Thursday, January 31, 2008

பாலியல் கல்வி அவசியம் தேவை

இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

ஆண், பெண் கூட்டு வாழ்க்கையில் இப்போது வழங்கி வரும் கருத்தமைந்த ‘கற்பு' என்னும் வார்த்தையே அவசியமற்றது என்றும், அது வாழ்க்கை இன்பத்திற்குக் கேடு பயக்கின்றதே ஒழிய, அதனால் நன்மை இல்லை என்றும் சொல்லுவேன். இன்று வழங்கும் ‘கற்பு' பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்களுக்கு இல்லை. அது, பெண்களை நிர்ப்பந்திப்பது போல் ஆண்களை நிர்ப்பந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்க ஈனம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த ஒருதலைக் கற்பேயாகும். பெண்கள் அடிமையாக்கப்பட்டதற்கும் இந்த ஒரு தலைக் கற்பே காரணமாகும். இந்த ஒரு தலைக்கற்பு உள்ளவரை, சமுதாயம் சீர்படப் போவதில்லை என்பதே எனது உறுதி.

ஆண்களின் ஒழுக்க ஈனமான நடத்தைகளை இந்துமதக் கடவுள், சமயம், சாத்திரம், புராணம் ஆகியவை ஒப்புக் கொள்ளுகின்றனவா இல்லையா என்று கேட்கிறேன். இவை கூடாது என்று சொல்லுகிற ஒரு தமிழன், தன்னை இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும். செய்யாவிட்டால், சில பெண்களாவது முன் வந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் துணிவதாகவாவது காட்ட வேண்டும். உரிமையில்தான் சுதந்திர உணர்ச்சி இருக்கிறது. அது இல்லாத இடத்தில் அடிமை உணர்ச்சிதான் இருக்கிறது. அதனாலேயே நமது பெண்கள் அடிமைகளானார்கள். அப்பெண்களின் வயிற்றில் பிறந்த நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம்...

அநேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப் பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது. ‘ஏதோ கடவுள் கொடுக்கிறார். கடவுள் வயிற்றில் கொண்டு விடுகிறார். கடவுளே வளர்க்கிறார். கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார். கடவுளே சாகடிக்கிறார்' என்று கருதிக் கொண்டு, இது விஷயங்களில் மிருகங்களைவிட கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல்கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது, வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில், புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய்க் கேட்கிறபோதும், பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்தக் கலைகளை நமது ஆண் - பெண் இருபாலருமே ஓர் அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப் பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய், சாவு, ஊனம், மனச்சஞ்சலம், பொருந்தா வாழ்வு ஆகியவை பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்க வேண்டும், எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் ‘பொம்பளை நோவு' என்று சொல்லிவிடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும், பெண்கள் அதையும் ‘பொம்பளை வியாதி' என்றுதான் சொல்லுகிறார்கள். இது, பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும்.

ஆண் - பெண் தன்மை, உடல்கூறு, சேர்க்கை விளக்கம், கர்ப்பம், பிள்ளைப்பேறு ஆகியவைகளைப் பற்றிச் சர்க்கார், அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல் வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவை நன்றாக மக்கள் அறிந்தால், இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல்கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். சின்ன தவறுதல் கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். இன்ன இன்ன பதார்த்தம் சாப்பிட்டால், உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, நோய்வரும் என்று கருதினால், எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ, அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால், அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல், இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையைக் கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?


-------- தந்தைபெரியார் அவர்கள்

காஞ்சிபுரத்தில் 16.6.1940 அன்று நடைபெற்ற திருமண விழாவில் ஆற்றிய உரை

நம்முடைய வாதம்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை;பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.


-----தந்தைபெரியார் அவர்கள்

27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் ஆற்றிய உரை. "விடுதலை" 5.5.1953

கிருஸ்ணபகவானுக்கு புத்தி உண்டா?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது.அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது. குசேலர் பெண் சாதி குறைந்தது வருடத்திற்கு ஒரு பிள்ளையாகப்பெற்று இருந்தாலும் கைகுழந்தைக்கு ஒரு வருடமாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27 -வது வருடமாவது இருக்கும் 20 வயசுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள் இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருடத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பிச்சைக்குப் போகக் குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஸ்ணபகவானுக்காவது "என்ன பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே,வெட்கமாக இல்லையா?" என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?


--------------தந்தைபெரியார் - "84 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் மலர்" பக்கம் 43

Tuesday, January 29, 2008

விரதப்புரட்டு

"நைமிசாரண்யவாசிகளுக்கு சூதபுராணிகர் சொன்னது" "ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப்பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து, தனக்கு அந்தப் பெண்ணை இரண்டாவது பெண் ஜாதியாக விவாகம் செய்து கொண்டான். அந்தக் கிழப்பார்ப்பான் மணக்கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்தப் பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொறுத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை "நீ புருஷனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளைப் பெறக் கடவாய்" என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை, "பூர்வஜென்ம கருமத்தின் பலனாய் நான் விதவையாகி விட்டதால் தங்களின் ஆசீர்வாதம் பலியாமல் வீணாய் போய்விட்டதே" என்றாள். அதற்கு அந்த ரிஷி, "நான் கண் தெரியாத குருடனானதால் அறியாமல் அந்தப்படி ஆசீர்வாதம் செய்ய நேரிட்டு விட்டது. ஆனாலும், அது பலிக்கும்படி செய்கிறேன் பார்" என்று சொன்னார். "என் புருஷன் இறந்து வெகுநாளாய் விட்டதே; இனி அது எப்படி பலிக்கும்?" என்று சாரதை கேட்க, அதற்கு அவர், நீ உமாமகேஸ்வர விரதம் அனுஷ்டித்து வந்தால் கண்டிப்பாய் நீ உத்தேசித்த காரியம் கைகூடும்" என்று கூறினார். "அவ்விரதம் அனுஷ்டிப்பதெப்படி?" என்று சாரதை கேட்டாள். அதற்கு முனி சொல்லுவதாவது:

"சித்திரை அல்லது மார்கழி மாதத்தில் ஒரு பிராமணனை அவன் மனைவியுடன் நல்ல பீடத்தில் உட்கார வைத்து அவர்களைப் பார்வதி பரமசிவனாகப் பாவித்து, மலர்களால் அர்ச்சித்து, தினமும் அன்ன ஆகாரமிட்டு வருஷக்கணக்காய் பூசை செய்து, பார்வதி பரமசிவ உருவத்தை மனதில் நினைத்து அதற்கு விரத அபிஷேகம் செய்து ஆராதித்து பஞ்சாட்சரத்தை தியானித்துக் கொண்டிருந்தால் நினைத்த காரியமெல்லாம் கைகூடும்" என்றார். அது கேட்ட சாரதையானவள் அந்தப்படியே அதுமுதல் தனக்கு முனிவரின் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு, முனிவர் சொன்னபடி உமாமகேஸ்வர விரதத்தை சிரமமாய் அனுஷ்டித்து வந்தாள். உடனே பார்வதி தேவி தாரதைக்கு பிரத்தியட்சமாகி "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டாள். சாரதை "எனக்கு புருஷன் வேண்டும்" என்றாள். பார்வதி, "அப்படியே உன்னை ஒருபுருஷன் தினமும் வந்து சொப்பனத்தில் புணருவான்; அதனால் நல்ல ஒரு குழந்தை பிறக்கும்" என்று வரம் கொடுத்தாள். அது முதல் சாரதையின் சொப்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணர்ந்து கொண்டே இருந்தான். அதனால் சாரதைக்கு கர்ப்பமும் உண்டாயிற்று. அதைக் கண்ட அவ்வூரார் எல்லோரும், சாரதை சோரம் போய் கர்ப்பம் ஆய்விட்டாள் என்று பழித்தார்கள். இதைக் கண்டு சாரதை துக்கப்பட்டாள். பிறகு பழித்தவர்கள் வாய் அழுகி அதில் புழு உதிரும்படி பார்வதி செய்து விட்டாள். பத்து மாதம் பொறுத்து சாரதை ஒரு புத்திரனைப் பெற்றாள். அதற்கு சாரதேயன் என்று பெயர் சூட்டி, மகாமகிமை பொருந்திய சிவராத்திரியன்று தாயும் பிள்ளையும் கோகர்ணத்திற்கு யாத்திரை சென்றார்கள். செல்லும் வழியில், சொப்பனத்தில் வந்து புருஷன் நெரில் வந்து சாரதையுடன் கலந்து கொண்டான். பிறகு கொஞ்ச காலம் சாரதையும் புருஷனும் சந்தோஷமாய் வாழ்ந்து இன்பமனுபவித்து புருஷன் இறந்து போனான். புருஷன் இறந்ததும் உடனே சாரதை உடன்கட்டையேறி இருவரும் சிவபதமடைந்தார்கள்" என்று நைமிசாரண்யவாசிகளுக்கு சூதக முனிவர், வியாசரிடம் கேட்டு தெரிந்ததைச் சொல்லுகிறேன் என்று சொன்னார். இந்த சரிதை பிரமோத்திர புராணத்தில், உமாமகேஸ்வர விரத மகிமையும், பிரதத்தின் பலனும் என்கின்ற தலைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை கவனிப்போம். இந்தக் கதையின் ஆகாசம் எவ்வளவு மோசமாயிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு பெண்ணை ஒரு கிழவன் அந்தக் காலத்திலும் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கமும், தகப்பன் பணம் வாங்கிக் கொண்டு சாகப்போகும் கிழவனுக்கு தனது சிறு பெண்ணை கட்டிக் கொடுக்கும் வழக்கமும் பார்ப்பனர்களுக்குள் இருந்ததாக வைத்துக் கொண்டாலும், புருஷன் இறந்தவுடன் உடன்கட்டையேறாமல் பெண்ஜாதியான (சாரதை) சிறு பெண் இருந்திருக்க முடியுமா? என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமயம் உடன்கட்டை ஏறாமல் இருந்திருந்தாலும், ஒரு ரிஷிகள் இந்தப் பெண் விதவை என்ற சங்கதி தெரியாமல் போகுமா? ரிஷிக்கு ஒரு சமயம் அந்தப்படி தெரியாமல் போயிருந்தாலும், ஒரு குருட்டு ரிஷி தெரியாமல் சொல்லிவிட்ட காரியம், ஒரு விரதம் அனுஷ்டிப்பதால் கைகூடி விடுமா? அந்தப்படி கூடுமானாலும், பார்ப்பனனையும் அவன் பெண்ஜாதியையும் பார்வதி பரமசிவன் போல் எண்ணி பூசை செய்தால் பார்வதி வந்துவிடுவாளா? அப்படி வருவதாயிருந்தாலும், பார்வதி நேரில் புருஷனைக் கொடுக்காமல், தூக்கத்தின்போது கனவில் வந்து புணர்ந்து விட்டுப் போகும்படி கட்டுளையிடுவாளா? அப்படி கட்டளையிடுவதானாலும், கனவில் புணர்ந்ததற்கு கனவில் கர்ப்பமுண்டு பண்ணாமல், விழித்த பிறகுங்கூட அந்த கர்ப்பம் இருக்கும்படி செய்வாளா? அப்படித்தான் செய்தாலும், அதன் காரணத்தை பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமல் இரகசியமாய் இருக்கச் செய்து, இந்த இரகசியம் தெரியாத பொது ஜனங்கள் சாரதையின் கர்ப்பத்தைபற்றி சந்தேகப்பட்டால் அதற்கு பார்வதி திருப்தி அடையும்படி சமாதானம் சொல்லாமல் சந்தேகப்பட்டவர்கள் வாய் அழுகிப் புழு தள்ளும்படி செய்வது யோக்கியமாகுமா? அன்றியும், கோகர்ணத்திற்குப் புருஷனை வரும்படி செய்த பார்வதியும் பரமசிவனும், பொது ஜனங்கள் சந்தேகப்படும்போது வரும்படி செய்திருக்கப்படாதா? அன்றியும், அந்தப் புருஷனும் சாவானேன்? அப்படியே காலம் வந்து செத்து இருந்தாலும், முன்னைய கிழப்புருஷனுக்கு உடன்கட்டை ஏறாத குமரி சாரதை, இந்தப் புருஷனுக்கு ஏன் கிழவி ஆனபின் உடன்கட்டை ஏறினாள்? வாசகர்களே! வேதப்புரட்டு, இதிகாசப்புரட்டு, புராணப்புரட்டு என்பதுபோல் இந்த விரதப் புரட்டும் எவ்வளவு முட்டாள்தனமானதும் அயோக்கியத்தனமானதும் சுயநல சூழ்ச்சி கொண்டதுமாய் இருக்கின்றது என்பதை நன்றாய் கவனித்துப் பாருங்கள். விரதம் என்றால் ஒரு பார்ப்பனனையும், பார்ப்பனத்தியையும் பார்வதி பரமசிவன்போல் பாவித்து, அபிஷேகம் பூசை ஆராதனை செய்தால், விதவைகளுக்கு புருஷன் சொப்பனத்தில் வருவான் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான கதை? இப்படித்தானே இப்போதுள்ள விதவைகள் புருஷ ஆசைக்கு விரதமிருந்து "சொப்பனத்தில்" புருஷருடன் புணர்ந்து கொண்டிருப்பார்கள். சாரதையைப் போல் அநேக விதவைகள் இப்போதும் கர்ப்பமானாலும், பழி சொல்லுகின்றவர்கள் வாயில் பார்வதி புழுக்கள் தள்ளச் செய்யாததால்தான் அந்த விரதமிருக்கும் விதவைகளெல்லாம் கர்ப்பங்களை தாங்களாகவே அழிந்து விடுகின்றார்கள் போலும். பார்ப்பன சூழ்ச்சி எவ்வளவு மோசமானது என்பதை இதிலிருந்தாவது விரதமிருக்கும் வைதீகர்களும், விரதமிருக்கும் பெண்களும், புருஷர்களும் அறிந்து கொள்ளுங்கள்.சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,
("குடி அரசு", 6.4.1930).

அவசியமான காரியங்கள்

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.

அவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும்.

இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட்பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தியாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களா யிருக்கின்றோம்.

தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை. ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்ய வேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப்படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவதுமுண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத்தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும். என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத்தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.

இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம்.

-------தந்தைபெரியார் -"பகுத்தறிவு"-1938

Thursday, January 24, 2008

பெரியார் திடலில் மதக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது ஏன்?

பெரியார் திடலில் மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது முரண்பாடாக இருக்கிறதே?

பெரியாருக்கு கிறிஸ்தவர்கள் மெமோரியல் ஹாலில் இடம் கொடுக்க மறுத்தார்கள். அதன் பிறகுதான் அய்யா, இங்கு மன்றத்தை துவங்கினார். அப்போதிலிருந்தே இங்கு மதக்கூட்டங்கள் நடந்து வருகிறது. அய்யா சொன்னது என்னவென்றால், என்னை திட்டுகிறவர்கள் என்றால் கூட கருத்து மாறுபாடு பார்க்காமல் இந்த மன்றத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான். கீதையின் மறுபக்கம் நூலை ஒரு அய்யர் கேட்டால் கொடுக்க மாட்டோமா? வியாபாரம் என்று வந்த பிறகு யார் கேட்டாலும் கொடுக்க வேண்டியதுதான். விடுதலை பேப்பரில் நாங்கள் மத பிரச்சாரம் செய்யவில்லையே? பெரியார் திடலில் இருக்கக்கூடிய ஒரு அம்சம் இந்த பொது மன்றம். மதக்கூட்டங்களுக்கு தொடர்ந்து இனிமேலும் கொடுப்போம். இதில் மனித நேயம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட பெரியாரின் ஆணை இது.
----தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் "தமிழ் சினிமா" இணைய தளத்திற்கு அளித்த நேர்காணலிலிருந்து.

Thursday, January 17, 2008

அண்ணாவின் அறிவுரை

சாதியை எதிர்த்துப் போராடுங்கள்;
அது ஜனநாயகத்திற்கு எதிரி என்பதால்

மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடுங்கள்;
அது அறிவியலுக்கு விரோதி என்பதால்

ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுங்கள்;
அது சுதந்திரம், சமத்துவம் மற்றும்
சகோதரத்துவத்திற்கு எதிரி என்பதால்


-------அறிஞர் அண்ணா(அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு உரை-18.11..1967)

Saturday, January 12, 2008

பொங்கல் விழா கொண்டாடவேண்டும் ஏன்?

‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.

இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.

மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த ‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.

இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக் குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ(பார்ப்பன ரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதர்க் கழகு!

---------------------------------தந்தைபெரியார்- "விடுதலை" - 14-1-1972

"அனைவருக்கும் தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்"

Friday, January 11, 2008

அய்யாவின் அறிவுரை

போலிசு உத்தியோகங்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கே கொடுக்க வேண்டும்.அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும்.தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாயாக சேரி கட்டி அங்கே அவ்ர்கள் குடியேறுவதை மாற்றவெண்டும்.தாழ்த்தபட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக் கூடாது.

---------தந்தைபெரியார் 95 ஆவது பிறந்தநாள் "விடுதலை" மலரிலிருந்து.

Thursday, January 10, 2008

பெரியார்தான் முன்னோடி

தமிழகத்தில் முதன் முதலில் கர்ப்பத்தடைப் பிரச்சாரம் செய்தவர்,அரசாங்கத்தை அப்படிச் செய்யச்சொன்னவர் பெரியாராகத்தான் இருப்பார் போலும். 1928 லேயே இது பற்றி எழுதினார்.அப்போது அது "அநேகருக்கு திடுக்கிடும்படியான செய்தியாய் இருந்தது;ஆனால் இப்போது சிறிதுகாலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும் ஒரு சாதாரண சேதியாய் விட்டது"என்று பெரியார் 1930 இல் எழுதினார்.இது மதவிரோதம் என்றும்,கடவுளின் சித்தத்திற்கு எதிரானது என்றும் அன்று கடுமையாக எதிர்க்கப்பட்டது.பெரியாரோ இது பெண்விடுதலைக்கு ஒரு முன் தேவை என்றார். மக்கள் தொகைப் பெருக்க கண்ணோட்டத்திலிருந்து அல்ல பெண்ணிய நோக்கிலிருந்து கர்ப்ப ஆட்சி பற்றி பேசினார்.

----------நூல்:"பெரியாரின் பெண்ணியம்" பக்கம் 57

Saturday, January 05, 2008

பெரியார் சொன்ன வெங்காயம்

எப்போதுமே நான் கடவுளையு,மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே "வெங்காயம்" என்றுதான் சொல்லுவேன்.வெங்காயம் என்றால் வித்து இல்லாதது;வெறும் சதை;அச்சொல்லின் பொருள் வெங்காயம்--வெறும் காயம்;உயிரற்ற உடல்;விதை இல்லாதது;உரிக்க உரிக்கத் தோலாகவே, சதையாகவே வந்து முடிவில் சூனியமாய்--விதைஇல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள்.

ஆகவே விதை,வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று.அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும்.

-----------நூல்: "பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்"--பக்கம் 1063

Friday, January 04, 2008

இதுதான் பார்ப்பனர் ஒழிப்பு

பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர்களை கொன்றழிப்பது என்பதல்ல. நாலு பார்ப்பனர்கள் போனால் நாளைக்கு வேறு நாலு பார்ப்பனர்கள் வருகிறார்கள்.மலேரியா வந்தால் கொயினா(மாத்திரையின் பெயர்) கொடுத்தால் மலேரியா எப்படி ஒழியும்?.

எனக்கு தோன்றுவதெல்லாம் பார்ப்பனர் செல்வாக்குக்குக் காரணம் கடவுள்கள்,கோயில்கள்,இராமாயண,பாரத இதிகாசங்கள்,மதம், சாஸ்திரங்கள் இவைதான்.இவைகளெல்லாம் ஒழிக்கப்பட்டால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான்.சாக்கடைக் கசுமாலம் ஒழிந்தால் எப்படி கொசு ஒழியுமோ, அப்படி இந்துமதம்,கடவுள்,கோயில்,புராணங்கள் ஒழிந்தால் பார்ப்பனர் ஒழிந்து விடுவார்கள்.

-------------தந்தைபெரியார்-"விடுதலை"-13.10.1953

Thursday, January 03, 2008

தந்தைபெரியார் மறைந்து 34 ஆண்டுகள் முடிந்து 35 ஆண்டுகள் தொடங்கவிருக்கும் நிலையிலும் கூட பெரியார் அவர்களைப்பற்றிய சரியான புரிதல் இல்லாமல் தப்பும் தவறுமாக ஒரு சில ஊடகவியலாளர்களும், இதழாளர்களும், சொற்பொழிவாளர்களும் செயல்படுகிறார்கள். மேலே சுட்டிக்காட்டியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் அல்லது வினாக்களில் ஒரு சிறு துரும்பாவது உண்மை உண்டா? என்பதை இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அலசுவோம்.முடிந்த அளவு பெரியாரின் எழுத்து அல்லது பெசியவைகளைக்கொண்டே விடை அளிக்க முயற்சி செய்துள்ளேன்.இத்தொடருக்கு "அய்யம் போக்கும் பெரியார்" என பெயர் சூட்டியுள்ளேன். இத்தொடரைப் படிக்கும் தோழர்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.


1. பெரியாரும் கம்யூனிசமும்:
---------------------------
பெரியார் இரஷ்யா சென்றபோதுதான் கம்யூனிசத்தைப்பற்ரி தெரிந்து கொண்டார் என்று ஒரு சிலர் இன்னமும் வியாக்கியானம் செய்து கொண்டு வருகிறார்கள்.இது உன்மையா? இதற்கு பதில் நாம் சொல்லுவதைவிட பெரியார் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரையே பேச வைப்போம். இதோ பெரியார் பேசுகிறார்.,"நான் 1927 -ல் திருநெல்வேலி மாநாட்டில் கம்யூனிசத்தைப் பற்றி பேசினேன்.பிறகு பொதுக்கூட்டங்களில் கம்யூனிசப் பிரச்சாரம் பலமாக செய்துவந்தேன்.ரயில்,தபால்,தந்தி முதலிய இலாக்காக்கல் சர்க்காரால் நடத்தப்படுவது கம்யூனிசத்துக்கு ஒரு உதாரணம் என்றாலும் அதுபோல் மக்களுக்கு துணி தைத்துக்கொடுத்தல்,சவரம் செய்தல் போன்ற மக்களுக்குத் தேவையான எல்லாக் காரியங்களும் சர்க்காரால் நடத்தப்படவேண்டும் என்றும் 1927-லேயே பேசியிருக்கிறேன்.
இது நான் இரஷ்யாவைப் பார்த்துப் பேசியதல்ல,பார்ப்பானுக்கும், கடவுளுக்கும், காங்கிரசுக்கும், விரோதமாகப் பிரச்சாரம் செய்து வந்ததில் தோன்றிய கருத்துக்களே இவை"
-------------------"உண்மை"-14-12-1972
பெரியார் அப்படியே யதார்த்தமான உண்மையை "உண்மை"யில் கூறி புரட்டு பேசும் புரட்டர்களுக்கு பாடம் புகட்டியுள்ளார்.பெரியாரின் வாக்குமூலத்துடன் ஒரு சில ஆதாரங்களையும் முன்வைக்கிறோம். அது இதோ:
அ.மார்க்சு-ஏங்கல்சு சமதர்ம அறிக்கையைத் தந்தைபெரியார் அச்சிட்டு வெளீயிட்ட நாள்-4-10-1931.
ஆ.லெனினும் மதமும் என்ற நூலை பெரியார் வெளியிட்ட நாள்:11-12-1931
இ.தந்தைபெரியார் இரஷ்யாவுக்கு புறப்பட்ட நாள்: 13-12-1931
ஆக பெரியார் ரஷ்யாவுக்கு போவதற்கு முன்னே கம்யூனிசத்தைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டு மக்களுக்கு விளக்கமாக பொதுக்கூட்டங்கள் மூலமாகவும், நூல்கள் வெளியிட்டும் பிரச்சாரம் செய்துள்ளார்.அதற்கான ஆதாரங்களையும், பெரியாரின் பேச்சையும் சான்றாக கொடுத்துள்ளோம்.இனியாவது பெரியாரைப் பற்றி பேசுபவர்கள் சரியான புரிதலுடன், உண்மையை பேச வேண்டுகிறேன்.


2.பெரியாரும் -ஒரு கடவுளும் :
-----------------------------
உலகச்சிந்தனையாளர்களில் யாருக்கும் இல்லாத "தனித்தன்மை" தந்தைபெரியாருக்கு உண்டு.எப்படியெனில் தான் சொன்ன கருத்துக்களை, தன் கண்முன்னே மக்கள் கடைப்பிடித்து வாழ்க்கை நடைமுறையாக "வாழ்வியலாக" பின்பற்றப்படுவதைக்கண்ட ஒரே சிந்தனையாளர் பெரியார் மட்டுமே.இப்படிப்பட்ட பெரியாரின்
கருத்தை ஒரு சிலர் தன் வசதிக்கேற்ப திரித்தும், தவறாகவும் கூறிவருகின்றனர். அதில் ஒன்றுதான் பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை ஒரு கடவுளை மட்டும் வணங்க அல்லது கும்பிடச்சொன்னார் என்று ஒரு சிலர் சொல்லி வருவது உண்மையா என்று பார்ப்போம்.
கடவுள் மறுப்பை ஒரு இயக்கமாக நடத்தியவர் பெரியார்.கடவுள் இல்லை;இல்லவேஇல்லை என்று அழுத்தந்திருத்தமாக மக்களிடம் தான் சாகும் வரை பிரச்சாரம் செய்தவர் பெரியார். அதோடுமட்டுமல்ல கட்வுள் உருவப் பொம்மைகளை உடைத்து கடவுளும் இல்லை;கடவுளுக்கு எந்தச்சக்தியும் இல்லை என்பதை மக்கள் மன்றத்தில்,கணபதி உருவப்பொம்மை உடைப்பு;இராமன் பட எரிப்பு;இராமன் படத்தை(ஒரு எதிர்வினைக்காக)செருப்பால் அடிப்பது போன்ற செயல்விளக்கமும் செய்து கடவுளே இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர் பெரியார்.
இப்படிபட்ட பெரியாரா ஒரு கடவுளை மட்டும் வணங்கச்சொல்லியிருப்பார்? அவரிடமே கேட்டு விடுவோம்.இதோ பெரியார் பேசுகிறார். கேளுங்கள். தெளிவடையுங்கள்...
"சென்ற மாதம் 30 ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக்கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும் அதனைக் கும்பிடும்படிக்
கூறினேன் என்றும் எல்லாப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும்,பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள்.'மெயில்' போன்று பொறுப்பு வாய்ந்த பத்திரிக்கைகள் கூட இந்த அயோக்கியத்தனமான வேலையைச்செய்துள்ளது.'ஆனந்தவிகடன்'
கார்ட்டூன் போட்டுள்ளான்."கண்ணீர்துளி"பத்திரிக்கை ஒன்று "அண்ணா பாதையில் பெரியார்" என்று ஈனத்தனமான முறையில் சேதி வேளியிட்டுள்ளது."கண்ணீர்துளிகள்"அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்களாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்!இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம்! பத்திரிக்கைக்காரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத்தான் ஆகிவிடுகின்றான்.நானும் மானங்கெடத்தான் இவர்களைப் பற்றிப் பேசுகின்றேன் ஒருவனுக்காவது மானஈனத்தைப்பற்றி கவலையே இல்லையே. நான் கும்பகோணத்தில் என்ன பேசினேன் நான் இங்கு குறிப்பிட்டதுபோலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றி பெசினேன்.
நம் மக்கள் கடவுள்,மதம் இவைபற்றிய முட்டாள்தனங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும்.உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களேயானால் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.எனது
இயக்கத்தை சேர்ந்த தோழர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கிடையாது.
அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண்டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை.கடவுள் இல்லையென்று கூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவுவேண்டும்.தெளிவு வேண்டும். எப்பெடி இல்லை? என்று எந்தவிதக்கேள்வி கேட்டாலும் தெளிவுபடுத்தக்கூடிய முறையில் அறிவாற்றல் ஆராய்ச்சி வல்லமை வேண்டும்.
இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கிறதென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.கடவுளிருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை.சுத்தமடையன்
அடிமுட்டாள் கூட கடவுள் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கலாம்.அறிவுக்கு வேலையே இல்லை.அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறித்துவர்கள் கடவுள் நம்பிக்கை வைத்து இருப்பது போலாவது நடந்து கொள்ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன்."
---------"விடுதலை" 24,25-11-1959.
ஆக கடவுள் இல்லை என்பதில் பெரியார் மிகத்தெளிவாக இருந்தார் என்பது
இதன் மூலம் தெரியவருகிறது.கொள்கையில் குழப்பம் விளைவிக்கும் குழப்பவாதிகள் இப்போது தெளிவடைந்திருப்பார்கள் என்று நம்புவோம்.பெரியாரி கடவுள் கொள்கை பற்றி விளக்கமாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரநிறுவனம்
வெளியிட்டுள்ள 'கடவுள் தொகுதிகள்'-1,2 படிக்க அறிவுறுத்துகிறோம்.
--------- ---------- - தொடரும்---


3.பெரியாரும்-சினிமாவும்:
-------------------------
1. பார்ப்பான் 2.பத்திரிக்கைகள் 3.அரசியல் கட்சி 4.தேர்தல் 5.சினிமா, என்ற இந்த அய்ந்தும்தான் இந்நாட்டைப் பிடித்துள்ள நோய்கள் என்றார் பெரியார்.மக்களிடம் ஒழுக்கம் உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்படவேடும் என்ற பெரியார், ஒரு சினிமா நடிகரானா எம்.ஆர்.ராதா அவர்களின் பெயரில் அதுவும் பெரியார்திடலின் உள்ளேயே "ராதா மன்றம்" என்ற பெயரில் ஒர் அரங்கத்தை நிறுவியது சரியா என்று ஒரு சிலர் கேட்டு வருகின்றனர். இக்கேள்விக்கான விடையை நாம் கூறுவதை விட பெரியாரே பதில் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.இதோ பெரியார் பேசுகிறார்.

"நான் சினிமா உலகத்துக்கு மாறுபட்டவன்;எதிர்ப்பானவன்.இப்படிப்பட்ட நான் ராதா பெயரில் மன்றம் நிறுவ ஆசைப்பட்டதன் காரணம்,
நண்பர் ராதா அவர்களை எனக்கு 25 ஆண்டுகளாகத் தெரியும்.அதற்குமுன்பும் நமக்கு அவர் அறிமுகம் இல்லாவிட்டாலும் கூட நமது கருத்துக்களையே பின்பற்றி வந்து இருக்கின்றார்.

நான் எப்படி சமுதயாத்துறையில் மாறுதல் எண்ணமும் புரட்சிக்கருத்துக்களும் கொண்டு பாடுபட்டு வருகின்றேனோ அப்படியே ராதா அவர்களும், நமது கருத்துக்களை நாடகத்துறையில் விடாப்பிடியாகப் புகுத்தி நடத்திக்கொண்டே வருபவர் ஆவார்.

நாட்டில் உள்ள எல்லாக் கலைஞர்களும் ரசிகர்கள் பின் செல்லுபவர்கள் அவர்கள் மனம் திருப்தி அடையும்படி எல்லாம் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

நண்பர் ராதா அப்படிப்பட்ட கலைஞர் அல்ல.தாம் ரசிகர் பின் செல்லாமல் ரசிகர் தம் பின் வரவேண்டும் தன் பேச்சைக் கேட்கவேண்டும் என்று விரும்புபவர். மக்கள் தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முற்பட்டாலும், முற்படாவிட்டாலும் நமது கருத்தை வலியுறுத்தி எடுத்துச் சொல்லத்தவறுவதேயில்லை". .

-------------"விடுதலை"-19-11-1962
எம்.ஆர். ராதா பெயரில் மன்றம் ஆரம்பித்ததின் காரணத்தை மிக மிக அருமையாக, உதாரணங்களுடன். காரண காரியங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளார் பெரியார். மூடநம்பிக்கை மிகுந்த ஒரு துறையில் அதுவும் அப்போதைய காலகட்டத்தில் துணிச்சலாக தன் கொள்கையை பரப்பிய ஒரு தொண்டனை பெருமைப்படுத்துவதற்காக மன்றத்தை ஏற்படுத்தியதை பார்க்கும் போது மிகுந்த வியப்பாய் இருக்கிறது. ஏனெனில் தன் நிலையிலிருந்து கொஞசம் முன்னுக்கு வந்து விட்டாலே அவனை எப்படி ஒழிக்கலாம் என்று திட்டம் போடுபவதிலேயே சில தலைவைர்கள் குறியாய் இருப்பார்கள்.ஆனால் பெரியார் உண்மையாய் உழைக்கும் தொண்டர்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் பெருமைப் படுத்திய சம்பவங்களை அவரின் நெடிய வரலாற்றில் நாம் பல இடங்களில் பர்க்கலாம்.அதில் ஒன்று தான் எம்.ஆர். ராதா பெயரில் மன்றம் அமைத்ததும் என்பதை நினைவில் கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமாக யோசித்து கேள்விகேட்க வேண்டுகிறேன்.

------------------தொடரும்....

-------------நன்றி:"தமிழ் ஓவியா"__www.thamizhoviya.blogspot.com

தந்தைபெரியார் பார்வையில் மொழி

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.
தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. ‏இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

---------தந்தைபெரியார்--"மொழி - எழுத்து" நூலிலிருந்து

Wednesday, January 02, 2008

பெயர் சூட்டு விழா

தாய்மார்களே! தோழர்களே!

சாதாரணமாக, மனிதருக்குப் பெயர் என்பது ஒவ்வொரு நபருக்கும், அந்தந்த நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகும். மனித சமுதாயத்தில் இம்மாதிரியான ஒரு குறியீட்டுச் சொல் அவரவர்களுக்கு அடையாளஞ் சொல்லக்கூடிய சொல் என்பது சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.

பெயர் சூட்டுவதில்....சாதாரணமாக, மனிதர்களுக்கு ஒரு குறியீடு என்கிற தன்மையில் சூட்டப்படுகிற பெயர் என்கிற போதிலும், பெயர் சூட்டுவது என்பதில் ஒரு கொள்கை, தத்துவம் உள்ளே இருந்து வந்திருக்கிறது.

முதலாவது, சாதாரணமாக மக்களுக்குள் இன்றைய தினம் இருந்துவரும் பெயர்ளைப் பார்த்தால் பெரும்பாலும் மதத்தின் அடிப்படையிலேயே இருந்து வருகின்றன. சாதாரணமாக, உலகத்தில் மதத்திற்குச் செல்வாக்கு ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு மதத்தாருக்கும் அந்தந்த மதத்தின் பெயரால் அந்தந்த மதத் தத்துவம் மதக் குறிப்பின் படியாகப் பெயர்கள் இருந்து வருகின்றன.

கிறித்தவர்களுக்கு கிறித்துவ மத சம்பந்தமான பெயர்களும், முஸ்லீம்களுக்கு முஸ்லிம் மார்க்க படியான பெயர்களும், பவுத்தர்களுக்கு பவுத்த தன்மைப்படியான பெயர்களும், இந்துக்கள் என்பவர்களுக்கு இந்துமதம் என்பவைகளின் சாஸ்திர சம்பிரதாயப்படியும் பெயர்கள் இருந்து வருகின்றன. இதற்குக் காரணம் என்னவென்றால், மத ஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கும் மதத்தின் தன்மைப்படி பெயர் வைத்துக்கொள்வது என்பது புண்ணியம், பெருமைக்கு உகந்தது, உயர்ந்தது என்கிறதான கருத்தும் மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டதுதான் ஆகும்.

நம்மைப் பொறுத்தவரையில் - தமிழர்களைப் பொறுத்தவரையில் நம்முடைய பெயர்கள் என்பவைகள் எப்படி இருந்து வந்தன என்றால், மதச்சார்பு அற்றவையாக, மதத்திற்கு முற்பட்டு வெறும் பெயரீட்டுக் குறிச்சொல் என்கிற முறையில்தான் இருந்து வந்திருக்கின்றன. மதச் சம்பிரதாயத்தின் அடிப்படையிலே தமிழர்களுக்குப் பெயர் இருந்ததில்லை. தமிழ்ப் பெயர்களைப் பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும்; இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் நூல்களில் - 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நூல்களில் மதம் அதிகம் இருக்காது. அது போலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தாலும் அதிலே மத, கடவுள் சார்புப் பெயர்கள் அதிகம் இல்லை. சேர, சோழ, பாண்டியர்கள் என்பவர்களிலும் முற்பட்ட மூவேந்தர்களிலும் மதப் பெயர்கள் அதிகம் இல்லை.

நாளாக ஆக மத ஆதிக்கம் வந்து குவிந்துவிட்டது. மத, புராண, கடவுள் சம்பந்தமான காரியங்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மத ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தன்மையில் இந்தப்படியான மதப் பெயர்களைப் புகுத்திவிட்டார்கள்.

அதுவும் குறைந்தது இந்த 50 ஆண்டு காலத்துக்குள்ளாக ரொம்பவும் புகுந்துவிட்டது. அதுவும் இந்த மத சம்பந்தமான பெயர்கள் அதிகமாக ஏராளமாகப் புகுந்ததெல்லாம் பெண்களிடத்தில்தான் ஆகும். எந்தப் பெண்களுக்கும் கடவுள் பெயர், மத சம்பந்தமான பெயர் என்று வந்து புகுந்துவிட்டது.

இந்தப்படியான, மனித நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் என்பது மதப் பெயர்களைக் கொண்டதாக ஏன் ஆகிவிட்டது என்றால், மதத்திற்கு, மத ஆதிக்கம் வளர்வதற்கு இதை இந்தப்படியான பெயர் சூட்டுவது என்பதை ஒரு பிரச்சார சாதனமாக வைத்துக் கொண்டார்கள்.

நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருக்கலாம். இந்தப் பெயர் சூட்டுவது என்பதிலே கூட இந்து மதத்தின் வருணாசிரமமுறை இருந்து வந்திருக்கிறது. அழகான பெயர்கள் எல்லாம் மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வைத்துக் கொள்ளுவதும் - அதாவது மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் கடவுள், மத சம்பந்தமான பெயர்களை மேல்சாதிக்காரர்கள் வைத்துக் கொள்வது என்றும், அந்த மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் பெயர்களைக் கீழ்ச்சாதி மக்கள் என்போர் - அதாவது சூத்திரர், பஞ்சமர் எனப்படுவோர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது, வைத்துக் கொள்வது பாவம் எனவும் கருதப்பட்டது. சாதாரணமாக, இந்த ராமன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற பெயர்கள் மேல் சாதிக்காரர்கள் பெயராகவும்; கருப்பன், மூக்கன், வீரன், காட்டேரி, பாவாயி, கருப்பாயி என்பன போன்ற பெயர்கள் கீழ்ச்சாதி மக்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள் என்பவைகளாகவும் இருந்து வந்திருக்கின்றன.

வரவர மதத்திற்கும் மதத் தன்மைக்கும், எதிர்ப்பும் - தங்களுடைய இழிவைப் பற்றியதுமான உணர்ச்சியும் மக்களுக்கு ஏற்பட ஏற்பட, இந்தப்படியான எதிர்ப்பை ஒழிப்பது என்கிற முறையில் எல்லோரும் எல்லாப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றதான நிலைமை வந்தது.

சாதாரணமாக, இந்த இழிசாதி மக்கள் என்பவர்களின் பெயர்களுக்குக் கடைசியில் சாமி, அப்பன் என்ற சொற்கள் வரக்கூடாது. ஏனென்றால் மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள், பெயர் சொல்லிக் கூப்பிடும் போது இழிசாதி மக்களை, ‘சாமி!’ என்றும் ‘அப்பன்!’ என்றும் கூப்பிடவேண்டியிருக்கிறது என்பதால் - அது மேல்சாதிக்காரர்களின் அந்தஸ்துக்கு மட்டம் என்பதால் அந்தப்படியான பெயர்களை இழிசாதி மக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் அந்த ‘சாமி’ ‘அப்பன்’ என்ற சொல்லை விட்டுவிட்டு, மேல்சாதிக்காரர்கள் ‘ராமா’, ‘கந்தா’ என்றுதான் அழைப்பார்கள். இப்படியாகப் பெயர்கள் என்பவைகள் கடவுளின் பேராலும், மதசாஸ்திர சம்பிரதாயத்தின் பேராலும் அவற்றை வகுத்த வருணாசிரம மேல் - கீழ்சாதி முறைப்பிரகாரமே வழங்கி வந்து, மேற்கண்டவைகளுக்கு இவைகள் ஒரு பாதுகாப்பாகவும், ஆதாரமாகவும், அஸ்திவாரமாகவும், நின்று நிலவி வருகின்றன.

இன்னும் பல பெயர்களைப் பார்த்தால் மிக ஆபாசமாக இருக்கும். வைக்கப்படுகிற பெயர் கடவுள் பெயராக இருக்கிறதா என்றுதான் கவனிப்பார்களே தவிர, அப்படி வைக்கப்பட்டிருக்கிற பெயர்களுக்கு என்ன அர்த்தம், அது மிக ஆபாசமான அர்த்தமுடையதாக இருக்கிறதே என்று கவலைப்பட மாட்டார்கள்.

சாதாரணமாக, ஆதிகேசவலு, குஞ்சிதபாதம், குஜலாம்பாள், துரோபதை என்கிறதாகவெல்லாம் பெயர் வைக்கிறார்களே! அந்தப் பெயர்களின் பொருளை விரித்துப் பார்த்தால் அதில் எவ்வளவு ஆபாசமும் அறிவற்றதுமான காரியங்கள் இருக்கின்றன! ஆனால், மக்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இம்மாதிரியான பெயர்களையே ஏற்றுக் கொண்டும் சூட்டிக் கொண்டும் ஏன் இருக்கிறார்கள் என்றால், நான் முன்னே சொன்னது போல், இந்தப்படியான பெயர்கள் என்பவைகள் கடவுள், மத சாஸ்திரங்களின் பேரால் ஏற்படுத்தப்பட்டுவிட்டன என்பதால் தான்.

இப்படியாக மத, சாஸ்திர, கடவுள் அடிப்படையிலேயே வளர்ந்து வந்த பெயர் முறைகள் இன்று கொஞ்சம் மறையத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் சமுதாயத்துக்குமான உணர்ச்சி யும், இந்தக் கடவுள், மத, சாஸ்திரங்கள் என்பவைகளின் பேரால் தாங்கள் அழுத்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், இழிசாதி மக்களாக்கப்பட்டும் இருக்கிறதை - கடவுள், மத, சாஸ்திரத் துறையிலே இழிசாதி மக்கள்; பொருளாதாரத் துறையிலே ஏழை மக்கள்; அழிவுத் துறையிலே கீழ் மக்கள் என்பதாக இருக்கிற நிலை மையை உணர்ந்து - மக்கள் தங்கள் இழிவையும் ஏழ்மையையும் அடிமையையும் ஒழிக்க வேண்டும்; இவைகளிலிருந்து விடுதலைபெறவேண்டும் என்கிற மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி, ஏற்பட்டு வருவதால் இந்தப்படியான தங்கள் இழிவுக்கும், ஏழ்மைக்கும், கீழ்நிலைக்கும் காரணமான எந்தெந்த அமைப்பு முறைகள் இருக்கின்றனவோ அந்த அமைப்பு முறைகளை நம்முடைய விடுதலையைக் கோரி மாற்ற வேண்டும்; ஒழிக்க வேண்டும் என்கிற தன்மையில்தான் திருமணத் துறை, சாதித்துறை, கிரஹப்பிரவேசம் என்கிற புதுமனை புகுவிழா சங்கதி, திருவிழாத்துறை, சங்கீத - இலக்கியத்துறை போன்ற எல்லாத்துறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி, கிளர்ச்சி நடத்துவதுபோல இந்தப் பெயர்த் துறையிலும் இது மாதிரியான மாறுதல் உணர்ச்சியோடு காரியம் நடத்தப்படுகிறது.

இதற்குமுன் மக்களிடத்தில் இவ்வளவு உணர்ச்சி இருந்ததில்லை. வர, வர இப்போது மக்களிடத்தில் மான உணர்ச்சியும், பகுத்தறிவும் பெரும் அளவுக்கு வளர்ந்து வருகிறது; பலருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்தப்படியான உணர்ச்சி பெற்றவர்கள் செய்கிற காரியத்தில் எல்லாம் இம்மாதிரியான மாறுதல், அறிவுக்குப் பொருந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இன்றைக்கு ஏராளமாக இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த மாதிரித் தன்மையில்தான் இந்தப் பெயர் சூட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் சூட்டப்படுகிற பெயர்கள் சாதாரணமாக மடமையான மதத்துக்கோ அறிவற்ற தன்மைக்கோ ஏற்றதாக இல்லாமல் பகுத்தறிவுத் தன்மைக்கேற்றதாகவே சூட்டப்படும்.

சாதாரணமாக, குழந்தைகள் பிறக்கும்போது இருந்தே இந்த மாதிரியான புதுமைப் பெயர் வைத்துவிட்டால் நல்லது. அதுவே பழக்கத்தில் வந்துவிடும். இப்போது என் பெயரையே எடுத்துக் கொள்ளுங்களேன். இது இந்துமதம் என்கிறதன் சார்புப் பெயர்தான். இவைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிற எனக்கே இந்தப் பெயர் இருக்கிறது. இந்தப் பெயர் கூடாததுதான். ஆனால், இந்தப் பெயராலே 73 வருடம் இதையே என்னைக் குறிக்கும் குறியீடாகக் கொண்டு வந்தாகிவிட்டது. அது மட்டுமல்லாமல், இந்தப் பெயர் என்பது மிகவும் விளம்பரமாகி விட்டது; ‘யார் ராமசாமியா! அட! அதுதான் இந்த ஆள்!’ என்கிற மாதிரி ஒரு முக்கியமானதாகி விட்டது! இனி என் பெயரை மாற்றுவது என்றால் - இது ஏற்படுத்துகிற புதுப்பெயர் என்பது இந்தப் பெயர் அளவில் என்னைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாக இருக்க முடியாது. புதுப்பெயரால், பெயர் வைக்கிற தத்துவத்தின்படி இன்னாருக்கு இந்தப் பெயர் என்று புரிந்துகொள்ளுகின்ற மாதிரியில் இருக்க முடியாது. ஆகவேதான் சொல்லுகிறேன், குழந்தையாய் இருக்கும்போதே புதுமைப்பெயர், பகுத்தறிவு சான்ற பெயர் சூட்ட வேண்டும் என்பதாக. இனி வருங்கால சந்ததிகளை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதே புதுமையான, பகுத்தறிவான பெயராக - ஆரியமத, சாஸ்திர, கடவுள் தன்மை கொண்ட பெயர் அற்றதான மாதிரியில் வைக்க வேண்டும்.
--------------தந்தைபெரியார்

- உளுந்தூர் பேட்டையில், 15-3-1953-இல் ஆற்றிய சொற்பொழிவு - ‘விடுதலை’, 24-3-1953

வரதட்சணை ஒழிக்கப்பட வேண்டும்

பார்ப்பனரிடமிருந்து தமிழர்களைப் பற்றிக் கொண்டுள்ள நோய்கள் பல. கேழ்வரகு, சோளம், கம்பு முதலிய உணவுத் தானியங்களைவிட அரிசியை உணவாக்கி உண்பது, அதுவும் தவிடு போக்கிய வெண்மையான அரிசிச் சோற்றைக் கஞ்சி வடித்து உண்பதுதான் கீழ்ச்சாதியிலிருந்து உயர்ந்து செல்வதற்குரிய முறை என்று கருதிச் சத்தான உணவு வகைகளைக் கைவிட்டனர், தமிழர்கள்.

ஆனால், பார்ப்பனரிடமுள்ள இரண்டொரு நற்பண்புகளை மட்டும் தமிழர்கள் அறிந்து நடக்கத் தவறிவிட்டனர். அதிகாலையில் எழுதல், இனப்பற்றுக்காக எதையும் தியாகம் செய்தல், எல்லாவற்றையும் விட கல்வியைப் பெருஞ்செல்வமாகக் கருதுதல் ஆகிய சில பண்புகளை ஆரியர்களிடமிருந்து கற்றுணர்ந்து நடக்க வேண்டும். தமிழர்களிடம் இன்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற பெரு நோய் ஒன்றைப் பற்றி இன்று எழுதுகிறோம்.

நாமக்கல் வட்டம் கடகப்பாடி என்ற சிற்றூரைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் வயது 16தான். கோவைக்குச் சென்று கல்வி பயில்வதற்காகத் தன் மாமனாரிடம் 150ரூபாய் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததாகவும், இந்த ஆத்திரத்தினால் தன் மனைவியின் தந்தையை நள்ளிரவில் பேனாக்கத்தியினால் கொலை செய்துவிட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட ஒரு வழக்கில் இந்தக் குற்றவாளிக்கு அய்ந்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்கள்தான் இதில் முன்னணிக் குற்றவாளிகளாயிருக்கின்றனர். தாங்கள் தம்மகனின் கல்விக்காகச் செலவழித்த பணம், தம் கடமையைச் சேர்ந்தது என்று கருதாதபடி, ஏதோ ஒரு வியாபாரத்தில் போட்ட முதலீடாகக் கருதிக் கொண்டு அந்த முதலீட்டையும், வட்டியையும் சேர்த்து, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலமாக வசூல் செய்துவிட வேண்டுமென்றே கருதுகின்றனர்.

இந்த நோய் ஆந்திரர்களிடையிலும், தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களிடையிலும் முற்றியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் சொத்துடைய ஒருவருக்கு மூன்று பெண்களிருந்தால் போதும், அவர்களின் திருமணம் முடிந்தவுடன், அவர் ஓட்டாண்டியாக வேண்டியதுதான். வரதட்சணை மூலம் அவர் சொத்தைக் கசக்கிப் பிழிந்து குடித்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்.

இந்த வரதட்சணை நோயைச் சட்டத்தின் மூலம் தடுத்து விடலாமென்று ஆட்சியாளர் முயன்று கொண்டிருக்கின்றனர். பொய்யையும் விபச்சாரத்தையும் சட்ட மூலமாக ஒழிப்பது எப்படியோ, அதுபோலத்தான் இம்முயற்சியும்.

சமுதாயத்தில் நல்ல முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான் இம்மாதிரித் தீமைகளை ஒழிக்க முடியும். தானே பாடுபட்டு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், தமிழ் நாட்டு இளைஞர்களிடையே வளர வேண்டும். பிறர் சொத்துக்கோ சூது மூலம் கிடைக்கும் திடீர் வருமானத்துக்கோ, யாரும் ஆசைப்படக்கூடாது. பெற்றோரின் சொத்தைக்கூட அவர்களுக்குப் பிறகுதான் அடைய வேண்டுமே தவிர, சம்பாதிக்கக்கூடிய வயதிலும்கூட பெற்றோர் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர் சொத்தையே இப்படிக் கருத வேண்டுமென்றால், மாமனார் வீட்டுச் சொத்தைப் பற்றிக் கனவிலும் ஆசைப்படக்கூடாது.

பொருள் வசதியுள்ள மாமனார் எவரும் எத்தகைய கருமியும், தன் மகள் வறுமையினால் தொல்லைப்படுவதைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க மாட்டார். ஆதலால், திருமணத்தின்போது இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு நகையோடு இத்தனை ஆயிரம் ரூபாய் வரதட்சணை கொடு; மாப்பிள்ளைக்குக் கார் வாங்கித்தா! வீடு வாங்கித்தா! என்றெல்லாம் பையனின் பெற்றோர் கேட்பது, மகா மானக்கேடான செய்கையாகும். தன் மகளுக்கு மற்றவன் கேட்கிறானே என்று சமாதானம் கூறக்கூடாது. இரண்டும் தவறு என்பதைத் துணிந்து கூற வேண்டும்.

இந்தத் தீய சுரண்டல் முறையினாலேயே திறமையும், அழகும், ஒழுக்கமும் நிறைந்த பதினாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆக முடியாமலேயே இருக்கின்றனர். இளைஞர்கள் மதவெறியையும், சாதி உணர்ச்சியையும் மறந்து கலப்புத் திருமணம் செய்ய முன்வராவிட்டாலும், அவரவர் சாதிக்குள்ளும் மதப் பிரிவுக்குள்ளுமாவது வரதட்சணை கேட்காதபடி மணம் புரிந்து கொள்ள முன்வரக்கூடாதா? நல்ல காரியம் செய்யத்தான் இளைஞர்களுக்குத் துணிவு வேண்டும். வழக்கம் என்ற செக்கைச் சுற்றிச் சுற்றி வருவதற்குச் செக்கு மாடுகளே போதும். தமிழ் நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இருத்தல் வேண்டாம். பந்தயக் குதிரைகளாக இருக்க வேண்டும்.

--------- தந்தைபெரியார் -‘குடி அரசு' இதழின் தலையங்கம் 1.4.1959