தமிழ் நாட்டில் பொதுவுடைமைப் பிரச்சாரகர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொதுவுடைமை என்றாலும் இந்து மதம் என்றாலும் அல்லது வேறெந்த பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும், பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
பார்ப்பனர்களுக்கே நன்றாய்த் தெரியும். என்னவென்றால், வருணாசிரமத்தையும், பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடைமையை ஏற்படுத்தி விட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்து விடும் என்றும், சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.
பொதுவுடைமை வேறு; பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். இந்நாட்டில், பார்ப்பனீயத்தால் சாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உடைமை இருந்தாலும் சம உரிமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தனி உரிமையை முதலில் ஒழித்துவிட்டோமானால், தனிஉடைமையை மாற்ற அதிகப்பாடுபடாமலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும்.
குறிப்பமாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத்தான் பலர் மேன்மக்களாய் பணக்காரர்களாய் இருக்கிறார்கள்; இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய், ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டியிருக்கிறது. இது, இன்றையப் பிரத்தியட்சக் காட்சியாகும்.
ஆங்கிலத்தில் "கேஸ்ட்', "கிளாஸ்' என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. அதாவது, தமிழில் சாதி வகுப்பு என்று சொல்லப்படுவனவாகும். சாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் தன்மையினால் ஏற்படுவது. தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். சாதி நிலை, அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது. மேல் நாட்டில் சாதி இல்லாததால், அங்கு பொதுவுடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை துவக்க வேண்டியதாயிற்று. இங்கு சாதி இருப்பதால், பொதுவுடைமைக்கு முதலில் சாதிச் சண்டை துவக்க வேண்டியதாகும்.
பார்ப்பானும், பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடைமை வேஷம் போடுவதால் சாதிச் சங்கதியை மூடிவிட்டு, காத காரியமான ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு உணர்ச்சியைப் பற்றிப் பேசி சாதியை ஒழிக்கப்பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்; சாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.
பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரைப்பாகம் பொதுவுடைமை ஏற்பட்டுவிடும். அதாவது, சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத்தன்மையும், சாதியினால் சுரண்டப்படுபவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.
பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
திராவிட நாடு பிரிந்து - கிடைத்து, சுரண்டும் சாதி ஒழிக்கப்பட்டு, சம உரிமை எல்லோருக்கும் ஏற்படும்படியான உணர்ச்சி வந்துவிட்டால், பிறகு நாம் சுலபத்தில் எதுவும் செய்துகொள்ள முடியும். அந்தக் காரியத்திற்காகத்தான் சுயமரியாதைக் கட்சி முயலுகிறது. இந்தக் கட்சியில் இன்று மேல்சாதியானுக்கோ அல்லது சாதிப் பேய் - பார்ப்பனீயப் பேய் பிடித்த பெரிய மனிதர்கள் என்பவர்களுக்கோ எவ்வித அதிகப்படியான செல்வாக்கோ, ஆதிக்கமோ இல்லை என்பதையும், இக்கட்சி சாதியிலேயே தொழிலாளர்களாகவும், உண்மைத் தொழிலாளர்களாகவும் ஏழைக் கூலி மக்களாகவும் உள்ள பெரும்பான்மையான மக்களுடைய கட்சி என்பதாகவும் மக்கள் உணர வேண்டும்.
------தந்தைபெரியார்.-குடிஅரசு' 25.3.1944
Saturday, December 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment