சிறீமான் சீனிவாசய்யங்கார் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது "பார்ப்பனராகிய நான் யாரையும் ஏமாற்றவில்லை, பார்ப்பனரல்லாதாராகிய ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னை ஏமாற்றி விட்டார்" என்று சொன்னாராம். நாயக்கர் எந்த விதத்தில் சிறீமான் அய்யங்காரை ஏமாற்றினார் என்பதையும் கூடவே சொல்லியிருந்தால் கண்ணியமாயிருந்திருக்கும். அப்படிக்கில்லாமல் பொதுப்படையாய்ச் சொல்லுவது விஷமத்திற்காக என்றேதான் சொல்ல வேண்டும். சிறீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் திருச்சியில் கூட்டிய மாகாணக் காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டத்தில் சிறீமான் வரதராஜூலு நாயுடுகாரவர்கள் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஒரு தீர்மானம் கொண்டுவந்த சமயத்தில் நாயுடுகாரைப் பார்த்து "எப்படியாவது இந்த தீர்மானத்தை இதுசமயம் வாபீசு வாங்கிக் கொள்ளுங்கள்; மூன்று மாதம் பொறுத்தவுடன் இதற்கு நான் வகை செய்கிறேன்" என்று சொல்லி நாயக்கரையும் சிறீமான் நாயுடுகாரையும் கெஞ்சி நம்பச் செய்து அதைப் பின்வாங்கிக் கொள்ளும்படி செய்தார்.
காஞ்சீபுரம் மகாநாட்டில் நாயக்கரும், சிறீமான் இராமநாதனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்த சமயத்திலும் வெளிப்படையாய் மகாநாட்டில் பிரேரேபிக்க அக்கிராசனர் வசம் தீர்மானம் ஒப்படைத்த சந்தர்ப்பத்தில் நாயக்கரை சிறீமான் அய்யங்கார் தனியாய் கூட்டி வைத்து இது சமயம் இதை வலியுறுத்தாதீர்கள். மூன்று மாதத்தில் எல்லாம் சரிபடுத்தி விடுகிறேன் என்று உறுதி கொடுத்தார். இதற்கு சாட்சி சிறீமான் சீனிவாசய்யங்கார் அக்கிராசனராக சிறீமான் நாயுடுகாரால் பிரேரேபித்து ஆமோதித்து நிறைவேறியபின் தீர்மானம் சபையோரால் அங்கீகரிக்கப்பட்டதாய் ஏற்பட்ட பின்பும் சிறீமான் சீனிவாசய்யங்கார் எழுந்து நின்று சபையோரைப் பார்த்து "நீங்கள் எல்லாம் என்னைத் தெரிந்தெடுத்தாலும் சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னுடைய தேர்தலை ஒப்புக் கொண்டதாக அவர் வாயால் சொன்னால்தான் நான் இந்த ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ளுவேன்" என்று சொன்னார். அதுசமயம் சிறீமான்கள் வரதராஜூலு நாயுடு, முதலியார் முதலியவர்களும் நாயக்கரைப் பார்த்து "ஒப்புக் கொண்டேன்" என்று சொல்லும்படி சொன்னதின் பேரில், நாயக்கர் எழுந்து பேசும்போது தீர்மானம் நிறைவேறிய பின்பு என்னை கேட்பதில் பிரயோஜனமில்லை. ஆனாலும் சிறீமான் அய்யங்கார் தலைவராய் இருப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் சிறீமான் அய்யங்காரை விட உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும் இந்த ஸ்தானத்தில் இருந்திருக்கிறார்கள் என்றும் ஆனால் அய்யங்கார் இடத்தில் இதுசமயம் தனக்கு உள்ள மனவருத்தமெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் அய்யங்கார் வாக்கு தவறி இருக்கிறார் என்பதினாலேயேதான் என்றும், இனியாவது அவர் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதானால் தானும் இத்தீர்மானத்தை ஒப்புக் கொள்ளுவதாகவும் சொல்லியிருக்கிறார். இதிலிருந்து சமயம் வரும்போது வாக்குத்தத்தமும் நம்பிக்கையும் கொடுத்து சமயம் தப்பின வுடன் மோசம் செய்கிறவர்கள் பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
சிறீமான் சி.பி. இராமசாமி அய்யர் சட்டசபைக்கு நிற்கும்போது பார்ப்பனரல்லாதாருக்கு நம்பிக்கை கொடுத்து அவர்கள் ஓட்டுப்பெற்று சர்க்கார் அடிமையாகி 5500 சம்பளமுள்ள உத்தியோகமும் பெற்று பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் நடப்பது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காக ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட போது சில பார்ப்பனரல்லாத இளைஞர்களைப் பிடித்து ஏமாற்றி தங்கள் வசப்படுத்திக் கொண்டுபுவகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைகளை நாங்களும் ஒப்புக் கொள்ளுகிறோம்; ஆனால் ஜஸ்டிஸ் கட்சி சர்க்காருக்கு அனுகூலமாயிருக்கிறது; அதை ஒழிக்க வேண்டும்" என்று சொல்லி அந்தக் கட்சியும் அந்தக் கட்சிப் பத்திரிகையும் செல்வாக்கற்றுப் போகும் படி செய்து அது முடிந்த உடன் வேறு சில பார்ப்பனரல்லாத வாலிபர் களை சேர்த்துக்கொண்டு "நீக்கு பெப்பெப்பே, நீ தாத்தக்கு பெப் பெப்பே" என்று சொல்லி துரோகம் செய்வது பார்ப்பனரா? பார்ப்பன ரல்லாதாரா?
இம்மாதிரி தலைமுறை தலைமுறையாய் வழி வழி வம்சமாய் இனி பிறக்கப்போகும் பார்ப்பனரல்லாதாரைத் துரோகம் செய்வதற்கு இனி பிறக்கப்போகும் பார்ப்பனருக்குக்கூட ஆதாரம் தேடி வைப்பது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
பனகால் ராஜாவிடம் போய் ஜில்லா போர்டு மெம்பர் வேலை வாங்கிக்கொண்டு மூன்றாவது நாளே பனகால் ராஜாவுக்கு விரோதமாய் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஓட்டுக் கொடுத்து அவருக்குத் துரோகம் செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
பார்ப்பனரல்லாதார் கட்டுப்பாட்டைக் கலைப்பதற்காக பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் இருந்த ஒரு கனவானுக்கு நீதி இலாக்காவில் பெரிய உத்தியோகம் கொடுப்பதாய் வாக்களித்து ஆசை காட்டி அவரைக் கொண்டு பனகால் ராஜாவின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஓட்டுப்பெற்று பிறகு அவருக்கு என்று வாக்களித்த உத்தியோகத்தை பார்ப்பனருக்கே கொடுத்து வருவதின் மூலம் பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றி துரோகம் செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
பார்ப்பனரல்லாதாருக்கு சில உத்தியோகம் கிடைக்க வழி ஏற்பட்டவுடன் அரசியலில் இனியும் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பலனாய் ஏற்படும் உத்தியோகங்கள் பார்ப்பன ரல்லாதாருக்கு போய்விடுமே என்கிற குரோத புத்தியோடு எங்களுக்கு சீர்திருத்தமே வேண்டாமென்று சர்க்காருக்கு சொல்லுவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
கல்பாத்தி தெருவில் நடக்க சர்க்காரும் ஜனப்பிரதிநிதி சபை என்னும் சட்டசபையும் ஒப்புக்கொண்ட பிறகுகூட "வேலையிருந்தால் தான் போகலாம்" என்கிற வியாக்கியானம் செய்து பார்ப்பனரல் லாதாரின் சுயமரியாதையை ஒடுக்கி வைத்து அவர்களுக்குத் துரோகம் செய்து வருவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
எல்லைப்புற மகமதிய சமூகத்திற்கு மற்ற பாகத்திற்கு அளிக்கப் பட்டிருக்கும் சீர்திருத்தத்திற்கு சமமாகவாவது பாரபட்சமில்லாமல் சீர்திருத்தம் அளிக்கவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத் திற்கு விரோதமாய் அதை எதிர்த்து தோற்கடித்து அச்சமூகத்திற்கு துரோகம் செய்தது நம் நாட்டுப் பார்ப்பனரா ? பார்ப்பனரல்லாதாரா?
மகமதியச் சமூகத்திற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு அனேக மகமதிய தலைவர்களால் சம்பாதிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை ஒழிப்பதற்காக பொறுப்பற்ற இரண்டு மகமதிய வாலிபர்களை பிரதிப் பிரயோஜனம் கொடுத்து அமர்த்திக்கொண்டு மகமதியர் களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே வேண்டாம் என்று சொல்லும் படி செய்து மகமதிய சமூகத்திற்கும் மதத்துக்கும் துரோகம் செய்வது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
இந்தியா சட்டசபைக்கு கிறிஸ்துவ சமூகத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததால் மகமதியரல்லாத பொதுத் தொகுதியின் பேரால் நிற்கும் சிறீமான் வி.சக்கரை செட்டியார் அவர்களை பிராமண ரல்லாத இயக்கங்களும், ஸ்தாபனங்களும் ஆதரித்தும் இந்தியா சட்டசபைக்கு தமிழ்நாடு சார்பாய் ஏற்பட்டுள்ள ஸ்தானங்கள் 6-ல் 5 -க்கு அய்யங்கார்களாகவே நின்று கொண்டு கிறிஸ்தவர் என்பதைக் கூட பார்க்காமல், ஒரு அய்யங்கார் பார்ப்பனரே அதுவும் கிறிஸ்தவசமூகத்திற்குத் தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமலே அனுகூலம் செய்கிறேன் என்று சொல்லும் தலைவரே நின்று கொண்டு அச்சமூகத்திற்கு துரோகம் செய்வது பார்ப்பனரா? பார்ப்பன ரல்லாதாரா? இந்தக் கொடுமை செய்துகொண்டும் அச்சமூகத்திற்கு விரோதமாய் ஒரு கிறிஸ்தவ வாலிபரை விலைக்கு வாங்கிக்கொண்டு அவர் மூலம் தம் சமூகத்திற்கு வகுப்புவாரி உரிமையே வேண்டா மென்று சொல்லும்படி செய்து அச்சமூகத்திற்கு துரோகம் செய்வது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
தொழிலாளர் சமூகத்துக்கு பாடுபடுவதாய் வேஷம் போட்டு அச் சமூகத்தை பல தந்திரங்களால் சுவாதீனம் செய்து கொண்டு அவர்களை ஏமாற்றி அவர்களுக்குத் தலைவராகியும் அவர்கள் ஓட்டுப் பெற்று பதவி அடைந்தும் கடைசியாய் தொழிலாள ஸ்திரீகள் கர்ப்பவதியாயிருந்து பிள்ளை பெற்ற சமயத்தில்கூட சிலநாள் ஓய்வு கொடுக்கக்கூடாது என்று சட்டசபையில் வாதாடி அந்த நலத்தைக் கெடுத்து தொழிலாள சமூகத்திற்கும் பெண்கள் சமூகத்திற்கும் துரோகம் செய்தது நம் நாட்டுப் பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு நாங்கள் நன்மை செய்கிறோம் என்று வாயால் சொல்லிக்கொண்டு காரியத்தில் அச் சமூகத்தை இன்னமும் தாழ்மைப்படுத்த அச் சமூகத்திலேயே ஒரு பொறுப்பற்ற ஏழையை விலைக்கு வாங்கிக்கொண்டு அவரைக் கொண்டே தங்கள் சமூகத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை வேண்டாம் என்று பிரசாரம் செய்யச் செய்து அச் சமூகத்திற்கு துரோகம் செய்து வருவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
குழந்தைப் பருவத்திலிருந்தே சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வளர்ப்பதற்காக ஒரு குருகுலம் ஆரம்பிப்பதாய் சொல்லி பொது மக்களின் சபையான காங்கிரசை நம்பச் செய்து 10 ஆயிரம் ரூபாய் சாங்கிஷன் செய்யப்பட்டு, பார்ப்பனரல்லாத ஒரு காங்கிரஸ் காரியதரிசி நிபந்தனை எழுதி பணம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்ல, அவருக்குத் தெரியாமல் மற்றொரு பார்ப்பன காரியதரிசியைப் பிடித்து முறைக்கு விரோதமாக இரகசியமாய் 5000 ரூபாய்க்குச் செக்கு எழுதி ரூபாய் வாங்கிக் கொண்டு போய் பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்தால் பாவம் என்று இருசார்பு குழந்தைகளுக்கும் முளையிலிருந்தே வித்தியாசம் கற்பித்து பார்ப்பனரல்லாதாரை நிரந்தரமாய்த் தாழ்த்துவதற்காக அந்தப் பணத்தை உபயோகித்த துரோகத்தை செய்தது பார்ப்பனரா? பார்ப்பன ரல்லாதாரா?
காங்கிரசில் தீண்டாமை ஒழிப்பது என்கிற தத்துவத்தை எல்லாரும் ஒப்புக்கொள்வதாய்ச் சொல்லி பார்ப்பனரல்லாதாரை யெல்லாம் காங்கிரசில் சேர்த்து ஜெயிலுக்குப் போகச் செய்து, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மான மூலமாய்ச் சொன்னவுடன் ராஜினாமா கொடுத்து வெளியில் போய் மகாத்மா காங்கிரசையே ஒழித்து பார்ப்பனக் காங்கிரசாக்கி தேசத்திற்கும் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கும் துரோகம் செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை, எல்லோரும் சமம் என்று சொல்லி, பார்ப்பனரல்லாதார் ஓட்டுப் பெற்று இந்தியா சட்டசபைக்குப் போய் பிரயாணச் செலவின் பேரால் ஆயிரக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்துக் கொண்ட பிறகு ஒரு பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால், தான் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொல்லி பார்ப்பனரல்லாதாரை இழிவுப் படுத்தி துரோகம் செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
மகாத்மா காந்தியடிகளின் கொள்கைக்கு 'இந்து' பத்திரிகையும் 'சுதேசமித்திரன்' பத்திரிகையும் விரோதமாய் பிரசாரம் செய்வதால் காங்கிரசில் ஒரு பத்திரிகை இருக்க வேண்டும் என்று சொல்லி காங்கிரஸ் பணத்திலும் 10000 ரூபாய் பெற்று பார்ப்பனரல்லாதாரிடமும் பதினாயிரக்கணக்கான ரூபாய்க்கு பங்குகள் விற்று பணம் பெற்று 'சுயராஜ்யா' என்ற பத்திரிகை ஆரம்பித்து "அவன் போனால் கலகமாகிவிடும் நான் போனால் செருப்பாலடித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லுவது போல் 'இந்து', 'சுதேசமித்திரனு'க்கு விரோதமாய் பிரசாரம் செய்வதாய் சொல்லி இப்போது அவைகளுக்கு மேலாக பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு விரோதமாயும் மகாத்மா காந்தியின் காங்கிரசை ஆழக்குழியில் போட்டு புதைப்பதற்கும் வேலைசெய்து கொண்டு பங்குக்காரர்களையும் பங்கு சேர்த்துக் கொடுத்தவர்களையும் வைது கொண்டு அச்சமூகத்திற்கே துரோகம் செய்து வருவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?
"ஆகையால் தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்" என்பது போல் தன்னுடைய சம்பள சிப்பந்திகளை வைத்துக்கொண்டு, தன்னிஷ்டப்படிப் பேசி பத்திரிகையில் பார்ப்பனரல்லாதார் பார்ப்பனருக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று சொல்லுவது எவ்வளவு நன்றி கெட்டத்தனம்? ஒவ்வொரு பார்ப்பன ரும் தனியாய் நின்றுகொண்டு தங்கள் வாழ்வுகளையும் தங்கள் செல்வங்களையும் போக போக்கியங்களையும் நன்றாய்க் கவனித்து இதெல்லாம் யாரை ஏமாற்றி அனுபவிக்கிறோம், யாரை துரோகம் செய்து அனுபவிக்கிறோம், எவ்வித நன்றி கெட்ட தன்மையாய் அனுபவிக்கிறோம் என்று அவர்கள் நிதானமாய் யோசித்தால் விளங்காமல் போகாது.
--------------- தந்தைபெரியார் - "குடி அரசு" 29.8.26
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment