அந்த அக்கிரம சாமியாரின் பெயர் விக்கிரமன். அவரை நம்பிய எனக்கு ஐம்பது லட்ச ரூபாய் பணம் போச்சு. கூடவே என் வாழ்க்கையும் போச்சு’’ என்று ஒரு பெண்ணிடமிருந்து நம் செல்போனுக்கு புகார் வர, மறுநிமிடம் அந்தப் பெண்ணின் பங்களாவில் நாம் இருந்தோம். அவர் மடமடவென பேசத் தொடங்கினார்.
‘‘என் பெயர் சாந்தி விஸ்வநாதன். அப்பா அரசுத் துறையில் உயர் பதவியில் இருந்தவர். அதோடு எம்.ஜி.ஆருக்கு அவர் நண்பர். 1991_ல் என் தந்தை எதிர்பாராதவிதமாக இறந்து போனார். அப்போது நான் வங்கிப் பணியில் இருந்தேன். தந்தை இறந்த சோகத்தில¢ இருந்து விடுபட, வங்கியின் சக அதிகாரி ஒருவரின் யோசனையைக் கேட்டு நங்கநல்லூரில் உள்ள அந்த ஹைடெக் அக்கிரம சாமியார் விக்கிரமனைப் பார்க்கப் போனேன். நான் சொல்லாமலேயே என் தந்தை இறந்து போனதைப் பற்றி அவர் குறி சொன்னதால் அந்த நிமிடத்திலிருந்து அவரது தீவிர பக்தையானேன்.
ஆண்டுதோறும் சாமியார் நடத்தும் அனுமன் ஜெயந்தி விழாவில் நான் பரதநாட்டியம் ஆடுவேன். ஆரம்பத்தில் வண்ணாரப்பேட்டையில் ஒரு குடிசையில் இருந்த விக்கிரமன் சாமியார் பெரிய மண்டபம் கட்டி அதில் குடியேறினார். அதற்கு நன்கொடை கொடுத்தவர்களில் நானும் ஒருத்தி. 1997_ல் நடந்த என் தம்பியின் திருமணத்துக்கு சாமியார் குடும்பத்துடன் வந்திருந்தார். சொந்த இணையதளம், வெளிநாட்டுப் பயணம் என்று இருந்த சாமியாருக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. பஜனையில் இவர் புல்லாங்குழல் வாசித்து பக்தர்களைக் கவருவார். அதனால் புல்லாங்குழல் சாமியார் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
‘நீ வங்கி வேலையை ராஜினாமா செய்யப் போகிறாய். உனக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது’ என்றெல்லாம் அவர் எனக்குக் குறி சொன்னார். அதன்படி, ஒருகட்டத்தில் நான் வேலையை ராஜினாமா செய்ய நேர்ந்தது. ‘உனக்கு விரைவில் திருமணம் நடக்கும்’ என்றும் சாமியார் குறி சொன்னார். அவரது ஆலோசனையின் பேரில் 2005 நவம்பரில் ஹிந்து நாளிதழில் ‘மணமகன் தேவை’ பகுதியில் விளம்பரம் செய்தேன்.. ‘உனக்கு ‘எஸ்’ அல்லது ‘எம்’ என்ற எழுத்தில் தொடங்கும் மாப்பிள்ளைதான் வருவார்’ என்று விக்கிரமன் குறி சொன்னார். அதை நான் தெய்வ வாக்காக நம்பிவிட்டேன்.
எதிர்பார்த்தபடியே அந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, முரளி என்பவர் முதலில் பேசினார். அவர் பெயர் ‘எம்’மில் தொடங்குவதால் அவரையே நான் மணவாளனாக நினைத்தேன். ஆனால் அவரது பேச்சு அநாகரிகமாக இருந்ததால் அவரை ஒதுக்கி விட்டேன். அடுத்ததாக பார்த்தசாரதி என்பவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். ‘சாரதி’ என்று அவரைச் சுருக்கமாக அழைப்பார்கள் என்றார். அதில் சாமியார் சொன்ன ‘எஸ்’ முதல் எழுத்தாக வருவதால், அவரை 2005 டிசம்பர் 11_ம்தேதி, ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் சந்தித்தேன்.
‘நாம் சரவணபவனுக்குப் போய் சாப்பிடலாமா?’ என்றார். என்ன ஆச்சரியம்? ‘உன்னைத் திருமணம் செய்து கொள்பவருக்கு சரவணபவன் சாப்பாடுதான் பிடிக்கும்’ என்று சாமியார் ஏற்கெனவே எனக்கு குறி சொல்லியிருந்தார். அது அப்படியே பொருந்தி வருகிறதே என்று நான் ஆச்சரியப்பட்டு பார்த்தசாரதியை என் வீட்டுக்கு கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தேன்.
பார்த்தசாரதி ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகச் சொல்லியிருந்தார். என் சகோதரர்கள் விசாரித்ததில் அவர் தென்னக ரயில்வேயில் கமர்ஷியல் சூப்பர்வைசர் என்பது தெரிய வந்தது. கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் நாங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ‘டில்லியில் இருந்து மாற்றலாகி வந்திருக்கிறேன். தங்க இடமில்லை’ என்றார். அதை நம்பி, எங்கள் வீட்டிலேயே தங்க வைத்தோம். அவரை ஒருமுறை சாமியாரிடம் அழைத்துப் போனபோது, ‘சாமியார் நம் கழுத்தில் மாலை போடுவார் பார்’ என்று பார்த்தசாரதி சொன்னார். அதேபோல் சாமியார் எங்கள் கழுத்தில் திடீரென மாலை போட்டார். ‘சுவிஸ் பேங்கே உனக்குக¢ கிடைத்திருக்கிறது. வைத்துப் பிழைத்துக் கொள்’ என்று பார்த்தசாரதியிடம் பூடகமாகச் சொன்னார் சாமியார்.
2006 ஜனவரி 27_ம்தேதி எங்கள் திருமணத்துக்கு சாமியார் நாள் குறித்துக¢ கொடுத்தார். ஆனால், அந்த நாளில் சாமியார் கேரளத்தில் இருந்ததால் எங்கள் வீட்டிலேயே எளிய முறையில் மாலை மாற்றி நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டோம். ‘தாய் உயிருடன் இல்லை; வயதான தந்தையால் வரமுடியாது’ என்று சொல்லி சமாளித்தார் பார்த்தசாரதி.
அதன்பின்பு நிரந்தரமாக எங்கள் வீட்டில் தங்கத் தொடங்கினார். வேலைக்குப் போவது போல தினமும் வெளியே போகும் அவர், வெளியே சென்றதும் செல்போனை ஆஃப் செய்துவிடுவார். இந்த நிலையில் நான் கழற்றி வைத்திருந்த சில நகைகள் காணாமல் போயின. அதையே சாக்காக வைத்து எனது வைரக்கல் பதித்த நெக்லஸ் உள்பட நாற்பது பவுன் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பதாகக் கூறி வாங்கிச் சென்றார். சிட்டி பேங்க¢., ஐ.சி.ஐ.சி.ஐ., ஜெயின் ஃபைனான்ஸ், சிட்டி ஃபைனான்ஸ் ஆகிய வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டு மூலமும் கடனாகவும் ஏறத்தாழ 40 லட்சம் வரை அவருக்குப் பணம் பெற்றுக¢ கொடுத்தேன். இதுதவிர என் கிரெடிட் கார்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள், டிரெஸ் என அடிக்கடி வாங்குவார்.
மே 22_ம் தேதியிலிருந்து பார்த்தசாரதி திடீரென மாயமாகி விட்டார். எங்கள் வீட்டில் இருந்த எனது சொத்துப் பத்திர நகல்கள் காணவில்லை என்பதால், சந்தேகப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். பார்த்தசாரதி தென்னக ரயில்வேயில் கமர்ஷியல் சூப்பர்வைசராக இருந்து அலுவலகப் பணத்தை கையாடிய விவகாரத்தில் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 2002_ல் விருப்ப ஓய்வில் பணியில் இருந்து விலகியிருக்கிறார் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் ஐயப்பன்தாங்கலில் முதல் மனைவி பத்மா, வளசரவாக்கத்தில் இரண்டாவது மனைவி உஷா, மேற்கு மாம்பலத்தில் மூன்றாவது மனைவி வசந்தி ஆகியோருடன் வசித்து வந்ததும் அம்பலமானது. அப்போது நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நான் பயணம் செய்யும் ஆட்டோ டிரைவர் சந்திரசேகர் என்பவர் மூலம் பார்த்தசாரதியைப் பிடித்து ஜூன் 21_ம் தேதி போலீஸில் ஒப்படைத்தோம்.
சிறையில் அடைக்கப்பட்ட பார்த்தசாரதி, பிறகு ஜாமீனில் வெளிவந்து விட்டார். போலீஸார் முறையான விசாரணை நடத்தாததால், நான் பறிகொடுத்த பணம், நகை எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. தனியார் துப்பறியும் நிறுவனங்கள் மூலம் நான் விசாரித்த போதுதான் அந்தத் திடுக்கிடும் உண்மை எனக்குத் தெரியவந்தது. என்னிடம் இருந்து நகை, பணம், சொத்துக்களைச் சுருட்ட, பார்த்தசாரதியை என்னிடம் அனுப்பி வைத்ததே விக்கிரமன் சாமியார்தான் என்பதுதான் அந்த அதிர்ச்சிகர உண்மை. ஆண்டவனுக்கு இணையாக நான் நம்பிய சாமியார் விக்கிரமனா இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பார்த்தசாரதி மீது நான் கொடுத்த புகாரில் சாமியார் விக்கிரமனையும் ஒரு சாட்சியமாகக் குறிப்பிட்டிருந்தேன். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, ‘சாந்தியைச் சந்தித்தே பல ஆண்டுகள் ஆகிறது. பார்த்தசாரதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சாந்தியை முன்கூட்டியே எச்சரித்தேன்’ என்று புளுகியிருக்கிறார் சாமியார்.
சாமியார் பற்றி நான் மேலும் விசாரித்த போது பல அதிர்ச்சித் தகவல்கள் எனக்குக¢ கிடைத்தன. குடிசையில் இருந்த விக்கிரமன் என்னைப்போல பலரை ஏமாற்றித்தான் இன்று கோடிக¢கணக்கில் சொத்து சேர்த்திருக்கிறார் என்று தெரியவந்தது.
நான் சாமியாரின் தீவிர பக்தையாக இருந்தபோது ஒருநாள் பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவனில் நூடுல்ஸ் வாங்கி ஆட்டோவில் அமர்ந்து சாப்பிட்டேன். பின்னர், நான் நங்கநல்லூர் மண்டபத்துக்குச் சென்றபோது சாமியார் நான் நூடுல்ஸ் சாப்பிட்டதைக் கூறினார். நான் நம்ப முடியாத ஆச்சர்யத்தில் அவர் காலில் விழுந்து வணங்கினேன். ஆனால் என் பின்னால் ஆட்களை அனுப்பி அவர்கள் தந்த தகவலை வைத்துத் தான் சாமியார் ‘குறி’ சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது.
சாமியாரின் இணைய தளத்தை வெளிநாட்டில் உள்ள ஒருவர் நடத்துகிறார். இண்டர்நெட்டில் அகப்படும் அறிவியல் செய்திகளைச் சேகரித்து பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவு என்ற பெயரில் விக்கிரமன் பேசுவார். சில நாட்களில் அந்தத் தகவல்கள் நம்மூர் செய்தித் தாள்களில் வரும்போது சாமியார் சொன்னது போலவே நடந்து விட்டதாக மண்டபத்தில் உள்ளவர்கள் பிரசாரம் செய்வார்கள்.
அக்கிரம சாமியார் விக்கிரமன் பற்றி நான் காவல் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். இதனால் சாமியார் எனக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வருகிறார். நான் வயதான தாயாருடன் கஷ்டப்பட்டுக¢ கொண்டிருக்கிறேன். அந்த சாமியாரின் முகமூடியைக் கிழித்து அவரது நிஜமுகத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன்’’ என்று ஆவேசமாகப் பேசிமுடித்தார் சாந்தி.
சாந்தியின் வழக்கறிஞரிடம் நாம் பேசினோம். பெயர் வேண்டாம் என்ற அவர், ‘‘சாந்தியின் நிலை மிகவும் பரிதாபம். இனியும் அவரை வேறு யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வழக்கை என் சொந்த விருப்பத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இந்த வழக்கை போலீஸார் ஒழுங்காக விசாரித்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். இந்த விவகாரத்தில் காவல்துறை யாரையோ காப்பாற்ற முயல்கிறது’’ என்று வேதனைப்பட்டார் அந்த வழக்கறிஞர்.
சாந்தியின் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ‘‘அந்தப் பெண்ணை சிலர் நூதனமாக ஏமாற்றி பணம் பறித்தது உண்மைதான். இந்தப் பிரச்னையால் அவர் மனதளவில் சற்று அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளார். இப்போதும் கூட ஜோசியர், குடும்ப நண்பர்கள், பூஜை என்று அவருடன் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு சாமியார் மீது இருந்த தீவிர பக்தி பிடிக்காமல் உடன் பிறந்த சகோதரர்களே சற்று விலகிப் போய்விட்டார்கள். இனியாவது, அவர்கள் முன்வந்து சாந்திக¢குத் துணையாக இருந்து மீதமிருக்கும் சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்றார் அவர்.
------ நன்றி: "குமுதம் ரிப்போர்ட்டர்"
Friday, May 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment