தாய்மார்களே! தோழர்களே!
சாதாரணமாக, மனிதருக்குப் பெயர் என்பது ஒவ்வொரு நபருக்கும், அந்தந்த நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகும். மனித சமுதாயத்தில் இம்மாதிரியான ஒரு குறியீட்டுச் சொல் அவரவர்களுக்கு அடையாளஞ் சொல்லக்கூடிய சொல் என்பது சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.
பெயர் சூட்டுவதில்....சாதாரணமாக, மனிதர்களுக்கு ஒரு குறியீடு என்கிற தன்மையில் சூட்டப்படுகிற பெயர் என்கிற போதிலும், பெயர் சூட்டுவது என்பதில் ஒரு கொள்கை, தத்துவம் உள்ளே இருந்து வந்திருக்கிறது.
முதலாவது, சாதாரணமாக மக்களுக்குள் இன்றைய தினம் இருந்துவரும் பெயர்ளைப் பார்த்தால் பெரும்பாலும் மதத்தின் அடிப்படையிலேயே இருந்து வருகின்றன. சாதாரணமாக, உலகத்தில் மதத்திற்குச் செல்வாக்கு ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு மதத்தாருக்கும் அந்தந்த மதத்தின் பெயரால் அந்தந்த மதத் தத்துவம் மதக் குறிப்பின் படியாகப் பெயர்கள் இருந்து வருகின்றன.
கிறித்தவர்களுக்கு கிறித்துவ மத சம்பந்தமான பெயர்களும், முஸ்லீம்களுக்கு முஸ்லிம் மார்க்க படியான பெயர்களும், பவுத்தர்களுக்கு பவுத்த தன்மைப்படியான பெயர்களும், இந்துக்கள் என்பவர்களுக்கு இந்துமதம் என்பவைகளின் சாஸ்திர சம்பிரதாயப்படியும் பெயர்கள் இருந்து வருகின்றன. இதற்குக் காரணம் என்னவென்றால், மத ஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கும் மதத்தின் தன்மைப்படி பெயர் வைத்துக்கொள்வது என்பது புண்ணியம், பெருமைக்கு உகந்தது, உயர்ந்தது என்கிறதான கருத்தும் மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டதுதான் ஆகும்.
நம்மைப் பொறுத்தவரையில் - தமிழர்களைப் பொறுத்தவரையில் நம்முடைய பெயர்கள் என்பவைகள் எப்படி இருந்து வந்தன என்றால், மதச்சார்பு அற்றவையாக, மதத்திற்கு முற்பட்டு வெறும் பெயரீட்டுக் குறிச்சொல் என்கிற முறையில்தான் இருந்து வந்திருக்கின்றன. மதச் சம்பிரதாயத்தின் அடிப்படையிலே தமிழர்களுக்குப் பெயர் இருந்ததில்லை. தமிழ்ப் பெயர்களைப் பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும்; இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் நூல்களில் - 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நூல்களில் மதம் அதிகம் இருக்காது. அது போலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தாலும் அதிலே மத, கடவுள் சார்புப் பெயர்கள் அதிகம் இல்லை. சேர, சோழ, பாண்டியர்கள் என்பவர்களிலும் முற்பட்ட மூவேந்தர்களிலும் மதப் பெயர்கள் அதிகம் இல்லை.
நாளாக ஆக மத ஆதிக்கம் வந்து குவிந்துவிட்டது. மத, புராண, கடவுள் சம்பந்தமான காரியங்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மத ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தன்மையில் இந்தப்படியான மதப் பெயர்களைப் புகுத்திவிட்டார்கள்.
அதுவும் குறைந்தது இந்த 50 ஆண்டு காலத்துக்குள்ளாக ரொம்பவும் புகுந்துவிட்டது. அதுவும் இந்த மத சம்பந்தமான பெயர்கள் அதிகமாக ஏராளமாகப் புகுந்ததெல்லாம் பெண்களிடத்தில்தான் ஆகும். எந்தப் பெண்களுக்கும் கடவுள் பெயர், மத சம்பந்தமான பெயர் என்று வந்து புகுந்துவிட்டது.
இந்தப்படியான, மனித நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் என்பது மதப் பெயர்களைக் கொண்டதாக ஏன் ஆகிவிட்டது என்றால், மதத்திற்கு, மத ஆதிக்கம் வளர்வதற்கு இதை இந்தப்படியான பெயர் சூட்டுவது என்பதை ஒரு பிரச்சார சாதனமாக வைத்துக் கொண்டார்கள்.
நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருக்கலாம். இந்தப் பெயர் சூட்டுவது என்பதிலே கூட இந்து மதத்தின் வருணாசிரமமுறை இருந்து வந்திருக்கிறது. அழகான பெயர்கள் எல்லாம் மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வைத்துக் கொள்ளுவதும் - அதாவது மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் கடவுள், மத சம்பந்தமான பெயர்களை மேல்சாதிக்காரர்கள் வைத்துக் கொள்வது என்றும், அந்த மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் பெயர்களைக் கீழ்ச்சாதி மக்கள் என்போர் - அதாவது சூத்திரர், பஞ்சமர் எனப்படுவோர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது, வைத்துக் கொள்வது பாவம் எனவும் கருதப்பட்டது. சாதாரணமாக, இந்த ராமன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற பெயர்கள் மேல் சாதிக்காரர்கள் பெயராகவும்; கருப்பன், மூக்கன், வீரன், காட்டேரி, பாவாயி, கருப்பாயி என்பன போன்ற பெயர்கள் கீழ்ச்சாதி மக்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள் என்பவைகளாகவும் இருந்து வந்திருக்கின்றன.
வரவர மதத்திற்கும் மதத் தன்மைக்கும், எதிர்ப்பும் - தங்களுடைய இழிவைப் பற்றியதுமான உணர்ச்சியும் மக்களுக்கு ஏற்பட ஏற்பட, இந்தப்படியான எதிர்ப்பை ஒழிப்பது என்கிற முறையில் எல்லோரும் எல்லாப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றதான நிலைமை வந்தது.
சாதாரணமாக, இந்த இழிசாதி மக்கள் என்பவர்களின் பெயர்களுக்குக் கடைசியில் சாமி, அப்பன் என்ற சொற்கள் வரக்கூடாது. ஏனென்றால் மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள், பெயர் சொல்லிக் கூப்பிடும் போது இழிசாதி மக்களை, ‘சாமி!’ என்றும் ‘அப்பன்!’ என்றும் கூப்பிடவேண்டியிருக்கிறது என்பதால் - அது மேல்சாதிக்காரர்களின் அந்தஸ்துக்கு மட்டம் என்பதால் அந்தப்படியான பெயர்களை இழிசாதி மக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் அந்த ‘சாமி’ ‘அப்பன்’ என்ற சொல்லை விட்டுவிட்டு, மேல்சாதிக்காரர்கள் ‘ராமா’, ‘கந்தா’ என்றுதான் அழைப்பார்கள். இப்படியாகப் பெயர்கள் என்பவைகள் கடவுளின் பேராலும், மதசாஸ்திர சம்பிரதாயத்தின் பேராலும் அவற்றை வகுத்த வருணாசிரம மேல் - கீழ்சாதி முறைப்பிரகாரமே வழங்கி வந்து, மேற்கண்டவைகளுக்கு இவைகள் ஒரு பாதுகாப்பாகவும், ஆதாரமாகவும், அஸ்திவாரமாகவும், நின்று நிலவி வருகின்றன.
இன்னும் பல பெயர்களைப் பார்த்தால் மிக ஆபாசமாக இருக்கும். வைக்கப்படுகிற பெயர் கடவுள் பெயராக இருக்கிறதா என்றுதான் கவனிப்பார்களே தவிர, அப்படி வைக்கப்பட்டிருக்கிற பெயர்களுக்கு என்ன அர்த்தம், அது மிக ஆபாசமான அர்த்தமுடையதாக இருக்கிறதே என்று கவலைப்பட மாட்டார்கள்.
சாதாரணமாக, ஆதிகேசவலு, குஞ்சிதபாதம், குஜலாம்பாள், துரோபதை என்கிறதாகவெல்லாம் பெயர் வைக்கிறார்களே! அந்தப் பெயர்களின் பொருளை விரித்துப் பார்த்தால் அதில் எவ்வளவு ஆபாசமும் அறிவற்றதுமான காரியங்கள் இருக்கின்றன! ஆனால், மக்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இம்மாதிரியான பெயர்களையே ஏற்றுக் கொண்டும் சூட்டிக் கொண்டும் ஏன் இருக்கிறார்கள் என்றால், நான் முன்னே சொன்னது போல், இந்தப்படியான பெயர்கள் என்பவைகள் கடவுள், மத சாஸ்திரங்களின் பேரால் ஏற்படுத்தப்பட்டுவிட்டன என்பதால் தான்.
இப்படியாக மத, சாஸ்திர, கடவுள் அடிப்படையிலேயே வளர்ந்து வந்த பெயர் முறைகள் இன்று கொஞ்சம் மறையத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் சமுதாயத்துக்குமான உணர்ச்சி யும், இந்தக் கடவுள், மத, சாஸ்திரங்கள் என்பவைகளின் பேரால் தாங்கள் அழுத்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், இழிசாதி மக்களாக்கப்பட்டும் இருக்கிறதை - கடவுள், மத, சாஸ்திரத் துறையிலே இழிசாதி மக்கள்; பொருளாதாரத் துறையிலே ஏழை மக்கள்; அழிவுத் துறையிலே கீழ் மக்கள் என்பதாக இருக்கிற நிலை மையை உணர்ந்து - மக்கள் தங்கள் இழிவையும் ஏழ்மையையும் அடிமையையும் ஒழிக்க வேண்டும்; இவைகளிலிருந்து விடுதலைபெறவேண்டும் என்கிற மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி, ஏற்பட்டு வருவதால் இந்தப்படியான தங்கள் இழிவுக்கும், ஏழ்மைக்கும், கீழ்நிலைக்கும் காரணமான எந்தெந்த அமைப்பு முறைகள் இருக்கின்றனவோ அந்த அமைப்பு முறைகளை நம்முடைய விடுதலையைக் கோரி மாற்ற வேண்டும்; ஒழிக்க வேண்டும் என்கிற தன்மையில்தான் திருமணத் துறை, சாதித்துறை, கிரஹப்பிரவேசம் என்கிற புதுமனை புகுவிழா சங்கதி, திருவிழாத்துறை, சங்கீத - இலக்கியத்துறை போன்ற எல்லாத்துறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி, கிளர்ச்சி நடத்துவதுபோல இந்தப் பெயர்த் துறையிலும் இது மாதிரியான மாறுதல் உணர்ச்சியோடு காரியம் நடத்தப்படுகிறது.
இதற்குமுன் மக்களிடத்தில் இவ்வளவு உணர்ச்சி இருந்ததில்லை. வர, வர இப்போது மக்களிடத்தில் மான உணர்ச்சியும், பகுத்தறிவும் பெரும் அளவுக்கு வளர்ந்து வருகிறது; பலருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்தப்படியான உணர்ச்சி பெற்றவர்கள் செய்கிற காரியத்தில் எல்லாம் இம்மாதிரியான மாறுதல், அறிவுக்குப் பொருந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இன்றைக்கு ஏராளமாக இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த மாதிரித் தன்மையில்தான் இந்தப் பெயர் சூட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் சூட்டப்படுகிற பெயர்கள் சாதாரணமாக மடமையான மதத்துக்கோ அறிவற்ற தன்மைக்கோ ஏற்றதாக இல்லாமல் பகுத்தறிவுத் தன்மைக்கேற்றதாகவே சூட்டப்படும்.
சாதாரணமாக, குழந்தைகள் பிறக்கும்போது இருந்தே இந்த மாதிரியான புதுமைப் பெயர் வைத்துவிட்டால் நல்லது. அதுவே பழக்கத்தில் வந்துவிடும். இப்போது என் பெயரையே எடுத்துக் கொள்ளுங்களேன். இது இந்துமதம் என்கிறதன் சார்புப் பெயர்தான். இவைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிற எனக்கே இந்தப் பெயர் இருக்கிறது. இந்தப் பெயர் கூடாததுதான். ஆனால், இந்தப் பெயராலே 73 வருடம் இதையே என்னைக் குறிக்கும் குறியீடாகக் கொண்டு வந்தாகிவிட்டது. அது மட்டுமல்லாமல், இந்தப் பெயர் என்பது மிகவும் விளம்பரமாகி விட்டது; ‘யார் ராமசாமியா! அட! அதுதான் இந்த ஆள்!’ என்கிற மாதிரி ஒரு முக்கியமானதாகி விட்டது! இனி என் பெயரை மாற்றுவது என்றால் - இது ஏற்படுத்துகிற புதுப்பெயர் என்பது இந்தப் பெயர் அளவில் என்னைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாக இருக்க முடியாது. புதுப்பெயரால், பெயர் வைக்கிற தத்துவத்தின்படி இன்னாருக்கு இந்தப் பெயர் என்று புரிந்துகொள்ளுகின்ற மாதிரியில் இருக்க முடியாது. ஆகவேதான் சொல்லுகிறேன், குழந்தையாய் இருக்கும்போதே புதுமைப்பெயர், பகுத்தறிவு சான்ற பெயர் சூட்ட வேண்டும் என்பதாக. இனி வருங்கால சந்ததிகளை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதே புதுமையான, பகுத்தறிவான பெயராக - ஆரியமத, சாஸ்திர, கடவுள் தன்மை கொண்ட பெயர் அற்றதான மாதிரியில் வைக்க வேண்டும்.
--------------தந்தைபெரியார்
- உளுந்தூர் பேட்டையில், 15-3-1953-இல் ஆற்றிய சொற்பொழிவு - ‘விடுதலை’, 24-3-1953
Wednesday, January 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment