Monday, April 07, 2008

சதியாலோசனை

தேசீயப் பிராமணர்களென்போரும், தேசீயப் பிராமணப் பத்திரிகைகளென்பதுவும் பிராமணரல்லாதாரை எவ்விதத்தில் அடக்கியாள்வது என்னும் விஷயமாய் பெரிய சதியாலோசனைகள் செய்து, பிராமணரல்லாதார் சிலவிலும், பிராமணரல்லாதார் உழைப்பிலும் தங்கள் காரியத்தை நடத்தி வருகிறது. பிராமண ரல்லாதார்களில் பாமர ஜனங்களும் (தங்களது அறியாமையினாலும்) சோற்றுப் பிரசாரகர்களும் இவர்களுக்கநுகூலமாயிருந்து தங்கள் சமூகத்தின் சுயமரியாதையையே பாழாக்கி வருகின்றார்கள். தன்னு டைய சாமர்த்தியத்தினால் பிராமணரல்லாதாரில் பெரும்பாலோர் தன்னை நம்பும்படி செய்து அவர்களுக்குத் தலைவருமாகி அச்செல் வாக்கால் மகாத்மாவின் பிரதம சீடராகி ஒரு நிலையான நல்ல பெயரை ஏற்படுத்திக் கொண்ட சிறீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் இப்பொழுது தமது சுயரூபத்தைக் காட்டத் துணிந்துவிட்டார். ஒவ்வொரு நாளும் சட்டசபைத் தேர்தலுக்கு சுயராஜ்யக் கட்சியாருக்கே வோட் செய்யுங்கள்; மதுவிலக்குச் செய்ய அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று விளம்பரம் போட்டு வருகிறார். சுயராஜ்யக் கட்சியாரால் எப்படி மது விலக்குச் செய்யக்கூடும் என்பதைப் பற்றி அநேக தடவைகளில் இவரே மறுத்துப் பேசியிருக்கிறார். சுயராஜ்யக் கட்சி காரியதரிசியாகிய சிறீமான் சத்தியமூர்த்தியும் சுயராஜ்யக் கட்சியின் மூலம் மதுவிலக்குச் செய்ய முடியாதென்று சொல்லியிருக்கிறார். சுயராஜ்யக் கட்சியின் ஆதிக்கத்தால் காங்கிரஸ் காரியதரிசியாகிய சிறீமான் ரெங்கசாமி ஐயங்காரும் தமது பத்திரிகையின் மூலம் தினமும் சாராயம் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறார். கோயமுத்தூர் ஜில்லா சுயராஜ்யக் கட்சித் தலைவராகிய சிறீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரோ இன்னமும் தமது மரங்களில் கள்ளுற்பத்தி செய்வதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறார். சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கோ இன்னமும் மது இல்லாவிட்டால் ஒரு காரியமும் செய்ய முடியாது.

இவ்வளவும் ஒருபுறமிருக்க சிறீமான் ராஜகோபாலாச்சாரியாரே சட்டசபைக்குப் போவதைப் பற்றிப் பேசுகையில் வெளியில் சட்ட மறுப்பைச் செய்து கள்ளை நிறுத்துவதென்றும், காசிக்குப் போக முடியாவிட்டால் சட்டசபைக்குள் போய் கள்ளைக் குடிக்க வேண்டு மென்று சட்டம் செய்வதற்கு அநுகூலமாயிருக்கிற சட்டசபையாகிய கள்ளுக் கடைக்குப் போவதாவென்று பேசியிருக்கிறார். இவ்வார்த்தை சொன்னதற்காக, இவர்பேரில் குற்றப் பத்திரிகை படிப்பதற்கு ஒரு தீர்மானத்தை சிறீமான் சத்தியமூர்த்தி கொண்டுவந்து சிறீமான் ராஜகோபாலாச்சாரியார் சட்டசபையைக் கள்ளுக்கடை எனச் சொன்னது தப்பிதமென்றும் அளவுக்கு மிஞ்சிக் கண்டித்து காரியக்கமிட்டியில் பேசியிருக்கிறார். இதை சிறீமான்கள் எம்.கே ஆச்சாரியாரும், டி. ஆதிநாராயண செட்டியாரும் ஆதரித்து வைது பேசினார்கள். அது சமயம் சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் இதை எதிர்த்து (சட்டசபையைப் பற்றி) நிர்மாணத் திட்டங்களையும், விடுதலை யையும் பொறுத்த வரையிலும் சிறீமான் ராஜகோபாலாச்சாரியார் சொன்னதுபோல் சட்டசபைகள் கள்ளுக்கடைகள்தானென்றும் பேசித் தீர்மானத்தைத் தோற்கடித்தார்.

இப்படியெல்லாமிருக்க இப்பொழுது சட்டசபையில் கள்ளை ஒழிப்பதற்கு அநுகூலமிருக்கிறது; சென்ற வருஷம் கள்ளுக்கடை யாயிருந்த சட்டசபையானது இவ்வருஷம் காசிக்குச் சமானமாகி விட்டது. ஆதலால் மேல்கண்ட கள்ளு உற்பத்திக்காரரும், கள்ளு விற்பனைக் காரரும், கள்ளு குடிப்பவர்களும், கள்ளு குடிப்பவர் களினால் ஜீவனம் செய்பவர்களும், சட்டசபையால் கள்ளை நிறுத்த முடியாதென்கிற தீர்மானமுள்ளவர்களுமான சுயராஜ்யக் கட்சியாருக்கே வோட் கொடுங்கள் என்று உபதேசம் செய்ய வந்து விட்டார். இதையும் பிராமணப் பத்திரிகைகள் கரைகட்டி விளம்பரம் செய் கின்றன. இதில் எவ்வளவு சதியாலோசனைகள் இருக்கின்ற தென் பதையும் பிராமணரல்லாதாரை ஒழிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமென்று இத்தேசீய பிராமணர்களும், அவர்கள் பத்திரிகை களும் கங்கணங் கட்டிக்கொண்டு இருக்கின்றன வென்பதையும் பொது மக்கள் உணர்ந்து ஏமாந்து போகாமலிருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

-------------- தந்தைபெரியார்- "குடிஅரசு" -7.2.26

No comments: