Tuesday, December 25, 2007

பெண்கள் விடுதலையடைய

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில் அநேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக்கொண்டு மிகப்பாசாங்கு செய்து வருகிறார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண் மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப்ராயம். எதுபோலவென்றால், இந்தியப் பொது மக்கள் விடுதலைக்கு வெள்ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதன் பலனாக, எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம் விடுதலைபெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றதோ அது போலவும், சமூகச் சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படிச் சமூகக் கொடுமைகளும் உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும் மதத்தினாலும் நிலைபெற்றுப் பலப்பட்டு வருகின்றதோ அது போலவும் என்று சொல்லலாம்.


அன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக்கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா ? எங்காவது நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா ? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா ? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா ? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா ? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய்விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்கூடாது. அந்த 'ஆண்மை ' உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லையென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் 'ஆண்மை ' நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் 'ஆண்மை ' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்மை விடுதலையில்லை என்பது உறுதி. 'ஆண்மை 'யால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள்.


சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் 'ஆண்மை 'க்குத் தான் உரியதாக்கப்பட்டுவிட்டது. ஏன் ? 'ஆண்மை 'க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண்மக்கள் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.


எனவே, பெண் மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் ஆண்மையும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும் இதை உண்மையென்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்ற தென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. பொது மக்கள், பிறவியில் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டுமானால் எப்படிக் கடவுளாலேயே மக்களுக்குப் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்து மதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசியமோ அது போலவே பெண் மக்கள் உண்மை விடுதலை பெற்று உண்மைச் சுதந்திரம் பெறவேண்டுமானால் 'ஆண்மையும் ' பெண் அடிமையும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.


பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள். ஏனெனில், இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழுவிடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜூப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய் விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்துப் புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனமோ என்பதாகப் பொது மக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிர, அதாவது பெண்கள் பிள்ளைபெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலையில்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாயிருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்ல வரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும் போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு தன்மை நடத்தி வருகின்றபோது இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.


தவிர, 'பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது. மானிடம் வர்க்கம் விருத்தியாகாது ' என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம் ? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும் ? அல்லது இந்தத் தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாயிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இது வரையில் பெருகிக்கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.


பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் அந்த இடத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே நாம் கவலை கொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேறு எவ்விதமான முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்வித கஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இன்பமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன்தான் பிள்ளை குட்டிக்காரனாயிருப்பதனாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும் முறைகளையும் மற்றொரு சமயம் விவரிப்போம்.


- ஆகஸ்ட் 12, 1928 'குடி அரசு ' இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரை.

No comments: