Monday, December 24, 2007

கோஷா ஒழிய வேண்டும்

எந்த மனித சமுதாயம் பழமையிலுள்ள தீமைகளைக் களைந்து புதுமையிலுள்ள நன்மைகளை ஏற்றுக் கொள்கிறதோ, அந்தச் சமுதாயந்தான் வாழ்க்கை ஏணியில் ஏறிச் செல்ல முடியும். மதம், மத ஆதாரம் என்பவை யாவும் மனிதனுக்காக, மனிதனால் வகுக்கப்பட்டவை என்ற உண்மையை உணராத மக்கட்பிரிவு அறிவுத் துறையில் முன்னேறவே முடியாது. மனிதன் மதத்திற்கு அடிமையாக இருக்கக் கூடாது; அது மனிதத் தன்மைக்கே இழுக்கு. சமயம் என்பது சமயத்திற்கேற்றபடி வளைந்து கொடுக்கக் கூடியதாயிருக்க வேண்டும். வளைந்து கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனால், இது போதாது.


உச்சிக் குடுமிதான் மதக்கட்டளை; தாடியும் மொட்டைத் தலையுந்தான் மதக்கட்டளை என்று இருந்தது. இன்று மாறிவிடவில்லையா ? அதுபோல, அவசியத்திற்கும், தேவைக்கும், வசதிக்கும், அறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும் தக்கபடி மதக்கட்டுப்பாடுகள் நீண்டுகொடுக்க வேண்டும். மதத்தின் தத்துவம் வேறு, அதன் புறக்கட்டுப்பாடுகள் வேறு; இத்துறையில் இஸ்லாம் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள மதச்சடங்குகள், அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் மிகக் கொஞ்சம் என்றே கூறலாம். முஸ்லிம் இளைஞர் உலகம் இச்சிறு கட்டுப்பாடுகளைக் கூட உடைத்து வருவது மகிழ்ச்சிக்குரியது. உதாரணமாக மொஹரம் பண்டிகை என்ற பெயரால் புலிவேஷம் போட்டு ஆடுவதும், பஞ்சாதூக்கி ஆடுவதும், வரவரக் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், இஸ்லாம் மதத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத இந்த அநாகரிக முறைகளை முஸ்லிம் இளைஞர்கள் அடியோடு ஒழித்துவிடப் பாடுபட வேண்டும். சென்னையில் மாரடி என்ற பெயரால் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ஆபாச முறையை முஸ்லிம்கள் கிளர்ச்சி செய்து நிறுத்திவிட வேண்டும். பக்கிரிகள் மயில் தோகை கொண்டு மந்திரிப்பது, ஹிந்துக்கள் நாகூரில் சென்று மொட்டையடித்துக் கொள்வது ஆகிய அறிவீனமான செயல்களை முஸ்லிம் அறிஞர்கள்தாம் நிறுத்த வேண்டும். முஸ்லிம் பத்திரிகை உலகம் இவைகளைத்தான் தன் முதற்கடமையாகக் கருத வேண்டும்.


அடுத்தபடி முக்கியமானது முஸ்லிம் பெண்களிடையே திணிக்கப்பட்டிருக்கும் கோஷா முறை. இதனால் எத்தனை அமீருதீன்கள், பேகம்ஷா, நவாஸ்கள், அருணா அஸல் அலிகள் ஆகியோர் குடத்திலிட்ட விளக்குகளைப் போலக் கிடக்கிறார்கள் என்பதை ஒரு நிமிஷமாவது நினைத்துப் பார்த்தால், முஸ்லிம் அறிஞர்கள் இந்தத் தீய முறையை ஒழிப்பதற்குத் தாமதிக்கவே தொடங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் உயர்தரக் கல்விக்கூடம் பயின்று வருகின்றனர். முஸ்லிம் பெண்களிடையே ஆயிரக்கணக்கான பெண் டாக்டர்கள், ஆசிரியைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் தோன்ற வேண்டும். அப்படியானால், பெண்களை முகமூடியிட்டு அடக்கிவைத்திருப்பது நிறுத்தப்பட வேண்டும்.


சேலம் நகர சபையினர் இத்துறையில் சென்னை நகர சபையினரைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொண்டிருப்பது பற்றிப் பாராட்டுகிறோம். முஸ்லிம் பெண் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவிகளுக்காகவும் ஆசிரியைகளுக்காகவும் இது காறும் இருந்துவந்த கோஷா வண்டிகளைப் புதிய நகர சபையார் நிறுத்திவிட்டார்களாம். முஸ்லிம் பெண்ணுலகத்துக்குச் சேலம் நகர சபையார் செய்துள்ள நன்றியை அவ்வூரில் பெண்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். சென்னை நகரசபையானது மற்ற ஊர்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டாலும், சேலத்தைப் பின்பற்றியாவது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.


ஈரானில் முஸ்லிம் பெண்கள் முகமூடியில்லாமல் கடைகளுக்குச் செல்வதாகவும், அப்பேர்ப்பட்டவர்களுக்கு எந்தச் சாமானையும் கொடுக்கக்கூடாது என்று முஸ்லிம் வைதிகர்கள் கிளர்ச்சி செய்வதாகவும் சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தோம். பழமை விரும்பிகளும், பாசி படர்ந்த மதியினரும் எந்த நாட்டிலும் எந்த மதத்திலும் உண்டு. கிருஸ்து மதத்தில் கத்தோலிக்க குருமாரும், ஹிந்து மதத்தில் ஆரியரும், புத்த மதத்தில் பிட்சுகளும் இல்லையா ?


பழமை விரும்பிகளின் திருப்திக்காக மனித சமுதாயத்தைப் பலியிடுவது என்பது மதியீனம்.


கோஷா முறையினால் சூரிய வெளிச்சமும் நல்ல காற்றும் இல்லாமல் காசம் போன்ற நோய்கள் எளிதில் பரவுவதாக எல்லா டாக்டர்களும் கூறிவிட்டனர். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வெளிச்சத்தையும் காற்றையும் மனித சமுதாயத்தின் சிறந்த பகுதியாகிய தாய்க் குலத்திற்கு மட்டும் கிடைக்காமல் தடுப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம் என்பதை ஆண்கள் ஆலோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். வட நாட்டு ஹிந்துக்களிடையே கூட இந்தக் கோஷா முறை இருந்து வருகிறது. இதுவும் விரைவில் ஒழிந்துவிடும் என்பதே நம் நம்பிக்கை.


துருக்கி புரட்சி வீரரான கமால்பாட்சாவும், ஆப்கானிஸ்தான் புரட்சி வீரரான அமானுல்லாவும் முஸ்லிம் பெண்களை விடுவித்த மாவீரர்கள். கமால் பாஷா கோஷாவை ஒழித்தது மட்டுமல்ல. பெண்கள் கையில் துப்பாக்கியைத் தந்தவர். பெண் ராணுவத்தை முதன் முதலில் நிறுவிக்காட்டிய ஒப்பற்ற வீரர்.


திராவிட நாடு முஸ்லிம் சமுதாயத்திடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமானுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் பெண்கள் காலில் இடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். பிற மதங்களிலுள்ள ஊழல்களைப் பழிப்பதுடன் மட்டும் திருப்திபடக்கூடாது. தங்கள் சமுதாயத்திலுள்ள தீமைகளையும் களைந்தெறிய வேண்டும்.


கோஷா முறையை ஆதரிக்கும் கற்றறிந்த முஸ்லிம் ஆண்கள் எவருமே இருக்கமாட்டார்கள். அப்படி எவரேனும் இரண்டொருவர் இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் கூற வேண்டியது இதுதான். 'தயவு செய்து நீங்கள் ஓராண்டுக்காவது முகமூடி போட்டு வீட்டிற்குள் இருந்து பாருங்கள் ' என்பதே.


(29.11.1947 - 'விடுதலை ' இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)

No comments: