Friday, April 11, 2008

விஷமப் பிரச்சாரத்துக்கும், ஏமாற்றுப் பிரச்சாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.

நமது கேவல நிலைமையும், முட்டாள்தனத்தையும், நம்மை பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும் போது, நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்? நமது இழிவானது நேற்று, இன்று என்று இல்லாமல், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால், நமது ரத்தம் வெட்கப்படுவதற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது.

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய, சிரிப்பு விளையாட்டில் ஏற்படக்கூடியதல்ல. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டிவரும். அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல், நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைமைக்கும், ஆளாகி வருகிறோம்.

நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவதென்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும். சமூகத்தில் மேல்ஜாதி, கீழ்ஜாதி, அடிமை ஜாதி என்பவை இருப்பதோடு, ஆண் - பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வும் இருந்து வருகிறது. இவை தவிர, ஏழை-பணக்காரன், முதலாளி - தொழிலாளி தன்மையும் இருந்து வருகிறது. இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும், சில முயற்சியால் செயற்கையாக ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்லவென்றும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல்நிலையில் உள்ளவனும், கீழ்நிலையில் உள்ளவனும் நம்பிக்கொண்டு இருக்கிறான்.

இந்த மூட நம்பிக்கைதான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக் கொண்டு வருகிறது. சாதாரணமாக, மனிதப் பிறவியில் கீழ்ஜாதி, மேல்ஜாதி, அடிமை (பறை) ஜாதி என்பவை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; பல ஆணிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஆக நாளது வரை யாரும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. ஏனெனில், செய்ய முடியாதபடி அவனவன் நம்பிக்கையைச் செய்து கொண்டான். ஜாதி வித்தியாசங்களுக்கும், ஜாதிக் கொடுமைக்கும் கடவுள் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால்தான் பரிகாரம் செய்ய முடியும்? எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றி சந்தேகப்பட்டாலும், தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும், மேன்மையாகவும் கற்பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்தி பெருமையடைகிறான்; சாஸ்திரங்களில், மதங்களில் அவற்றிற்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கிறான்; புராணங்கள் எழுதி வைத்துப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடம் மாத்திரமல்ல; எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகிறது. ஜாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை விபசாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை ஜாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது. அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்பந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம், உண்மையறியாமலும், உலகமொப்புக்கும், தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதி பேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும்படியாகவோ செய்த காரியங்கள் அல்ல. கடவுளும், மதமும் உலகில் ஆயிரம் வருஷத்துக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மறைந்தும் மாறுதலடைந்தும் சீர்திருத்தம் பெற்று இருக்கிறது.

கடவுளால், மதத்தினால் பிழைக்கும்படி வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் தவிர - சமூகம் தவிர, மற்ற இடங்களில் கடவுளும், மதமும் எவ்வளவோ குறைவடைந்து வருகின்றன. உருவமில்லாத, பெயரில்லாத கடவுள்கள் தோன்றிவிட்டன. மத சின்னமில்லாத மதங்கள் தோன்றிவிட்டன. இரண்டையும் பற்றி கவலைப்படாமல் தங்கள் தங்கள் வேலையைக் கவனிக்கும்படியான உணர்ச்சிகளும் தோன்றிவிட்டன. தங்களுக்கு அதைப்பற்றிய கவலையில்லாமல் மற்றவனை ஏய்க்கவும், கட்டுப்படுத்தவும், அடிமையாக்கவும் மாத்திரமே இன்று கடவுளும், மதமும் வெகு மக்களால் கையாளப்படுகிறதே ஒழிய வேறில்லை.

சகல துறைகளிலும் உலகம் முற்போக்கடைவதுபோலவே கடவுளிலும் மதத்திலும்கூட உலகம் முற்போக்கடைந்து வருகிறது. சுயமரியாதை இயக்கம் இந்த க்ஷணமே எல்லோரையுமே கடவுள், மத நம்பிக்கையை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தவில்லை. நமக்கு புரியாததும், நம்மால் அறிய முடியாததும், குணம், உருவம், சலனம் இல்லாததும் ஆன கடவுளைப் பற்றி சுயமரியாதை இயக்கத்துக்கும் கவலையில்லை. மற்றபடி, கடவுளைப் பற்றி தெரிந்துவிட்டதாகச் சொல்லுவதும், அதற்கு உருவம், பெயர், குணம், சலனம் ஏற்படுத்துவதும், அதன்மீது பொறுப்பைச் சுமத்துவதும், மனிதன் மற்றவர்களால் அடையும் கொடுமைக்கும், இழிவுக்கும் பொறுப்பாக்குவதுமான கடவுள் உணர்ச்சியையே சுயமரியாதை இயக்கம் குறை கூறுகிறது. மற்றும், கண்டதெல்லாம், நினைத்ததெல்லாம் கடவுள் என்கின்ற உணர்ச்சியையும், ஆயிரக்கணக்கான கடவுள்கள் உணர்ச்சியையும் ஒழிக்கவேண்டும் என்கின்றது.

இன்று ஒரு இந்துவால் எவை எவை எல்லாம் கடவுள் என்பதாக மதிக்கப்படுகிறது என்றால், மரத்தில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகிறது; புல் பூண்டுகளில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகிறது; மலத்தில் ஒரு கூட்டமும்; பூச்சி புழுக்களில் ஒரு கூட்டமும்; மிருகங்களில் பன்றி, நாய், கழுதை, மாடு முதலிய ஒரு கூட்ட மிருகமும்; பட்சியில் கருடன் காக்காய், கோழி முதலிய ஒரு கூட்டமும்; கல்லுகளிலும், மண்களிலும் ஒரு கூட்டமும்; காகிதங்களிலும், எழுத்துகளிலும் ஒரு கூட்டமும்; மனிதர்களில் ஒரு கூட்டமும் இன்று மனிதனால் கடவுளாகப் பாவிக்கப்பட்டு பூசை, வணக்கம், பலி முதலியவை செய்து, ஏராளமான பொருள்கள் நாசமாக்கப்பட்டு வரப்படுகின்றன.

இந்த முட்டாள்தனங்களையும், மோசக் கருத்துகளையும் முதலில் ஒழிக்கவேண்டுமென்றுதான் சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது. இதைத் தைரியமாய் எடுத்துச் சொல்ல இன்று இந்நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் இருக்கிறது. அது, இந்த மாதிரியான கடவுள் உணர்ச்சிகளை ஒழித்துத் தீருவதென்றே கங்கணம் கட்டிக்கொண்டு உயிர் வாழுகின்றது. நாஸ்திக இயக்கம் என்று சொல்வதாலேயே அது பயந்து கொள்ளப் போவதில்லை. கடைசி வரை அது உழைத்துத்தான் தீரும். மத விஷயத்திலும் இப்படித்தான் இருந்து வருகிறது. ஆகவே, சுயமரியாதை இயக்கம் இன்னது என்றும், காங்கிரஸ் இயக்கம் இன்னது என்றும் உணர்ந்து, உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள். விஷமப் பிரச்சாரத்துக்கும், ஏமாற்றுப் பிரச்சாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.

-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 5.4.1936

No comments: