Sunday, December 30, 2007

ஜாதியை ஒழிக்க

நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ``நம் கடவுள் நம்பிக்கை என்பதே கடைந்தெடுத்த முட்டாளின் அறிகுறி''யாக ஆகிவிட்டது. காரணம் என்னவென்றால், ``கடவுள் என்றால் ஆராய்ச்சியே செய்யக் கூடாது'', ``நம்பவேண்டும்'', ``அப்படியே ஒப்புக் கொள்ளவேண்டும்'' என்பதாகிவிட்டது. அது மாத்திரமல்ல; அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி, ``கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்காக இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? எதுமுதல் இருக்கிறார்? அவர் சக்தி எவ்வளவு? நம் சக்தி எவ்வளவு? அவரால் ஏற்பட்டது எது? நம்மால் ஏற்பட்டது எது? எது எதை அவருக்கு விட்டுவிடலாம்? எது எது நாம் செய்ய வேண்டியது? அவரில்லாமல் ஏதாவது காரியம் நடக்குமா? எதையாவது செய்யக் கருதலாமா?'' என்பதுபோன்ற (இப்படிப்பட்ட) நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒரு விஷயத்தைக்கூட தெளிவாகத் தெரிந்து கொண்டவன் எவனும் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் இல்லை. இல்லை என்றால் அறவே இல்லை என்று சவால்விட்டுக் கூறுவேன். நான் இதை 60-70 ஆண்டாகச் சிந்தித்துச் சிந்தித்து அறிவில், ஆராய்ச்சி அனுபவத்தில் கண்டுகொண்ட உறுதியினால் கூறுகிறேன். இவ்விஷயங்களில் மக்களுக்கு விஷயம் தெரியாது என்று சொல்லுவதற்கு இல்லாமல் தெரிந்து கொண்டிருப்பது குழப்பமானதும், இரட்டை மனப்பான்மை கொண்டதுமாக இருப்பதால், மனிதனுக்கு இவ்விஷயத்தில் அறிவு பெற இஷ்டமில்லாமலே போய்விட்டது. தோழர்களே! நான் சொல்லுகிறேன், கடவுள் நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப்பாடுபடுகிறேன்'' என்றால், அதில் அறிவுடைமையோ, உண்மையோ இருக்க முடியுமா? கடவுள் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? மத நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்'' என்று சொல்ல முடியுமா? மதமில்லாமல் எப்படி ஜாதி வந்தது? சாஸ்திர நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்'' என்று சொல்ல முடியுமா? சாஸ்திரம் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? ஆகவே, இந்த ஜாதி ஒழிப்புக் காரியத்தில் கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கைக்காரர்கள் இருந்தால், அவர்கள் மரியாதையாய் வெளியேறி விடுவது நாணயமாகும். இதனாலேதான் ``ஜாதி கெடுதி, ஜாதி கூடாது'' என்று சொல்லத்தான் சில ``பெரியவர்கள்'' முன் வந்தார்களே ஒழிய, அதை ஒழிக்கப் பாடுபட இன்றுவரை எவரும் முன்வரவில்லை. ஆகவே, தோழர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன், வணக்கமாகச் சொல்லுகிறேன். நீங்கள் ஜாதியை ஒழிக்கப் பிரியப்பட்டீர்களேயானால் இந்த இடத்திலேயே உங்கள் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும் ஒழித்துக் கட்டுங்கள்! ஒழித்துவிட்டோம் என்று சங்கநாதம் செய்யுங்கள்! கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்றும் ஒழிந்த இடத்தில்தான் ஜாதி மறையும், ஜாதி ஒழியும். மற்ற இடம் எப்படிப்பட்டதானாலும் அங்கு ஜாதி சாகாது. ஆகவே, ஜாதி ஒழிய வேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகன் ஆகுங்கள். நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவதுதான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது. ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான், பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான். தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களோ, மதக் குறியோ, சாஸ்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது; கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

----------------தந்தைபெரியார்-"விடுதலை" 17-8-1962

தந்தைபெரியாருக்கு தோன்றாத யோசனையா?

அரசியல்வாதிகளில் கொள்கைப் பிடிப்புள்ள, தேர்ந்த சிந்தனையாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.இத்தகைய சூழலில் நமக்கு பெரிய ஆறுதலாக இருந்துகொண்டு வருபவர்கள் தி.மு.க.வினர் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தினர்.அதிலும் குறிப்பாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நமது மதிப்பிற்கும்,மரியாதைக்கும்,என்றென்றும் போற்றுதலுக்கும் உரிய மாண்புமிகு ஆ.இராசா அவ்ர்கள் பெரியாரியக்கவாதியாகவே எப்போதும் செயல்படுபவர்.அதனால் அவர்மீது எப்போதும் நமக்கு(கொள்கைப்) பாசம் அதிகம் தான்.
பல பெரியாரியக்க மேடைகளில் அவர் பேசிய உரைகளைப் படிக்கும் போது ஒரு தேர்ந்த கொள்கைவாதியின் உரையைப் படித்த திருப்தி ஏற்படும்.அந்தவகையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 2-12-2007 அன்று நடைபெற்ற தி.க.தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 75 -ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய பேச்சில் பலநாடுகளில்
நடைபெற்ற போராட்டங்கள் பற்றியும், பல தலைவர்களின் தியாகத்தைப் பற்றியும் மிகச்சிறப்பாக எடுத்துரைத்திருந்தார்கள்.சிறப்பான அவ்வுரையில் கீழ்காணும் அவருடைய பேச்சு எம்மை நெருட வைத்தது.அப்பேச்சை அப்படியே இங்கு தருகிறேன்.
"இந்த மேடைக்கு கலைஞர் அவர்கள் வந்த பொழுது'பெரியார் நெஞ்சில்தைத்த முள்ளை எடுத்த முதலமைச்சர் கலைஞர் அவர்களே' என்று சொன்னார்கள்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அடையாளம் இருக்கின்றது.பெரியாரைக்குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அருள்கூர்ந்து யாரும் என்னைக்கருதக்கூடாது.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பியவர் பெரியார்.
பெரியார் நெஞ்சிலே தைத்தமுள்தான்.அதை எடுத்தவர் கலைஞர்.ஆனால்,பெரியார் செய்யாத ஒன்றையும் தலைவர் கலைஞர் செய்திருக்கின்றார்.
வரலாற்று ஆசிரியர்கள் யாராவது இங்கு இருந்தால் வரலாற்றை செய்யக்கூடிய மாணவர்கள் யாராவது இந்த இருபெரும் தலைவர்கள் உட்கார்ந்திருக்கிற மேடையைக் குறித்துக்கொண்டு அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.......
.........இந்த மண்ணில் பார்ப்பனஜாதியும், பறப்பள்ளுஜாதியும் ஒழித்துவிட்டு எல்லோரும் ஒரே ஒரு ஜாதி என்று சொல்லுகின்ற இந்த முயற்சிக்குப் பெயர் தேசத்துரோகிதான் என்றால், நான் சசகும்வரை தேசத்துரோகியாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டவர் பெரியார்.ஆனால்,அந்த பெரியார் பார்ப்பனஜாதியும் பறப்பள்ளுஜாதியும் ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற நான் உயர்வாக மதிக்கிற அய்யா அவர்களுக்கு தோன்றாத யோசனை பூகோளப்பரப்பில் உள்ள ஜாதிகளை எல்லாம் ஒன்றுபடுத்தி,ஒரே இடத்தில் என்னுடைய காலத்திலாவது நான் அய்யா அவர்களுக்கு செய்யப்போகின்ற கடமை பூகோளத்தில் ஒன்றாக ஆக்கி, ஒரேஇடத்தில் 100 வீடுகளைக் கட்டி அந்த 100வீட்டில் பிராமணனும் வாழ்வான்,வன்னியனும் வாழ்வான்,ஆதிதிராவிடனும் வாழ்வான்,முக்குலத்தோனும் வாழ்வான் என்ரு ஒருபுரட்சியை செய்து பெரியாருக்கு காணிக்கையாக்கிய மகத்தான தலைவர் கலைஞர் அவர்கள்".
-------"விடுதலை"-19,20-12-2007
கலைஞர் தொண்டையோ,அவர்கள் செய்த புரட்சிகரமான செயல்களையோ நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் கேட்டால் கலைஞரைப்போல் பெரியாருக்கு சிறப்பு செய்தவர்கள் யாரும் இல்லை என்றுகூட கூறலாம்.அதுமட்டுமல்லாது தன்குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஜாதிஒழிப்புத் திருமணம் செய்து வைத்தவர் கலைஞர்.இது எந்த அரசியல்வாதியும் செய்யாதது.இப்படி ஜாதிஒழிப்பில் கலைஞரின் பணி மகத்தானது இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
நம்முடைய மதிப்புக்குரிய மத்திய அமைச்சர் மான்புமிகு ஆ.இராசா அவர்கள் தம் உரையில் குறிப்பிடுவது என்னவெனில் கலைஞர் உருவாக்கிய"பெரியார் நினைவுச் சமத்துவபுரம்" திட்டம் பெரியாருக்கு தோன்றாதது என்கிறார்.
இது சரியா? என்று ஆய்வு செய்ததில் கீழ்காணும் உண்மை வெளிப்பட்டது. இதுகுறித்து பெரியார் தரும் செய்தி இதோ;
"எப்போதும் ஆதிதிராவிடர்களுக்கு ஊருக்கு வெளியே ஒரு மைல்,இரண்டு மைல் தூரத்தில்தான் வீடுகள் கட்டிக்கொடுக்கிறார்கள்.அதனால் அது பறையர் தெரு,பள்ளர் தெரு என்று அழைக்கப்பட்டு வருகிறதே தவிர,எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.ஊருக்குள் பெரிய சமுதாயம் வசிக்கிற தெருவில்,அக்கிரகாரத்தில் 4,5 வீடுகளை அரசாங்கமே பணம் கொடுத்து(அக்கொயர் செய்து)வாங்கி அந்த வீடுகளில் ஆதிதிராவிட மக்களைக் கொண்டு வந்து குடியேற்ற வேண்டும். அப்போது மற்ற மக்களோடு கலந்து பழக வாய்ப்பு ஏற்படும்.வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தால் கொஞ்சம் காலத்துக்குத்தான் இருப்பார்கள்.பிறகு போய்விடுவார்கள்.அதனால் பயன் ஏற்படாது.இதை அரசாங்கம் முன் வந்து செய்ய வேண்டும்"'
---------பெரியார்.-"விடுதலை"-27-01-1970
நமது போற்றுதலுக்குரிய மத்திய அமைச்சர் ஆ.இராஜா அவர்கள் இப்போது சொல்லட்டும்"இது பெரியாருக்கு தோன்றாத யோசனையா?". இதைச் சுட்டிக் காட்டுவதால் அமைச்சர் அவர்களை நாம் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதக்கூடாது.அவரைப்போல் இன்னும் பல (கொள்கை)இராசாக்கள் உருவாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாம்.
பெரியாரின் சிந்தனையைப் பற்றி அவர் மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து எப்படியெல்லாம் தனித்து தனித்தன்மையாக விளங்கினார் என்பதை அறிஞர் அண்ணா அவர்கள் வெகுசிறப்பாக எடுத்துரைத்துள்ளார்கள்.அதே போல் பட்டுக்கோட்டைஅழகரி போன்ற என்னற்ற தலைவர்கள் பெரியாரின் தனித்தன்மையான நுட்பமான சிந்தனையை,புரட்சியை பற்றி விரிவாக விளக்கியுள்ளார்கள்.
பெரியாரின் புரட்சியைப் பற்றி கலைஞர் அவர்கள் கூறிய கருத்துடன் இதை நிறைவு செய்கிறேன். இதோ கலைஞர் பேசுகிறார்.
"இடமருகு என்ற எழுத்தாளரால் வரையப்பட்ட அருமையான நூல். நூலுக்குத்தலைப்பு
'இவர்தான் நாராயண குரு'.நாராயண குரு என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் அவர் கேரளத்தில் பெரியாருக்குச் சமமாக என்று சொல்லமாட்டேன். பெரியார் அளவுக்கு என்று நான் கூற மாட்டேன்.ஏனென்றால்,பெரியார் எனக்குத் தலைவர் என்ற காரணத்தால் அல்ல. பெரியார் செய்த புரட்சி உலகத்திலே எங்கும், யாரும் இதுவரையிலே செய்யவில்லை என்ற காரணத்தினால், யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்டுக் கூற மாட்டேன்".
-----தஞ்சையில் 12-6-2006 அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் டாகடர் கலைஞர் பேசியதிலிருந்து ஒரு பகுதி. தந்தைபெரியார் 128 ஆம் பிறந்த நாள் மலர் பக்கம்.189.
-----------------நன்றி:"தமிழ் ஓவியா" இணையதளம்

Saturday, December 29, 2007

பொதுவுரிமையா? பொதுவுடைமையா?

தமிழ் நாட்டில் பொதுவுடைமைப் பிரச்சாரகர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொதுவுடைமை என்றாலும் இந்து மதம் என்றாலும் அல்லது வேறெந்த பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும், பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

பார்ப்பனர்களுக்கே நன்றாய்த் தெரியும். என்னவென்றால், வருணாசிரமத்தையும், பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடைமையை ஏற்படுத்தி விட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்து விடும் என்றும், சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.

பொதுவுடைமை வேறு; பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். ‏இந்நாட்டில், பார்ப்பனீயத்தால் சாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உடைமை இருந்தாலும் சம உரிமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தனி உரிமையை முதலில் ஒழித்துவிட்டோமானால், தனிஉடைமையை மாற்ற அதிகப்பாடுபடாமலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும்.
குறிப்பமாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத்தான் பலர் மேன்மக்களாய் பணக்காரர்களாய் இருக்கிறார்கள்; இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய், ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டியிருக்கிறது. இது, இன்றையப் பிரத்தியட்சக் காட்சியாகும்.

ஆங்கிலத்தில் "கேஸ்ட்', "கிளாஸ்' என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. அதாவது, தமிழில் சாதி வகுப்பு என்று சொல்லப்படுவனவாகும். சாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் தன்மையினால் ஏற்படுவது. தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். சாதி நிலை, அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது. மேல் நாட்டில் சாதி இல்லாததால், அங்கு பொதுவுடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை துவக்க வேண்டியதாயிற்று. இங்கு சாதி இருப்பதால், பொதுவுடைமைக்கு முதலில் சாதிச் சண்டை துவக்க வேண்டியதாகும்.

பார்ப்பானும், பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடைமை வேஷம் போடுவதால் சாதிச் சங்கதியை மூடிவிட்டு, காத காரியமான ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு உணர்ச்சியைப் பற்றிப் பேசி சாதியை ஒழிக்கப்பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்; சாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரைப்பாகம் பொதுவுடைமை ஏற்பட்டுவிடும். அதாவது, சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத்தன்மையும், சாதியினால் சுரண்டப்படுபவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.

பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

திராவிட நாடு பிரிந்து - கிடைத்து, சுரண்டும் சாதி ஒழிக்கப்பட்டு, சம உரிமை எல்லோருக்கும் ஏற்படும்படியான உணர்ச்சி வந்துவிட்டால், பிறகு நாம் சுலபத்தில் எதுவும் செய்துகொள்ள முடியும். அந்தக் காரியத்திற்காகத்தான் சுயமரியாதைக் கட்சி முயலுகிறது. இந்தக் கட்சியில் இன்று மேல்சாதியானுக்கோ அல்லது சாதிப் பேய் - பார்ப்பனீயப் பேய் பிடித்த பெரிய மனிதர்கள் என்பவர்களுக்கோ எவ்வித அதிகப்படியான செல்வாக்கோ, ஆதிக்கமோ இல்லை என்பதையும், இக்கட்சி சாதியிலேயே தொழிலாளர்களாகவும், உண்மைத் தொழிலாளர்களாகவும் ஏழைக் கூலி மக்களாகவும் உள்ள பெரும்பான்மையான மக்களுடைய கட்சி என்பதாகவும் மக்கள் உணர வேண்டும்.
------தந்தைபெரியார்.-குடிஅரசு' 25.3.1944

Friday, December 28, 2007

வீடு கட்டிக் கொடுப்பதால் ஜாதி ஒழிந்து விடாது!

சமுதாய சீர்திருத்தம் என்பது வெறும் சாதியை பற்றிப் மட்டும் பேசுவது என்பது அல்ல; சமயத்தைப் பற்றியோ, "அரிஜனங்கள்' என்று கூறப்படுபவர்களைப் பற்றியோ, நிலம் இல்லாதவர்களைப் பற்றியோ பேசுவது முக்கியம் அல்ல. இவை சாதாரண விஷயம். இதற்கெல்லாம் காரணம் எவை என்று பார்க்க வேண்டும். "அரிஜனங்'களுக்கு வீடு இல்லை என்றால், யார் என்ன பண்ணுவது? ஏன் அவர்களுக்கு வீடு இல்லை? எனக்கு ஏன் 150 வீடுகள் இருக்கின்றன? அரை ஏக்கர் நிலம்கூட ஏழைகளுக்கு இல்லை. ஏன் இல்லை? ஏன் இந்த நிலை? ஒருவனுக்கு 5,000 ஏக்கர் இருக்கின்றது என்றால் எப்படி வந்தது? யாரை ஏமாற்றி எழுதி வாங்கினான்? இந்தச் சீர்கேட்டை ஒழிக்க – பரிகாரம் காண "அரிஜனங்'களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோ, ஏழை மக்களுக்கு அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதோ போதுமா?

தோழர்களே! இந்தக் கோவையை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு கொசுத் தொல்லை ஏராளமாக இருக்கின்றது. இதற்குப் பரிகாரம் தேட, ஆளுக்கு ஒரு கொசுவலை வாங்கிக் கட்டிக் கொண்டு படுங்கள் என்று கூறினால் போதுமா? உள்ளவன் வலை வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறான். வசதியற்றவன் வலைக்கு எங்கே போவான்? ஒருவன் யோக்கியமாக இருந்து கொசுவால் வரும் மலேரியா காய்ச்சலுக்குக் கொய்னா தின்றால் போதும் என்று கூறுவானா? என்ன சொல்ல வேண்டும்? நகரில் சாக்கடை நீர் கசுமாலங்கள் தங்குவதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகுகின்றது. அதன் மூலம்தான் மலேரியா காய்ச்சல் வருகின்றது. எனவே சாக்கடை நீர் கசுமாலங்களை அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம்தான் கொசுத் தொல்லை யும், தொற்று நோயையும் ஒழிக்க முடியும் என்றுதானே கூறுவான். இதை விட்டுவிட்டு கொய்னாவும், மருந்தும்தான் சாப்பிட வேண்டும் என்று கூறினால் டாக்டர்தான் பிழைப்பான்.

சும்மா பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் கூடாது என்று கொஞ்சம் பணத்தைப் பணக்காரனிடம் இருந்து வாங்கிக் கொடுத்தால், பணக்காரன் ஒழிந்து விடுவானா? இப்படிச் செய்தால் போதுமா? நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் நிலைமை வாழ்வு எல்லாம் எதனைப் பொறுத்து இருக்கின்றன? நம் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றைத் தானே பொறுத்து இருக்கின்றன? நாம் ஏன் சூத்திரன்? நாம் ஏன் இழிமகன்? நாம் ஏன் படிக்கக் கூடாதவன்? நாம் ஏன் வீடு இல்லாமலும், நிலம் இல்லாமலும் இருக்கின்றோம். நாம் ஏன் நாள் முழுவதும் பாடுபட்டும் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாதவர்களாக இருக்கின்றோம். எல்லாம் நம் கடவுள், மதம், சாஸ்திரம் காரணமாகத்தானே?

சமுதாய சீர்த்திருத்தத்திற்கு வந்தவருக்கு எந்தவிதத் தொடர்பும் பற்றும் இருக்கக் கூடாது. கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் நடப்பு ஆகியவற்றில் பற்று இருக்கக் கூடாது. அது மட்டும் அல்ல. நாட்டுப் பற்று, மொழிப் பற்று முதலியனவும் இருக்கக் கூடாது. இந்தப் பற்றுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மனதில் புகுந்து இருந்தும், இவற்றால் ஒன்றுமே ஆகவில்லை என்றால், நாம் என்ன பண்ண வேண்டும்? இந்தப் பற்றுகளை எல்லாம் விட்டு நம் மனதைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டாமா?

அடுத்து, அரசியலில் என்னைத் தவிர சன்னிதானம் அவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் அரசியலில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றீர்கள். நாட்டில் அரசன்தான் இல்லையே! பிறகு யாரைக் குற்றம் கூற அரசியல் என்று பெயர் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? நமக்கு யார் ராஜா? தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள், தற்குறிகள் – இப்படி எல்லோரும்தானே ராஜா! இவர்களிடம் ஓட்டு வாங்கிக் கொண்டு வந்து வெற்றி பெற்றுத்தானே ஆள்கின்றார்கள். பிறகு எப்படி தப்பு கூற முடியும்?

அடுத்து சாதி. சாதி ஒழிப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பாடுபட்டுக் கொண்டு வருகின்றோம். காமராசர் தமது ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் சாதி ஒழியும்படியாகத் திட்டம் போட்டு அமல் நடத்தினாரே! இன்றும் திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தில் வந்தவருக்குப் பெரிய உத்தியோகம் எல்லாம் கொடுக்கின்றார். ஜில்லா சூப்பிரண்டு வேலை கொடுக்கின்றார். பார்ப்பனருக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் வேலை கொடுக்கின்றார். உயர் சாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுவான்? பறைய சூப்பிரண்டைக் கண்டால் தொடை தட்டி, பார்ப்பான் சலாம் போட்டுத்தானே தீர வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கலெக்டர் வேலை கொடுக்க இருக்கின்றார். சேலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்தான் கலெக்டர். இப்படிப்பட்ட காரியங்களால்தான் சாதியை ஒழிக்க முடியுமே ஒழிய, ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதாலோ, வீடு கட்டிக்கொடுத்து விடுவதாலோ சாதி ஒழிந்துவிட ஏதுவாகாது.

-----தந்தைபெரியார். --"விடுதலை"-11.1.1964

Wednesday, December 26, 2007

பெரியார்-ஒரு காலக் கணக்கீடு

1.வாழ்நாள்:
------------
ஆண்டுகள்:94(3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள் :1131
வாரங்கள் :4919
நாள்கள் :34,433
மணிகள் :8,26,375
நிமிடங்கள்:4,95,82,540
விநாடிகள்:297,49,52,400

2.சுற்றுப்பயணம்:
-----------------
நாள்கள்:8200
வெளிநாடுகளில்:392
தொலைவு:8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3 மடங்கு.

3.கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
----------------------------
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700
கருத்துரை ஆற்றிய காலம்:
-------------------------
மணிகள் :.......21,400
நாள்கணக்கில்:....891
நிமிடங்களில்:.....12,84,000
வினாடிகளில்:.....77,04,000

சிறப்புக்குறிப்பு:
-------------
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

------பெரியார்-பகுத்தறிவாளர் நாட்குறிப்பிலிருந்து(1984)

ஜாதி ஒழிய

சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது, ஆங்கிலத்தில் உள்ள ‘சோஷலிசம்' என்னும் வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும், சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அவ்வார்த்தை அந்தந்த தேச தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்த படிதான் பிரயோகிக்கப்படுகின்றது. சில இடங்களில் சட்டதிட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது. இங்கு சமதர்மம் என்ற வார்த்தைக்கு, சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில், மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள். ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும்.

நிற்க. பொதுவாகவே சமதர்மம் என்பது எந்தக் கருத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவற்றின் எதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச மதவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையையும், சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிற்று. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே, பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்துவிட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்ட காரணம் எல்லாம், அவர்களின் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.
-------------------தந்தைபெரியார்-"குடிஅரசு" - 18.6.1949

பெரியார் பார்வையில் மதம்

உலகில் மதங்கள் என்பவை ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியிருந்தாலும், மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூலப் புருடர்கள் எல்லாம், தெய்விக சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்பந்தமுடையவர்களாயும், தீர்க்க தரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும், எல்லா மதக்கட்டளைகளும் தெய்வங்களாலேயே மூலப்புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும், சதாசர்வகாலமும் அந்த அந்த மதப் பிரசாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்துபோய் விடுமே என்கின்ற கவலை இன்று உலகிலுள்ள எல்லா மதஸ்தர்களிடமும் ஆதிமுதல் இன்றுவரை இருந்துதான் வருகின்றது. இந்த அபிப்பிராயத்திலும், காரியத்திலும் உலகில் இன்ன மதம் உயர்வு, இன்ன மதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை.


சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக்கொண்டு ஆயிரம் ஆட்களையோ, அல்லது இரண்டாயிரம் ஆட்களையோ நியமித்து, 5, 6 பாஷைகளில் பத்திரிகைகளையும் வைத்துக் கொண்டு, ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால் ஒரு மதத்தைக் கற்பித்து, அம்மிருகத்துக்குச் சில 'தெய்விகத்தன்மை 'யைக் கற்பித்து, அது பல 'அற்புதங்கள் ' செய்ததாக ஆபாசமானதும், பொருத்தமற்றதுமான கதைகளைக் கட்டிவிட்டுப் பிரசாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால், கண்டிப்பாகச் சில வருடத்திற்குள் இலட்சக்கணக்கான மக்கள் அம்மதத்தைப் பின்பற்றுபவர்களாகச் செய்துவிடலாம். பிறகு, அந்த மதத்தை எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் அவன் தண்டிக்கப்படவோ, வையப்படவோ, அடிக்கப்படவோ, அம்மதக்காரரால் கொலை செய்யப்படவோ ஆளாகும்படியும் செய்துவிடலாம்.


ஆதலால், மதங்களுக்கு ஜீவநாடியாக இருந்து வருவது பணமும், பிரச்சாரமுமேயல்லாமல் அவற்றின் தெய்விகத் தன்மையோ, உயர்ந்த தத்துவமோ, அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருந்தக்கூடிய கொள்கைகளோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லிவிடமுடியாது.


சமீப காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை 'ஒரு பேய் பிடித்துக் கொண்டது ' என்று அந்தப் பெண்ணும் தலைவிரித்து ஆடத் தொடங்கினாள். அதற்காக ஒரு பேயோட்டியைக் கூப்பிட்டு, அந்தப் பேயை ஓட்டச் சொன்னதில், அந்தப் பேயோட்டி இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் யார் என்று கண்டுபிடிப்பதில் 2 நாள் செலவழித்துக் கடைசியாக, '5, 6 வருஷத்திற்கு முன்னால் அவ்வூர்க் கிணற்றில் விழுந்து செத்துப்போன ஒரு மராட்டியன் அடுத்த ஜன்மத்தில் நாயாய்ப் பிறந்து இந்தப் பெண் வீட்டில் வெகு செல்லமாய் வளர்ந்து, இந்தப் பெண்ணிடமும் மிக அன்பாய் இருந்து, ஆறு மாதத்திற்கு முன் அதுவும் கிணற்றில் விழுந்து செத்துப் போனதால், அது பேயாகி இப்போது அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டது ' என்று சொன்னான். இதை அந்த ஊர்க்காரர்கள் நம்பினார்கள் என்ற குறியை இந்தப் பெண் தெரிந்தவுடன், பேய் ஆடும்போது அடிக்கடி நாய் மாதிரி குரைப்பதும், சிற்சில சந்தர்ப்பங்களில் மராட்டிப்பேச்சு மாதிரி பேசுவதுமாய் இருந்தாள். அதுமாத்திரமல்லாமல், தன்னைப் பிடித்திருக்கும் பிசாசு நாய் பிசாசுதான் என்பதைக் காட்டுவதற்காகச் சில சமயங்களில் மலத்தைச் சாப்பிடவும் செய்தாள். மற்றும், வேறு பல நாய்களுக்கும் தின்பண்டம் போட்டு சதா 7, 8 நாய்களுடன் காமாதூர விளையாட்டும் விளையாடுவாள். இதைப் பார்த்த எல்லோருமே சிறிதுகூடச் சந்தேகமில்லாமல் இந்தப் பெண்ணைப் பிடித்திருப்பது நாய்ப் பிசாசுதான் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.


மதங்களும் இதுபோலவேதான். தன்னை ஒரு மதக்காரன் என்று காட்டிக்கொள்ள வேண்டுமானால், மதகுருக்கள் அல்லது மதகர்த்தர்கள், அல்லது மதப் பிரச்சாரக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, அந்தப்படி நடக்கத்தான் ஒவ்வொரு மதபக்தனும் ஆசைப்படுகிறான்.


மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும், சைன்சுக்கும் (Science), மதத்துக்கும் சம்பந்தம் பார்க்கக்கூடாதென்றும், பகுத்தறிவு வேறு, மதக்கோட்பாடுகள் வேறு என்றும், இந்தக்காலம் வேறு, அந்தக்காலம் வேறு என்றும், பெரியோர்கள் நியமனங்களுக்குக் காரண காரியங்கள் விசாரிக்கக்கூடாது என்றும், ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக் கூடாது என்றும் எல்லா மதக்காரர்களும் சொல்லிவிடுவதால், உலகில் மதத்தின் பேரால் எந்த மூடனும் எதையும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியத்தின் மீதே மத ஆபாசமும், மத அயோக்கியத்தனங்களும் உலகில் நிலைத்து வருகின்றன. இந்த லட்சணத்தில் உள்ள மதங்களுக்கு ஆள்பிடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் மீது மதமாற்றப் பிரச்சாரங்களும் நடந்து வருகின்றன என்றால், இது, 'புழுத்ததின் மீது நாய்விட்டையிட்டது ' என்கின்ற பழமொழிப்படி, மனிதர்களை மேலும் மேலும் மூடர்களாக்குவதாகவே இருந்து வருகிறதே அன்றி, இதில் நாணயமோ - உயர்வோ இருப்பதாகச் சொல்ல முடியாது. சாதாரணமாக, இந்திய மக்களில் 100-க்கு 92 பேர்கள் தற்குறிகள், எழுதப்படிக்கத் தெரியாத பாமர மக்கள்; இவர்களிலும் 100-க்கு 90 பேர்கள் நல்ல ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமலும், வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் செய்யலாமென்று கற்பிக்கப்பட்டிருக்கிறவர்கள். இப்படிப் பட்ட இவர்களிடத்தில் எது சொன்னாலும் ஏறாது. என்ன சொன்னாலும் நம்பும் சக்தி - எழுத்து வாசனை அறியாத மூடர்களுக்கே அதிகம் ஆதலால், இப்படிப்பட்ட ஜனங்களிடம் மதப்பிரசாரம் செய்து மதமாற்றுதல் வேட்டை ஆடுவது என்பது யாவருக்கும் சுலபமான காரியமாகும்.


இந்திய மக்களின் கல்வி அறிவுவாசனை அற்ற தன்மையும், பாமரத்தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மதவேற்றுமைகளும், மதமாற்றங்களும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், புத்தர்கள், யூதர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள், ஸ்மார்த்தர்கள் - முதலிய கடவுள் மாறுபாடு உள்ளவர்களும், மதகர்த்தாக்கள் மாறுபாடுள்ளவர்களும், மதக்கோட்பாடுகளின் அர்த்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினர்கள் இருந்துகொண்டு, வெகுகாலமாகவே மதமாற்றப் பிரச்சாரம் செய்துகொண்டுதான் வருகிறார்கள்.


ஆனால், இந்த மதங்களில் மனித வாழ்க்கைத் தத்துவத்தில் ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால், ஒன்றுமே காணமுடியாத நிலையில்தான் இருந்து வருகின்றன.


எல்லா மதத்துக்குமே - ஒரு கடவுள் உண்டு,


மேல் லோகமுண்டு,


மோட்ச நரகமுண்டு,


ஆத்மா உண்டு,


செத்த பிறகு இந்த ஆத்மா என்கின்ற கொள்கைகளிலாவது, அல்லது மனிதன் அவனவன் நன்மை - தீமைக்கு ஏற்றவிதம் பலன், மோட்ச - நரகம் அனுபவிப்பான் என்கின்ற கொள்கைகளிலாவது கருத்து வித்தியாசமில்லாமலே இருந்துவருகின்றது.


பிரத்தியட்ச அனுபவத்திலோ, எல்லா மதத்திலும் 'அயோக்கியர்கள் ', 'யோக்கியர்கள் ' இருந்துதான் வருகிறார்கள்.


எல்லா மதத்திலும் ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள்.


எல்லா மதத்திலும் எஜமான், கூலியாள் இருக்கிறார்கள்.


எல்லா மதத்திலும் உற்சவம், பண்டிகை இருக்கின்றன.


எல்லா மதத்திலும் வணக்கம், தொழுகை, பிரார்த்தனை ஜபம், தவம் இருக்கின்றன.


எல்லா மதக் கடவுள்களும் - தொழுகை, பிரார்த்தனை வணக்கம், பூசை ஆகியவைகளுக்குப் பலன் கொடுக்கும் என்றும், இவற்றாலேயே நாம் செய்த எப்படிப்பட்ட பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடலாம் என்றும் ஒரு நம்பிக்கை இருந்துதான் வருகின்றது.


மற்றும், எல்லா மதக்கடவுள்களும் கண்களுக்குத் தோன்றாததும், மனத்திற்குப் படாததும், ஆதி அந்தம், ரூபம், குணம், பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவைகளுமாகவேதான் இருக்கின்றன. எல்லா மதங்களும், 'கண்களுக்கும் ' மனத்திற்கும் தோன்றக்கூடிய எந்த வஸ்துவுக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்றும், ஆனால், கண்களுக்கும் மனத்திற்கும் எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு மாத்திரம் ஒரு கர்த்தா இல்லையென்றுமே சொல்லுகின்றன. ஒரு மதமாவது, என் கடவுள் கண்ணுக்குத் தெரியக்கூடியது என்றோ, என் வேதமாவது தனது கோட்பாடுகள் எல்லாம், மக்கள் எல்லோரும் ஏற்று நடக்கக்கூடியதாய் இருந்து வருகின்றது. அல்லது நடக்கக்கூடியதாய்ச் செய்யச் சக்தி உள்ளதாய் இருக்கின்றது என்றோ, சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை. எல்லா மதக்காரர்களுக்கும் பசி, தாகம், நித்திரை, அதிருப்தி, கவலை, போதாது என்கின்ற தரித்திர குணம் ஆகியவை ஒன்று போலவேதான் இருக்கின்றன. எல்லோருடைய வேதமும், கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலுந்தான் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன என்றாலும், அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவும், பலவற்றில் நேர்மாறான கருத்துக் கொண்டதாகவும் இருந்து வருகின்றன. எல்லா மதக்காரர்களுக்கும் ஒவ்வொருவித அடையாளம் இருக்கின்றது. இந்த நிலையில், மதப்பிரச்சாரத்தால், மத மாற்றத்தால் மனிதர்களுக்கு என்ன லாபம் ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை.


சாதாரணமாக, இந்தியர்களில் 8 கோடி முஸ்லீம்கள் இருக்கின்றார்கள்; 1 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்; சுமார் 10 கோடி வைணவர்கள் இருக்கிறார்கள்; 5 கோடி சைவர்கள் இருக்கிறார்கள்.


மற்றும், கலப்பு மதம் உள்ளவர்களும், மதக்குறிப்பு இல்லாதவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லக்கூடுமானாலும், இவர்களில் பெரும்பான்மையோர் சமீப காலங்களில் அதாவது சுமார் 1000, 2000 வருடங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள் என்று சொல்லலாமானாலும், இவர்களின் வாழ்க்கையில் ஏதாவது விசேஷமோ உயர்வோ உண்டா என்பதைச் சிந்தித்து நன்றாய்ப் பார்ப்போமேயானால், ஒருவித மேன்மையும் எந்த ஒரு தனி மதக்காரருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.


அதாவது, அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும், அறிவியலிலாகட்டும், சமுதாய வாழ்க்கையிலாகட்டும், ஆண், பெண் தலைமையிலாகட்டும், எல்லோரும் ஒரு திட்டத்தில் இல்லாவிட்டாலும், கொள்கையில் ஒரு மாதிரியாகவேதான் இருந்து வருகின்றார்கள்.


ஆகையால், மனித சமூகத்திற்கு அவரவர்கள் வாழ்க்கையில் உள்ள கவலைகள் அற்று - அதிருப்தி ஒழிந்து, சாந்தியும், சந்தோஷமும் கொண்டு வாழ்வதற்கும், பொருளியலிலும், சமுதாய இயலிலும், ஆண், பெண் தன்மையிலும் சமதர்ம தத்துவம் கொண்ட வாழ்க்கை ஏற்பட இந்தியாவுக்கோ, அல்லது உலகத்துக்கோ இனி மத ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா, அல்லது மதம் மாற்றுப் பிரசாரம் வேண்டுமா என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்க வேண்டிய முக்கியக் கடமையாகும்.


மதம் மாற்றுதல், மதப்பிரசாரம் ஆகிய காரியங்களால் சமீப காலத்திற்கு முன்பு உலகிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் நடந்த முட்டாள்தனமான - மூர்க்கத்தனமான பலாத்காரக் கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குத்துவெட்டுகளும், கொலைகளும், சித்திரவதைகளும் எவ்வளவு என்பதற்குச் சரித்திரங்கள், புராணங்கள், பிரத்தியட்ச அனுபவங்கள் எத்தனையோ மலிந்து கிடக்கின்றன. இவைகளையெல்லாம் உத்தேசித்தாவது, இனி வரும் சுயமரியாதை - அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மதவிஷயத்தைப் பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புத்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும், பத்திரிகைகளில் எழுதினாலும் - அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, தோளோடு தோள் பிணைந்து தோழர்களாக வாழமுடியும் என்பதோடு, மதத் தத்துவங்களின் பயனால் இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு-தாழ்வு நிலை ஒழிந்து, சகல துறைகளிலும் சமத்துவத்துடன் வாழ முடியும் என்று வற்புறுத்திக் கூறுகிறோம். அந்த அபிப்பிராயமானது, மதங்கள் தெய்வத்தினாலும், தெய்வாம்சம் பெற்றவர்களாலும் உண்டாக்கப்பட்டது என்கின்ற நம்பிக்கையை உண்மையாயும், உறுதியாயும் உடையவர்களுக்கு விரோதமாய் இருக்காது; அவர்கள் ஆத்திரப்படவும் மாட்டார்கள் என்றும் கருதுகின்றோம். ஏனெனில், அப்படிப்பட்ட மதமானது அதாவது, கடவுளால் உண்டாக்கப்பட்ட மதமானது மனிதனுடைய பிரசாரம் இல்லாவிட்டால் அல்லது ஏதாவது ஒரு மனிதன் மறுத்தால் மறைந்து போகுமே - அழிந்து போகுமே என்று அவர்கள் (மத பக்தர்கள்) பயப்பட மாட்டார்கள்.


ஜனவரி 1, 1937 'பகுத்தறிவு ' இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.

காவடி எடுக்கும் பார்ப்பானை பார்த்ததுண்டா?

எங்களைப் பார்த்து முன்பு எல்லோரும் தேசத் துரோகிகள், நாசகாரர்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு சேவை செய்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் கேட்கிறோம்: பறையனுக்கும், சக்கிலிக்கும் எங்கிருக்கிறது சுயராஜ்யம்? ஆகவே முதலில் சாதி ஒழிய வேண்டும் என்று கூறி, சாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபடும் பொழுதுதான், எங்களை நாத்திகர் என்று கூறுகிறார்கள். இந்த வேலையை இப்பொழுது மந்திரிகள், நீதிபதிகள், பார்ப்பனப் பத்திரிகைகள் அனைவரும் செய்து வருகின்றனர். இதைப் பற்றிய கவலை எங்களுக்கில்லை. சாதியைக் காப்பாற்ற கடவுள் எதற்கு?

ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்க பணமில்லை என்று கூறுகிறார்கள். கோயில்களில் ஆயிரக்கணக்கில் நிலங்களும் நகைகளும் இருக்கின்றனவே, அதை யார் வயிற்றில் வைத்து அழுவது? இந்த நாட்டு மக்களின் கல்வியைப் பற்றிக் கவலையில்லாமல் சாதியைக் காப்பாற்ற கோயில் கட்ட வேண்டும் என்றும், கோயில்களை ‘ரிப்பேர்' செய்ய வேண்டுமென்றும் கூறுகிறாய். நேற்றுகூட பழனியாண்டவர் கோயிலுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள். இந்தப் பணத்திற்கு எத்தனை கல்லூரிகள் கட்டலாம். வருடத்திற்கு கோயில்கள் மூலம் 45 லட்ச ரூபாய் வருகிறதே, எப்படி வருகிறது? 1956ஆம் வருடத்திலும் இந்த அக்கிரமமா?

யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?

கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?

அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956

Tuesday, December 25, 2007

பெண்கள் விடுதலையடைய

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக்கொண்டு மிகப்பாசாங்கு செய்து வருகிறார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண் மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப்ராயம். எதுபோலவென்றால், இந்தியப் பொது மக்கள் விடுதலைக்கு வெள்ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதன் பலனாக, எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம் விடுதலைபெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றதோ அது போலவும், சமூகச் சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படிச் சமூகக் கொடுமைகளும் உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும் மதத்தினாலும் நிலைபெற்றுப் பலப்பட்டு வருகின்றதோ அது போலவும் என்று சொல்லலாம்.


அன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக்கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா ? எங்காவது நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா ? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா ? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா ? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா ? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய்விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த 'ஆண்மை ' உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லையென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் 'ஆண்மை ' நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் 'ஆண்மை ' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்மை விடுதலையில்லை என்பது உறுதி. 'ஆண்மை 'யால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள்.


சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் 'ஆண்மை 'க்குத் தான் உரியதாக்கப்பட்டுவிட்டது. ஏன் ? 'ஆண்மை 'க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண்மக்கள் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.


எனவே, பெண் மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் ஆண்மையும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும் இதை உண்மையென்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்ற தென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. பொது மக்கள், பிறவியில் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டுமானால் எப்படிக் கடவுளாலேயே மக்களுக்குப் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்து மதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசியமோ அது போலவே பெண் மக்கள் உண்மை விடுதலை பெற்று உண்மைச் சுதந்திரம் பெறவேண்டுமானால் 'ஆண்மையும் ' பெண் அடிமையும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.


பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில், இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழுவிடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜூப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய் விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்துப் புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனமோ என்பதாகப் பொது மக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிர, அதாவது பெண்கள் பிள்ளைபெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலையில்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாயிருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்ல வரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும் போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு தன்மை நடத்தி வருகின்றபோது இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.


தவிர, 'பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது. மானிடம் வர்க்கம் விருத்தியாகாது ' என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம் ? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும் ? அல்லது இந்தத் தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாயிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இது வரையில் பெருகிக்கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.


பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் அந்த இடத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே நாம் கவலை கொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேறு எவ்விதமான முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்வித கஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இன்பமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன்தான் பிள்ளை குட்டிக்காரனாயிருப்பதனாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும் முறைகளையும் மற்றொரு சமயம் விவரிப்போம்.


- ஆகஸ்ட் 12, 1928 'குடி அரசு ' இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரை.

மதங்கள் அழிக்கப்படவேண்டும்-பெரியார்

உலகில் உள்ள மக்கள் அனைவரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங்கள் நோய் என்பது மிகமிகக் கொடியதாகும்.


உண்மைக் கடவுள் என்கிற தத்துவத்தால் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை; ஆனால், எப்படிப்பட்ட மதத்தாலேயும் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இப்படிச் சொல்லுகிறோம் என்றால், கடவுளைப் பற்றிய ஒரே கருத்துள்ளவரும் மதத்தால் வேறுபட்டவராகப் பிரிக்கப்பட்டவராக இருந்துவருகிறார்கள். ஆனால், கடவுளைப் பற்றிய இரு வேறு கருத்துள்ளவர்களும் மதத்தால் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.


உதாரணமாக, ஒரே கடவுள் அதுவும் உருவமற்ற கடவுள் என்கின்ற எண்ணமுள்ள முஸ்லீம், கிருஸ்துவர், பிரம்ம சமாஜத்தார் முதலிய ஏகத் தெய்வ கொள்கைக்காரர்களும் மதம் காரணமாக வேறுபட்டிருக்கிறார்கள். பலவிதமான கடவுள் தன்மை கொண்டவர்களும், கடவுளே இல்லை என்பவர், மாயாவாதி, சூனியவாதி, உலகாயதவாதி, இயற்கைவாதி, சாரவாகன், வேதாந்தி முதலிய பலரும் மதம் காரணமாக இந்துக்களாகவே இருந்து வருகிறார்கள். எனவே, மக்களைப் பிரித்து வைத்திருப்பதற்குக் கடவுளைவிட மதமே முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.


கடவுள் உணர்ச்சி வேறுபல காரணங்களுக்குக் கேட்டை விளைவிப்பதாக இருந்தாலும், உலகப் பொது நலனுக்கும் ஒற்றுமைக்கும் கேடு உண்டாக இடம் தந்து மக்களுக்கு ஒன்றுபோல் கேடு செய்து வருவன மதங்களேயாகும்.


கடவுள்கள் திருத்தத்திற்கு உட்பட்டவைகளாகலாம். ஆனால், மதம் திருத்தப்பாட்டுக்கு இடம் கொடுப்பதில்லை. மதத்தின் அழிவுதான் திருத்தம் என்று சொல்லவேண்டி இருக்கிறது.


மதம் பெரிதும் சடங்கையும், காரியத்தையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆதலால், மதம் என்பது ஒரு மனிதனின் செய்கை, நடப்பு ஆக இருக்கவேண்டி இருப்பதால், வெளிப்படையாகப் பிரிந்திருக்க வேண்டியதாகிறது. கடவுளைப் பற்றிய கருத்து ரகசியமாக-வேறு யாருக்கும் தெரியாததாக இருக்கலாம். ஆதலால் கடவுளைப்பற்றி ஒருவருக்கொருவர் மாற்று அபிப்பிராயம் கொண்டவர்கள் ஒன்றாக இருக்கலாம். அதனால்தான் மனிதன் கடவுளை ஏமாற்றுகிறான். ஆனால், மதம் வெளிப்படையாய் வேஷம் போட்டு நடித்துத் தீர வேண்டியதாகவே இருக்கிறது. ஆதலால், ஒரு மனிதன் மதத்தை ஏமாற்ற முடியாது. ஏமாற்றினால் தெரிந்துவிடும்.


ஆகவே, மனித சமுதாயத்தை ஒன்றுபடுத்தவும், சமதர்மம் தழைத்து ஓங்கவும் மதங்களே முதலில் அழிக்கப்படவேண்டும். ஏனெனில், கடவுள் முன்னிலையில் மக்கள் யாவரும் ஒன்று என்று சொல்லி எந்தக் காரியத்தையும் துவக்கலாம். ஆனால், மதங்களின் முன்னிலையில், எல்லா மத மக்களும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. மதங்களாலேயே மக்கள் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே, மக்கள் யாவரும் ஒன்று, சரிசமம் என்றால் மதங்கள் அழிய வேண்டி வந்துவிடுமாதலால், மதங்கள் மக்களை ஒன்றுபடுத்தச் சம்மதியா.


இந்தியாவில் அநேக மதங்கள் இருக்கின்றன. அநேகமாக இந்தியாவின் பூர்வகுடிகளே இன்று எல்லா மதக்காரர்களாகவும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களும், மங்கோலியர்களும் சில மதங்களில் கலந்து இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையுடையவர்களாகத்தான் இருக்கக்கூடும். ஆனாலும், இந்தியப் பூர்வக்குடிகளுக்கு என்ன மதம், என்ன கொள்கை இருந்தது என்று காட்டும் ஆதாரம் எதுவுமே காணக்கிடைப்பதில்லை. விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் இங்கு என்ன மதம் இருந்தது என்பது இதுவரை யாராலும் தெளிவாக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆரியர் இந்நாட்டுக்கு வரும் முன் நிலம், இடம் காரணமாக மக்கள் பழக்கவழக்க இயற்கைத் தன்மைகளில் பேதம் இருந்ததாகக் காணப்படுவதல்லாமல், மதம், மதத்தின் காரணமாக ஏற்பட்ட வேஷம், சடங்கு, ஜாதி என்பவைகள் காரணமாக பேதம், பிரிவு இருந்ததாகச் சொல்லுவதற்கு அறிகுறிகளைக் காண முடியவில்லை.


மதங்கள் பிரிவினைக்கும், பேதத்திற்கும் காரணமாய் இருப்பது மாத்திரமல்லாமல், மடமைக்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூடநம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. இம்மாதிரி மதங்களேதான் கடவுளையும் சிறுமைப்படுத்திவிட்டன என்பது மாத்திரமல்லாமல், எதற்காகக் கடவுள் தேவை என்று சொல்லப்படுகின்றதோ, எதற்காகக் கடவுள் இருக்கிறார் என்று எண்ண மக்கள் செய்யப்படுகின்றார்களோ, அதற்கு மாறான பயன் உண்டாகும்படி மதங்கள் செய்துவிடுகின்றன.


மற்றும், எந்த மதமும் மக்களுடைய இயற்கைக் குறைபாடுகளுக்குப் பரிகாரம் செய்யவில்லை என்பது மாத்திரமல்லாமல், மதங்களால் மக்களுக்குப் பல செயற்கைக் குறைபாடுகளும் உண்டு பண்ணப்படுகின்றன. எனவே, மனித தர்மவாதி, மனித சமதர்மவாதி, (மனித) ஜீவகாருண்யவாதி, மதங்களால் பாதிக்கப்பட்டவனாகி, மதங்களில் இருந்து வெளிவந்து அல்லது மதங்களுக்கெல்லாம் மேம்பட்டவனாக இருந்துகொண்டு தொண்டாற்ற வேண்டியவனாகிறான்.


ஜூலை 27, 1946 'குடி அரசு ' இதழில் வெளியான பெரியார் பேச்சு.

திருவள்ளுவரும்-பெரியாரும்

தற்காலம் நமது தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூல்களிலெல்லாம் திருவள்ளூவனால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகின்றதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்தப் பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும்.


என்றாலும் திருவள்ளூவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்களென்றாலோ திருவள்ளூவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்து விடுவார்கள்.


இவ்வளவு இருந்தாலும், திருவள்ளுவர் யார் ? என்ன ஜாதி ? என்ன மதம் ? அவரது கொள்கை என்ன என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரைத் தம் சமயத் தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை வைணவர் என்று கொண்டாடுகின்றனர். சமணர்கள் அவரைத் தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாராராகிய பறையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரைத் தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டு விட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்பட வில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்கம், நரகம், மேல்லோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கையையும் கொண்ட விஷயங்களையும் பரக்கக் காணலாம்.


எனவே, இவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர் தற்காலப் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக்கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள், புராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பார்ப்பனீயம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர் என்றும், உள்ளூக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்துகொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளூம் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்.


இவை எப்படி இருந்தாலும் திருவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையைப் பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளிலுள்ள நீதிகள் ஒருபுறம் இருக்க, திருவள்ளுவன் மனைவியாகிய வாசுகியம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமலிருக்க முடியாது. அதாவது வாசுகி அம்மையாரைத் திருவள்ளுவர் தம் மனைவியாக ஏற்றுக்கொள்ளுமுன் ஆற்று மணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்புள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க. அவ்வம்மையார் அந்தப்படியே மணலைச் சாதமாகச் சமைத்து கொடுத்து திருவள்ளுவருக்குத் தமது கற்பைக் காட்டினாராம்.


அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.


திருவள்ளுவர் ஒரு நாள் பகலில் நூல் நூற்கும் போது நூற்கதிர் கீழே விழ, உடனே அம்மையாரைக் கூப்பிட்டு, 'விளக்கேற்றிக் கொண்டுவா, நூற்கதிரைத் தேடவேண்டும் ' என்று சொல்ல அம்மையார் 'பகல் நேரத்தில் விளக்கு எதற்கு ' என்று கேட்காமல் - கேட்டால் பங்கம் வந்து விடுமெனக் கருதி உடனே விளக்குப் பற்ற வைத்துக்கொண்டு வந்து கொடுத்தார்களாம்.


ஒரு நாள் நாயனார் பழைய சாதம் சாப்பிடும்போது 'சாதம் சுடுகின்றது ' என்று சொன்னவுடன் அம்மையார் 'பழைய சாதம் சுடுமா ' என்று கூடக் கேட்காமல் - கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமோ என்று கருதி உடனே விசிறி எடுத்துக்கொண்டு வந்து வீசி ஆற்றினாராம்.


திருவள்ளுவர் அம்மையாரைத் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாகக் கொண்டு வந்து வைத்துவிட்டு, சாதம் பரிமாறும்படி கட்டளை யிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும் 'இது எதற்காக ' என்று கேட்காமல், கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப்போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்தப் படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் நிர்வாண காலத்தில் அம்மையார் உயிர் போகாமல் ஊசலாடிக் கொண்டிருக்க, அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது, அம்மையார் பயந்து கொண்டு 'தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் ஊசியும் வைக்கச் சொன்னீர்களே அது எதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர் போகாமல் ஊசலாடி மரணாவஸ்தைப்படுகிறேன் ' என்று சொன்னாராம்.


பிறகு திருவள்ளுவர் தயவுசெய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை, அதாவது சாப்பிடும் போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம். இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச் செருகலாகவோ, கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாயிருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும் கற்பனையாக இருந்தால் கற்பனையல்லாத புராணம் எது ? அதற்கு என்ன பரிட்சை ? என்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக.


- ஜனவரி 20, 1929 'குடி-அரசு ' இதழில் தந்தை பெரியார் அவர்கள், சித்திரபுத்திரன் என்னும் புனை பெயரில் எழுதிய கட்டுரை.

Monday, December 24, 2007

கோஷா ஒழிய வேண்டும்

எந்த மனித சமுதாயம் பழமையிலுள்ள தீமைகளைக் களைந்து புதுமையிலுள்ள நன்மைகளை ஏற்றுக் கொள்கிறதோ, அந்தச் சமுதாயந்தான் வாழ்க்கை ஏணியில் ஏறிச் செல்ல முடியும். மதம், மத ஆதாரம் என்பவை யாவும் மனிதனுக்காக, மனிதனால் வகுக்கப்பட்டவை என்ற உண்மையை உணராத மக்கட்பிரிவு அறிவுத் துறையில் முன்னேறவே முடியாது. மனிதன் மதத்திற்கு அடிமையாக இருக்கக் கூடாது; அது மனிதத் தன்மைக்கே இழுக்கு. சமயம் என்பது சமயத்திற்கேற்றபடி வளைந்து கொடுக்கக் கூடியதாயிருக்க வேண்டும். வளைந்து கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனால், இது போதாது.


உச்சிக் குடுமிதான் மதக்கட்டளை; தாடியும் மொட்டைத் தலையுந்தான் மதக்கட்டளை என்று இருந்தது. இன்று மாறிவிடவில்லையா ? அதுபோல, அவசியத்திற்கும், தேவைக்கும், வசதிக்கும், அறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும் தக்கபடி மதக்கட்டுப்பாடுகள் நீண்டுகொடுக்க வேண்டும். மதத்தின் தத்துவம் வேறு, அதன் புறக்கட்டுப்பாடுகள் வேறு; இத்துறையில் இஸ்லாம் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள மதச்சடங்குகள், அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் மிகக் கொஞ்சம் என்றே கூறலாம். முஸ்லிம் இளைஞர் உலகம் இச்சிறு கட்டுப்பாடுகளைக் கூட உடைத்து வருவது மகிழ்ச்சிக்குரியது. உதாரணமாக மொஹரம் பண்டிகை என்ற பெயரால் புலிவேஷம் போட்டு ஆடுவதும், பஞ்சாதூக்கி ஆடுவதும், வரவரக் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், இஸ்லாம் மதத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத இந்த அநாகரிக முறைகளை முஸ்லிம் இளைஞர்கள் அடியோடு ஒழித்துவிடப் பாடுபட வேண்டும். சென்னையில் மாரடி என்ற பெயரால் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ஆபாச முறையை முஸ்லிம்கள் கிளர்ச்சி செய்து நிறுத்திவிட வேண்டும். பக்கிரிகள் மயில் தோகை கொண்டு மந்திரிப்பது, ஹிந்துக்கள் நாகூரில் சென்று மொட்டையடித்துக் கொள்வது ஆகிய அறிவீனமான செயல்களை முஸ்லிம் அறிஞர்கள்தாம் நிறுத்த வேண்டும். முஸ்லிம் பத்திரிகை உலகம் இவைகளைத்தான் தன் முதற்கடமையாகக் கருத வேண்டும்.


அடுத்தபடி முக்கியமானது முஸ்லிம் பெண்களிடையே திணிக்கப்பட்டிருக்கும் கோஷா முறை. இதனால் எத்தனை அமீருதீன்கள், பேகம்ஷா, நவாஸ்கள், அருணா அஸல் அலிகள் ஆகியோர் குடத்திலிட்ட விளக்குகளைப் போலக் கிடக்கிறார்கள் என்பதை ஒரு நிமிஷமாவது நினைத்துப் பார்த்தால், முஸ்லிம் அறிஞர்கள் இந்தத் தீய முறையை ஒழிப்பதற்குத் தாமதிக்கவே தொடங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் உயர்தரக் கல்விக்கூடம் பயின்று வருகின்றனர். முஸ்லிம் பெண்களிடையே ஆயிரக்கணக்கான பெண் டாக்டர்கள், ஆசிரியைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் தோன்ற வேண்டும். அப்படியானால், பெண்களை முகமூடியிட்டு அடக்கிவைத்திருப்பது நிறுத்தப்பட வேண்டும்.


சேலம் நகர சபையினர் இத்துறையில் சென்னை நகர சபையினரைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொண்டிருப்பது பற்றிப் பாராட்டுகிறோம். முஸ்லிம் பெண் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகளுக்காகவும் ஆசிரியைகளுக்காகவும் இது காறும் இருந்துவந்த கோஷா வண்டிகளைப் புதிய நகர சபையார் நிறுத்திவிட்டார்களாம். முஸ்லிம் பெண்ணுலகத்துக்குச் சேலம் நகர சபையார் செய்துள்ள நன்றியை அவ்வூரில் பெண்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். சென்னை நகரசபையானது மற்ற ஊர்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டாலும், சேலத்தைப் பின்பற்றியாவது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.


ஈரானில் முஸ்லிம் பெண்கள் முகமூடியில்லாமல் கடைகளுக்குச் செல்வதாகவும், அப்பேர்ப்பட்டவர்களுக்கு எந்தச் சாமானையும் கொடுக்கக்கூடாது என்று முஸ்லிம் வைதிகர்கள் கிளர்ச்சி செய்வதாகவும் சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தோம். பழமை விரும்பிகளும், பாசி படர்ந்த மதியினரும் எந்த நாட்டிலும் எந்த மதத்திலும் உண்டு. கிருஸ்து மதத்தில் கத்தோலிக்க குருமாரும், ஹிந்து மதத்தில் ஆரியரும், புத்த மதத்தில் பிட்சுகளும் இல்லையா ?


பழமை விரும்பிகளின் திருப்திக்காக மனித சமுதாயத்தைப் பலியிடுவது என்பது மதியீனம்.


கோஷா முறையினால் சூரிய வெளிச்சமும் நல்ல காற்றும் இல்லாமல் காசம் போன்ற நோய்கள் எளிதில் பரவுவதாக எல்லா டாக்டர்களும் கூறிவிட்டனர். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வெளிச்சத்தையும் காற்றையும் மனித சமுதாயத்தின் சிறந்த பகுதியாகிய தாய்க் குலத்திற்கு மட்டும் கிடைக்காமல் தடுப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம் என்பதை ஆண்கள் ஆலோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். வட நாட்டு ஹிந்துக்களிடையே கூட இந்தக் கோஷா முறை இருந்து வருகிறது. இதுவும் விரைவில் ஒழிந்துவிடும் என்பதே நம் நம்பிக்கை.


துருக்கி புரட்சி வீரரான கமால்பாட்சாவும், ஆப்கானிஸ்தான் புரட்சி வீரரான அமானுல்லாவும் முஸ்லிம் பெண்களை விடுவித்த மாவீரர்கள். கமால் பாஷா கோஷாவை ஒழித்தது மட்டுமல்ல. பெண்கள் கையில் துப்பாக்கியைத் தந்தவர். பெண் ராணுவத்தை முதன் முதலில் நிறுவிக்காட்டிய ஒப்பற்ற வீரர்.


திராவிட நாடு முஸ்லிம் சமுதாயத்திடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமானுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் பெண்கள் காலில் இடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். பிற மதங்களிலுள்ள ஊழல்களைப் பழிப்பதுடன் மட்டும் திருப்திபடக்கூடாது. தங்கள் சமுதாயத்திலுள்ள தீமைகளையும் களைந்தெறிய வேண்டும்.


கோஷா முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி எவரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். 'தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்டு வீட்டிற்குள் இருந்து பாருங்கள் ' என்பதே.


(29.11.1947 - 'விடுதலை ' இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)

பெரியார் நினைவுநாள் சிந்தனை

சாதி ஒழிப்புத் தொடக்கம் - நடப்பு அதை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அம்பேத்கர் அவர்கள் நல்லவண்ணம் எழுதியிருக்கிறார்கள். முன்பு வடநாட்டின் பஞ்சாபில் சாதி ஒழிக்க ஓர் இயக்கம் ஏற்பாடு செய்தார்கள். அதைச் சாதி ஒழிக்கும் ஸ்தாபனம் என்று சொன்னார்கள். நன்கு வேலை செய்தார்கள். நம் பத்திரிகைகளை வாங்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். நல்ல பகுத்தறிவுடன் கூடிய கார்ட்டூன்களைப் போட்டார்கள்; அதிலே என்னையும் உபதலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாக நடந்து கொண்டிருந்தது. பிறகு பணக்காரர்கள் அதை விலைக்கு வாங்கி விட்டார்கள். அதற்கு உதவி செய்வதாகச் சொல்லி வந்தார்கள், விலைக்கு வாங்கினார்கள். இருந்தாலும், அதன் மூலம் சாதி ஒழிப்பு மாநாடு என்று கூட்டி, தலைமை வகிக்க அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் சம்மதித்தார்கள்.

அவர்கள் அந்த மாநாட்டில் பேச சொற்பொழிவை எழுதினார்கள். அதைக் கண்டதும் ரொம்பத் திடுக்கிட்டு விட்டார்கள். மதம், சாஸ்திரம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; அதிலே ஒன்று இருந்தால் கூட சாதி ஒழியாது என்று சொல்லி இருக்கிறார். “மநு நீதி, சுருதி, மதம் இவற்றை முதலில் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதைச் செய்யாமல் சாதியை ஒழிக்க முடியாது; இதுவே எனது உறுதியான அபிப்பிராயம்’ என்று எழுதியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே அங்கே சாதியை ஒழிக்க வேண்டுமென்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தியவர்கள், மத விரோதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவரை அணுகியபோது, அவரும் “என்னைத் தலைமை தாங்கப் போடுவதால் என் கருத்தைச் சொன்னேன்’ என்றார். இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாது என்று மாநாட்டினர் சொல்ல, “நீங்கள் வேண்டுமென்றால் இது தப்பு என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்; உங்கள் மாநாட்டிற்குத் தலைமைப் பதவிக்காக என் கருத்துக்கு விரோதமாகப் பேச முடியாது’ என்று சொல்லிவிட்டார். அவர்கள் கெஞ்சியும் முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த மாநாட்டையே நிறுத்தி விட்டார்கள்.

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.

---தந்தைபெரியார்
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964ல் ஆற்றிய உரை

Sunday, December 23, 2007

கற்பும்-பெரியாரும்

ஆஸ்திகப் பெண்: என்ன அய்யா நாஸ்திகரே! மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றி ஆட்சேபணைகள் எப்படி இருந்தாலும், பெண்களைக் கடவுளே விபசாரிகளாய்ப் பிறப்பித்துவிட்டார். ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.


நாஸ்திகன்: அம்மா! அப்படித் தாங்கள் சொல்லக்கூடாது. மனு தர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் மனு தர்ம சாஸ்திரம் சொல்லுவதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


ஆ-பெண்: அதென்ன அய்யா, நீங்கள் கூட அப்படிச் சொல்கின்றீர்கள். இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை ? எல்லாப் பெண்களுமா விபசாரிகள் ?


நா-ன்: ஆம் அம்மா! எல்லோருமேதான் 'விபசாரிகள் '. இதற்காக நீங்கள் கோபித்துக்கொள்வதில் பயனில்லை.


ஆ-பெண்: என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள் ?


நா-ன்: ஆம். ஆம். ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்லர். மேல் உலகத்தில் உள்ள பெண்களையும்கூடத்தான் நான் 'கற்பு உள்ளவர்கள் ' என்று சொல்வதில்லை.


ஆ-பெண்: சொல்லுவது தர்மமாகுமா ?


நா-ன்: கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமானது மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவது எப்படிப் பொய்யாகும்; அதர்மமாகும். சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால், அது சரியென்று ருஜுப்படுத்தவும் தயாராய் இருக்கிறேன்.


ஆ-பெண்: என்ன ருஜூ! நாசமாய்ப்போன ருஜூ! சற்றுக் காட்டுங்கள் பார்ப்போம்.


நா-ன்: நமது பெரியவர்கள் கற்பைப் பரீஷிக்கத்தக்க பரீஷைகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.


ஆ-பெண்: என்ன பரீஷை அய்யா அது ?


நா-ன்: சொல்லட்டுமா; ,கோபித்துக்கொள்ளக் கூடாது.


ஆ-பெண்: கோபமென்னையா ? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். தாராளமாய்ச் சொல்லுங்கள்.


நா-ன்: 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை ' என்கிற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா ?


ஆ-பெண்: ஆம், கேட்டிருக்கிறேன்.


நா-ன்: சரி...ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடிக்கத் தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஓர் இரண்டு உளவு (2 அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.


ஆ-பெண்: இது நம்மாலாகின்ற காரியமா ? தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடியும் ? இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால இந்தப் பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.


நா-ன்: எந்தப் பாவி எப்படித் தவித்தாலும், நீங்கள் கற்புள்ளவர்களாயிருந்தால், மழை பெய்யுமென்றால் பெய்துதானே ஆகவேண்டும். அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீர வேண்டும். எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ, அப்போதே பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்லர். விபசாரிகள் என்று ருஜுவாகவில்லையா ? பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை. வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்லுகின்றன. ஆகையால், இனிமேல் சாஸ்திரங்களைப் பற்றிச் சந்தேகப்படாதீர்கள். அதிலும் ரிஷிகளும் முனிவர்களும் சொன்ன வாக்கியமும், கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்த மதத்திற்கு ஆதாரமானதும், மோட்சத்திற்குச் சாதனமானதுமான மனுதர்ம சாஸ்திரம் பொய்யாகுமா ? அதனால்தானே நான்கூட கலியாணம் செய்துகொள்ளவில்லை.


ஆ-பெண்: எதனால்தான் ?


நா-ன்: பெண்களைக் கலியாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள் அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டுமென்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்கிறதனால்தான்.


ஆ-பெண்: பின்னை என்ன செய்கின்றீர்கள் ?


நா-ன்: கடவுளோ பிறவியிலேயே பெண்களை விபசாரிகளாய்ப் பிறப்பித்துவிட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய்விட்டது. சாஸ்திரங்கள் நிபந்தனையின்படி ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. கற்பு உள்ள பெண் என்று தெரிவதற்கு மனித முயற்சியை மீறி நடக்க முடியாத காரியங்களைச் செய்து காட்டவேண்டுமென்ற கதைகளும் எழுதி வைத்திருக்கிறார்கள்.


மழை பெய்ய வைப்பவளும், வாழைத் தண்டை எரிப்பவளும், சூரியனை மறைப்பவளும், இரும்புக் கடலையை வேக வைப்பவளுமே பத்தினிகள் என்று லைசென்ஸ் பெற முடிகிறது. ஆதலால் எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும். கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்பதாகக் கருதிச் 'சிவனே ' என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றமாட்டானா என்கிற தைரியம் உண்டு.


ஆ-பெண்: அப்படியானால், நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்ததில் ஒன்றும் குற்றமில்லை. இந்த மனுதர்ம சாஸ்திரமும், வேதமும், பொய்யாமொழியும், நீதியும் இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக்கொண்டதோ ஆன கடவுளும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நம் எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.


- ஆகஸ்டு 1, 1945 'குடி-அரசு ' இதழில் தந்தை பெரியார் அவர்கள் 'சித்திர புத்திரன் ' என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரை.

திருமணம் சொத்துரிமைக்காக.

பெரிய பணக்கார வீடுகளில் நடக்கும் திருமணங்களைப் பார்த்துவிட்டு எல்லோரும் அது மாதிரி செய்ய ஆசைப்படுகிறார்கள். சொத்துரிமை இல்லையென்றால் யார் கவலைப்படுகிறார்கள் ? இரஷ்யா போன்ற நாடுகளில் திருமணம் செய்து கொண்டால் சந்தோஷப்படுவதுதான் மிச்சம். அங்கே ஒருவன் தன் இல்லக்கிழத்தியை 'மனைவி ' என்று சொல்ல மாட்டான். 'காதலி ' என்றுதான் சொல்லுவான். இருவரும் ஆஃபீஸ் போகும் முன்பு வழக்கப்படி முத்தம் கொடுத்து விட்டுப் போய்விடுவார்கள். அன்று மாலை திரும்பி வரும்பொழுது, மேசையின் மேல் கடிதம் எழுதி வைக்கப்பட்டிருக்கும்; அதில் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை; ஆகவே உன்னுடன் செய்துகொண்ட வாழ்க்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்கிறேன் என்று அதில் எழுதியிருக்கும்; சொத்து விஷயமாக அவர்களுக்குள் ஒரு தகராறும் வராது. அப்படி ஏதாவது வந்தால், சாமான் பிரிப்பதில் விவகாரம் வரும்; அதைப் பிரித்துக் கொடுக்க ஒரு ஆஃபீசர் இருக்கிறார்.


இங்கு சொத்து உரிமைக்காகத்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இங்கு ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு ஆதாரம் தசரதன். ஆறாயிரம் பட்ட மகிஷிகளை வைத்துக்கொண்டு இருந்திருக்கிறான். கிருஷ்ணன் பல கோபிகாஸ்திரீகளுடன் குலாவியிருக்கிறான். இப்பொழுது ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தால், அவனுக்கு உடனே சிறை; முன்பு அய்ந்து பெண்கள் இருந்தாலும் ஆறாவது ஒரு பெண்ணைக் கொடுக்க முயற்சி செய்வார்களே. முன்பு மனைவி, வேலைக்காரியைவிட கீழானவள்தானே! வேலைக்காரியாவது வெளியே போவாள். சுதந்தரமாகத் தான் நினைக்கும் இடங்களுக்கெல்லாம் போய் வருவாள். மனைவி அப்படிப் போக முடியுமா ? சற்றுக் கதவு திறந்து இருந்தால் போதுமே. ஏன் திறந்து இருக்கிறது ? எதற்காகத் திறந்து இருக்கிறது ? என்றல்லவா அதிகாரம் செய்வான், மனைவியை.


மனைவி கையில் பணம் ஏதாவது இருந்தால், கணவன் கேட்டவுடன் கொடுத்துவிட வேண்டும்; இல்லாவிட்டால் முதுகில் நான்கு அடிகள் கொடுத்துத் தானே பிடுங்கிக் கொள்வான். 'உனக்கேது பணம் ? எப்படி வந்தது ? ' என்றல்லவா அதிகாரம் செய்தான். இப்பொழுதுதான் தைரியமாக, 'எங்கள் அம்மா கொடுத்தார்கள், அப்பா கொடுத்தார்கள் ' என்று பெண்கள் சொல்லுகிறார்கள். அப்பொழுது இப்படிச் சொல்ல முடியாதே.


ஒரு பெண், தன் தகப்பனார் வீட்டிற்கு வந்தால் முன்பு, அவளது சகோதரனின் மனைவி ஏன் வந்தாய் என்று கேட்டுத் திட்டுவாள். இப்பொழுது இது என் தகப்பனார் வீடு; என் அப்பா வீட்டுக்கு வந்தேன், நீ யார் என்னைக் கேட்பதற்கு ? சொத்தில் எனக்கு பங்கு உண்டு. என் சொத்தை என் இஷ்டப்படி அனுபவிப்பேன் என்று சொல்லுகிறார்கள். இப்பொழுது சாஸ்திரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன ? அறிவு வந்த பிறகு கொடுக்காமல் இன்னும் சாஸ்திரம் சொல்லவில்லையென்று சொல்லி வருவது அறிவுடைமையாகுமா ?


இப்பொழுது உலகம் இயற்கையாகவே மாறிக் கொண்டு வருகிறது; முன்பு நாங்கள் இதுமாதிரியான கருத்துகளைச் சொன்னால், நீங்கள் கேட்க மாட்டார்கள். இப்பொழுது எல்லோருக்கும் தானாகவே உணர்ச்சி வந்து கிராமங்களிலும் இம்மாதிரியான திருமணம் நடக்கிறது; இதில் எங்களுக்கு என்ன இலாபம் ? இதில் ஏதாவது கிடைக்கிறதா ? நாம் கெட்டது தான் கெட்டோம்; நம் சந்ததிகளாவது நன்றாக வாழ வேண்டும்; அவர்களுக்கு இம்மாதிரியான அடிமை உணர்ச்சிகள் வரக்கூடாது என்பது தவிர வேறு என்ன ?


நம்மிடையே பரவியிருக்கும் காட்டுமிராண்டிக் கொள்கைகள் ஒழிய வேண்டும். இப்பொழுது இராசகுமாரிக்கும் அரங்கநாதனுக்கும் என் தலைமையில் திருமணம் நடந்தது. இன்னும் கொஞ்சம் நாள்கள் போனால், மணமக்களே, தாங்கள் வாழ்க்கைத் துணைவர்களாக இன்ன நாளிலிருந்து ஆகப்போகிறோம்; அதற்கு நீங்கள் வந்து வாழ்த்தியருள வேண்டுகிறோம் ' என்று பத்திரிகை எனக்கு இப்பொழுது நிறைய வருகின்றன.


இப்பொழுது யாராவது ஒரு தகப்பனார் தன் மகளைப் பார்த்து, 'ஏம்மா உனக்கு இந்தப் பிள்ளையைப் பார்த்திருக்கிறேன். பிடித்திருக்கிறதா ? என்று கேட்டால், உடனே அந்தப் பெண், 'ஏம்பா, திருமணம் உனக்கா, எனக்கா ? ' என்று கேட்கும். 'எனக்கும் என் கணவனைத் தேடிக்கொள்ளத் தெரியும். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் ' என்று சொல்லும். வெள்ளையர்கள் தங்கள் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில்லை. அங்கு எல்லாம் உங்கள் மகனுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்பதே அவமானம். 'அவனுக்கு இஷ்டமிருந்தால் அவனுக்குப் பிடித்த பெண்ணாகத் திருமணம் செய்துகொள்கிறான். இந்தச் சங்கதியை அவனிடம் கேட்காமல் என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் ? ' என்று தகப்பனார் சொல்வார். அப்படி அங்கெல்லாம் மனதுக்குப் பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்கிறார்கள். இங்கு பெற்றோர்கள் செய்து வைத்த தம்பதிகளுக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் எங்கள் அப்பா பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள் என்றுதானே கூறுகிறார்கள்.


சாஸ்திரம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது, பூ வைத்துக் கேட்பது என்பது எவ்வளவு இழிவான தன்மை! பொருத்தம் என்றால் ஆண், பெண்ணைப் பார்க்க வேண்டும். பெண் தன்னைக் கட்டிக்கொள்ளப் போகும் ஆணைப் பார்க்கவேண்டும். நாம் வண்டிக்கு ஒரு மாடு வாங்க வேண்டுமானால், இருக்கின்ற மாட்டுக்குப் பொருந்துமாறு எவ்வளவு கஷ்டப்பட்டு ஜோடி சேர்க்கிறோம் ? சாதாரணமாக நாய் குட்டி போட வேண்டுமென்றால், நல்ல இரக நாயாகப் பார்த்துத் தானே சேர்க்கிறோம். அதுபோலத்தானே குதிரையும்; ஆனால், மனிதனுக்கு ஜோடி சேர்ப்பதற்கு மாத்திரம் ஏன் அழுக்குப் பிடித்த பார்ப்பானிடம் போய்ப் பொருத்தம் கேட்க வேண்டும் ? மருமகளின் குணம் மாமியாருக்குத் தெரியாது; கணவனின் குணங்கள் மனைவிக்குத் தெரியாது; ஜாதகத்தைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வீட்டைப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட்டால் திருமணம் தீர்ந்து போயிற்றா ?


திருமணம் செய்துகொள்பவனுக்கு ஜாதகமே இருக்காது. சோதிடம் பார்ப்பவன், ஜாதகம் இல்லையென்றால் பரவாயில்லை, 'கையை நீட்டு ' என்பான். இப்படிக் கையை நீட்டி விரலைப் பார்த்துப் பொருத்தம் கண்டுபிடித்தால் என்ன அர்த்தம் ? தாய் பெயரைச் சொல்லிப் பூ எடுத்து எறிந்து விடுமா ? இல்லை அக்காள் தங்கை பெயரைச் சொன்னால், 'என்னை என்ன சோதித்துப் பார்க்கிறாயா ? ' என்று கூறி, அடித்து விரட்டுமா, அந்த சாமி ? கழுதை, நாய்க்குட்டி பெயரைச் சொன்னால் இது மிருகத்தின் பெயர் என்று கூறுமா ? இப்படி இந்த 1956-ஆம் ஆண்டிலுமா நாம் இத்தகைய பைத்தியக்காரர்கள் என்று காட்டிக்கொள்வது ?


இப்பொழுதே இப்படியென்றால் இன்னும் பார்ப்பான் அதிகாரம் பெற்று விட்டால் நம்மைப் பேச விடமாட்டான்! ஜோசியம் பார்க்கவில்லை, ஓமம் வளர்க்கவில்லை என்றால், நம் திருமணம் செல்லாது என்று சொல்லிவிடுவான். நேற்று அய்க்கோர்ட்டில் தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்! நாரதர் சொன்னபடி, வியாசர் சொன்னபடி, பராசரர் சொன்னபடி திருமணம் நடக்கவில்லை; அதனால் செல்லாது என்று கூறிவிட்டார்களே! யார் கேட்டார்கள், ஸ்லோகத்தைக் கொண்டு வந்து தீர்ப்பில் போடலாம் என்ற 1956-இல் யாராவது நாரதர் என்று சொன்னால் நம்புவானா ? எப்பொழுது இருந்து நாரதன் இருக்கிறான் ? மூன்று கோடி, நான்கு கோடிக்கு முன்பு பார்த்தால் அப்பொழுதுதான் நாரதன் இருக்கிறான். நாரதர் சுமார் 50 பிரம்மாக்களைப் பார்த்திருப்பான் போல் இருக்கிறது. ஏன் இப்படிச் செய்கின்றார்கள் என்றால், இது போன்ற திருமணங்கள் நாட்டில் பெருகிப் பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்பைக் கெடுத்து விட்டது. அதனால் பல வழிகளில் அடக்கப்படுகிறார்கள். எதிர்க்கிறார்கள். இருந்தாலும் இத்திருமணங்கள் நடந்துகொண்டுதான் வருகின்றன; நின்று விடவில்லை.


சாஸ்திரப்படி செய்துகொண்டவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத்தான் சொத்து சேரும். தகப்பன் இறந்து மற்றவர்கள் யாராவது சொத்துக் கணக்குச் சேரவேண்டும் என்று தகராறு செய்தால், அப்பொழுதுதான் எப்பொழுது திருமணம் நடந்தது ? யார் நடத்தியது ? எப்படி நடந்தது ? என்று கேள்வி வரும். அதற்காகத்தான் சொத்து நமக்கு வராதென்கிற எண்ணத்தால் சிலர் பயப்படுகிறார்கள்.


பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று சட்டம் பார்லிமெண்டில் விவாதத்திற்கு வந்தபோது, தமிழ் நாட்டார் ஆட்சேபிக்கவில்லை. தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தூண்டி வட நாட்டார்களும் எதிர்த்தார்கள். முதலமைச்சர் நேரு அவர்கள் இராஜினாமா செய்துவிடுவேன் என்று பயமுறுத்திய பிறகுதான் சட்டம் நிறைவேறியது.


அப்படிச் சட்டம் நிறைவேறிவிட்டால், பெண்கள் தங்களுடைய பங்குகளை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். இன்னும் நாம் சீர்திருத்தம் அடையவேண்டிய சங்கதிகள் நிறைய இருக்கின்றன. எங்களிடம் அதிகாரம் வந்தால், ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது என்று சட்டம் போட்டுவிடுவோம். மேல் நாடுகளில் 'டைப் ' அடிக்கப் பெண்களை நியமித்து இருக்கிறார்கள். பெண்கள் மாத்திரம் நடத்தும் பள்ளிக்கூடங்கள், ஆஃபீஸ்கள் இருக்கின்றன. ஆனால் நம் பெண்கள் நாற்று நடவும், பார்ப்பனப் பெண்கள் மாத்திரம் இந்தக் காரியங்களில் நடப்பதற்குப் பெண்கள்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். இம்மாதிரியான காரியங்களுக்கு நம் தாய்மார்களும், பெண்களும் இலேசில் ஒப்புக்கொள்வதில்லை. இனிமேல் ஆண்கள் சும்மாயிருந்தாலும் பெண்கள்தான் இம்மாதிரியான காரியங்களுக்கு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.


- ஆகஸ்ட் 26, 1956 அன்று வடசேரியில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 'விடுதலை ' - செப்டம்பர் 7, 1956

எனது சிந்தனை

எனது 93-வது ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக் குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்த நாள் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக - ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும்.

நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். சாதி அமைப்பு என்பது 'கடவுள், மதம்' மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தை யும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல; நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால், சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளைச் சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச் சும்மா விட்டுக் கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.

நானோ எனது பிரச்சாரத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி - செய்கையாலும், காட்டிக் கொண்டே, நடந்துகொண்டே வருபவன். இந்த நிலையில் எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையில் பட்டதென்பதை நல்லவண்ணம் மக்களுக்கு விளங்கும்படி, 'கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி' நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன். இந்த நிலையில், எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக்கொண்டு இருப்பானா? - என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து - அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும், 'கடவுளாவது வெங்காயமாவது' என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனாலேயே, எனது 93-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.

சென்ற எனது 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்த நாள் செய்தியில் 'எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும், மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கின்றேன்.

கடவுள், மதம், சாதி முதலிய விஷயங்களால், மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கின்றேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் காரணமாகும்.'

இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டு 'நான் ஏன் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று' என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களும் திரு.காமராசர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகமூட்டினார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு தான் நான் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்லுகின்றேன்.

அதாவது, 'கடவுளைச் செருப்பால் அடித்ததாக' 10 இலட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள் மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய - சாதித் துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடுபட்டு - 230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றி பெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து - அதன் அளவுக்குமேல் மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி, நமது சாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது.
இந்த நிலையில், நான் நமது மக்களை அடி பணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம் - கோயில்களுக்குப் போகாமல் இருக்கவேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக் குறி அணியாமலும் இருக்கவேண்டும் என்பதேயாகும். மற்றும் நான் நினைக்கின்றேன்; அண்மையில் ஒரு மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன். இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்.

93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971