Tuesday, April 08, 2008

யாருக்கு ஓட்டு கொடுப்பது

ராஜூ : என்னப்பா சுந்தரம் சட்டசபை எலக்ஷன் வந்துவிட்டதே, கண்டவர்கள் எல்லாம் அபேட்சகராய் நிற்கிறார்களே இவர்களில் யாருக்கு ஓட்டுப் போடுவது .

சுந்தரம்: யாருக்கோ ஒருவருக்குப் போட்டால் போகிறது. நாம் என்ன ஒத்துழையாதாரா? யாருக்கும் போடுவதில்லை என்று சொல்லுவதற்கு. அதெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் ஒத்துழைப்பேற்பட்டதோடு ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஒத்துழைப்பதாய்ப் போய்விட்டது.

ராஜூ:நீ சொல்லுவது சரிதான். ஆனாலும், அதிலும் தராதரம் இல்லையா?

சுந்தரம்: தராதரம் என்ன? சுயராஜ்யக் கட்சிக்காரருக்குத்தான் போட்டு விடேன்.

ராஜூ: அதென்ன அவ்வளவு அசார்சமாய்ச் சொல்லுகிறாய். சுயராஜ்யக் கட்சி என்றால் என்ன? அதன் கொள்கை என்ன? அதன்றி வேறு கட்சிகள் என்ன என்ன இருக்கிறது? இவைகள் தெரிய வேண்டாமா?

சுந்தரம்: ஓஹோ ! இதுவே இன்னமும் உனக்குத் தெரியாதோ. சரிசரி, நீ சரியான தற்குறி போல் இருக்கிறாய். சுயராஜ்யக் கட்சி என்பது அரசியல் கட்சி என்று பெயர். அது முதலில் ஒத்துழையாமை கொண்ட மகாத்மா காங்கிரசுக்கு விரோதமாய் மகாத்மா ஜெயிலில் இருக்கும் சமயம் பார்த்து நமது பார்ப்பனர்கள் அதைக் கொல்லுவ தென்றே தேசபந்து தாஸ் என்கிற ஒரு பார்ப்பனரல்லாத நபரை முன்னால் வைத்துக் கொண்டு ஆரம்பித்த கட்சி. தேசபந்து தாசுக்கு ஒத்துழையாமையின் பலனாய் கொஞ்சம் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. அதை நமது பார்ப்பனர்கள் இதற்கு அவரை உபயோகப்படுத்தும்படி செய்துவிட்டார்கள். வெளியில் வந்த மகாத்மாவும் தேசபந்து தாசுை எதிர்க்க இஷ்டமில்லாததால் தாட்சண்ணியத்திற்குக் கட்டுப்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக விட்டுக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசி யாக தானும் விலகி விட்டார். இதன் மத்தியில் தாசரும் செத்துப் போனார். கடைசியாக இந்த சுயராஜ்யக் கட்சி என்பது நமது பார்ப்பனர்கள் கைக்கே வந்து சேர்ந்தது. அவர்கள் இதை சர்க்காரை எதிர்ப்பதற்கு என்று சொல்லிக் கொண்டு பார்ப்பன ஆதிக்கத்திற்காக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் சுயராஜ்யக் கட்சி என்பது. மற்றொரு கட்சி ஜஸ்டிஸ் கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது ஆதியில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக இரண்டு உத்தம தேசபக்தர்களான சிறீமான்கள் டி.எம். நாயர் அவர்களாலும் சர்.பி.டி தியாகராய செட்டியாராலும் ஏற்பட்டது. இதற்கும் நமது பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை கொல்ல செய்த சூழ்ச்சி போலவே சிறீமான்கள் வரதராஜூலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார் என்கிற சில பார்ப்பனரல்லாதாரைச் சேர்த்துக் கொண்டு அவர்களைத் தலைவர்களாக்கி அவர்கள் மூலமாகவே எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து இதையும் கொல்லப் பார்த்தார்கள். என்ன செய்தும் எவ்வளவோ தத்துக்கும் ஆபத்துக்கும் தப்பி பார்ப்பனரல்லாதார் என்கிற ஒரு கூட்டம் தென்னாட்டிலிருக்கிறது என்றும் அவர்களும் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் உலகமறியச் செய்ததோடு மக்களுக்குச் சுயமரியாதை என்ற ஒன்று இருக்கிறது அதை அடைவதுதான் மக்களின் பிறப்புரிமை என்று போதித்து பார்ப்பனர் ஏகபோகமாய் அனுபவிக்கும் அரசாங்க அதிகாரம், ஆதிக்கம், பதவி, உத்தியோகம் முதலியதுகளில் சிலதாவது பார்ப்பனரல்லாதாருக்கும் கிடைக்கும்படி செய்ததல்லாமல் பார்ப்பனரல்லாத பெரும்பான்மையான மக்களான ஒடுக்கப்பட்டவர்கள் முதலானவர்களுக்கும் ஒரு உணர்ச்சியை உண்டாக்கி அவர்களையும் மனிதராக்கப் பாடுபட்டு வருகிறது. இதுதான் ஜஸ்டிஸ் கட்சி என்பது. சுயேச்சைக் கட்சி என்பது தனித்தனி மனிதனுக்கு ஒவ்வொரு கட்சி என்று அர்த்தம். சமயம்போல் பார்த்துக் கொள்வதுதான் இதன் கொள்கை. ஆகிய இக்கட்சிகள்தான் இப்போதைய தேர்தல் உலகத்தில் அடிபடுகிறது.

ராஜூ: அப்படியானால் என்ன ஆதாரத்தைக் கொண்டு சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுப் போட்டால் போகுது என்று சொன்னாய்.

சுந்தரம் : ஆதாரம் ஒன்றுமில்லை. காங்கிரஸ், சுயராஜ்யம், சர்க்காரை எதிர்த்தல் என்கிற வார்த்தைகளைச் சொல்லுகிறார்களே அதனால் அதற்கு ஓட்டுப் போட்டால் போகுது என்று சொன்னேன்.

ராஜூ: நீ என்ன சுத்தப் பயித்தியக்காரனாய் இருக்கிறாய்! காங்கிரஸ், சுயராஜ்யம், சர்க்காரை எதிர்த்தல் என்று எவராவது வாயில் சொல்லிக் கொண்டால் அவருக்கு ஓட்டுப் போடுகிறதா? இதற்கா நமது பெரியோர்கள் நமக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்தார்கள். நீயே இப்படி நினைத்தால் சாதாரண பாமர ஜனங்கள் என்ன நினைக்கமாட்டார்கள். சுயராஜ்யம் என்றால் என்ன? சர்க்காரை எதிர்ப்பது என்றால் என்ன? இதற்கு உதவும்படியான கொள்கை ஏதாவது அவர்களிடம் இருக்கிறதா? இதுகளை யோசிக்க வேண்டாமா? முதலிலேயே சுயராஜ்யக் கட்சி பார்ப்பனரிடம் சிக்கிக்கொண்டது என்று சொல்லி விட்டாய். பார்ப்பனர்கள் எல்லோரும் சர்க்கார் உத்தியோகத்திலும் வக்கீல் உத்தியோகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி சுயராஜ்யத்திற்குப் பாடுபட சம்மதிப்பார்கள். நமக்கு உண்மையான சுயராஜ்யம் வருமானால் இம்மாதிரி சர்க்கார் உத்தியோகங்களும் ஒழிந்துபோகும்; கோர்ட்டுகளும் ஒழிந்துபோகும். அப்பொழுது இப்பார்ப்பனர்கள் தர்ப்பைப் புல்லைக் கொண்டுதான் பிழைக்க வேண்டிவரும். ஜஸ்டிஸ் கட்சியின் பலனாய் தர்ப்பைப் புல்லுக்கும் நமது நாட்டில் செலாவணி குறைந்து போய்விட்டது. ஆதலால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்கள் சுயராஜ்யத்திற்கு அனுகூலமாயிருக்கவே மாட்டார்கள். சர்க்காரை எதிர்ப்பது என்பதோ சுத்தப் புரட்டு. சர்க்காரை எப்படி எதிர்ப்பது? கத்தி கொண்டா? துப்பாக்கி கொண்டா? எப்படி எதிர்க்க முடியும். சட்டசபையில் போய் கத்தினால் யார் கேட்கிறார்கள்? வாய் வலிப்பதுதான் மீதியே அல்லாமல் காரியம் ஒன்றும் பலியாது. உண்மையாக சர்க்காரை எதிர்க்க வேண்டுமானால் சர்க்காரை பணியச் செய்ய வேண்டுமானால் ஒத்துழையாமை, சட்டமறுப்பு ஆகியவைகளைத் தவிர மற்ற வழிகளில் எதிர்ப்பதாகச் சொல்லுபவர்கள் ஒண்ணாம் நம்பர் திருட்டு ஆசாமிகள் என்றே நினைத்துக் கொள். ஒத்துழை யாமைக்காவது சட்ட மறுப்புக்காவது இந்தப் பார்ப்பனர்கள் ஒருக் காலும் முன்வர மாட்டார்கள். உதாரணம் வேண்டுமானாலும் பார்த்துக் கொள். ஒத்துழையாமையைச் சட்ட விரோதம் என்று சொன்னவர்களும், ஒத்துழையாமைக்கு உலை வைத்தவர்களும், சட்ட மறுப்பின் போது தலைமறைவாய்த் திரிந்தவர்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய் ஜெயிலுக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் மாதம் 1000,2000, 10,000 ரூபாய் சம்பாதித்துக் கொண்டு உல்லாசமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் நமது பார்ப்பனர்களே ஆவார்கள். அவர்கள்தான் இப்போது சர்க்காரை எதிர்க்கிறோம் என்று சொல்லுகிறவர்கள். இவைகளை எப்படி நம்புவது? இதுவரை நான் உன்னை பகுத்தறிவுள்ளவன் என்று நினைத்திருந்தேன் நீ என்ன சுத்த சூன்னியனாயிருக்கிறாயே!

சுந்தரம் : சரி சரி, நீ சும்மா திட்ட வேண்டாம். நாம் இரண்டு பேருமே யோசிக்கலாமே. யாருக்குத்தான் ஓட்டுப் போடலாம் சொல் பார்ப்போம் .

ராஜூ: அரசியல் விஷயமாய்ப் பேசினால் ஒத்துழைப்பு ஒத்துழையாமை என்கிற இரண்டு நிலைமைகள்தான் உண்டு. அரசியல் இயக்கம் என்று சொல்லப்படும் காங்கிரஸ் ஒத்துழையாமை திட்டம் இல்லை என்றால் மரியாதையாய் ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் யோக்கியமானது. இதற்கு மத்தியில் மத்தியஸ்தம் ஒன்றும் கிடையாது. உண்மையான சுயராஜ்யம் ஒத்துழையாமையினாலல்லது எந்த வழியிலும் ஒத்துழைப்பின் மூலம் வரவே வராது. சட்டசபைக்குள் நுழைவது கலப்பில்லாத ஒத்துழைப்பே தவிர வேறல்ல. ஆதலால் சர்க்காரை எதிர்க்கிறேன், எனக்கு ஓட்டுக் கொடு என்று சொல்லுகிற பொய்யினை விட சர்க்காரோடு ஒத்து உழைக்கிறேன், எனக்கு ஓட்டுக் கொடு என்று சொல்லுகிற மெய் பேசுகிறவனே யோக்கியன் என்று சொல்லுவேன். அல்லாமலும் இதுசமயம் சுயராஜ்யக் கட்சி மூலமோ வேறு எந்தக் கட்சி மூலமோ அரசியல் சம்பந்தமான எதையும் எதிர்பார்க்க முடியாது. மற்றபடி இதுசமயம் மக்களுக்கு வேண்டியது சமத்துவமும் சுயமரியாதையும் என்பதை நீ மறுக்க மாட்டாய். அந்தபடி சமத்துவம் சுயமரியாதை என்பதை எந்தக் கட்சியின் மூலமாய் அடையலாம் என்று பார்த்தால் இவைகள் கண்டிப்பாய் சுயராஜ்யக் கட்சியின் மூலம் அடைய முடியவே முடியாது.

சுந்தரம் : அதென்ன அப்படிச் சொல்லுகிறாய். சுயராஜ்யக் கட்சியார் அதற்கு விரோதமாய் இருக்கிறார்களா?

ராஜூ : உனக்கு தெரியாதா? கட்சியின் பேரால் தேவஸ்தான மசோதாவை எதிர்க்க வேண்டுமென்று உத்திரவு போட்டார்களே அதன் அர்த்தமென்ன? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசவே கூடாது என்கிறார்களே அதன் அர்த்தமென்ன? மக்கள் பிறவியில் உயர்வு, தாழ்வு இல்லையென்று தீர்மானம் செய்தவுடன் காங்கிரஸ் கமிட்டிபால் ராஜினாமாச் செய்தார்களே அதன் அர்த்த மென்ன? பார்ப்பன குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொன்னார்களே அதன் அர்த்தமென்ன? குருகுலத்தில் மக்கள் எல்லோருக்கும் உரிமை கொடுக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லியும் கேட்காமல் அது அவரவர்கள் இஷ்டம் என்றார்களே அதன் அர்த்தமென்ன? தீண்டாமை விலக்கைப் பற்றியோ சமத்துவத் தைப் பற்றியோ சுயராஜ்யக் கட்சியில் பேசக்கூடாது என்று தலைவர் சிறீமான் சீனிவாசய்யங்கார் பலதடவை சொல்லியிருக்கிறாரே அதன் அர்த்தமென்ன? பார்ப்பனப் புரோகிதனைக் கூப்பிட்டாலும் கூப்பிடா விட்டாலும் அவனுக்குப் பணம் கொடுத்துத்தான் தீரவேண்டும் என்று பம்பாய் சட்டசபையில் சொன்னார்களே அதன் அர்த்தமென்ன? தாங்கள் அனுபவிக்கும் அரசியல் சீர்திருத்தம் எல்லைப்புற மகமதியர்கள் அனுபவிக்கக்கூடாது என்று எதிர்த்தார்களே அதனு டைய அர்த்த மென்ன? பார்ப்பனர்கள் அனுபவிக்கும் உத்தியோகங் களைப் போலவே பார்ப்பனரல்லாதாரும் அந்த கணக்குப்படி அனுபவிக்கவேண்டுமானால் அதை வகுப்புத் துவேஷம் என்கிறார் களே அதன் அர்த்தமென்ன? உனக்கு இன்னம் இதே போல் எவ்வளவு சங்கதி வேண்டும்.

சுந்தரம் : அப்படியானால் யாருக்கு ஓட்டுச் செய்யலாம் என்கிறாய்.

ராஜூ : நீ தான் சொல்லேன்.

சுந்தரம் : சொல்லுவதென்ன, இப்பொழுது இருக்கும் நிலைமையைப் பார்த்தால் அரசியல் சுதந்திரத்திற்கு கவலைப்படுவதில் யாதொரு பிரயோசனமும் இல்லை என்று தீர்மானமாய் விட்டது. சமூக சமத்துவமும்,சுயமரியாதையும் அடைய வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியினால்தான் முடியும். தேவஸ்தான சட்டம், வகுப்பு வாரி உரிமை முதலிய விஷயங்களில் அக்கட்சியார் கொள்கை என்ன என்பது விளக்கமாய் போய்விட்டது. இவைகளை நடத்தி வைக்க வேண்டுமானால் சட்டசபைக்குள் செல்ல வேண்டியதும், பல உத்தியோகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதும், சர்க்காரோடு ஒத்துழைக்க வேண்டியதும் மிகவும் அவசியமானதாகும். இக்காரியங் களை ஜஸ்டிஸ் கட்சி கண்ணியமாக ஒப்புக் கொள்ளுகிறது .ஆதலால் ஓட்டுச் செய்வதாயிருந்தால் ஜஸ்டிஸ் கட்சிக்குத்தான் ஓட்டுச் செய்யவேண்டும். ஒத்துழையாமைக்காரராயிருந்தால் யாருக்கும் ஓட்டுச் செய்யவேண்டியதில்லை. இந்த இரண்டு மார்க்கத்தைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று எனக்கு தோன்றுகிறது.

ராஜூ: உனக்கு மாத்திரம் தோன்றுவது என்பது என்ன? புத்தி சாலிகளுக்கும் யோக்கியவர்களுக்கும் இதுதான் தோன்றும்.ஆதலால் அதுவே சரி.

சுந்தரம்: எலக்ஷன் நாள் கிட்ட நெருங்கி வருகிறது. இதை பாமர ஜனங்கள் அறியும்படியும் பார்ப்பனர்கள் ஏமாற்றுதலில் விழுகாத படிக்கும் செய்யவேண்டியது நமது கடமை. ஆதலால் நான் அந்த வேலையை ஏற்றுக் கொள்ளுகிறேன். எனக்கு உத்திரவு கொடு. நமஸ் காரம்.

ராஜூ : சரி, போய்விட்டு வா. உஷார் ! உஷார்!! ஜாக்கிரதை!

-----சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது- "குடிஅரசு"- 10.10.26

No comments: