டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
ஆனால், இந்த இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவை (உயர் வருவாய் பிரிவினர்) சேர்க்கக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த கல்வியாண்டில் இந்த சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இந்த தடையை நீக்க வேண்டும், வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இடைக்காலத் தடையை நீக்க மறுத்த தலைமை நீதிபதி, அரசியல் சாசன பெஞ்சுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார். இந்த பெஞ்ச் தனது விசாரணையை மேற்கொண்டது. இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி மத்திய அரசின் சட்டம் முறைப்படியானதே என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.
27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்தம், அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 93வது திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
----------நன்றி -- தட்ஸ்தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment