ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பனகல் ராஜா கொண்டுவந்த சென்னை இந்து தேவஸ்தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ் நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான வழியில் காரியங்கள் நடந்து வருகின்றன என்பது நேயர்கள் அறிந்த விஷயம். திருப்பதி தேவஸ்தான நிதியிலிருந்து சந்திரகிரியில் ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்தப் போவதாக பனகல் ராஜா சமீப காலத்தில் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டதைக் கேட்டதும், இச்சட்டத்தின் விரோதிகள் அவர் மேல் சீறி விழ ஆரம்பித்துவிட்டார்கள். 63 வது சட்டம் இப்படிச் சொல்லுகிறது, 76 வது சட்டம் அப்படிச் சொல்ல வில்லை என்றவாறு சிற்சில பத்திரிகைகளின் நிரூபங்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டிருக்கின்றன. சர்வகலாசாலை ஏற்படுத்துவதைக் காட்டிலும், முதலில் திருப்பதி கோயில் கோபுரத்தையும் ஏழுமலைப் படிகளையும் ஏன் பழுது பார்க்கவில்லையென்ற கேள்விகளை இதுசமயத்தில் சிலர் கிளப்பி விடுவது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த விதண்டாவாதக்காரர்கள் இவ்வளவு நாள் எங்கு பதுங்கிக் கிடந்தார்களோ தெரியவில்லை. திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சுமார் 17 - 1 8 லட்சம் ரூபாய் வருஷ வரும்படி இருப்பதாகத் தெரிகின்றது. இதில் 7 அல்லது 8 லட்ச ரூபாய் செலவாகிறபடியால் வருஷா வருஷம் பத்து லட்சம் ரூபாய் மீதப்படுகிறது. இந்த மீதிப் பணம் சிற்சில ஆடம்பரச் செலவுக்கும், சிற்சில பள்ளிக்கூடங்களை நடத்தவும் செலவு செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் இன்னும் நாற்பது லட்சம் ரூபாய் மொத்தமாக மீதியிருக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்தப் போவதை கல்கத்தா பாபு ராமானந்த சாட்டர்ஜி அவர்கள் "மாடர்ன் ரெவ்யூ " என்ற தம் சஞ்சிகையில் மனப்பூர்வமாய் ஆதரித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சென்னையில் இருப்பது போல ஒவ்வொரு ராஜதானியிலும் தேவஸ்தானச் சட்டம் ஏற்பட வேண்டுமென்றும் அப்பெரியார் அபிப்பிராயப்படுகிறார். அவரது அபிப்பிராயத்தைச் சந்தோஷத்துடன் ஆமோதிக்கிறேன். பனகல் ராஜாவின் நல்ல யத்தனத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யும் சுயநலப்புலிகள் ஒரு பக்கமிருக்க, சிறந்த தேச பக்தர்களில் ஒருவராகிய ராமானந்தபாபுவின் பாரபட்சமில்லாத அபிப்பிராயத்தை பொதுமக்கள் கவனிக்க.
------------ சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய கட்டுரை : "குடி அரசு" 12.7.1925
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment