Monday, May 05, 2008

முனிசிபாலிட்டியில் சுயராஜ்யம்

கொஞ்ச நாளாக எங்கு பார்த்தாலும் முனிசிபல் சேர்மென்கள் வசூல் செய்யத் தவக்கப்பட்ட காரணத்தினால் முனிசிபாலிட்டிக்கு ஏற்பட்ட வரி நஷ்டத்தை அவ்வித சேர்மென்களிடமிருந்து வசூல் செய்யப்படவேண்டுமென்று கவர்ன்மெண்டார் உத்திரவு போட்டு வருகிறார்கள். ஆனால் சேர்மென்கள் திருடுகிற-திருடிக் கொண்ட பணத்தை வசூல் செய்யவும் அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தவும் அதிகாரிகளும் கவர்ன்மெண்டாரும் கவலைப்படுவதேயில்லை போலிருக்கிறது. அதிகாரிகளைக் கண்டு "சேர்மென்கள் இம்மாதிரி கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே இது சரியா? என்று கேட்டால், நாங்கள் என்ன செய்வோம்; நீங்கள் தானே சுயராஜ்யம் கேட்டவர்கள்; நாங்கள் சுயராஜ்யம் கொடுத்து விட்டோம்; அந்த நிர்வாகம் உங்கள் மந்திரிகளிடம் இருக்கிறது; அவர்களைப் போய்க் கேளுங்கள். நீங்கள் கேட்ட சுயராஜ்யத்தை நீங்கள்தானே அநுபவிக்க வேண்டும்? எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்" என்கிறார்களாம். கவர்ன்மெண்டார் என்கிற மந்திரிமார்களை இதைப் பற்றி கவனிக்கும்படி சொன்னால் "நீங்கள் தெரிந்தெடுத்த சேர்மென் தானே, அவரால் ஏற்படும் சுக துக்கத்தை நீங்களே அநுபவியுங்கள்" என்று சொல்லுகிறார்களாம். "நாங்கள் தெரிந்தெடுக்கவில்லை, ஏமாற்றி விட்டார்கள்" என்று சொன்னால் 'கோர்ட்டுக்குப் போங்கள்' என்று சொல்லுகிறார்களாம். ஊரில் சிநேகிதமாய் உள்ள சிலரிடம் சொல்லி யாவது இதைத் திருத்தலாமென்றால் சேர்மெனின் நண்பர்கள் "இதனால் என்ன முழுகிப் போய்விட்டது. அவரும் ஒரு பார்ப்பனரல்லாதார் (நான் பிராமின்) தானே, சாப்பிட்டுப் போகட்டுமே. இதனாலேயா முனிசிபாலிட்டி முழுகிப் போய் விடும்?" என்று சொல்லி விடுகிறார்களாம்.

சாட்சிக்காரர்கள் காலில் விழுவதை விட சண்டைக்காரர் காலிலேயே விழுந்த விடலாமென்று சேர்மெனிடம் போய் "ஐயா! இப்படிச் செய்கிறீர்களே, இது யோக்கியதையா? உம்முடைய அக்கிரமத்தினால், சுயராஜ்யம் என்றாலே ஜனங்கள் பயப்படும் படியாயிருக்கிறதே, கொஞ்சமாவது சர்க்காருக்கு மேலதிகாரம் இருக்கும் போதே இப்படிக் கொள்ளையடித்தால் சர்க்கார் சுத்தமாய் விலகி விட்டால் முனிசிபாலிட்டியார் கதியென்னாவதென்று ஜனங்கள் நினைக்கும்படி செய்கிறீர்களே" யென்று கெஞ்சினால், சேர்மென்கள் "அதெல்லாம் சரி, அந்த தர்ம நியாயம் எனக்கும்தான் தெரியும். ஆனால் எனக்கு சோத்திற்கு வேறொரு வழிகாட்டுங்கள். நானும் உங்களோடு தர்ம நியாயம் பேசுகிறேன். எனக்கு பெண்டு - பிள்ளை - நல்லது - கெட்டது இவைகளில்லையா? எந்த ஊரில் பிறந்து இந்த ஊருக்கு வந்து சும்மா உழைக்க நாமென்ன முட்டாளா? உங்கள் தகப்பன்மார் காலந்தொட்டு நான் இப்படித்தான் நடக்கிறேன்" என்றும் "ஒரு சம்பளச் சேர்மென் வைத்தாலும் மாதம் 500 ரூபாய் செலவாகுமல்லவா? அதற்கு மேலாகவா என்னால் முனிசிபாலிட்டிக்கு செலவாகிவிடுகிறது?" என்று சொல்லி வருத்தப்படுகிறார்களாம்.

இந்நிலைமையில் கஞ்சிக்குங்கூட வழியில்லாத ஆட்களை சேர்மென் உத்தியோகத்தில் போட்டு அவர்கள் மீது இம்மாதிரி குற்றங் குறை சொல்லுவதைவிட, சேர்மென் வேலைக்கு வருகிறவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வரையில் படி உண்டென்று ஏற்பாடு செய்துவிட்டால் இம்மாதிரி கஷ்டங்கள் ஏற்படாததோடு முனிசிபாலிட்டிக்கும் அதிக நஷ்ட மேற்படாது. இல்லாவிட்டால் சேர்மென் மாதம் 500 ரூபாய் சம்பாதிக்க வேண்டியிருந்தால் முனிசிபாலிட்டிக்கு எவ்வளவு ரூபாய் நஷ்ட மேற்படுகிறது? பணம் சம்பாதிப்பதற்காக அவசியமில்லாத வேலைகள் எல்லாம் செய்ய வேண்டி நேரிடுகிறது.

உதாரணமாக, சேர்மெனுக்கு ஒரு 100 ரூபாய் வரும்படி வர வேண்டுமானால் கான்ட்ராக்டருக்கும் 200 ரூபாய்க்குக் குறைவில்லாமல் லாபம் இருக்கவேண்டும். இவைகள் தவிர ஆபிஸ் சிப்பந்திகள் ஓவர்சீயர் முதலியவர்களுக்கும் 50 ரூபாய்க்குக் குறையாமலாவது வரும்படி இருக்கவேண்டும். இதற்காகத்தான் குறைந்தது ஒரு 2000 ரூபாய் வேலையையாவது உற்பத்தி செய்ய வேண்டும் . இம்மாதிரி இவர்கள் சாப்பிடுவதை அனுமதிக்கிறதற்குக் கவுன்சிலர்களுக்கு நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கும் பல செளகரி யங்கள் செய்து கொடுக்கவேண்டும். அவர்களில் யாராவது இரண் டொரு கவுன்சிலர்கள் சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள் வர நேர்ந்து விட்டால் அவர்களுக்கும் மாதம் 100,50 கிடைக்கும்படி செய்ய வேண்டும். இவ்வளவுமில்லாமல் தன்னைத் தாங்கிப் பேச ஊரில் சில ஆட்களைச் சுவாதீனம் செய்து கொள்வதற்காக அவர்களுக்கும் வேறேதாவது உத்தியோகமோ கான்ராக்டோ, வரி குறைவோ முதலிய உதவிகள் செய்ய வேண்டும். இவ்வளவையும் பார்த்துக் கொண்டி ருக்கிற முனிசிபல் சிப்பந்திகள் சும்மா இருக்க முடியுமா? ஒருக்காலும் முடியாது. ஆதலால் அவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவுமல்லாமல் ஊர் ஜனங்களிடம் பணம் வாங்க ஆரம்பித்து அவர்களுக்கும் முனிசிபல் வரியோ, சொத்தோ உதவ வேண்டும். ஆட்களிடம் பணம் பெற்றாக வேண்டும். இம்மாதிரி சேர்மெனுக்கும் சிப்பந்திக்கும் பணம் கொடுத் தும் சிபார்சு பிடித்தும் உத்தியோகம் பெறுபவன் யோக்கியதையும் தகுதியுள்ளவனாயுமிருப்பானா? ஒருக்காலும் இருக்க முடியாது. ஆகவே, எவ்வெவ் விதங்களில் நமது சுயராஜ்யம் பெற்ற ஸ்தாபனங்கள் கஷ்டப்படவேண்டியிருக்கிறது என்பதை பொது ஜனங்கள் அறிவார்களாக.

----------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை --- "குடிஅரசு" 1-8-1926

No comments: