Tuesday, April 01, 2008

பெண்களை விபசாரிகளாய் படைத்த கடவுள்

ஆஸ்திகப் பெண்: என்ன அய்யா, நாஸ்திகரே! மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப்பற்றிய ஆட்சேபனைகள் எப்படி இருந்தாலும், பெண்களை கடவுளே விபசாரிகளாய் பிறப்பித்து விட்டார்; ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன்.

நாஸ்திகன்: அம்மா, அப்படி தாங்கள் சொல்லக்கூடாது. மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆ.பெண்: அதென்ன அய்யா, நீங்கள்கூட அப்படிச் சொல்லுகின்றீர்கள்! இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை? எல்லாப் பெண்களுமா விபசாரிகள்?

நா: ஆம் அம்மா! எல்லோருமேதான் "விபசாரிகள்", இதற்காக நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை.

ஆ.பெண்: என்ன அய்யா, உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா நீங்கள் விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள்?

நா: ஆம். ஆம். ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்ல; மேல் உலகத்தில் உள்ள பெண்களையும்கூடத்தான் நான் "கற்பு உள்ளவர்கள்" என்று சொல்லுவதில்லை.

ஆ.பெண்: இப்படிச் சொல்லுவது தர்மமாகுமா?

நா: கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமான மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவது எப்படிப் பொய்யாகும், அதர்மமாகும், சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால் அது சரியென்று நான் ருஜூப்படுத்தவும் தயாராயிருக்கிறேன்.

ஆ.பெண்: என்ன ருஜூ, நாசமாய்ப் போன ருஜூ; சற்று காட்டுங்கள் பார்ப்போம்.

நா: நம் பெரியவர்கள் கற்பைப் பரீட்சிக்கத் தக்க பரீட்சைகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.

ஆ.பெண்: என்ன பரீட்சை அய்யா அது?

நா: சொல்லட்டுமா; கோபித்துக் கொள்ளக்கூடாது!

ஆ.பெண்: கோபமென்ன அய்யா! மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்! தாராளமாய்ச் சொல்லுங்கள். நா: தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுவாள் பெய்யெனப் பெய்யுமழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா?

ஆ.பெண்: ஆம் கேட்டிருக்கின்றேன்.

நா: கற்புடைய மங்கையர்கள் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேதவாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?

ஆ.பெண்: ஆம் கேட்டிருக்கின்றேன்.

நா: சரி... ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது; குடிக்கத் தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உழவு (2 அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆ.பெண்: இது நம்மாலாகின்ற காரியமா? தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடியும். இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால் இந்த பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.

நா: எந்தப் பாவி எப்படித் தவித்தாலும், நீங்கள் கற்புள்ளவர்களாயிருந்தால் மழை பெய்யென்றால் பெய்துதானே ஆக வேண்டும் அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீர வேண்டும். எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ, அப்போதே, பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்ல, "விபசாரிகள்" என்று ருஜூவாகவில்லையா? பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். ஆகையால் இனிமேல் சாஸ்திரங்களைப்பற்றி சந்தேகப்படாதீர்கள்! அதிலும் ரிஷிகளும், முனிவர்களும் சொன்ன வாக்கியமும், கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்து மதத்திற்கு ஆதாரமானதும், மோட்சத்திற்கு சாதகமானதுமான மனுதர்ம சாஸ்திரம் பொய்யாகுமா அம்மா! அதனால்தானே நான்கூட கல்யாணமே செய்து கொள்ளவில்லை! ஆ.பெண்: எதனால்தான்?

நா: பெண்களைக் கல்யாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள், அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டுமென்றிருக்கின்றதனால்தான்.

ஆ.பெண்: பின்னை என்ன செய்கின்றீர்கள்?

நா: கடவுளோ பிறவியிலேயே பெண்களை விபசாரிகளாய்ப் பிறப்பித்து விட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய் விட்டது. ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. ஆதலால், எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும்; கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்பதாகக் கருதி சிவனே என்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா என்கின்ற தைரியம் உண்டு.

ஆ.பெண்: அப்படியானால் நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்தததில் ஒன்றும் குற்றமில்லை இந்த மனுதர்ம சாஸ்திரமும், வேதமும், பொய்யாமொழியும், நீதியும், இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக்கொண்டதோ ஆன கடவுள்களும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நமது எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.



சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,
("குடி அரசு", 2.3.1930).

No comments: