கொள்கையில் அழுத்தமான ஒருவர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது மகா பெரிய ஆபத்து என்ற அச்சத்தில் அவாள் வட்டாரத்தால் ஏவப்படும் `நஞ்சுதோய்ந்த அம்புகள் அவை.

`துக்ளக் `கல்கி, `தினமணி வரிசையில் இவரும் இருக்கிறார் என்பதுதான் இதன் பொருளும் - உண்மையுமாகும்.

``தன் மகள் கனிமொழி ஓர் இந்து பெண் என்று அறிவித்திருக்கும் கலைஞர் கருணாநிதியும் இந்துவா? அப்படியானால் நாத்திகர் களுக்குக் கடவுள் கிடையாது. மதம் மட்டும் உண்டா? அப்படி ஒரு நாத்திகக் கோட்பாடு ஏற்கெனவே உள்ளதா? அல்லது கலைஞர் கண்டருளியதா? - இதுதான் இவ்வார `குமுதத்தில் தோழர் ஞானி உதித்திருக்கும் பூச்செண்டு! இந்தப் பிரச்சினை எங்கிருந்து கிளம்பியது?

மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவில் இந்தத் தடவை இந்துக்களுக்கு இடம் தரப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஒருவர் எழுதிட அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைஞர் `முரசொலியில் (19.3.2008) எழுதினார்:

`கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது திருச்சி சிவா கனிமொழிஆகிய இரண்டு இந்துக்களைத் தானே நிறுத்தினோம் என்ற கலைஞர் அவர்களின் இந்தப் பதிலை வைத்துதான் ஞானி பேனாவைச் சொடுக்கியுள்ளார்.

நாத்திகத்துக்குக் கடவுள் கிடையாது; மதமும் கிடையாதுதான் ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி என்ன நிலைமை?

நாத்திகன் என்று சொன்னாலும் அவர் இந்துதான். பவுத்தன் என்று சொன்னா லும் அவனும் இந்துதான், சீக்கியன் என்று சொன்னாலும் அவனும் இந்துதான். அப்படி அரசமைப்புச் சட்டம் இந்தியாவில்! கலைஞரை நோக்கிக் கணையைத் தொடுக்கக் கிளம்பும் முன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பார்ப்பனீயத்தை பட்டை கழற்றிருக்க வேண்டாமா? தோலை உரித்துத் தொங்க விட்டிருக்க வேண்டாமா? மூலத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடுவதா வீரம்? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா? அக்கிரகாரத்தின் கண்களுக்குக் கலைஞர் கருவேலமுள்ளா?அதேபோல விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதையும் போடாமல் கோடு கிழித்தாலும் அதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

உயர்ஜாதி (Forward Community) என்ற பட்டியலில்தானே அடைக்கிறார்கள்?
இதைப்பற்றியெல்லாம் இவாள் எழுத மாட்டார்கள் - காரணம், இவையெல்லாம் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காக்கும் கோட்டைக் கொத்தளங்களாயிற்றே! இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகனல்ல; வருணா சிரமத்தை எதிர்ப்பவன்தான் நாத்திகன் என்பதை திருவாளர் `ஞானியார் சுவாமிகள் அறிவாரா!


புரியவில்லையென்றால் மரணமடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி `சுவாமிகளின் ``தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதியை (பக்கம் 407-08) கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும் - அப்படியே மனுதர்மத்தையும் கொஞ்சம் துழாவட்டும்! (அத்தியாயம் இரண்டு சுலோகம் II).

கலைஞரும் சரி, கவிஞர் கனிமொழியும் சரி நாத்திகர்கள்தான். அதற்கு ஞானிகளின் சான்றிதழ்கள் தேவையில்லை.


--------"மயிலாடன்" அவர்கள் "விடுதலை" 30-3-2008 இதழில் எழுதியது.


2. ஞாநியின் ‘முற்போக்கு’ முகம்

தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப் பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப் பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும் அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும் வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம், ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா, தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர் கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க் கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும் தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித் விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித் நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப் பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

-------------- சுப.வீ அவர்கள் செப்டம்பர் - 2007 "கருஞ்சட்டைத்தமிழர்" இதழில் எழுதிய கட்டுரை.

3. ஞாநி எந்தப் பக்கத்தில்?


“சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்களை உடைக்கும் சர்ச்சையை, போலிபக்திக்கும் போலி பகுத்தறிவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அத்வானி போன்றோர் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதால் எதிர்க்கவில்லை. அதுராமர் பாலம் என்கிற, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி அடிப்படையில் சொல்கிறார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று முழக்கமிடும் கருணாநிதி போன்றோரும், பகுத்தறிவு அடிப்படையில் திட்டத்தை அலசத் தயாராக இல்லை. இது தமிழனின் பல நூற்றாண்டு காலக்கனவு என்று இன் னொரு வகையான மூட பக்தி’யை இதில் காட்டுகிறார்கள்.

அசல் பக்திக்கும் அத்வானிக்கும் தொடர்பு இல்லை. அசல் பகுத்தறிவுக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை.

-இப்படிச் சொல்கிறார் சங்கரன் ஞாநியார். போலி பக்தியையும் போலி பகுத்தறிவையும் சாடித் தகர்க்கும் இவர் ‘அசல் பக்திக்கும்’ ‘அப்பட்டமான பகுத்தறிவுக்கும் இடையே பாலம் கட்டுவதில் தீவிரம் காட்டும் ஓர் அனுமார் பக்தரேதான்.

அத்வானி ஒரு போலி பக்தர். பகுத்தறிவில்லாதவர் என்று சங்கரன் எழுதுவ தால் அக்கிரகாரமோ, சங்கப் பரிவாரமோ, சாமியார் கூட் டமோ ஞானியின் தலையை வெட்டு, நாக்கை அறு என்று ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும், ‘இவன் நம்ப பிள்ளை’ என்று. என்ன சாதுரியமாய் சூத்திரவாள் மீது தாக்குதல் நடத்துகிறான் என்று ‘அவாள்’ கூட்டம் மெச்சிக்கொள்ளவே செய்யும்.

அத்வானி பற்றிய ஞாநியின் மதிப்பீடு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கலைஞரின் பகுத்தறிவு போலித்தனமானது என்று அவரை அறிந்த எவரும் சொல்லத் துணியார்.

ஓட்டு அரசியலில் நம்பிக்கையுள்ள எந்த அரசியல் தலைவரும் ஏட்டில், எழுத்தில், அரசியல் மேடையில், திருமண விழாக்களில் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் தனது பிள்ளைப் பருவம் முதல் இன்றுவரை எங்கும் எப்போதும் அறிவை முன்னிறுத்துகிறவர் கலைஞர். “கருணாநிதியைத் திருத்தவே முடியாது’’ என்று இராம கோபாலன் பலமுறை சாபம் இட்டது ஏன்? இராம கோபாலன் போன்றோரின் வகையும் வயிற்றெரிச்சலும் கலைஞரின் பகுத்தறிவுப் பற்றுக்குச் சூட்டப்படும் புகழாரங்கள் அல்லவா!

ஞாநி போன்றோரின் வாதங்கள் பல நேரங்களில், பலரது மனங்களில் இது வன்றோ நடுநிலை வாதம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் இம்மாதிரியான `பெருந்தன்மையான’ பேச்சுக்கள் ஒரு கபடதாரியின் நேர்மையற்ற உளறல் என்பது புரிந்து விடும்.

கருத்துக்கள் மோதுவதும், வர்க்கங்கள் பகைமை கொள்வதும், இனங்கள் எதிரெதிராய் நிற்பதும் அறியாமையாலோ, போலித்தனத்தாலோ அல்ல. அது போலவே கருத்து மோதல்களில், களத்துப் போர்களில் நடுநிலை என்பதும் சமரசம் என்பதும் புனிதமானதோ போற்றுதற்குரியதோ அல்ல.

தாய்வழிச் சமூகத்திலிருந்து, தந்தைவழிச் சமூக உறவுக்கு மாறும்போது, பொது உரிமைக் கருத்திலிருந்து தனிச்சொத்துரிமைக்கு மாறும்போது நேரும் போர்க்களக் காட்சி தான் குருச் சேத்திரம்!

உறவினர்களுக்குள் நேர்ந்த சண்டையில் கூட சமரசமற்ற, கண்டிப்பு மிகுந்த பேராசிரியராகவே காட்சி தருகிறான் கண்ணன். “இந்தப் போரிலே வென்றால் சொத்து கிடைக்கும்; இறந்தால் சொர்க்கம் கிடைக்கும். தயங்காதே துணிந்து போரிடு’’ என்பது தான் கீதோபதேசம்.

எல்லா உயிர்களையும் நேசிப்பதாகச் சித்திரிக்கப்படும் பரமாத்மா, கொலையை ஆதரிப்பது ஏன்? ஒருபக்கம் சார்ந்து நிற்பது ஏன்? போர்க் களத்திலே நடுநிலை சாத்தியமில்லை சங்கரா!


இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இங்கேயும் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது திராவிட - ஆரியப் போர். இதிலே ஆதிசங்கரனிலிருந்து ஞாநி சங்கரன் வரை ஓர் அணியில் நிற்கிறார்கள். புத்தனிலிருந்து குப்பன்வரை எதிரணியில் நிற்கிறார்கள். ஆரியப் பிரதிநிதியாக அத்வானியும் திராவிடப் பிரதிநிதியாகக் கலைஞரும் களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. இங்கே அத்வானியின் பக்தி மெய்யானதா, போலியானதா? கலைஞரின் பகுத்தறிவு மெய்யானதா போலியானதா என்பதல்ல பிரச்னை. மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்குமான போராட்டத்தில் யார் எந்தப் பக்கத்தில் என்பதுதான் பிரச்னை.

ஞாநி போன்றவர்கள் அத்வானிகளை - அதாவது ‘போலி பக்தர்களை’ - எதிர்ப்பதுபோல் காட்டிக் கொள்வது கலைஞரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்ப்பதற்காக நடத்தப்படும் போலித்தனமான காரியங்களே!

இம்மாதிரியான போலி மனிதர்கள் பதுங்கிக் கொள்வதற்குக் கிடைத்த ‘தத்துவப் புதர்’ தான் பாரதி, இவர்களுக்கு, உலகில் இதற்கு முன் இருந்த, இப்போது இருக்கிற, இனிமேல் வரப்போகிற எல்லாப் பிரச்னைகளுக்கும் பாரதிதான் தீர்வு!

சேது சமுத்திரத் திட்டம் குறித்து, பாரதி என்ன சொல்கிறான்?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’’ என்கிறான் பாரதி.

பாரதி சொல்வதுபோல் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் அமைக்கலாம்? அப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஞாநியார் கூட்டம் அதையும் எதிர்க்கும். விடுதலைப் புலிகள் எளிதாகத் தமிழ் நாட்டுக்குள் வந்து போவார்கள். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்றுதான் அப்போது கூச்சலிடுவார்கள்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழிப்பாதை ஏற்படுத்துவதால் வருவாய் அதிகரிக்கிறதா? போக்குவரத்து எளிதாகிறதா? வேலைவாய்ப்பு பெருகிறதா? தொன்மையான ‘வரலாற்றுச் சின்னம்’ அழிகிறதா? இந்துக்களின் மனம் புண்படுகிறதா? என்கிற அறிவு பூர்வமான, அல்லது குருட்டுத்தனமான, மெய்யான, அல்லது போலியான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இந்தப் புதிய கடல்வழிப்பாதையை ஆதரிப்போர் யார்? எதிர்ப் போர் யார்? என்று கூர்ந்து கவனித்தால் இது திராவிட - ஆரியப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பது தெளிவாகப் புரியும். மேம்போக்கான பார்வையில் இது ‘வழக்கொழிந்த’ வர்ண இனப் போராட்டம் என்பது போல் தோன்றினாலும் இதன் சாரப்பொருள் வரலாற்றை இயக்குவது கடவுள் நம்பிக்கையா, மனித முயற்சியா? என்பதுதான்!

கடவுள் நம்பிக்கை எப்போதும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவானதே! மனித முயற்சி எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையானதே!

“மெய்யான பக்தர்களும் மெய்யான பகுத்தறிவாளர்களும் கருத்து வேறுபடுவார்கள். ஆனால் ஒருபோதும் மூர்க்கத்தனமான சண்டைகளில் ஈடுபடமாட்டார்கள். காரணம் அசல் ஆன்மீகமும் அசல் பகுத்தறிவும் சந்திக்கும் புள்ளி என்பதே மனிதர்கள் மீதான அன்பு என்பதாகும். போலி பக்தர்களும் போலி பகுத்தறிவாளர்களும் மனிதர்களை நேசிப்ப தில்லை. வெறுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். அதைத்தான் இப்போது அத்வானியும் கருணாநிதியும் செய்து கொண்டு இருக்கிறார்கள் - என்று ஒரு நடு நிலையாளனின் பாத்திரத்தில் திறம்படவே நடிக்க முயற்சிக்கிறார் சங்கரன்.

மதம், கடவுள் பக்தி, இறை நம்பிக்கை என்கிற இந்த சமாச்சாரங்கள் உண்மையில் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதனின் பய உணர்ச்சியின் அடையாளமே அன்றி, அது மனித நேயத்தின் அடையாளமாக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக மதம் அல்லது கடவுள் நம்பிக்கை இப்போதும் இருக்கிறது என்றால் அது தன்மீதும் தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் மனிதன் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தோன்றும் சுய ஆறுதலே தவிர மனித நேயத்தில் பிறந்த மறு மலர்ச்சித் தீர்வல்ல. சிலுவைப் போர்களும், ரத யாத்திரைகளும், இஸ்லாமியத் தீவிரவாதங்களும் ஆதிக்க சக்திகளின் அரசியல் போராட்டங்களேயன்றி, மனித நேயத்தை வளர்க்கும் செயல் திட்டங்கள் அல்ல.

இவர்கள் போலி பக்தர்கள். உண்மையான பக்தி ஆயுதம் ஏந்தாது. வள்ளலாரைப் பாருங்கள்... என்று பேசுகிறவர்கள், பற்றி எரியும் ஒரு பிரச்னையிலிருந்து விலகிச் செல்லும் கபட தாரிகளே தவிர யோக்கியர்கள் அல்ல.

வள்ளலாரே மனங்கசந்து விரக்தியில் பேசுகிறாரே! “கடை விரித்தேன்; கொள்வாரில்லை!’’ என்கிற அவரது சுயவிமர்சம் என்ன சொல்கிறது? நிலவுகிற சமூக அமைப்புக்கும் நினைப்புக்கும் தொடர்பில்லாமல் இருப்பது பயனற்றது என்பதையே வள்ளலார் வாக்கு ஒளியுறுத்துகிறது. முரண்பாடுகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டு தூய அன்பின் பெயரால் துறவிக்கோலம் கொள்வது சுயநலம் மிகுந்த கோழைத் தனமாகும்.

சங்கர ஞாநியார் குறிப்பிடுவது போல் இங்கே ‘போலி பக்தர்’ அத்வானிக்கும், ‘போலி பகுத்தறிவார்’ கலைஞருக்கும் இடையே நடக்கும் ‘யுத்தம்’ போலித் தனமானதல்ல. சாந்தி, சமாதானம், சமதர்மம், என்கிற இந்தக் கருத்துரு வாக்கம் இனியதுதான். ஆனால் அமைதி எப்போதும் அமைதியான முறையில் வந்ததே இல்லை!

உலகில் சாந்தி நிலவ வேண்டும்; சமாதானம் செழிக்கவேண்டும்; சமதர்மம் நிலைக்கவேண்டும். என்றால் வரலாறு கேட்டும் ஒரே கேள்வி இதுதான்: “நீங்கள் எந்தப் பக்கத்தில்!’’


----------ஆனாரூனா அவர்கள் அக்டோபர் -2007 "தமிழ் சான்றோர் பேரவை செய்தி மடல்" இதழில் எழுதிய கட்டுரை.

தற்போதைக்கு ஞாநியின் உண்மை முகம் தெரிய இந்தளவுக்கு போதுமானது. தேவைப்பட்டால் இன்னும் நிறை செய்திகள் தேடி வரும். படியுங்கள் தெளிவடையுங்கள்.

Monday, April 21, 2008

பார்ப்பனருக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட நமது கோடரிக் காம்புகளுக்காவது வரும் தேர்தல்களில் நீங்கள் கண்டிப்பாய் ஓட்டுச் செய்யாதீர்கள்

சகோதரி சகோதரர்களே!

நான் இந்த ஊரில் தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு நடந்த பிறகு இன்றுதான் முதல் தடவையாக வந்திருக்கிறேன். இந்தக் காஞ்சீபுரம் நமது சரித்திர புராணக் காலங்களில் எப்படி முக்கிய மானதோ அது போலவே தற்கால அரசியல் சமூகவியல் முதலிய இயக்கங்களின் சரித்திரத்திற்கும் முக்கியமானதாக இருந்து வருகிறது. சிறீமதி பெசண்டம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் தேசத்தில் செல்லுபடியற்றதாக ஏற்படுவதற்கும், பெசண்டம்மையாரின் அரசியல் வாழ்வில் மாற்றம் ஏற்படவும், இந்தக் காஞ்சீபுரத்தில் சிறீமதி சரோஜினியம்மாள் அக்கிராசனத்தின் கீழ்க் கூடிய சென்னை மாகாண கான்பரன்சில்தான் அஸ்திவாரம் போடப்பட்டது. அது போலவே காங்கிரஸ் இயக்கம் தேசத்தில் செல்லுபடியற்றதாகவும், சுயராஜ்யக் கட்சிக்கு உளைமாந்தை வரவும், பார்ப்பனர்களின் சூழ்ச்சி வெளியாகவும் இந்தக் காஞ்சீபுரத்தில் சிறீமான் கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தலைமையில் கூடிய தமிழ்நாடு மகாநாட்டில் தான் அஸ்திவாரம் போடப்பட்டது. காஞ்சீபுரம் மகாநாட்டிற்கு அப்புறம் தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா தேசத்திலேயே அரசியலிலும் சமூகயியல்களிலும் பெரிய மாறுதல்களும் ஏற்பட்டி ருப்பது உங்களுக்குத் தெரியாததல்ல. பொதுவாகப் பார்க்கும் போது சிறீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தலைமையின் கீழ் நடந்த மகாநாட்டுச் சம்பவங்கள் நன்மைக்கு ஏற்பட்டதென்றே தான் சொல்ல வேண்டும். அப்போது நடந்த சம்பவங்கள் அம்மாதிரி நடந்திருக்கவில்லையானால் நாம் எவ்வளவோ ஏமாந்து போயிருப்போம். அச்சம்பவமே நம்மெல்லோரையும் கண்விழிக்கச் செய்தது. தவிர "தற்கால நிலைமையும் நமது கடமையும்" என்பது பார்ப்பனரல்லாதவர்களின் தற்கால நிலைமையும், பார்ப்பனரல் லாதார்களாகிய நமது கடமையும் என்பதுதான் இன்றைய விஷய மாதலால், காஞ்சீபுரம் மகாநாட்டிலிருந்தே நமது நிலைமையும் நமது கடமையும் என்ன என்பதை நீங்கள் நன்றாய் அறிந்திருப்பீர்கள் . அம் மகாநாட்டில் அம்மாதிரி நடைபெறாமலிருந்தால் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி, சுயராஜ்யம், உரிமை ஆகிய வார்த்தைகள் நம்மை ஏமாற்றி நாம் என்றென்றும் தலையெடுக்க முடியாமல் , நமது பார்ப் பனர்களால் அழுத்தப்பட்டுக் கிடக்க நேரிட்டிருக்கும்.

இந்நாட்டின் சுக துக்கத்திற்குப் பொறுப்பானவர்களும், பெரும்பான்மை யானவர்களுமான நாம் காங்கிரஸ் பெயரால் நமது பார்ப்பனர்களாலும் அவர்களது அடிமைப் பிரசாரகர்களாலும் ஏமாந்து, நமது நலனைக் கெடுத்துக் கொள்வதோடல்லாமல், நமது நன்மைக்கு என்று ஏற்பட்ட தான பிராமணரல்லாதார் இயக்கமாகிய ஜஸ்டிஸ் கட்சியையும் ஒடுக்கியிருப்பார்கள். தற்கால காங்கிரஸ் நமக்கு எவ்வளவு தூரம் கெடுதி செய்திருக்கிறது என்பதும், அதனால் நமக்கு எந்தக் காலத்திலும் நன்மை இல்லாததோடு நமது சமூகத்திற்கே அது பெரிய ஆபத்தாயிருக்கிற தென்பதும் நான் சொல்லாமலே நீங்கள் எல்லோரும் அறிந்த விஷயம்.

இந்தக் காங்கிரசின் மூலம் நமக்காவது நமது நாட்டிற்காவது அனுகூல மான திட்டங்கள் ஏதாவது இருக்கின்றனவா? என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனரல்லாதாரில் சிலர் காங்கிரசில் சேர்ந்ததும், அதற்காக உழைத்ததும், கஷ்டப்பட்டதும், நஷ்டப்பட்டதும், சிறை சென்றதும் எதை உத்தேசித்து என்றால் மகாத்மா திட்டங்களாகிய கதரும், தீண்டாமையும், ஒற்றுமையும், மதுவிலக்கும் மிகுதியும் பார்ப்பனரல்லாதாராகிய நமது சமூகத்திற்கே நன்மை விளைவிப்பதும், தரித்திரத்தை ஒழிப்பதும், சுயமரியாதையையும் சமத்துவத்தையும் அளிப்பதும் ஆன வழிகளுக்கு அனுகூலமாயிருந்ததால்தான் அதில் முழு மனதோடு இறங்கி வந்தோம். இத் திட்டங்கள் நிறைவேறினால் நமது பார்ப்பனர்கள் வாழ்க்கைக்கு ஆபத்து வந்துவிடுமென்று நினைத்து அவர்கள் இவற்றை காங்கிரசிலிருந்து விலக்கப் பிரயத்தனப்பட்டு அதில் வெற்றியு மடைந்து, இப்போது காங்கிரசையே தங்கள் ஒரு வகுப்புக்கு மாத்திரம் அனுகூலமாகவும் மற்ற வகுப்பாருக்கு ஆபத்து உண்டாக்கத்தக்க மாதிரியாகவும் அமைத்துக் கொண்டார்கள். இப்போதைய காங்கிரசின் தீர்மானத்திலுமேதாவது இருக்கிறதா? என்று யோசித்துப் பாருங்கள். கதரை அடியோடு காங்கிரசிலிருந்து ஒழித்து விட்டதோடு அதை ஒரு கண்ணியக் குறைவாகவும் கருதும்படி செய்து விட்டார்கள்.

அதாவது, காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக் கேட்கும் போது மாத்திரம் கதரைக் கட்டிக்கொள்ளவேண்டிய மாதிரியில் தீர்மானம் செய்திருக்கிறார்கள். இதனால் உண்மையிலேயே ஒருவன் கதரிடம் அபிமானம் கொண்டு கட்டி இருந்தாலும், பொது ஜனங்கள் அவனைப் பார்த்தால் சந்தேகிக்கப்படும்படியாகவும் இவன் திருட்டு ஆசாமி பொது ஜனங்களை ஏமாற்றி ஓட்டு வாங்க கதர் கட்டி இருக்கிறான் என்று பொது ஜனங்கள் நினைக்கும்படியும் செய்து விட்டார்கள். இதனால் எவ்வித அவமானத்திற்கும் கட்டுப்பட தைரியமிருக்கிறவர்தான் கதர் கட்டிக்கொள்ள முடிகிறது. இதனாலேயே தன்மானத்தில் லட்சியமுள்ளவர்கள் கதர் கட்டப் பயப்படுகிறார்கள். தீண்டாமை விஷயமாவது காங்கிரசில் இருக்கிறதா? என்று பாருங்கள்.

தீண்டாதவர்களையும் நம்மையும் கண்ணில் பார்ப்பதற்கே நமது பார்ப்பனர்கள் சம்மதிப்பதில்லை. இது குருகுல விவாதத்தில் நன்றாய் தெரிந்திருப்பீர்கள். இரண்டாவது, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மானம் செய்தவுடன் சிறீமான்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், ராஜன், சாஸ்திரி போன்றவர்களே காங்கிரஸ் கமிட்டியினின்றும் ராஜினாமாச் செய்துவிட்டார்கள் என்றால் மற்றப் பார்ப்பனர்களைப் பற்றி நினைக்கவும் வேண்டுமா? சிறீமான் சீனிவாசய்யங்கார் பேசும்போதெல்லாம் அரசியலில் தீண்டாமையைக் கலக்காதீர்கள் என்று பேசி வருகிறார். சிறீமான் எம்.கே. ஆச்சாரியார் "பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதைப் பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்துவிட்டால் ஒரு மாதம் பட்டினி இருப்பேன்" என்று சொல்லிக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ஓடிப்போய் விட்டார். இதிலிருந்து காங்கிரசில் தீண்டாமை விலக்கு இருக்கிறதா? என்று பாருங்கள்.

மதுவிலக்காவது காங்கிரசிலிருக்கிறதா? என்றால் சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் பாமர ஜனங்களை ஏமாற்றிப் பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க கருதி மாத்திரம் இவ் வருஷம் "மதுவிலக்குச் செய்ய சம்மதித்தவர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்" என்றார். சிறீமான் சத்தியமூர்த்தி சட்டசபையில் மதுவிலக்குச் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார். பிறகும் சிறீமான் ஆச்சாரியார் மதுவிலக்கு என்று சொல்லிக் கொண்டு மது உற்பத்தி செய்பவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கப் பிரசாரம் செய்தார். இப்பவும் காங்கிரசிலுள்ள தலைவர்களில் 100-க்கு 90 பேர்களில் மது உற்பத்தி செய்கிறவர்கள் சிலரும், விற்பவர்கள் சிலரும், அருந்துபவர்கள் சிலருமாகவே இருக்கிறார்கள். இன்றும் நாளையும் காங்கிரஸ் காரியதரிசியான சிறீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார் சாராயம், பிராந்தி விற்பனையில் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறார். இன்னமும் சில சுயராஜ்யப் பார்ப்பனர்களுக்கு மரம் விட்டுக் கொண்டிருக்கிறார். ஒற்றுமைக்காகவாவது ஏதாவது திட்டம் காங்கிரசில் இருக்கிறதா என்றால் அதுவும் ஒன்றுமில்லை.

காங்கிரசிலிருந்து சிறீமான்கள் இராமசாமி நாயக்கர், வரதராஜூலு, கலியாணசுந்தர முதலியார், ஆரியா, சக்கரை, தண்டபாணி பிள்ளை முதலிய பார்ப்பனரல்லாதார்கள் போய் விட்டதால் காங்கிரஸ் பரிசுத்தமாய் விட்டது என்கிறார்கள் நமது பார்ப்பனர்கள். அல்லாமலும் சிறீமான்கள் ஆரியாவையும் ஈ.வெ.இராமசாமி நாயக்கரையும் ஜெயிலில் பிடித்துப் போட வேண்டுமென்று கவர்னரையும் பார்ப்பன அதிகாரிகளையும் கெஞ்சுகிறார்கள்; விண்ணப்பமும் போட்டிருக்கிறார்கள் நமது பார்ப்பனத் தலைவர்கள். இந்து முஸ்லீம் ஒற்றுமையாவது இருக்கிறதா என்று பார்த்தால் முகமதியர்களுக்கு சுயராஜ்யம் கொடுக்கக் கூடாது என்று காங்கிரசின் பேராலேயே இந்தியா சட்டசபையில் ஆட்சேபித்துச் சர்க்காரோடு சேர்ந்து ஓட்டு கொடுத்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் சந்தேகிக்காமலிருக்கவும், ஒருவரை ஒருவர் மோசம் செய்யாமலிருக்கவும், எல்லோரும் சம உரிமை அடையவும் தக்க பந்தோபஸ்தான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்றால், அதைப்பற்றி காங்கிரசுக்குள்ளாகவே பேசக் கூடாது என்று பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே சொல்லி விட்டார்கள். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டபோது அதைக் கொல்ல எண்ணி பார்ப்பனரல்லாதாரான சிறீமான்கள் நாயுடு, முதலியார் இவர்களை வசப்படுத்திக் கொண்டு "தேசீய பார்ப்பனரல்லாதார் சங்கம்" என்பதாக ஒன்றை ஏற்படுத்தச் செய்து அதன் மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் கேட்டுவிட்டுப் பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சி ஏற்பட்டதும், இப்போது பார்ப்பனரல்லாதாருக்கே பணங் கொடுத்து அதை எதிர்க்கச் சொல்லுவதோடு தாங்களும் அநேக சூழ்ச்சி செய்து வருகிறார்கள். ஆகிய இக் காரணங்களால் காங்கிரசில் தேசத்துக்கு அநுகூலமான திட்டம் ஏதாவது கொஞ்சமாவது இருக்கிறதா? என்று நீங்கள் நன்றாய் யோசித்துப் பாருங்கள்.


பார்ப்பனர்களுக்கு ஆதிக்கம் வரவும், உத்தியோகம் வரவும், பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்படவும், உத்தியோகங்களிலிருந்து விலக்கப்படவும் நாம் காங்கிரசில் சேர வேண்டுமா? காங்கிரஸ் தேசத்திற்கு அநுகூலமாக இருந்தால் மகாத்மா காந்தியும் லாலா லஜபதிராயும் ஏன் காங்கிரசுக்கு உழைக்காமல் ஒதுங்கி இருக்கிறார்கள். சிறீமான்கள் நாயுடு, முதலியார், ஆரியா, தண்டபாணி பிள்ளை முதலியவர்களும் ஒதுங்கியிருப்பதோடு என் போன்றவர்கள் இந்த மாதிரி காங்கிரசுக்கு எதிர்ப் பிரசாரமும் ஏன் செய்கிறோம்? இவற்றை நன்றாய் யோசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் உங்களை ஏமாற்றவே காங்கிரஸ் என்ற ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள். "சம உரிமையும், வகுப்புச்சுதந்திரமும், சுயமரியாதையும் இல்லாத நாட்டிற்கு (காங்கிரஸ் போன்ற) அரசியல் இயக்கம் இருப்பது அறிவுடைமை ஆகாது. அதை ஒழிக்க வேண்டியது அறிவுடையோர் கடமை" என்ற பொருள் பட 'காங்கிரஸ் காங்கிரஸ்' என்று கதறிக் கொண்டிருந்த சிறீமான் கலியாணசுந்தர முதலியாரே எழுதியிருக்கிறார். இனிமேல், தான் அரசியலில் (காங்கிரசில்) உழைப்பதில்லை என்றும், மக்கள் சமத்துவத்திற்குழைப்பதாகவும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை அரசியலுக்குழைத்ததற்காகத் தனது அறியாமையின் பொருட்டு என்னைப் போலவே விசனப்பட்டும் இருக்கிறார். ஆதலால் சகோதரர்களே! பார்ப்பனருக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட நமது கோடரிக் காம்புகளுக்காவது வரும் தேர்தல்களில் நீங்கள் கண்டிப்பாய் ஓட்டுச் செய்யாதீர்கள். ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் நிர்மாணத் திட்டத்தை நடத்தவே நான் பாடுபடுகிறேன். பார்ப்பனரின் எதிர்ப்பும் சூழ்ச்சியும் அடைக்கப்பட்டு விட்டால் கண்டிப்பாய் நிர்மாணத் திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சி மூலம் நிறைவேற்றலாம். நிர்மாணத் திட்டம்தான் முக்கியமாய் பார்ப்பனரல்லாதாருக்கு விடுதலை அழிப்பது. எவ்விதத்திலும் பார்ப்பனர்கள் நிர்மாணத் திட்டத்திற்கு அநுகூலமா யிருக்க மாட்டார்கள். அதோடு அதை பார்ப்பனரல்லாதார் நடத்தவும் பார்ப்பன ஆதிக்கம் இடம் கொடுக்க மாட்டாது. ஆதலால் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி செய்யுங்கள். அடுத்த தேர்தலில் நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கும், சுயமரியாதைக்கும் மாத்திரமே ஓட்டுக் கொடுங்கள். கண்டிப்பாய் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி என்கிற மாயவலையில் ஏமாந்து போகாதீர்கள் என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.

--------------------- தந்தைபெரியார் - "குடி அரசு" 26.9.26

பூனா பார்ப்பனரின் கர்மபலன்

பூனா பிராமணர்கள் பெரும்பாலும் லோகமானிய திலகர் என்றழைக்கப்படும் கடும் வர்ணாசிரமியான சிறீமான் திலகர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். மகாத்மா காங்கிரசுக்கு முந்திய காங்கிரசுகள் இப்போதைய காங்கிரசைப் போலவே பார்ப்பனக் காங்கிரசா யிருந்ததாலும் இப்போதைய 'தலைவர்கள்' சிறீமான்கள் பண்டித நேரு, பண்டித சரோஜினி, எஸ். சீனிவாசய்யங்கார்,எ.ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் இந்திய தேசத் தலைவர்களாயிருப்பது போலவே அப்போதும் சிறீமான்கள் திலகர், மாளவியா முதலிய பார்ப்பனர்களே தலைவர் களாயிருந்தார்கள். இப்போது இவர்கள் பார்ப்பனப் பத்திரிகைகளாலும் பிரசாரத்தாலும் படம் வைத்து கும்பிடத் தகுந்தவர்களாயிருந்த போதிலும், சமுதாய விஷயத்திலும் சமத்துவ விஷயத்திலும் சிறீமான் திலகர் நமது சிறீமான் எம்.கே. ஆச்சாரியாருக்கு ஒரு படி முன்னால் இருப்பவர். அப்பேர்பட்டவர் பத்திரிகை உலகத்திலும், பிரசார உலகத்திலும், அரசியல் உலகத்திலும் சிரேஷ்ட்டமாய் விளங்கி செல்வாக்கோடு வாழ்ந்த ஊராகிய பூனா நகரத்தில் பார்ப்பனாதிக்கம் எவ்வளவு வளர்ந்திருக்கும், எவ்வளவு குடி கொண்டிருக்கும் என்பது நாம் சொல்லாமலே விளங்கும்.

அதின் பலனாய் அவ்வூரில் உள்ள பார்ப்பனரல்லாதார் தீண்டப்படாதாரைப் போல் கருதப்படுவதுடன் தண்ணீர்க் குழாய் முதற்கொண்டு பார்ப்பனருக்கு தனித்தனியாய் ஏற்பட்டு வந்ததும், பார்ப்பனரல்லாதார் பார்ப்பனப் புரோகிதரைக் கொண்டே வைதீகச் சடங்குகள் நடத்த வேண்டும் என்கிற சட்டமிருக்கிறதுமான கொடுமைகள் நடத்த செளகரிய மேற்பட்டிருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதின் பலனாய் அவ்விடத்திய பார்ப்பனரல்லாதார் தங்கள் சுயமரியாதையை உணர ஆரம்பித்தார்கள். ஆரம்பித்து அவர்கள் மனோபாவம் எதுவரை சென்றது என்று தெரிய வேண்டுமானால் சென்ற வருஷம் மத்திய மாகாணத்தில் நடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டு அக்கிராசனர் சிறீமான் பாக்தே அவர்களின் சொற்பொழிவையும் அங்கு நடந்த திருவிளையாடல் களையும் கவனித்தால் தெரியவரும். அதாவது, கொட்டகையில் கட்டியிருந்த திலகர் படத்தை எடுத்து எறிந்தும், சிறீமான் திலகரைப் பற்றி அக்கிராசனர் பேசும் போது அவரைக் கண்டித்ததும், பிராமணர்களை அடியோடு ஒழித்தால் அல்லது சுயராஜ்யம் வராது என்று சொன்னதும், சில பார்ப்பனரையும் அவர்களுக்கு அனுகூல மாயிருந்தவர்களையும் தடியினால் அடித்தும், கத்தியில் குத்தியும் உபத்திரவப்படுத்தியதும் ஆகிய இன்னும் பல காரியங்கள் நிகழ்ந்தன. அல்லாமலும் அது புகைந்து கொண்டே இருந்து இப்போது தெருவில் நடக்கும் பார்ப்பனப் பெண்களைக் கூட உபத்திரவப்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இவைகளை நாம் பலமாய் வெறுக்கிறோமானாலும் இதைக் கர்மபலன் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக பூனா பார்ப்பனர்கள் சிவாஜி மந்திரத்தில் ஆறாயிரம் பேர் கூடி பார்ப்பனரல்லாதார் பார்ப்பனரிடம் துவேஷம் கொண்டிருப்பதையும், பார்ப்பன ஸ்திரீகளை பார்ப்பனரல்லாதார் அவமதிப்பாய்ப் பேசுவதையும், மானபங்கப்படுத்துவதையும் ஒரு வருஷ காலமாக நடந்து வருவதை கவர்ன்மெண்டார் பார்த்துக் கொண்டு தெரியாதவர்கள் போல் இருப்பதாயும் கூறி பார்ப்பனர் மீது துவேஷம் உண்டாகும்படி பார்ப்பனரல்லாதார் பிரசுரிக்கும் துண்டுப் பிரசுரங்களை நிறுத்த கவர்ன்மெண்டார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் பேசி, சிறீமான் திலகரின் மருமகப் பிள்ளையாகிய சிறீமான் கெல்கர் உள்பட கண்டனத் தீர்மானங்கள் செய்து கவர்ன்மெண்டை உதவிக்கழைத்திருப்பதாய் 31.8.26 æ மித்திரனால் தெரிகிறது. இதில் கவர்ன்மெண்டார் என்ன செய்யக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரின் நடவடிக்கையை உள்ளபடி எடுத்துச் சொன்னால் யார் என்ன செய்ய முடியும்? இந்தப் பார்ப்பனர்கள் சர்க்காரை சகாயத்திற்கு கூப்பிடுவதைவிட ஏன் தங்களுடைய நடவடிக்கைகளை திருத்திக் கொள்ளக்கூடாது. ஒரு மனிதன் தனது கரும பலனை அடையாமல் இருக்கும்படி செய்ய கடவுளாலும் ஆகாதென்றால் இந்த சர்க்காரால் என்ன ஆய்விடும்? ஆதலால் இவைகளைப் பற்றி சிபார்சுக்கு ஆள்களைக் கூப்பிடுவதில் பிரயோஜனமில்லை.

பார்ப்பனர் புத்திசாலிகளாயிருந்தால் பூனா பார்ப்பனருக்கும் பார்ப்பன ஸ்திரீகளுக்கும் ஏற்பட்ட இந்த வியாதிக்குத் தக்க பிராயச்சித்தம் செய்து மற்ற நாடுகளுக்குப் பரவாமல் பந்தோபஸ்து செய்வதுதான் ஒருக்கால் முடியக்கூடிய காரியமாகலாம். அஃதில் லாமல் சிறீமான்கள் ரெங்கசாமி அய்யங்காரும், சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்களும் எம்.கே.ஆச்சாரியாரும் சீனிவாசய்யங்காரும் சி.ராஜ கோபாலாச்சாரியாரும், சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும் நடந்து கொள்ளுகிற மாதிரியும், பார்ப்பனரல்லாதாருக்குள்ளாகவே கட்சி ஏற்படுத்துவதும், பார்ப்பனரல்லாதார் கட்சியை அழிக்க சூழ்ச்சி செய்வதும் ஆகிய தந்திரங்கள் கண்டிப்பாய் பார்ப்பன சமூகத்தையே கர்மபலனை அடையச் செய்யுமென்று உறுதி கூறுகிறோம். இந்த பார்ப்பனத் தலைவர்கள் தங்களிடம் கூலி வாங்கிப் பிழைக்கும் ஆள்களுடையவும் தங்கள் தயவுக்குக் காத்திருக்கும் ஆள்களுடையவும் மனோபாவத்தை மாத்திரம் அறிந்திருக்கிறார்களே அல்லாமல் மற்றபடி சுதந்திரமுள்ள பார்ப்பனரல்லாதார் மனோபாவம் என்ன என்பதையே அறியாமலிருப்பதற்கு நாம் மிகவும் பரிதாபப்படுகிறோம்.


------------- தந்தைபெரியார் - "குடி அரசு" 5.9.26

Sunday, April 20, 2008

பார்ப்பனப் பத்திரிகைகள்

நமதுநாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் சிறீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடுகாரையும் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து 'ராஜரிஷி' "பிர்மரிஷி' என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.

இப்பேர்ப்பட்ட இருவர்களையும் இன்று என்னமாய் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினாமாக்களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை. எங்கோ ஒரு மூலையில் ஒன்றரை அங்குலத்தில் பொது ஜனங்கள் ராஜினாமாவின் முழுக் காரியங் களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்ட வில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுதவில்லை. ஒரு வயிற்றுச் சோத்து பார்ப்பனன் ஒரு உத்தியோகத் திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பியிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டுபோய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்ததாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்.

இதுபோலவே நமது பார்ப்பனர் தங்களது பத்திரிகையின் பலத்தால் பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும் முற்போக்கையும் பாழ்படுத்தி வருகிறார்கள். இதிலிருந்தாவது நம் நாட்டு முன்னேற்றத்தையும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையும் உத்தேசித்தாவது பார்ப்பனப் பத்திரிகைகளை ஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன் வரலாகாதா? ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா அல்லது அலட்சியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்! பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது! ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டெழும்போது பத்திரிகையைப் பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசியுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினையுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்! இல்லாதவரை சிறீமான் ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார் பிராமணரல்லாதாருக்கு மூளை இல்லை என்பது பலித்தாலும் பலித்துவிடும்!

--------------தந்தைபெரியார் - "குடிஅரசு" 11.7.26

Saturday, April 19, 2008

சீதையின் இடையானது கடவுள்போல்

கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பற்றதாய் இருந்து வருகிறது. கடவுள் என்ற வார்த்தை தோன்றி எவ்வளவு காலம் இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும், கடவுள் என்றால் என்ன? என்று இன்று எப்படிப்பட்ட ஆஸ்திகராலும் சொல்ல முடிவதில்லை. ஆகவே, ஒவ்வொரு ஆஸ்திகனும், தனக்குப் புரியாத ஒன்றையே - தன்னால் தெரிந்து கொள்ள முடியாததும், பிறருக்கு விளக்க முடியாததுமான ஒன்றையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு கடவுள் கடவுள் என்று கட்டி அழுகிறான்.

கடவுளுக்கு லட்சணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளக்கமாய்ச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டிலொன்று அதாவது, உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப்பார்கள்.

கம்பர் கூட சீதையின் இடையை வர்ணிக்கும்போது, சீதையின் இடையானது கடவுள்போல் இருந்தது என்று வர்ணிக்கிறார். அதாவது, கடவுள் எப்படி உண்டோ இல்லையோ என்பதாகச் சந்தேகப்படக் கூடியதாய் இருக்கின்றதோ, அதுபோல் சீதையின் இடையானது கண்டுபிடிக்க முடியாத அவ்வளவு நுண்ணியதாய் இருக்கிறது என்று கூறினார். கம்பரை நாஸ்திகர் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மக்களுள் பெரும்பாலோரும், ஆஸ்திகர்கள் எல்லோரும் தங்கள் குற்றங்களுக்கும், தங்கள் துர்க்குணங்களுக்கும், தங்கள் தரித்திரத்துக்கும், துன்பத்துக்கும் தாங்களே காரணமென்று வருந்தி அவற்றைப் போக்கும்படி கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள்.

இந்துக்கள், கடவுளை ஒரு மனிதனைப் போலவே கற்பித்துக் கொண்டு, அதிலும் ஒரு செல்வம் பொருந்திய மனிதனாய்க் கற்பித்துக் கொண்டு, அதற்கு மனிதனைப் போலவே வீடு, வாசல், ஆகாரம், வாகனம் ஆகியவற்றைக் கொடுத்து வருகிறார்கள். மற்ற கிருஸ்து, முஸ்லீம் ஆகிய மதஸ்தர்களும், கடவுளை மனிதன் போலவே கற்பித்து, அக்கடவுளுக்கு நன்மை, தீமை, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், கோபம் ஆகிய குணங்களைக் கற்பித்து, தன்னை வணங்கினவனுக்கும், தன் இஷ்டப்படி நடந்தவனுக்கும் நன்மையளிப்பதும் தன்னை வணங்காதவனுக்கும், தன் இஷ்டப்படி நடக்காதவனுக்கும் தீமையளிப்பதுமான குணத்தைக் கற்பித்திருக்கிறார்கள்.

சர்வ சக்தியுடைய பூர்ணத்தன்மை பெற்று எங்கும் நிறைந்திருக்கிற ஒரு கடவுளுக்கு மோட்சம், நரகம் எதற்கு? கடவுள் இஷ்டத்துக்கு விரோதமாய் நடக்கும்படியான சந்தர்ப்பம் மனிதனுக்கு எப்படி வரும்? உலகத்தில் தீமை எப்படி உண்டாயிற்று. அதை யார் கற்பித்தார்கள்? தீய குணம் மனிதனை அடையக் காரணமென்ன? தீயதைச் செய்துவிட்டு கடவுளை வணங்குவதாலோ, பிரார்த்திப்பதாலோ அதன் பயன் எப்படி அகற்றப்பட்டுவிடும்! தீமையினால் துன்பம் அடைந்தவனுக்குப் பரிகாரம் எப்படி ஏற்படும்? தீமை செய்தவர்கள் கடவுளை வணங்கிப் பிரார்த்திப்பதன் மூலம், தீமைக்குண்டான பலனை அனுபவிக்க முடியாமல் போய் விடுவார்கள் என்றால், தீமை எப்படி எப்பொழுது உலகை விட்டு அகல்வது? எத்தனையோ கோடிக்கணக்கான வருடங்களாக கோடிக்கணக்கான மக்கள் தீமைக்காக மன்னிக்கப்பட்டும் தீமைக்காகத் தண்டிக்கப்பட்டும், உலகில் இன்றும் நாளையும் இனியும் வெகு காலத்துக்கும் தீமை இருந்து கொண்டே வருகிறது. என்றால், இதுவரையும் தண்டனையும் மன்னிப்பும் என்ன பலனைக் கொடுத்து வந்திருக்கின்றன? தீமையின் கொடுமையை - மக்கள் அனுபவிக்காமல் இருப்பதற்கு என்னதான் வழி? தீமையைச் செய்தவன் மன்னிப்புப் பெற்றோ, தண்டனை அடைந்தோ தன் செய்கைக்குப் பரிகாரம் பெற்றுக் கொள்ளுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். தீமையை அடைந்தவனுக்கு இந்தக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார் என்பது விளங்கவில்லை. தீமையை அடைகின்ற மனிதன் கடவுள் சித்தத்தால்தான் தீமை அடைகிறான் என்றுதானே சொல்ல வேண்டும்.


அப்படியில்லாவிட்டால், கடவுளின் காவலை மீறி ஒரு மனிதனுக்கு ஒரு மனிதன் தீமை செய்துவிட முடியுமா? ஆகவே, கடவுள் சித்தத்தால் ஒரு மனிதன் தீமையை அடைகிறான் என்றால், பிறகு, தீமை செய்தவனுக்கு தண்டனை எப்படி வரும்? அவன் எதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்? கடவுள் சித்தமில்லாமல் தனிப்பட்ட முறையில் தன் சொந்தத்தில் ஒரு மனிதன் ஒரு காரியத்தை ஒருவருக்குச் செய்துவிட முடியுமா? கடவுள், மனிதன் மூலமாகவே தன்னுடைய ஆட்சியை நடத்துகிறார் என்பதே பெரும்பாலான ஆஸ்திகர்கள் முடிவு. அதனாலேயே, பிச்சை பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான்; உத்தியோகம் பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான்; உதவி பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான். ஏதாவது ஒரு கூட்டத்தில் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொண்டவனும், கடவுள் தப்பித்து விட்டார் என்று சொல்லுகிறான். ஆகவே, எந்த நன்மைக்கும் தீமைக்கும் மனிதன் மீது பொறுப்பைச் சுமத்துவது எப்படி முடியும்? அன்றியும், கடவுள் சர்வ வியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய ஒவ்வொரு எண்ணங்களையும், காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும், மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? அதற்கான இடம், பொருள், நேரம் எதற்காகச் செலவு செய்யவேண்டும்? அவர் தெரிந்துகொள்ள முடியாத எந்தக் காரியத்தை பிரார்த்தனையினாலும், ஜபத்தினாலும், தொழுகையினாலும் அவருக்கு அறிவிக்க முடியும்? பிரார்த்தனைக்கும் ஜபத்துக்கும் இரங்குகிறவர் என்றால், கடவுள் தற்பெருமைக்காரரா - அல்லது பிரதியோஜனம் பெறும் வியாபாரம் முறைக்காரரா? இவ்வளவு காலப் பிரார்த்தனையும், ஜபமும், தொழுகையும் மனிதனை ஏதாவது ஒரு வழியில் யோக்கியமாய் நடப்பதற்குப் பயன்பட்டிருக்கின்றதா? நன்மைக்கும், தீமைக்கும் கடவுளே கர்த்தராய் இருக்கும் போது, உலகில் தீமைகளே இல்லாமல் இருக்கச் செய்ய முடியாதா? அதை எவராவது சில மக்கள் அடைந்துதான் தீரவேண்டுமா? அன்றியும், நமது பிரார்த்தனையும், தொழுகையுமாவது நமக்குத் தீமை அணுகாமல் செய்ய முடியுமா? அப்படி செய்தாலும், அத்தீமை உலகில் உள்ளவரை ஏதாவது ஒரு மனிதனையாவது அணுகித் தானே தீரவேண்டும்? ஆகவே, மனித சமூகம், பொதுவில் தீமையில் இருந்து எப்படித் தப்ப முடியும்? தீமையினால் மக்கள் கஷ்டப்படுவார்கள், துன்பப்படுவார்கள் என்பதை கடவுள் அறிந்திருக்க மாட்டார் என்று யாராவது நம்ப முடியுமா? அப்படி இருக்கும்போது, சர்வ சக்தியும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்ட கடவுள் உலகத்துக்கு தீமையை ஏன் சிருஷ்டித்தார்? விஷப் பூச்சி, விஷக் கிருமி, விஷரோகம், தரித்திரம், துன்பம், கொலைத் தொழில், கொள்ளைத் தொழில், திருட்டு, பொய், வஞ்சகம், விபச்சாரம், கஷ்டமான வேலை, அடிமைத்தனம், கொடுங்கோல் ஆட்சி, ராஜத் துரோகப் பிரஜைகள் கடவுளை மறுப்பது, கடவுளை வைவது முதலாகிய தீமை என்னும் விஷயங்களையெல்லாம் கடவுள் ஏன் சிருஷ்டித்தார்? இவற்றால் யாராவது ஒருவர் கஷ்டப்படுகிறாரா - இல்லையா? இவற்றால் கடவுளுக்கு என்ன லாபம்? பூகம்பம், எரிமலை வெடிப்பு, புயல்காற்று, கடுமழை ஆகிய காரியங்களை ஏன் சிருஷ்டித்தார்? கெட்ட மனிதர்கள் துன்பமனுபவிக்க என்று சொல்லப்படுமானால், கெட்ட மனிதர்களை ஏன் சிருஷ்டித்தார்? நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று சொல்ல முடியாத குழந்தைகள், மற்ற ஜீவன்கள் ஆகியவைக்கும், துன்பம் அடையும்படி ஏன் செய்தார்? இவற்றுக்கெல்லாம், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வ தயாபரத் தத்துவமும் உடைய ஒரு கடவுள் உலகத்தைச் சிருஷ்டித்து நடத்தி வருகிறார் என்று சொல்லும் ஆஸ்திகன் என்ன சமாதானம், பதில் சொல்லக் கூடும்? இந்தக் கேள்விகள் வெகுகாலமாகவே இருந்து வருகின்றன என்று பதில் சொல்லிவிட்டால் போதுமா?--------------- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை, பகுத்தறிவு--1.7.1935

Friday, April 18, 2008

பார்ப்பனுருக்கு கொடுப்பது புண்ணியமா?

உண்மையாக பார்ப்பனருக்குக் கொடுப்பது புண்ணியமானால் பார்ப்பனருக்குக் கொடுத்த குடும்பங்கள் எல்லாம் இன்று அரைக் கஞ்சிக்கு ஆவலாய் பறக்கக் காரணம் என்ன? உண்மையில் காங்கிரஸ் சுயராஜ்யமளிக்குமானால் நாட்டு மக்களுக்கு வரியும், அறியாமையும், விவகாரம் வில்லங்கங்களும், அடிமைப் போட்டியும், தரித்திரமும், தொழில் குறைவும் நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் வளரு வதற்குக் காரணம் என்ன? உதாரணமாக, தஞ்சாவூர் மகாராஜா செய்த தர்மமும் அவர்கள் அந்த ஜில்லா பார்ப்பனர் குடும்பங்களுக்கு விட்ட மானியமும், கட்டின சத்திரங்களும், அதில் சாப்பிடும் பார்ப்பனர்களின் எண்ணிக்கையையும் பார்த்தால் மகாத்மா காந்திக்கும்கூட வயிறு வேகும். அப்படிக் கொடுத்த தஞ்சாவூர் மகாராஜாவின் ராஜாங்கம் இன்று இருக்குமிடத்தைக் காணோம். சேரனும், சோழனும், பாண்டிய னும் செய்த தருமமும், கட்டிய கோவிலும், வெட்டிய ஆறுகளும், விட்ட மானியங்களும் இன்றும் பார்க்கலாம் நாளையும் பார்க்கலாம்; அவர்கள் அரசாங்கமெங்கே? சந்ததி எங்கே? இன்னும் எங்கள் குடும்பத்திலும் செய்த தர்மமும் சமாராதனையும் கொஞ்சமென்று சொல்ல முடியாது. குளிப்பும், பூஜையும், போடும் நாமமும் இன்னம் ஒரு ஐந்தாறு தலைமுறைக்கு எங்கள் பின் சந்ததியார் செய்யா விட்டாலும் தாங்கும்படி அவ்வளவு செய்திருக்கிறார்கள். என்ன ஆச்சுது? மாணிக்கம்போல் சீமைக்குப்போய் படித்துவிட்டு வந்த 22 வயதுள்ள ஒரே பையனும் மற்றும் ஒரே பெண்ணும் ட்சயரோகத்தால் முன் பின் மூன்று மாத வித்தியாசத்தில் இறந்துபோனார்கள். பார்ப்பனர்களுக்கு போளி, பேணி, லட்டு, ஜிலேபி, சேமியா பாயாசத் துடன் சமாராதனை செய்து என் தாயார் தகப்பனார் இடுப்பு கட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான எச்சிலைகளைத் தாங்களே எடுத்து எறிவார்கள். வேறு யாராவது எடுத்தால் அந்தப் புண்ணியத்தில் அவர் களுக்கும் பங்குபோய்விடுமாம். அவ்வளவு அழுத்தத்தன்மையோடு புண்ணியம் சம்பாதித்தார்கள். என்ன பலன் கண்டார்கள்? ஆயுள் வளர்ந்ததா? சந்தததி வளர்ந்ததா? செல்லம் வளர்ந்ததா? இரண்டு தங்கைகளுக்கும் உள்ள ஒரே பெண்ணுக்கு 10 வயதில் செல்வக் கலியாணம் செய்தார்கள். அது சரியாய் 60 வது நாளில் தாலி அறுத்தது. அதற்கு மறுபடியும் எங்கள் குலத்திலில்லாத வழக்கப்படி மறுவிவாகமும் செய்துவைத்தேன். மறுபடியும் 15-வது வயதில் தாலி அறுத்துவிட்டது. என்ன பாக்கியம் கிடைத்தது. இதை எல்லாம் சொன்னால் அவரவர் தலைவிதிக்கு யார் என்ன செய்வார்கள் என்று சொல்லிவிடுவார்கள். அவரவர் தலைவிதிப்படி நடக்கும் காரியத் திற்காக இந்த ஆட்களுக்கு சமாராதனை செய்வதும் சத்திரம் கோவில் கட்டுவதும் மானியம் விடுவதும்கல்விதானம் கன்னிகாதானம் பூமிதானம் செய்வதும் சக்கரவர்த்தி தலைபோட்ட தங்கப்பவுனால் பாதபூஜை அட்டோத்திரம் சஹஸ்திரோத்திரம் செய்து அவர்களது கால்கழுவி தீர்த்தம் சாப்பிடுவதும் எதற்காக என்றுதான் கேட்கிறேன்.

---------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 7.11.26

சுப்பிரமணிய சுவாமிக்கு உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி சூடு

ராமர் பாலம் என்று கூறப்படும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டை ஒரு வழிபாட்டுத் தலம் என்று யார் கூறியது? நடுக்கடலிற்குச் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது!

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியம் சுவாமி, ராமர் பாலம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வழிபாட்டுத் தலம் என்றும், தான் ஒவ்வொரு வருடமும் கடலிற்குச் சென்று அதனை வழிபட்டு வருவதாகவும் கூறினார்.

"கணம் நீதிபதி அவர்களே, இது உங்களது நம்பிக்கையைப் பொறுத்த கேள்வி அல்ல. ஆனால், இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்பானது" என்று கூறினார்.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், அது ஒவ்வொருவரும் புரிந்துகொள்வதைப் பொறுத்தது என்று கூறினர். அதற்கு, அந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலம்தான் என்பதை இந்துக்கள் ஒட்டுமொத்தமாக நம்புகின்றனர் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

"இது எனது நம்பிக்கை மட்டுமல்ல, அது புனிதத் தலம்தான் என்பது இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நீங்கள் தடையேதும் போட முடியாது" என்று கூறினார்.

அப்பொழுது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், அது வழிபாட்டுத் தலம்தான் என்று கூறியது யார்? கடலிற்கு நடுவில் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? மக்கள் அங்குச் சென்று வழிபடுகிறார்கள் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று கூறினார்.

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஜேட்லி ஆகியோர், சேதுக் கால்வாய் பகுதியில் தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டினார்கள்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, "இந்த நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பிக்கும் போது நீங்கள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வலியுறுத்தக் கூடாது" என்று கூறினார்.

இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

------------------------நன்றி -- "வெப்துனியா"

சமரச சன்மார்க்கம்

சகோதரர்களே! சகோதரிகளே!!

சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மாக்கம் என்கிறோமோ, எது எது உண்மையான-இயற்கையான சமரச சன்மார்க்க-மென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்க-ப்பட்டிருக்கின்றது. இது நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே அப்படித்-தான் அமைக்கப்-பட்டுப் போயிற்று. ஆனால், நமது நாட்டில் மற்ற நாடுகளை விட வெகுதூரம் அதிக-மான வித்தியாசம் வைத்து அமைக்கப்-பட்டுவிட்டது. முதலாவது, கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்குப் பாத்திரமான சமரச சன்-மார்க்-கமல்லாமல், நியாயப்பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்-பட்டிருக்கின்றது. இந்த நிலை-யில், ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டு-மானால், மேற்கண்ட கட்டுப்-பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாகலோ பேச முடியாது. ஏனெனில், அவை ஒன்றுக்-கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்-கப்--பட்டிருப்-பவைகளாகும். அதோடு மாத்திர-மல்லாமல், சமசரசமும் சன்மார்க்-கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.

கடவுளையும், மதத்-தையும், பணக்கார-னையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் ருசியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும், சர்ச்சு-களையும், பணக்-காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள். தற்-போதைய ருசிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகள் என்றே தீர்மானிக்-கப்பட்டு அவர்-களை அழித்து விட்டார்கள். அழித்து-விட்டார்கள் என்றால் கொன்று-விட்டார்-கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை அதாவது, சமரசத்திற்கு எதிர்ப்பிர-சாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர, மற்றவர்-களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களை காவல் காக்கப் போட்டார்கள், அது போல-வே சர்ச்சுகளை தொழிற்சாலை, பள்ளிக்-கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவை-களுக்கு உதவாமல் போக்குவரவுக்கும், மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்-பவை-களை இடித்தார்கள். பணக்காரர்கள் சொத்தைப்-பிடுங்கி, பொதுஜன சொத்தாக்கி பூமி இல்லாதவர்களுக்குப் பூமி, தொழில் இல்லாதவர்களுக்குத் தொழில், படிப்-பில்லாத வர்களுக்குப் படிப்பு முதலாகிய-வைகள் கொடுப்பதற்கு உபயோகப்-படுத்தினார்கள். கல்யாண முறையை ஒழித்து பெண் அடி-மையை நீக்கினார்கள். கண்ட-படி பன்றிகள் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச் செய்து, அளவுபடுத்தி ஆண், பெண் வாழ்க்கை இன்பத்திற்கு சவுகரியம் செய்தார்கள்; இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.

ஆனால் நமக்கு இவை பொருந்துமா? என்று சிலர் கேட்பார்கள், யார் கேட்-பார்கள் என்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்-கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100-க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள், மற்றவர்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்டவர் களாவார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்-கள், அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்-பாடுகள் இருக்கவேண்டு மென்-றால் யார் சம்மதிப்பார்கள்? முதலாவது, இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளு-கின்றீர்களா? இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றீர்களா? என்ன சொல்லு கின்றீர்கள்? (சிரிப்பு) ஆகவே, இம்மூன்றும் ஒழிய அவர்கள் கஷ்டப்படு-வார்கள். ஆனால், நமக்கு இன்றே அம்மூன்றும் ஒழிய வேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்-கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்-திருக்கின்றது. ஆகையால், வரிசைக்கிர-மத்தில் அந்த முறை நமக்கும் வரும் என்-கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வு-தாழ்வு முறை என்பது சாதாரண சமரச சமன்மார்க்-கத்திற்கு விரோதமாய் இருக்-கின்றது. அதை அழித்தே ஆகவேண்டும். இதற்கு நாம் தர்ம சாத்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்-தால் பலனில்லை.
சகோதரர்களே! நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள் என்-பதை யோசித்துப் பாருங்கள். என்ன பலன் அடைந்து இருக்கின்றீர்கள்? இந்த நிலை-மையில் உங்கள் ஆயுட்காலத்திற்குள் உங்களு-க்கு சமரச விடுதலை உண்டு என்று கருது-கின்றீர்-களா? இன்றைய நிலைமையே தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளைய தினம் வரையில் கூட உயிருடன் இருக்கவேண்டும் என்று கருது-கின் றீர்கள் என்பது எனக்குப் புலப்பட-வில்லை.

மனிதன் வாழ்ந்திருக்கக் கருது-வதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ இருக்கவேண்டும். சும்மா, அரைத்த மா-வையே அரைத்துக் கொண்டிருப்பதுபோல் வெறும் ஆகாரம் உட்கொள் ளவும், உட்கொண்டதை மலமாக்-கவும் என்பதற் காக அறிவும், சுவாதீன உணர்ச்சியும், ஞான-முமற்ற ஜந்துக்கள் இருக்கின்றதோ, இது போதாதா? இனி, மனிதன் என்றும், ஆறறிவு-பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும் பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்-களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்-தையும், நேரத்தையும், ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா? என்று கேட்கின்றேன். இதைப் போன்ற ஆறிவீனமும், அவமானமுமான காரியம் மனித சமூகத்திற்கு வேறொன்-றில்லை என்றே சொல்லுவேன். இந்த வித மனித சமூகம் அழிந்து போவது ஜீவ-காருண்ணி-யத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியமான-தென்று தோன்றுகின்றது.
ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்துகொள்ளுங்கள்.

அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள். அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக்கி-யர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்-பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகா-தீர்கள். இந்த ஜன்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டைக் கற்பித்திருக்-கின்-றார்கள். முன் ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று-அதாவது, உங்கள் சரீரத்தி லிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்-டானது உங்-களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருக் கின்றதா? ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜென்ம காரியங்களின் செய்கைகளோ, பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறிய-வோ, அனுபவிக்கவோ முடியப் போ-கின்றது? அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்-தன-மாய்க் கருதி, உங்கள் கஷ்டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததிகளுக்கு விட்டு-விட்டுச் சாகாதீர்கள். உணர்ச்சியும், அறிவும் அற்ற சோம்பேறிக ளுக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்ற-வனுக்கு அது சிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியா கின்றீர்கள்? கடவுளுக்கு இடம் கொடுத்து கோயில் கட்டி, உறுப்-படிகளை அதிகமாக்கி, நமது குறை-களையும், கஷ்டங்-களையும் முறையிட்டு, முறையிட்டு அழுது-வந்தது போதும் என்றே சொல்லுகின்றேன். இனி, அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள்; உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்-கள். அது சொல்லுகின்றபடி நடவுங்கள், உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்-கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன்அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்-கள்; அதை மதியுங்கள், அதனிடம் நம்பிக்-கை வையுங்கள்; அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும்-கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும், வளர்ச்-சியும், மற்ற நாட்டு வர்த்தமா னங்களும், உங்கள் நடுநிலைமையு-மேயாகும். ஆகை-யால், மற்ற நாட்டு வர்த்த-மானங்களை உணர்ந்து, நீங்கள் நடுநிலை-மையில் இருந்து உங்கள் அறிவுக்குப் பூசை போட்டீர்-களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்க்கம்! விடுதலை!!! இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

(16.1.1931) அன்று ஈரோட்டு தாலுகாவை அடுத்த கிரே நகரில் நடந்த ஆதித் திராவிடரின் ஆண்டு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 8.2.1931 குடி அரசு இதழில் வெளியானது).

பெரியார் எனும் போராளி

நினைத்துப் பார்க்கிறோம்.

கடந்துபோன நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிற்கு இரண்டாயிரம் ரூபாய் வருமானம் தந்த வாணிபம் செய்து கொண்டிருந்த ஈ.வெ. இராமசாமி அதனைத் துறந்து காங்கிரசு கட்சியின் அழைப்பை ஏற்றுக் கதராடை அணிந்து ஊர்தோறும் கதராடைகளைச் சுமந்து விற்றுவந்தார்.
காங்கிரசு கட்சியில் நிலை கொண்டிருந்த மேட்டுக்குடிச் சிந்தனைகளால் வெறுப்புற்று அங்கிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் தொடங்கி ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பயணம் செய்து சமதருமப் பரப்புரை செய்கிறார். குலக்கல்வி முறையை நடைமுறைப்படுத்திய ராஜாஜிக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் காரணமாகிறார். காமராஜருக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார். இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து பேரராட்டங்கள் நடத்துகிறார். அண்ணாதுரை முதலமைச்சர் ஆனதும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்.

இப்படியான அரசியல் சுவடுகளோடு பெரியாரின் பாதையைப் பார்த்தோமானால் மனுதர்மங்களைச் கடுமையாகத் தாக்கி இருக்கிறார். சாதியையும் தீண்டாமையையும் எதிர்க்கிறார். பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். கடவுள் மறுப்புக் கொள்கையைத் தீவிரமாக ஏற்றிருக்கிறார். மதங்களை இகழ்ந்து காலம் முழுக்க வர்க்கபேதமுள்ள சமூகத்தில் தன்னை ஒரு போராளியாகவே அடையாளப் படுத்திக் கொண்டவர் தந்தை பெரியார்.

அவரின் பேச்சு, எழுத்து யாவற்றிலும் போராட்டக் களம் இருந்தது. உணர்ச்சி மிக்க சமூகத்தைத் துண்டாடும் அறைகூவல்கள் இல்லாத ரத்தம் சிந்தாத முறையில் மனச்சாட்சியைக் தட்டி எழுப்புகிற முறையில் அவரின் சிந்தனைகள் அமைந்தன.
அரசுக்கு எதிரான போராட்டங்களை விட அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களில் அவரின் கவனம் இருந்தது. அநீதிகளுக்கு எதிரான கலகங்கள் அனைத்தையும் அவர் செய்திருககிறார். நான் போராடுவது நியாயமா என்பதைக் காட்டிலும் நியாயம் பிறக்கும் என்பதற்காகவே போராடியவர்.

பெரியாரின் பேச்சிலும் போராட்டக் களங்களில் காணப்பட்ட உக்ரத்தையும் தாங்க முடியாமல் அரண்டுபோய்விட்டவர்கள் நாகரிகமற்ற பேச்சுகளும் செயல்களும்தான் பெரியாரின் அடையாளம் என்று இகழ்ந்ததுண்டு.

பெரியாரைப்பற்றி நிறைய விமர்சனங்கள் உண்டு. அவதூறுகள் உண்டு. கண்டனங்கள், கேலிகள் உண்டு. வெறும் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே என மட்டம் தட்டி உள்ளனர். நாடு உலகம் குறித்த விரிவான பார்வை அவருக்கில்லை எனச் சாடி இருக்கிறார்கள்.
பெரியார் எளிமையாக இருந்து எளிமையாக மக்களை அணுகியவர். பூடகமற்றவர். தத்துவ விசாரணைகளுக்குள் செல்லாமல் பாமர மொழி உவமைகளால் உண்மையின் வடிவங்களை உணர்த்தியவர். வர்க்க பேதத்தை முறியடிக்கும் முன்பாகச் சாதிமதப் பேதத்தை களைய வேண்டியது தேவை என்று அதற்கு அடிப்படையான கடவுள் வருணாசிரம தருமம், மனுதருமம் போன்ற பார்ப்பன சக்திகள் இருப்பதாய்ப் புரிந்துகொண்டு செயல்பட்டவர். தன்னை ஒரு போராளியாகவே சமூகத்தில் அடையாளப் படுத்திக் கொண்டவர்.

அவருக்குப் பிறகு தமிழ்நாடு எத்தனையோ தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால், பெரியாருக்கு இருந்ததுபோன்ற சமூக அக்கறையிலான போராட்டக் களங்களை தன்னலமற்ற சிந்தனையும் மனித நேயமும் சமூக விழிப்புணர்ச்சியின்பால், தொடர்ந்து ஈடுபாடும் காலத்தின் தேவையை உணர்ந்த மேதைமையும் இலட்சியமே வாழ்வாகக் கொண்ட நெறிகளும் வேறு யாருக்கேணும் இருந்தனவா? என்ற வினாவுக்கு விடை கிடைப்பது அரிதுதான். இன்று காணாமற் போய்விட்ட அரசியல் நாகரிகத்தைக் கட்டிக் காத்தவர்களுள் பெரியார் முதன்மையானவர்.

ராஜாஜிக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் அவருடன் ஆழ்ந்த நட்புக் கொண்டிருந்தார் பெரியார் ஒரு முறை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ராஜாஜியைக் காணச் சென்ற பெரியார் நாம் சண்டைப் போட்டுக் கொள்வதற்காக வேனும் உங்களுக்கு நீண்ட வாழ்நாள் வேண்டும் எனக் கண்கலங்கினாராம்.

1966 ஆம் ஆண்டு டில்லியில் காமராஜர் தங்கியிருந்த இடத்திற்குச் சதிக்கும்பல் ஒன்று தீ வைத்தது. பெரியார் அவர்கள் அந்த நிகழ்விற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு `1966 நவம்பர் 26ஆம் தேதியை காமராஜர் பாதுகாப்பு நாள் என்று அறிவித்தார். அரசியலில் பெரியாருக்கு என்ன நிலைப்பாடு இருந்தாலும் எல்லாரையும் அவர் நண்பர்களாக கருதினார்
பெரியாரின் இறப்பிற்குப் பிறகு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் அவரின் பிறந்தநாளைக் கொண்டாட அரசு தடை விதித்தது. அதே டில்லியில் பெரியார் நடுவம் இடிக்கப்பட்டது.

பெரியார் எனும் போராளிக்கு இச்சமூகம் எத்தனையோ வகையான இழிவுகளை இன்றளவும் செய்து கொண்டுதான் உள்ளது. அதனால் எல்லாம் அவரின் பெருமை மங்கிவிடாது என்பது உண்மை.

- நானா
நன்றி: "தமிழ்ஓசை", 11.4.2008

Thursday, April 17, 2008

சுவாமிகளும் தேவடியாள்களும்

நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் "நமது நாட்டு கடவுள்"களே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். அதாவது சூது, வாது, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் சில கடவுள்களிடத்தில் இவை யாவும் மொத்தமாகவும், சில சில கடவுள்களிடத்தில் தனித்தனியாகவும், சில்லறையாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். இதே குணங்கள் நமது கடவுள்களுக்கு இருப்பதாக நாமே தினப்படியும், மாதப்படியும், வருஷப்படியும் காலக்ஷேப மூலமாகவும், நடிப்பு மூலமாகவும், பூஜை மூலமாகவும், பஜனை மூலமாகவும், திருவிழாக்கள் மூலமாகவும் நடத்திக் காட்டிக் கொண்டும் வருகிறோம்.

இவைகளுக்காகவே நம் பெரியவர்களும் ஏராளமான சொத்துக்களையும் விட்டு இவை தவறாமல் நடந்துவரச் செய்திருக்கிறார்கள். தற்கால தர்ம பரிபாலனம் என்பதும் பெரும்பாலும் இக்காரியங்களைப் பரிபாலனம் பண்ணுகிறவைகளாகவே இருக்கின்றன. இந்த நிலையில் ஏற்படுத்திய கடவுளை வணங்கும் மக்களுக்கு ஒழுக்கம் எப்படி உண்டாகக் கூடும்? இம்மாதிரியான தர்மங்களை பரிபாலனம் செய்யும் மக்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்? கடவுள்களும், கடவுள்களைப்பற்றிய கதைகளும், புராணங்களும் மற்றும் அது சம்பந்தமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் உண்டாக்குவதற்கு உண்டாக்கப்பட்டனவேயன்றி இம்மாதிரி பலன்களுக்கு உண்டாக்கப்பட்டதாக யாரும் ஒப்புக் கொள்ள முடியாது. மேற்கண்ட அநேகவிதமான ஒழுக்கக் குறைவுகள் கடவுள் பெயரால் நடப்பவைகளுள் விபசாரித்தனத்திற்கு அனுமதிச் சீட்டு (பொட்டுக் கட்டுதல்) என்னும் லைசென்ஸ் கொடுக்கப்படுவதைப்பற்றி மாத்திரம் இவ்வியாசத்தில் எடுத்துக் கொள்ளுவோம்.

கோயில்களுக்கு தாசிகள் என்னும் விலைமாதர்கள் எதற்காக வேண்டும்? மேளமடித்தல், மணியடித்தல் முதலிய காரியங்கள் எதற்காக பூசைக்கு உபயோகப்படுகிறது என்று யாராவது கேட்டால், சுவாமிக்கு தீபாராதனை ஆகும்போது வேறு சப்தங்கள் காதில் விழாமல் இருக்கும் பொருட்டு மணிச்சப்தங்களும் மேளவாத்தியங்களும் செய்யப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது சரியோ, தப்போ அதைப்பற்றி நாம் இப்போது விவரிக்க வரவில்லை.

வேறு சப்தங்கள் காதில் படாமல் இருப்பதற்கு மணியும் மேளமும் வைத்திருப்பதானால் விலைமாதர்களான விபச்சார ஸ்திரீகளை கோயிலில் நிறுத்தி இருப்பதன் காரணம் என்ன? என்று இந்த முறையில் யோசிப்போமானால் சுவாமி தீபாராதனையின் போது பக்தர்களுக்கு வேறு சாமான்களை (விபச்சாரிகளை) நிறுத்தி வைத்திருப்பதற்காகத்தான் கொள்ள வேண்டும். இதை யாராவது அறிவாளிகளின் வேலையென்று சொல்லக் கூடுமா? நமது நாட்டில் விபச்சாரத்திற்காக பொட்டுக் கட்டிக் கொள்ளும் தாசிகள் எல்லோரும் ஒவ்வொரு சுவாமியின் பெயரால்தான் தங்களைப் பொதுமக்கள் என்று முடிவுகட்டி விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார்களேயல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழி இல்லாததால் இந்த வியாபாரத்திற்குப் போகிறேன் என்று யாரும் சொல்வதே இல்லை.

இந்த மாதிரி அனுமதிச்சீட்டு கொடுக்கும் கடவுள் வேறு எந்த மதத்திலாவது இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்த்தால் நமது அறியாமையும் நமது கடவுள்களுக்கு நாம் செய்யும் இழிவும் புலப்படாமல் போகாது. தவிர, வேறு விவகார முறையில் பேசுவதானாலும் அதாவது, கடவுளுக்குப் பணி செய்ய இவர்கள் கோயிலில் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதானாலும், இருந்திருந்து கடவுளுக்கு பணி செய்ய இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைத்தானா நியமிக்க வேண்டும்; வேறு யோக்கியமான தொழிலில் உள்ள பெண் மக்கள் உங்கள் சமூகத்தில் இல்லையா என்று யாராவது கேட்டால் அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லக்கூடும்? இம்மாதிரி ஒவ்வொரு முக்கிய கோயிலிலும் பூசை காலத்தில் 10, 20, 30, சில கோயில்களில் 100, 150 வீதம் விபச்சாரப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு, கோயிலுக்குத் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் முன்னிலையில் நடமாடினால் அந்த பக்தர்களின் கதி என்ன ஆவது? கிராமாந்தரங்களில் எந்தக் கோயிலில் பார்த்தாலும் உள்ளதுக்குள் நன்றாய் கொஞ்சம் அழகாய் இருக்கிற தாசிகள் முதலாவது தர்மகர்த்தாவுக்கு அல்லது அவர்கள் மக்களுக்கு, அதற்கடுத்ததுதான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்பதாகவே வழக்கமாயிருக்கிறது.

கிராமாந்தரங்களில் உள்ள கோயில்களின் கதி இப்படியென்றால் சில பெரிய பட்டணங்களிலும், முக்கிய ஸ்தலங்களிலும் உள்ள கோயில்களின் சங்கதி கேட்க வேண்டியதில்லை. விசேஷ ஸ்தலங்களில் உள்ள கோயில்களின் தாசிக்கு பெரும்பான்மையும் அந்தந்த கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களே தரகர்களாகி விடுகிறார்கள். அவர்கள், சுவாமிக்கும் நமக்கும் இடையில் எப்படி தரகர்களாயிருக்கின்றார்களோ அதுபோலவே இந்த அம்மன் களுக்கும் நமக்கும் தரகர்களாயிருந்து கொண்டு யாத்திரைக்கார வாலிபர்களைப் பாழாக்கி விடுகிறார்கள். சுவாமி பக்திக்காக கோயில்களுக்குப் போகும் பக்தர்கள் நாளா வட்டமாய் பழகி தாசி பக்தர்களாகி விடுவதை நாம் எத்தனையோ பார்த்திருக்கிறோம்.

இந்த அநாகரிகமும் கெடுதியுமான காரியங்கள் மதத்தின் பெயராலும், சுவாமியின் பெயராலும் நடைபெறுவதானது நமது சமூகத்திற்கே இழிவு என்று சொல்லாமலிருக்க முடியவில்லை. "சாஸ்திரங்களிலிருக்கிறது, அதற்கு நாம் என்ன செய்வது" என்று சிலர் சொல்லலாம். வெகு காலமாய் வழக்கத்தில் வந்துவிட்டது. அதற்கு நாம் என்ன செய்வது" என்று சிலர் சொல்லலாம். இதெல்லாம் முட்டாள்தனமான சமாதானமாகுமே தவிர அறிவுள்ள சமாதானமாகாது. நம்முடைய சாஸ்திரங்கள் என்பவைகளை எழுதினவர்கள் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இப்படியெல்லாம் எழுதினார்கள்?

இம்மாதிரி வேறு தேசத்தில், வேறு மதத்தில், வேறு சாஸ்திரத்தில் எங்கேயாவது இருக்கிறதா? என்பவைகளை யோசித்துப் பார்த்து பிறகு இவற்றை கவனிக்க வேண்டுமேயல்லாமல், எவனோ தனக்கு தொழில் வேண்டும். வயிற்றுப் பிழைப்பு நடக்க வேண்டும் என்பதாக ஏதாவது ஒன்றை எழுதி வைத்து நமக்குக் காட்டினால் அதுவே நமக்கு கடவுள் வாக்காகிவிடுமா அல்லது ஆதாரமாகி விடுமா? மனிதனுக்கு பகுத்தறிவு எதற்காக இருக்கிறது? இப்பொழுது வர வர அநேக கோயில்களில் இந்த தாசி வழக்கத்தை எடுத்தாகி விட்டது. உதாரணமாக, மைசூர் கவர்ன்மென்டார் தங்கள் ஆட்சிக்குட்பட்ட கோயில்களுக்கு எங்கும் தாசி உத்தியோகம் இருக்கக் கூடாது என்பதாக ஒரு உத்தரவு போட்டு தங்கள் சாமிகளை விபச்சாரத்தனத்திலிருந்து மீட்டு விட்டார்கள். அதன் மூலம் அந்த சமஸ்தானத்துக் கோயில் தாசிகள் எல்லாம் நீக்கப்பட்டாய்விட்டது. மைசூர் சமஸ்தானத்து சுவாமிகளுக்கு வெட்கம் வந்து தங்களுக்கு இனிமேல் தாசிகள் வேண்டியதில்லை என்று அந்த கவர்ன்மென்டுக்கு சொல்லிவிட்டது போல நமது நாட்டு சுவாமிகளுக்கும் என்றைக்காவது வெட்கம் வந்தோ அல்லது கிழப்பருவம் வந்தோ, இனிமேல் தங்களுக்கு தாசிகள் வேண்டியதில்லை என்று தேவஸ்தான போர்டாரிடமாவது, கமிட்டியாரிடமாவது, தர்மகர்த்தாக்களிடமாவது சொல்லிவிடக் கூடாதா என்பதாக நமது நாட்டு சாமிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,- "குடிஅரசு" 4.9.1929.

அம்பேத்கர் மார்க்ஸியத்திற்கு எதிரானவரா?

அம்பேத்கர் மேல் எப்போது ஈடுபாடு வந்தது? அம்பேத்கரை முழுமையாய் படித்தல் - பவுத்தம் பற்றி....?

அம்பேத்கர் அரசியல் சட்டம் எழுதினார் என்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படிச்சுக்கிட்டு இருக்கோம். தலித் தலைவர்கள்ன்னு சொல்லிக்கிட்டு அம்பேத்கரை ஏமாற்றுகிறார்கள். அதிலிருந்துதான் அம்பேத்கரை முழுமையாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அம்பேத்கரை பொருத்தவரையில் போதுமான ethics அதாவது அறம் தொடர்பான விஷயங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள்?மார்க்சீய அணியில போதுமான ethics இல்லாம இருக்குதுல்ல. அதைத்தான் அம்பேத்கர் “மார்க்சியர்கள் புத்தரைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார். சோவியத் யூனியன் போன்று மற்ற இடங்களில் பெற்ற அனுபவங்களிலிருந்து அவர் இதைச் சொல்கிறார். சமூகவியல் என்பதில் தனி மனித வாழ்வியலும் சேர்ந்திருக்க வேண்டும் அல்லவா?

அம்பேத்கரைப் பற்றிய விமர்சனம் குறிப்பாக மார்க்ஸியத்திற்கு எதிரான கருத்துக்கள் பற்றி...?

இரத்தினம்: அம்பேத்கர் பற்றி சில விமர்சனங்கள் உண்டு. சில இடங்களில் மார்க்ஸை கடுமையாக சாடுகிறார். மார்க்ஸியம் ஒழிந்து விட்டது என்கிறார். டாங்கே போன்ற பார்ப்பனர்கள் பண்ற சேட்டைகளால் ஏற்பட்ட விரக்தியில் அவ்வாறு கூறுகிறார். கம்யூனிஸ்டுகளை விரட்டுவோம் என்று கூட எழுதுகிறார். அவர் சொல்வது போலி கம்யூனிஸ்டுகளை விரட்டுவோம் என்று. அது கொஞ்சம் emotional. அதையே நீங்க focus பண்ணினா வேற மாதிரி ஆகிவிடும். நாய் செத்ததுக்கு வருத்தப்பட்டு 1 மாதம் வீட்டை விட்டு வெளியே வரல. பையன் ஒருத்தன் இறந்ததற்கு அம்பேத்கர் மிகவும் பாதிக்கப்பட்டு 2, 3 மாதம் சாமியார் மாதிரியே ஆகிவிடுகிறார்.

காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் ஒரு similarity இருக்குது. அம்பேத்கரோட செகட்டரியின் பதிவுல, செகட்டரி கிளம்புற நேரத்துல இரவு 9 மணிக்கு படிச்சுக்கிட்டு இருப்பாராம். காலையிலே 8 மணிக்கு திரும்பி வந்தால் இன்னும் வீட்டுக்கு போகலயான்னு கேட்பாராம். நான் வீட்டுக்கு போய் தூங்கிட்டு வர்றேன்னு சொன்னபிறகு, அடடா இந்த புத்தகத்தை படிச்சி முடிச்சிரலாமுன்னு இருந்தேன். படிச்சிக் கிட்டே இருக்கிறேன். அப்படியிம்பாராம். அவ்வளவு ஈடுபாட்டோட இருந்தார். பாலி மொழி படிச்சார். சமஸ்கிருதத்தைப் படிச்சு ஆரியத்தை அம்பலமாக்கினார். ஆரிய ஒழுக்கக்கேடுகளை, சோமபானம், சுராபானம் அருந்தி பெண்கள் யாகங்களில் குதிரைகளைப் புணர்வார்கள் என்பதை அவங்க நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். வீணாய் போன கும்பல்னு அவங்கக்கிட்டேயிருந்து எடுத்து காட்டுகிறார். யாரும் அம்பேத்கர் பொய் சொல்லிட்டாருன்னு சொல்ல முடியாது.

அம்பேத்கரை படித்த அளவுக்கு பெரியாரை படித்தது உண்டா?

பெரியாரை படிச்சுகிட்டு இருக்கேன். ஆனா அம்பேத்கர் கொடுமைகளை நேரடியாக அனுபவிச்சவர். இந்து மதத்தை விட்டு வெளியேறணும் என்றால் இஸ்லாத்துக்குப் போங்கள் என்கிறார் பெரியார். அம்பேத்கர் ஆழமாக ஆய்வு பண்ணிதான் பவுத்தத்திற்கு செல்லும் முடிவை எடுக்கிறார்.

அம்பேத்கரிடம் மார்க்ஸியத்தின் மீது emotional ஆன ஒரு வெறுப்பு இருந்ததைப் போல இஸ்லாம் மீது இருந்ததாகப் படுகிறதே...?

இஸ்லாம் மீது அம்பேத்கர் வைக்கும் குற்றச்சாட்டு பெண்களை நடத்தும் விதந்தான். படையெடுப்புகளில் புத்த பிக்குகளும் கொலை செய்யப்பட்டார்கள். இஸ்லாம் உருவ வழிபாட்டை மறுக்கிறது. இருப்பினும் அம்பேத்கர் பார்ப்பனியத்தைச் சாடுவது மாதிரி இஸ்லாத்தைச் சாடவில்லை. பார்ப்பனீயந்தான் பவுத்தத்தை ஒழித்தது என்கிறார்.

அம்பேத்கர் இஸ்லாத்தில் சேராததன் காரணம்...?

ஒன்று இஸ்லாத்தில் இறை நம்பிக்கை இருக்கிறது. மற்றொன்று பெண்களை சமமானவர்களாகப் பார்க்க மறுக்கிறார்கள். பௌத்தத்தில் இவையிரண்டும் இல்லை. புத்த மதத்தை உருவாக்கியவர்களே பார்ப்பனர்கள் தான். இருந்தாலும், அப்ப இருந்த நிலையிலேயே மதத்திற்கு போகாமல் இயக்கமாக்கியிருக்க வேண்டும். அது தப்பா தெரியுது. கடவுள் இல்லாத மதம் ஒன்னு தேவைங்கிறார். புத்தர் அப்படிச் சொன்னார்ங்கிற மாதிரி கொண்டு வர்றார். ஆனால் புத்தர் ஒழுக்கமே தம்மம், தம்மமே ஒழுக்கம் என்றார். சமூகத்திற்கு வழி நடத்தக்கூடிய சமூகவியல் அடிப்படைத் தேவை என்பதே புத்தரின் பார்வை, மதமல்ல. கடவுள் இல்லை, மறுபிறப்பு இல்லை, உயிர் என்று எதுவும் இல்லை என்பதே புத்தரின் கருத்து.

பவுத்தத்தில் திருத்தங்கள் செய்து விட்டதாக அம்பேத்கர் மீது விமர்சனங்கள் கூட உண்டு.

புத்தர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். மதம் ஆதிக்கங்கள் உருவாக்கியது; பகுத்தறிவுக்கு எதிரான சதி என்பதே அவர் பார்வை. அதனால்தான் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், அவரது தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், அவரது இடுப்புப் பகுதியிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள், பிரம்மனின் பாதத்திலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்ற கட்டுக் கதைகளை உடைத்து மக்களைத் தெளிவாக்கினார்.

ஒரு millitant புத்தரை கட்டமைக்க வேண்டுமென்று நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள். புத்தருக்கு அறம் தானே முக்கிய பலம்?

அப்ப இருக்கிற சூழல்ல அவர் அரசக்குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே வருவதை சங்கக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கிறார். அடுத்த அரசை தாக்க வேண்டுமென்றும் மற்றவர்கள் சங்கத்தில் முடிவு செய்கிறார்கள். அப்ப அவர்கிட்ட தளர்வற்ற போக்கு இருக்கு. அதை அறிவு ரீதியான போர்க்குணம் என்றே நினைக்கிறேன்.

அறிவு ரீதியான millitant. ஒரு நல்ல புதிய விளக்கமாக உள்ளது.

அதனால்தான் சொல்கிறார். ஒவ்வொரு புத்த பிக்குக்கும் சமூகக் கடமை இருக்கிறது. தீமையை ஒழிப்பதற்கு ஆயுதம் எடுக்க வேண்டுமானால் தயங்கக் கூடாதுங்கிறார். அப்படி இருக்கிற சூழல்ல ரொம்ப millitancy ல இருந்தா regulate பண்ணமுடியாது.

புத்த கயாவில் கொஞ்ச நாட்கள் இருக்கப் போறேன்னு சொன்னதாக நினைவு...?

இல்லை நாக்பூர். நாக்பூர்ல அம்பேத்கர் இயக்கம் செயல்பட்ட முறையை யாரும் சரியாக வெளிக்கொண்டு வரவில்லை. ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் பவுத்த குடும்பங்கள் கூடுகிறார்கள். அந்த உறவு முறை பரவலாக இருக்கு. பவுர்ணமி வெளிச்சம் மக்கள் கூடுவதற்கு வசதியாகவும் இருக்கு. கயர்லாஞ்சி நிகழ்வுக்காக Spontaneous ஆக 10,000 பெண்கள் திரண்டார்கள். புத்தக் குடும்பங்களின் தொடர்புகள் மூலமாக ஆதிக்கம் செலுத்தும் தலித் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுகமாக இருப்பதற்காக ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் அம்பேத்கருடன் இணையாமல் காங்கிரஸில் சேர்ந்தனர்.

அவங்க எல்லாம் அம்பேத்கருடன் இணைந்து இருந்தால் மாபெரும் இயக்கமாகி இருப்பார்கள். அம்பேத்கர் இயக்க செயல்பாட்டை புரிந்து கொள்வதற்காக நாக்பூர் செல்வது குறித்து பேசியிருக்கிறேன். ஒவ்வொரு முறை தீட்சை பெற்ற நாள் வரும்போது கூப்பிடுவார்கள். சடங்குக்கு எல்லாம் நான் வரவில்லை. கும்பகோணத்துல போய் அழுக்குத் தண்ணியில மூழ்கிறாங்கல்ல அதுமாதிரி. மண்டை காய்ந்த, காலில் செருப்பு இல்லாத தலித் மக்கள் படிச்சவன் ஏதாவது செய்வான்னு நம்பி வருகிறார்கள். விடுதலைக்கான பணி நடக்கணும் என்ற ஆசையில் மக்கள் வர்றாங்க. பல வருசமாக போய்க்கிட்டு இருக்கேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.

இன்று பவுத்தத்தின் நிலைமை...?

பவுத்தத்தை மதமாக ஆக்கியதே பாப்பனர்கள்தான். பவுத்தம் சங்கமாக இருந்தது. பார்ப்பனர் அதை மதமாக்கினர். மொட்டையடித்து பவுத்த பிக்குவாக ஆக்கினர். உள்ளிலிருந்து அழிக்கிறது சுலபம். நான் புத்தரை விவேகானந்தர் மாதிரி கம்பீரமாக நிறுத்தனும்னு எல்லா ஓவியர்கிட்டேயும் கேட்டேன். ஓவியர் புகழேந்திக்கிட்டேயும் சொன்னேன். யாரும் வரையவில்லை. புத்தருக்கு கம்பீரமான உடல். அவரை எப்ப பார்த்தாலும் தியானத்துல இருக்கிற மாதிரி வரைந்து வைத்திருக்கிறார்கள். அவர் கொஞ்ச நேரந்தான் தியானம் பண்ணினார். மிகவும் கம்பீரமானவர். அவர் ஒரு great teacher.

இப்போது பவுத்தத்திற்கு, அதைப் பின்பற்றுபவர்கள் தடையாக இருக்கிறார்களா?

விரோதிகளாக இருக்கிறார்கள். பல வீடுகளில் தியான புத்தரை வச்சு பூசை பண்றாங்க. சென்னையில் ஒரு நண்பரிடம் விவேகானந்தர் மாதிரி புத்தரை நிறுத்தனும்ன்னு சொன்னேன். அவர் பதறிப்போய் அப்படியெல்லாம் செஞ்சிடாதிங்கய்யா. அவர் தியானமுல்ல பண்ணிக்கிட்டு இருந்தார்ன்னு சொல்றார். உங்களைவிட பவுத்தத்திற்கு துரோகி யாருமில்லைன்னு சொல்லிட்டு வந்தேன்.

---------------வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் "சஞ்சாரம்" மார்ச்- மே 2008 இதழுக்கு அளித்த நேர்காணலிலிருந்து

Wednesday, April 16, 2008

பிள்ளை வரத்திற்குப் போய் புருஷனைப் பறி கொடுப்பதா?கொள்கைக்காக மந்திரி பதவியா? மந்திரி பதவிக்காக கொள்கையா?

பனகால் ராஜா அவர்கள் மந்திரி பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் விஷயத்தில் சட்டசபை சம்பந்தப்பட்ட வரையில் 'ஜஸ்டிஸ் கட்சி' அல்லது பிராமணரல்லாதார் என்கிற கட்சிப் பெயரைக் கூட விட்டுவிட்டு அதற்கு வேறு பெயர் வைத்துக் கொள்ள சம்மதித்ததாக 'மித்திரன்' முதலிய பத்திரிகைகளில் காணப்படுகிறது. "செருப்புக்காகக் காலா? காலுக்காகச் செருப்பா?" என்னும் பழமொழி போல் கட்சிக்காக மந்திரியா, மந்திரிக்காக கட்சியா? மந்திரி உத்தியோகத்திற்காக கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ள சம்மதித்த பனகால் ராஜாவின் நிலைமையை யாரும் கண்டிக்காமலிருக்க முடியாது. சட்டசபையில் பனகால் அரசர், தானும் தனது கட்சியாரும் பார்ப்பனரல்லாதார் கட்சிப் பிரதிநிதி என்பதை மாற்றிக் கொள்வார்களேயானால் சட்டசபையைப் பொறுத்தவரையில் வேறு யாருடைய பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள அருகதையுடையவர்கள் ஆவார்கள். டாக்டர் நாயரவர்களும் சர். தியாகராய செட்டியாரவர்களும் எந்த சமயத்திலும் தங்களுடைய கட்சிப் பெயரையோ கொள்கையையோ ஒரு கடுகளவு மாற்றிக் கொள்வதற்கும் எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் சிறிதும் சம்மதித்தவர்களல்லர். அந்த உறுதி அவர்களிடத்தில் இருந்ததினாலேயே பார்ப்பனரல்லாதார்களுக்கே ஒரு அந்தஸ்து இருந்து வந்திருக்கிறது. அவர்கள் காலத்தில் நடந்த இரண்டு தேர்தல்களிலும் பூரண வெற்றி பெற்று மந்திரிகளை நியமிக்கும் யோக்கியதைகளையும் அடைந்திருந்தார்கள். அவர்கள் காலமான பிறகு அது போல் உறுதியும் நேர்மையுமில்லாத தலைவர்கள் மூலம் அக்கட்சி நடைபெற வேண்டியிருந்த படியால் பார்ப்பனர்கள் சூழ்ச்சி இக்கட்சியை வெகு சுலபத்தில் கலைக்கத் தைரியம் கொண்டு விட்டது. ஒரு சிறு மாறுதல் ஏற்பட்ட காரணத்தினாலேயே ஒரு நெருக்கடியான சமயத்தைசமாளிக்க முடியாமல் கட்சியின் பெயரை விட்டுவிட சம்மதித்தது கொஞ்சமாவது சுயமரியாதையுள்ளவர்களும் சுயநலமற்றவர்களும் செய்யும் காரிய மென்று சொல்ல முடியாது. பனகால் அரசர் உண்மையிலேயே உறுதியும் சுயமரியாதையும் உள்ளவராகயிருந்தால், கவர்னர் பிரபு தன்னை அழைக்காமல் வேறு ஒருவரை அழைத்து, மந்திரி சபையை அமைக்கும்படி கேட்டதன் பின் கண்டிப்பாய் மந்திரி விஷயத்தைப் பற்றி எந்த விதத்திலும் கலந்து கொள்ளாமலிருப்பதே அறிவுடைமையும் சுயமரியாதையுமாகும். எப்பொழுது கவர்னர் பிரபு தன்னைக் கூப்பிடவில்லையோ அப்போழுதே தான் தலைமை வகித்து நடத்தும் கட்சியாகிய பார்ப்பனரல்லாதார் கட்சி சிறுபான்மைக் கட்சி என்றோ தோல்வியடைந்த கட்சி என்றோ கவர்னர் பிரபு நினைத்து விட்டாரென்பது அர்த்தமா அல்லவா? அப்படி அவர் நினைத்த பிறகு அம்மந்திரி பதவியை எந்த வழியிலாவது ஏற்பது மானமுடைமை யாகுமா? கவர்னரே மறுபடியும் பனகால் அரசரைக் கூப்பிடுவதாயிருந் தாலும் மாட்டேன் என்று சொல்லிவிட்டு சட்டசபைக்கு வெளியில் இருந்து கொண்டு தீவிரப் பிரசாரம் செய்து தங்கள் கட்சியார் சிறு பான்மையாரா பெரும்பான்மையாரா என்பதை கவர்னர் அறியும்படிச் செய்வதும் சர்க்காரின் யோக்கியதையையும் பார்ப்பனர்களின் சூழ்ச்சி யையும் பொதுமக்கள் அறியும்படி செய்வதும் முக்கியக் கடமையாகும்.

அப்படிக்கில்லாமல், கட்சி, மந்திரி சபை நியமிக்க முயற்சி செய்வதிலோ அல்லது மற்றவர்கள் முயற்சி செய்தால் அதில் தானும் அல்லது தனது கட்சியாரும் ஒன்றிரண்டு மந்திரி ஸ்தானத்தை ஒப்புக் கொள்வதிலோ கவலை செலுத்துவார்களேயானால் அடுத்த மூன்று வருஷத்திற்கு பார்ப்பனரல்லாதார் கட்சியும் அவர்களது கொள்கையும் ஸ்தம்பிக்கப்பட்டுப் போய்விடும் என்றே எச்சரிக்கை செய்வோம். ஜஸ்டிஸ் கட்சி அடுத்த மூன்று வருஷ காலத்துக்கு மந்திரி பதவி விஷயத்தில் சம்பந்தப்படாமலிருந்து விடுமேயானால் பொது மக்கள் அக்கட்சியின் கொள்கையை முன்னிலும் பதின் மடங்கு வேகத்தோடு ஈடேற்றி வைப்பதற்குத் தானாகவே முன் வருவார்கள். அரசாங்கத்தாரும் ஒருவர் பேரில் ஒருவரை தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் தன்மையிலிருந்தும் கொஞ்சம் மாறுவார்கள். அடுத்து வரப்போகும் மூன்று வருஷ காலத்துக்குள்ளாக மந்திரி பதவி இல்லாவிட்டால் பார்ப்பனரல்லாதார்கள் அடியோடு ஒழிந்து போய்விடுவார்களா? ஜஸ்டிஸ் கட்சியும் மந்திரி பதவி இல்லாவிட்டால் செத்துப் போக வேண்டியதுதானா? ஒரு மயிர் உதிர்ந்து போனால் கவரிமான் வாழா தென்பார்கள். அப்படிப்போல் ஒரு மந்திரி பதவி போய் விட்டால் ஜஸ்டிஸ் கட்சி வாழ முடியாதா? மந்திரி பதவிக்காகவா இக்கட்சி ஏற்பட்டது? அப்படியானால் அது ஒழிந்து போக வேண்டியதுதான். அப்படிக்கில்லாமல் பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காக ஏற்படும் கட்சியாயிருக்குமானால் அது மந்திரி சபையை மறந்துவெளியில் வந்து ஆண்மையுடன் போராட வேண்டியதுதானேயொழிய கட்சிப் பேரை மாற்றியாவது பதவி பெற நினைப்பது சுயமரியாதைக்காகப் பாடுபடும் தலைவர்களின் கடமை அல்லவென்றே சொல்லுவோம்.

சட்டசபையின் மூலமும் மந்திரி பதவியின் மூலமும் நாட்டுக்கு ஒரு பலனும் ஏற்பட்டு விடாதென்பதை நாம் பல தடவை சொல்லியிருக்கிறோம். ஆறு வருஷ காலம் இப்பதவியை அநுபவித் தவர்களும் பெரும்பாலும் இதே அபிப்பிராயத்தை சொல்லியிருக் கிறார்கள். அன்றியும் பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதையின் எல்லை முழுவதும் சட்டசபையின் மூலம் அடைந்து விடலாம் என்பதும் பகற் கனவேயாகும். நமது சுயமரியாதையின் எதிரிகளால் ஏற்படும் சூழ்ச்சிகளில் ஒரு சிறிது ஒழிக்க முடியுமானாலும் இச்சிறு நன்மைக்காக கட்சியின் பேரையே பலி கொடுப்பது பிள்ளை வரத்திற்குப் போய் புருஷனைப் பறிகொடுத்ததற் கொப்பாகுமே தவிர வேறல்ல. தவிரவும் ஏதாவதொரு கட்சிக்குத் தலைவர்களாயிருப் பவர்களுக்கு ஏதாவதொரு பதவியோ அதிகாரமோ கிடைக்கக் கூடிய சந்தர்ப்ப மேற்பட்டாலே அக்கட்சிக்கு முடிவு காலமென்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அதிகார பதவிகளிலிருப்பவர்கள் ஒருக்காலும் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியவே முடியாது. அவ்வதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், கட்சி சேர்க்கவும் அநேக அயோக்கியத்தனமான காரியங்கள் செய்ய வேண்டியதோடு மற்றவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் நாணயக் குறைவுகளையும் அநுமதிக்க வேண்டியும் வரும். ஆதலால் நிவர்த்தி இல்லாத சமயங்களில் மாத்திரம் ஏதோ பதவிகளை ஏற்றுக் கொள்ளலாமே தவிர மற்றபடி பதவிகளை வகிப்பது கட்சிக்கு ஆபத்தாகவே முடியும். பனகால் அரசர் சென்ற மூன்று வருஷங்களாக மந்திரி பதவியில்லாமல் வெளியிலிருந் திருப்பாரானால் ஜஸ்டிஸ் கட்சியின் நிலைமை தேர்தலில் வேறு மாதிரியாயிருந்திருக்குமென்று உறுதியாய் சொல்லுவோம். சர்.தியாகராய பெருமானுக்கிருந்த மதிப்பெல்லாம் அவர் வெளியிலிருந்ததினால்தானே யொழிய மந்திரியாயிருந்ததினாலல்ல. ஆதலால் என்ன வரினும் கட்சியையும் கட்சிப் பெயரையும் விட்டுக் கொடுக்காமலும் தலைவர் களாயிருப்பவர்கள் பதவிகளில் பிரவேசிக்காமலும் இருப்பதே கட்சியைக் காப்பாற்றுவதாகும். தவிரவும் மந்திரி பதவியை ஏற்பவர்கள் வாங்கும் சம்பளங்கள் ஒரு குறிப்பிட்ட சிறு தொகை தவிர மற்றவை கட்சிப் பிரசாரத்திற்கே ஒப்படைக்கப்பட வேண்டும். அது முடியாதாயின் மந்திரியின் சம்பளத்தை வருஷம் ஒன்றுக்கு பதினாயிரம் ரூபாய்களுக்குள்ளாகவே நிர்ணயிக்க வேண்டும். அப்பொழுதுதான் பதவிகளுக்கு இத்தனை ஆத்திரங்களும் பதவியிலிருப்பவர்கள் மேல் இவ்வளவு பொறாமைகளும் விரோதிகளும் ஏற்படமுடியாது. பதவி களை ஏற்ற பிறகு பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வளவு அக்கிரமங்களும் செய்ய வேண்டி வராது. அரசியலிலானாலும் சுயமரியாதையிலானாலும் கட்சி நலத்துக்கென்று சட்டசபைக்கு நிற்பவர்கள் மிகவும் அருமையாகவே இருக்கிறார்கள். ஏறக்குறைய இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சுமார் நூறு பேர்களிலும் 2 அல்லது 3 பேராவது கட்சியையோ தேசத்தையோ சமூகத்தையோ சுயமரியாதையையோ லட்சியம் செய்து சட்டசபைக்கு வந்தார்களென்று யாராவது சொல்ல முடியுமா? அப்படி இருந்தால் கவர்னர் பிரபுவாலழைக்கப்பட்ட சிறீமான் நரசிம்ம ராஜூ அவர்கள் மூன்று மாதத்தில் ஆறு கட்சி மாறியிருப்பாரா? பனகால் அரசர் கட்சிப் பெயரை மாற்றச் சம்மதிப்பாரா? சிறீமான் ஐயங்காரவர்கள் பதினாயிரக் கணக்கான புரட்டுப் பேசியிருப்பாரா? சிறீமான் ஆச்சாரியாரவர்கள் ஆயிரத்தெட்டு சூழ்ச்சிகள் செய்வாரா? கட்சித் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களின் நிலைமையே இப்படியிருந்தால் மற்றபடியுள்ளவர்களின் யோக்கியதையைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அது படிப்பதற்கே அருவருக்கத்தக்கதாகுமென்றே நினைக்கிறோம்.

ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி என்பதோ பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதோ மக்களுக்குப் பயன் அளிக்க வேண்டுமானால் இம்மாதிரி நிலைமை களிலும் இம்மாதிரி தலைவர்களிடமும் சிக்கி அல்லல்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதோடு நமது சுயமரியாதைக்கு எதிரிகளான பார்ப்பனர்களும் மற்றவர்களும் தேர்தல் முடிவுகளைக் கூறிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி மாண்டு விட்டது; பார்ப்பனரல்லாதார் கட்சி செத்தது; வகுப்புத் துவேஷக் கட்சியை பொது ஜனங்கள் விரும்பவில்லை என்று பசப்பி ஓலமிட்டுத் திரிவதற்கு அநுகூலமாக நடந்து கொள்ளாமல் மன உறுதியுடனும் சுயமரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். கட்சி என்று சொல்லுவதெல்லாம் அதிலுள்ள கொள்கைகளுடையவும் திட்டங்களுடையவும் மதிப்பை பொறுத்ததே ஒழிய ஆள்களின் மதிப் பையும் ஆள் கூட்டத்தின் எண்ணிக்கையையும் பொறுத்தது அல்ல. ஆதலால், கொள்கையையும் உறுதியையும் கடைப்பிடித்த சிலரை யாவது கொண்டு பார்ப்பனரல்லாதார் கட்சி கட்டுப்பாடாய் வேலை செய்யாத பட்சம் அடுத்த மூன்று வருஷத்திற்குள் கண்டிப்பாய் இருக்கு மிடம் தெரியாமல் மறைந்துவிடுமென்றே கவலையுடன் எச்சரிக்கை செய்கிறோம்.

-------------- தந்தைபெரியார் - "குடி அரசு" 28.11.26