Thursday, January 03, 2008

தந்தைபெரியார் மறைந்து 34 ஆண்டுகள் முடிந்து 35 ஆண்டுகள் தொடங்கவிருக்கும் நிலையிலும் கூட பெரியார் அவர்களைப்பற்றிய சரியான புரிதல் இல்லாமல் தப்பும் தவறுமாக ஒரு சில ஊடகவியலாளர்களும், இதழாளர்களும், சொற்பொழிவாளர்களும் செயல்படுகிறார்கள். மேலே சுட்டிக்காட்டியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் அல்லது வினாக்களில் ஒரு சிறு துரும்பாவது உண்மை உண்டா? என்பதை இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அலசுவோம்.முடிந்த அளவு பெரியாரின் எழுத்து அல்லது பெசியவைகளைக்கொண்டே விடை அளிக்க முயற்சி செய்துள்ளேன்.இத்தொடருக்கு "அய்யம் போக்கும் பெரியார்" என பெயர் சூட்டியுள்ளேன். இத்தொடரைப் படிக்கும் தோழர்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.


1. பெரியாரும் கம்யூனிசமும்:
---------------------------
பெரியார் இரஷ்யா சென்றபோதுதான் கம்யூனிசத்தைப்பற்ரி தெரிந்து கொண்டார் என்று ஒரு சிலர் இன்னமும் வியாக்கியானம் செய்து கொண்டு வருகிறார்கள்.இது உன்மையா? இதற்கு பதில் நாம் சொல்லுவதைவிட பெரியார் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரையே பேச வைப்போம். இதோ பெரியார் பேசுகிறார்.,"நான் 1927 -ல் திருநெல்வேலி மாநாட்டில் கம்யூனிசத்தைப் பற்றி பேசினேன்.பிறகு பொதுக்கூட்டங்களில் கம்யூனிசப் பிரச்சாரம் பலமாக செய்துவந்தேன்.ரயில்,தபால்,தந்தி முதலிய இலாக்காக்கல் சர்க்காரால் நடத்தப்படுவது கம்யூனிசத்துக்கு ஒரு உதாரணம் என்றாலும் அதுபோல் மக்களுக்கு துணி தைத்துக்கொடுத்தல்,சவரம் செய்தல் போன்ற மக்களுக்குத் தேவையான எல்லாக் காரியங்களும் சர்க்காரால் நடத்தப்படவேண்டும் என்றும் 1927-லேயே பேசியிருக்கிறேன்.
இது நான் இரஷ்யாவைப் பார்த்துப் பேசியதல்ல,பார்ப்பானுக்கும், கடவுளுக்கும், காங்கிரசுக்கும், விரோதமாகப் பிரச்சாரம் செய்து வந்ததில் தோன்றிய கருத்துக்களே இவை"
-------------------"உண்மை"-14-12-1972
பெரியார் அப்படியே யதார்த்தமான உண்மையை "உண்மை"யில் கூறி புரட்டு பேசும் புரட்டர்களுக்கு பாடம் புகட்டியுள்ளார்.பெரியாரின் வாக்குமூலத்துடன் ஒரு சில ஆதாரங்களையும் முன்வைக்கிறோம். அது இதோ:
அ.மார்க்சு-ஏங்கல்சு சமதர்ம அறிக்கையைத் தந்தைபெரியார் அச்சிட்டு வெளீயிட்ட நாள்-4-10-1931.
ஆ.லெனினும் மதமும் என்ற நூலை பெரியார் வெளியிட்ட நாள்:11-12-1931
இ.தந்தைபெரியார் இரஷ்யாவுக்கு புறப்பட்ட நாள்: 13-12-1931
ஆக பெரியார் ரஷ்யாவுக்கு போவதற்கு முன்னே கம்யூனிசத்தைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டு மக்களுக்கு விளக்கமாக பொதுக்கூட்டங்கள் மூலமாகவும், நூல்கள் வெளியிட்டும் பிரச்சாரம் செய்துள்ளார்.அதற்கான ஆதாரங்களையும், பெரியாரின் பேச்சையும் சான்றாக கொடுத்துள்ளோம்.இனியாவது பெரியாரைப் பற்றி பேசுபவர்கள் சரியான புரிதலுடன், உண்மையை பேச வேண்டுகிறேன்.


2.பெரியாரும் -ஒரு கடவுளும் :
-----------------------------
உலகச்சிந்தனையாளர்களில் யாருக்கும் இல்லாத "தனித்தன்மை" தந்தைபெரியாருக்கு உண்டு.எப்படியெனில் தான் சொன்ன கருத்துக்களை, தன் கண்முன்னே மக்கள் கடைப்பிடித்து வாழ்க்கை நடைமுறையாக "வாழ்வியலாக" பின்பற்றப்படுவதைக்கண்ட ஒரே சிந்தனையாளர் பெரியார் மட்டுமே.இப்படிப்பட்ட பெரியாரின்
கருத்தை ஒரு சிலர் தன் வசதிக்கேற்ப திரித்தும், தவறாகவும் கூறிவருகின்றனர். அதில் ஒன்றுதான் பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை ஒரு கடவுளை மட்டும் வணங்க அல்லது கும்பிடச்சொன்னார் என்று ஒரு சிலர் சொல்லி வருவது உண்மையா என்று பார்ப்போம்.
கடவுள் மறுப்பை ஒரு இயக்கமாக நடத்தியவர் பெரியார்.கடவுள் இல்லை;இல்லவேஇல்லை என்று அழுத்தந்திருத்தமாக மக்களிடம் தான் சாகும் வரை பிரச்சாரம் செய்தவர் பெரியார். அதோடுமட்டுமல்ல கட்வுள் உருவப் பொம்மைகளை உடைத்து கடவுளும் இல்லை;கடவுளுக்கு எந்தச்சக்தியும் இல்லை என்பதை மக்கள் மன்றத்தில்,கணபதி உருவப்பொம்மை உடைப்பு;இராமன் பட எரிப்பு;இராமன் படத்தை(ஒரு எதிர்வினைக்காக)செருப்பால் அடிப்பது போன்ற செயல்விளக்கமும் செய்து கடவுளே இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர் பெரியார்.
இப்படிபட்ட பெரியாரா ஒரு கடவுளை மட்டும் வணங்கச்சொல்லியிருப்பார்? அவரிடமே கேட்டு விடுவோம்.இதோ பெரியார் பேசுகிறார். கேளுங்கள். தெளிவடையுங்கள்...
"சென்ற மாதம் 30 ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக்கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும் அதனைக் கும்பிடும்படிக்
கூறினேன் என்றும் எல்லாப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும்,பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள்.'மெயில்' போன்று பொறுப்பு வாய்ந்த பத்திரிக்கைகள் கூட இந்த அயோக்கியத்தனமான வேலையைச்செய்துள்ளது.'ஆனந்தவிகடன்'
கார்ட்டூன் போட்டுள்ளான்."கண்ணீர்துளி"பத்திரிக்கை ஒன்று "அண்ணா பாதையில் பெரியார்" என்று ஈனத்தனமான முறையில் சேதி வேளியிட்டுள்ளது."கண்ணீர்துளிகள்"அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்களாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்!இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம்! பத்திரிக்கைக்காரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத்தான் ஆகிவிடுகின்றான்.நானும் மானங்கெடத்தான் இவர்களைப் பற்றிப் பேசுகின்றேன் ஒருவனுக்காவது மானஈனத்தைப்பற்றி கவலையே இல்லையே. நான் கும்பகோணத்தில் என்ன பேசினேன் நான் இங்கு குறிப்பிட்டதுபோலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றி பெசினேன்.
நம் மக்கள் கடவுள்,மதம் இவைபற்றிய முட்டாள்தனங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும்.உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களேயானால் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.எனது
இயக்கத்தை சேர்ந்த தோழர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கிடையாது.
அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண்டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை.கடவுள் இல்லையென்று கூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவுவேண்டும்.தெளிவு வேண்டும். எப்பெடி இல்லை? என்று எந்தவிதக்கேள்வி கேட்டாலும் தெளிவுபடுத்தக்கூடிய முறையில் அறிவாற்றல் ஆராய்ச்சி வல்லமை வேண்டும்.
இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கிறதென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.கடவுளிருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை.சுத்தமடையன்
அடிமுட்டாள் கூட கடவுள் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கலாம்.அறிவுக்கு வேலையே இல்லை.அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறித்துவர்கள் கடவுள் நம்பிக்கை வைத்து இருப்பது போலாவது நடந்து கொள்ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன்."
---------"விடுதலை" 24,25-11-1959.
ஆக கடவுள் இல்லை என்பதில் பெரியார் மிகத்தெளிவாக இருந்தார் என்பது
இதன் மூலம் தெரியவருகிறது.கொள்கையில் குழப்பம் விளைவிக்கும் குழப்பவாதிகள் இப்போது தெளிவடைந்திருப்பார்கள் என்று நம்புவோம்.பெரியாரி கடவுள் கொள்கை பற்றி விளக்கமாகவும், விரிவாகவும் அறிந்து கொள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரநிறுவனம்
வெளியிட்டுள்ள 'கடவுள் தொகுதிகள்'-1,2 படிக்க அறிவுறுத்துகிறோம்.
--------- ---------- - தொடரும்---


3.பெரியாரும்-சினிமாவும்:
-------------------------
1. பார்ப்பான் 2.பத்திரிக்கைகள் 3.அரசியல் கட்சி 4.தேர்தல் 5.சினிமா, என்ற இந்த அய்ந்தும்தான் இந்நாட்டைப் பிடித்துள்ள நோய்கள் என்றார் பெரியார்.மக்களிடம் ஒழுக்கம் உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்படவேடும் என்ற பெரியார், ஒரு சினிமா நடிகரானா எம்.ஆர்.ராதா அவர்களின் பெயரில் அதுவும் பெரியார்திடலின் உள்ளேயே "ராதா மன்றம்" என்ற பெயரில் ஒர் அரங்கத்தை நிறுவியது சரியா என்று ஒரு சிலர் கேட்டு வருகின்றனர். இக்கேள்விக்கான விடையை நாம் கூறுவதை விட பெரியாரே பதில் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.இதோ பெரியார் பேசுகிறார்.

"நான் சினிமா உலகத்துக்கு மாறுபட்டவன்;எதிர்ப்பானவன்.இப்படிப்பட்ட நான் ராதா பெயரில் மன்றம் நிறுவ ஆசைப்பட்டதன் காரணம்,
நண்பர் ராதா அவர்களை எனக்கு 25 ஆண்டுகளாகத் தெரியும்.அதற்குமுன்பும் நமக்கு அவர் அறிமுகம் இல்லாவிட்டாலும் கூட நமது கருத்துக்களையே பின்பற்றி வந்து இருக்கின்றார்.

நான் எப்படி சமுதயாத்துறையில் மாறுதல் எண்ணமும் புரட்சிக்கருத்துக்களும் கொண்டு பாடுபட்டு வருகின்றேனோ அப்படியே ராதா அவர்களும், நமது கருத்துக்களை நாடகத்துறையில் விடாப்பிடியாகப் புகுத்தி நடத்திக்கொண்டே வருபவர் ஆவார்.

நாட்டில் உள்ள எல்லாக் கலைஞர்களும் ரசிகர்கள் பின் செல்லுபவர்கள் அவர்கள் மனம் திருப்தி அடையும்படி எல்லாம் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

நண்பர் ராதா அப்படிப்பட்ட கலைஞர் அல்ல.தாம் ரசிகர் பின் செல்லாமல் ரசிகர் தம் பின் வரவேண்டும் தன் பேச்சைக் கேட்கவேண்டும் என்று விரும்புபவர். மக்கள் தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முற்பட்டாலும், முற்படாவிட்டாலும் நமது கருத்தை வலியுறுத்தி எடுத்துச் சொல்லத்தவறுவதேயில்லை". .

-------------"விடுதலை"-19-11-1962
எம்.ஆர். ராதா பெயரில் மன்றம் ஆரம்பித்ததின் காரணத்தை மிக மிக அருமையாக, உதாரணங்களுடன். காரண காரியங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளார் பெரியார். மூடநம்பிக்கை மிகுந்த ஒரு துறையில் அதுவும் அப்போதைய காலகட்டத்தில் துணிச்சலாக தன் கொள்கையை பரப்பிய ஒரு தொண்டனை பெருமைப்படுத்துவதற்காக மன்றத்தை ஏற்படுத்தியதை பார்க்கும் போது மிகுந்த வியப்பாய் இருக்கிறது. ஏனெனில் தன் நிலையிலிருந்து கொஞசம் முன்னுக்கு வந்து விட்டாலே அவனை எப்படி ஒழிக்கலாம் என்று திட்டம் போடுபவதிலேயே சில தலைவைர்கள் குறியாய் இருப்பார்கள்.ஆனால் பெரியார் உண்மையாய் உழைக்கும் தொண்டர்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் பெருமைப் படுத்திய சம்பவங்களை அவரின் நெடிய வரலாற்றில் நாம் பல இடங்களில் பர்க்கலாம்.அதில் ஒன்று தான் எம்.ஆர். ராதா பெயரில் மன்றம் அமைத்ததும் என்பதை நினைவில் கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமாக யோசித்து கேள்விகேட்க வேண்டுகிறேன்.

------------------தொடரும்....

-------------நன்றி:"தமிழ் ஓவியா"__www.thamizhoviya.blogspot.com

No comments: