Tuesday, January 29, 2008

விரதப்புரட்டு

"நைமிசாரண்யவாசிகளுக்கு சூதபுராணிகர் சொன்னது" "ஆனந்த தேசத்தில் வேத விரதன் என்னும் பிராமணனுக்கு சாரதை என்று ஒரு பெண் இருந்தாள். அந்த ஊரில் மனைவியை இழந்த பத்மநாபன் என்னும் கிழப்பார்ப்பான் அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு நிறைய பணம் கொடுத்து, தனக்கு அந்தப் பெண்ணை இரண்டாவது பெண் ஜாதியாக விவாகம் செய்து கொண்டான். அந்தக் கிழப்பார்ப்பான் மணக்கோலம் முடியும் முன்பே விஷம் தீண்டி இறந்து போனான். பிறகு அந்தப் பெண் தகப்பன் வீட்டிலேயே இருந்தாள். சில நாள் பொறுத்து ஒரு முனிவர் சாரதையின் வீட்டிற்கு வந்தார். சாரதை அவருக்கு மரியாதை செய்தாள். உடனே அந்த முனிவர் சாரதையை "நீ புருஷனுடன் இன்பமாய் வாழ்ந்து நல்ல பிள்ளைகளைப் பெறக் கடவாய்" என்று ஆசீர்வாதம் செய்தார். அதற்கு சாரதை, "பூர்வஜென்ம கருமத்தின் பலனாய் நான் விதவையாகி விட்டதால் தங்களின் ஆசீர்வாதம் பலியாமல் வீணாய் போய்விட்டதே" என்றாள். அதற்கு அந்த ரிஷி, "நான் கண் தெரியாத குருடனானதால் அறியாமல் அந்தப்படி ஆசீர்வாதம் செய்ய நேரிட்டு விட்டது. ஆனாலும், அது பலிக்கும்படி செய்கிறேன் பார்" என்று சொன்னார். "என் புருஷன் இறந்து வெகுநாளாய் விட்டதே; இனி அது எப்படி பலிக்கும்?" என்று சாரதை கேட்க, அதற்கு அவர், நீ உமாமகேஸ்வர விரதம் அனுஷ்டித்து வந்தால் கண்டிப்பாய் நீ உத்தேசித்த காரியம் கைகூடும்" என்று கூறினார். "அவ்விரதம் அனுஷ்டிப்பதெப்படி?" என்று சாரதை கேட்டாள். அதற்கு முனி சொல்லுவதாவது:

"சித்திரை அல்லது மார்கழி மாதத்தில் ஒரு பிராமணனை அவன் மனைவியுடன் நல்ல பீடத்தில் உட்கார வைத்து அவர்களைப் பார்வதி பரமசிவனாகப் பாவித்து, மலர்களால் அர்ச்சித்து, தினமும் அன்ன ஆகாரமிட்டு வருஷக்கணக்காய் பூசை செய்து, பார்வதி பரமசிவ உருவத்தை மனதில் நினைத்து அதற்கு விரத அபிஷேகம் செய்து ஆராதித்து பஞ்சாட்சரத்தை தியானித்துக் கொண்டிருந்தால் நினைத்த காரியமெல்லாம் கைகூடும்" என்றார். அது கேட்ட சாரதையானவள் அந்தப்படியே அதுமுதல் தனக்கு முனிவரின் ஆசீர்வாதம் பலிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு, முனிவர் சொன்னபடி உமாமகேஸ்வர விரதத்தை சிரமமாய் அனுஷ்டித்து வந்தாள். உடனே பார்வதி தேவி தாரதைக்கு பிரத்தியட்சமாகி "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டாள். சாரதை "எனக்கு புருஷன் வேண்டும்" என்றாள். பார்வதி, "அப்படியே உன்னை ஒருபுருஷன் தினமும் வந்து சொப்பனத்தில் புணருவான்; அதனால் நல்ல ஒரு குழந்தை பிறக்கும்" என்று வரம் கொடுத்தாள். அது முதல் சாரதையின் சொப்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணர்ந்து கொண்டே இருந்தான். அதனால் சாரதைக்கு கர்ப்பமும் உண்டாயிற்று. அதைக் கண்ட அவ்வூரார் எல்லோரும், சாரதை சோரம் போய் கர்ப்பம் ஆய்விட்டாள் என்று பழித்தார்கள். இதைக் கண்டு சாரதை துக்கப்பட்டாள். பிறகு பழித்தவர்கள் வாய் அழுகி அதில் புழு உதிரும்படி பார்வதி செய்து விட்டாள். பத்து மாதம் பொறுத்து சாரதை ஒரு புத்திரனைப் பெற்றாள். அதற்கு சாரதேயன் என்று பெயர் சூட்டி, மகாமகிமை பொருந்திய சிவராத்திரியன்று தாயும் பிள்ளையும் கோகர்ணத்திற்கு யாத்திரை சென்றார்கள். செல்லும் வழியில், சொப்பனத்தில் வந்து புருஷன் நெரில் வந்து சாரதையுடன் கலந்து கொண்டான். பிறகு கொஞ்ச காலம் சாரதையும் புருஷனும் சந்தோஷமாய் வாழ்ந்து இன்பமனுபவித்து புருஷன் இறந்து போனான். புருஷன் இறந்ததும் உடனே சாரதை உடன்கட்டையேறி இருவரும் சிவபதமடைந்தார்கள்" என்று நைமிசாரண்யவாசிகளுக்கு சூதக முனிவர், வியாசரிடம் கேட்டு தெரிந்ததைச் சொல்லுகிறேன் என்று சொன்னார். இந்த சரிதை பிரமோத்திர புராணத்தில், உமாமகேஸ்வர விரத மகிமையும், பிரதத்தின் பலனும் என்கின்ற தலைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை கவனிப்போம். இந்தக் கதையின் ஆகாசம் எவ்வளவு மோசமாயிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு பெண்ணை ஒரு கிழவன் அந்தக் காலத்திலும் கட்டிக் கொள்ளுகின்ற வழக்கமும், தகப்பன் பணம் வாங்கிக் கொண்டு சாகப்போகும் கிழவனுக்கு தனது சிறு பெண்ணை கட்டிக் கொடுக்கும் வழக்கமும் பார்ப்பனர்களுக்குள் இருந்ததாக வைத்துக் கொண்டாலும், புருஷன் இறந்தவுடன் உடன்கட்டையேறாமல் பெண்ஜாதியான (சாரதை) சிறு பெண் இருந்திருக்க முடியுமா? என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமயம் உடன்கட்டை ஏறாமல் இருந்திருந்தாலும், ஒரு ரிஷிகள் இந்தப் பெண் விதவை என்ற சங்கதி தெரியாமல் போகுமா? ரிஷிக்கு ஒரு சமயம் அந்தப்படி தெரியாமல் போயிருந்தாலும், ஒரு குருட்டு ரிஷி தெரியாமல் சொல்லிவிட்ட காரியம், ஒரு விரதம் அனுஷ்டிப்பதால் கைகூடி விடுமா? அந்தப்படி கூடுமானாலும், பார்ப்பனனையும் அவன் பெண்ஜாதியையும் பார்வதி பரமசிவன் போல் எண்ணி பூசை செய்தால் பார்வதி வந்துவிடுவாளா? அப்படி வருவதாயிருந்தாலும், பார்வதி நேரில் புருஷனைக் கொடுக்காமல், தூக்கத்தின்போது கனவில் வந்து புணர்ந்து விட்டுப் போகும்படி கட்டுளையிடுவாளா? அப்படி கட்டளையிடுவதானாலும், கனவில் புணர்ந்ததற்கு கனவில் கர்ப்பமுண்டு பண்ணாமல், விழித்த பிறகுங்கூட அந்த கர்ப்பம் இருக்கும்படி செய்வாளா? அப்படித்தான் செய்தாலும், அதன் காரணத்தை பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமல் இரகசியமாய் இருக்கச் செய்து, இந்த இரகசியம் தெரியாத பொது ஜனங்கள் சாரதையின் கர்ப்பத்தைபற்றி சந்தேகப்பட்டால் அதற்கு பார்வதி திருப்தி அடையும்படி சமாதானம் சொல்லாமல் சந்தேகப்பட்டவர்கள் வாய் அழுகிப் புழு தள்ளும்படி செய்வது யோக்கியமாகுமா? அன்றியும், கோகர்ணத்திற்குப் புருஷனை வரும்படி செய்த பார்வதியும் பரமசிவனும், பொது ஜனங்கள் சந்தேகப்படும்போது வரும்படி செய்திருக்கப்படாதா? அன்றியும், அந்தப் புருஷனும் சாவானேன்? அப்படியே காலம் வந்து செத்து இருந்தாலும், முன்னைய கிழப்புருஷனுக்கு உடன்கட்டை ஏறாத குமரி சாரதை, இந்தப் புருஷனுக்கு ஏன் கிழவி ஆனபின் உடன்கட்டை ஏறினாள்? வாசகர்களே! வேதப்புரட்டு, இதிகாசப்புரட்டு, புராணப்புரட்டு என்பதுபோல் இந்த விரதப் புரட்டும் எவ்வளவு முட்டாள்தனமானதும் அயோக்கியத்தனமானதும் சுயநல சூழ்ச்சி கொண்டதுமாய் இருக்கின்றது என்பதை நன்றாய் கவனித்துப் பாருங்கள். விரதம் என்றால் ஒரு பார்ப்பனனையும், பார்ப்பனத்தியையும் பார்வதி பரமசிவன்போல் பாவித்து, அபிஷேகம் பூசை ஆராதனை செய்தால், விதவைகளுக்கு புருஷன் சொப்பனத்தில் வருவான் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமான கதை? இப்படித்தானே இப்போதுள்ள விதவைகள் புருஷ ஆசைக்கு விரதமிருந்து "சொப்பனத்தில்" புருஷருடன் புணர்ந்து கொண்டிருப்பார்கள். சாரதையைப் போல் அநேக விதவைகள் இப்போதும் கர்ப்பமானாலும், பழி சொல்லுகின்றவர்கள் வாயில் பார்வதி புழுக்கள் தள்ளச் செய்யாததால்தான் அந்த விரதமிருக்கும் விதவைகளெல்லாம் கர்ப்பங்களை தாங்களாகவே அழிந்து விடுகின்றார்கள் போலும். பார்ப்பன சூழ்ச்சி எவ்வளவு மோசமானது என்பதை இதிலிருந்தாவது விரதமிருக்கும் வைதீகர்களும், விரதமிருக்கும் பெண்களும், புருஷர்களும் அறிந்து கொள்ளுங்கள்.



சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,
("குடி அரசு", 6.4.1930).

No comments: