Monday, May 12, 2008

``பிராமணத் தந்திரங்களில் ஒரு விநோதத் தந்திரம்

தென்னந்தியாவில் சில காலமாகச் செய்யப்பட்டு வரும் பிராம்மண ரல்லாதவரின் கிளர்ச்சிக்குத் தலைவர்களாயுள்ள வர்களில் மிஸ்டர் டி.எம். நாயர் அவர்களும் மிஸ்டர் பி. தியாகராஜ செட்டியார் அவர்களும் முக்கியமானவர்கள் என்பது பிரசித்தம்.

அம்மகான்களைப்பற்றி தென்னிந்தியப் பிராமணர்களிற் சிலர் மனம்போன போக்கில் நிந்தித்தும் கைபோனபோக்கில் கடிந்தும் எழுதி வருகின்றனர். ``ஒருவர் எந்தவிதமாகவோ அபகரித்து அனுபவித்து வந்த மற்றொருவருடைய பாத்யதையை இழந்து விட நேரும்போது வருத்தப்பட்டுப் பிதற்றுவது சகஜம்தான். இது நிற்க, டாக்டர் டி.எம். நாயரும், மிஸ்டர் பி. தியாகராஜ செட்டியாரும் சட்டசபையில் இடம் பெறத் தடைப்பட்டுப் போனதின் காரணமாக அவர்களாலேயே இக்கிளர்ச்சி யுண்டாக்கப்பட்டிருப்பதாய்ப் பிராமணர்களிற் சிலர் `வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பார் போலவும், `வெள்ளரிக்காய்க்கு வெங்கலப் பூண்கட்டும் விசித்திரம் போலும் பேசி வருகின்றார்கள். இப்படி இவர்கள் பேசி வருவது பிராமண தந்திரங்களில் ஓர் விநோத தந்திரம் போலும்.

பிராம்மணரல்லாதவரின் கிளர்ச்சிக்கு சட்ட மெம்பர் ஸ்தானம் கிடைக்கப் பெறாத டி.எம். நாயரும், பி. தியாகராஜ செட்டியாரும், காரணமாவார்களென்றால், ஹோம்ரூல் கிளர்ச்சிக்கு அவர்களைப் போல் சட்ட மெம்பர் ஸ்தானம் கிடைக்கப் பெறாத பிராமணர்களும் அதன் காரணம்பற்றி அவர்களைச் சேர்ந்த மற்றப் பிராமணர்களும், காரணமா வார்கள். மீண்டும் அபேக்ஷகராயிருந்து மெம்பர் ஸ்தானம் கிடைக்கப் பெறாதவர்களில்லையா? புதிதாய் அபேக்ஷித்தும் கிடைக்காத பகீரத கனவான்கள் இப்பொழுது மிருக்கிறார்கள். அவர்கள், தற்காலத்தில் செய்யப்பட்டு வரும் ஹோம் ரூல் கிளர்ச்சியிலும் சேர்ந்திருக்கிறார்களல்லவா? இதைப் பிராமணர்கள் உணரவில்லை போலும்.

அன்றியும், அநேக வருஷங்களாக மகம்மதிய சகோதரர்கள் ஹிந்துக்களுக்கு விரோதமாக இராஜீய விஷயத்தில் கிளர்ச்சி செய்துவந்தன ரல்லவா? எந்த சட்டசபையில் இடம் பெறாத காரணத்தால் அவ்விதம் செய்து வந்தனர்?

சமீப தருணத்தில் பம்பாயில்கூடிய பொதுக் கூட்டத்தில் சுதேசிய விரதத்தைப் பற்றிய பிரஸ்தாபம் எழுந்த உடனே மிஸ்டர் டின்ஷாவாச்சா அச்சபையைவிட்டு எழுந்து போயினரன்றோ? அதன் காரணம் என்ன? எந்தப் பிரதிநிதித்வம் கிடைக்காமை யினால்?
சூரத் நகரத்தில் கூட்டப் பெற்ற காங்கிரஸ் மஹாசபையில் மகான் கோபாலகிருஷ்ண கோகேல், சர். பிரோஜிஷா மேடா, கனம் ராஜ்பிகாரிகோஷ், ஆகிய இவர்களும், இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பிரமுகர்களும் காலோசிதப்படி ராஜீய சம்பந்தமான அமிதக் கொள்கைகளுக்கு இடங்கொடா மல் பேசினார்களன்றோ? எதிர்பார்த்திருந்த எவ்வித உன்னத பதவி கிடைக்காமையினால் அவ்விதம் பேசினார்கள்? ஆகையால் பிராமணர்கள் இனியேனும் நிந்தனைக்குரிய குயுக்திகளை விட்டு விடுவார்களென்று நம்புகிறோம்.

----- - --- - என்.வி.என்.,

ஆரியர்களியற்றிய ஆசாரணைகள்

இந்த ஆரிய சிகாமணிகள் நமது தென்னாட்டில் பிரவேசித்த பிறகே, அவர்கள் நிஷ் கபடிகளாகிய திராவிடர்களுக்குப் பல ஆசாரணைகளைப் புகட்டிக் கொண்டு தாங்கள் உயர்ந்த அந்தஸ்துக்களை வகித்தவர்களாயினர். அவ்வாசரணைகளை யறிந்த மட்டும் இங்கெடுத்து விளக்குவாம்: அவை யாவன: குழந்தை கல்யாணம், உடன் கட்டையேறல், தீப்பாய்தல், துர்க்கை, காளி, முனி, பிடாரி முதலிய தேவதா பூஜைகள், அஸ்வமேதயாகம்; மேஷ யாகம், பௌண்டாயாகம் ஆக முதலிய பாகாதி கர்மங்கள், சக்தி பூஜை, நிர்வாணக்கூத்து, செடிலாடல் பிராண தோஷணிக் கிரந்தம் படித்தல், கெங்கை குழந்தைகளை பலியிடுதல், தோடிச் சக்கரத்தில் பிராண பலி கொடுத்தல், இறந்தவனது திதியில் விதவையைப் பிராமணக் குருவுக்குச் சமர்ப்பித்தல், வேதியரது ஆலயத்துக்கு ஸ்திரிகளைத் தானியாக் குதல், குலஸ்திரீகளை நடனமாட வைத்தல், வாய்ப்பூட்டு போடல், உண்டி கட்டுதல், முதலிய ஆசரணைகளை தென்னிந் தியத் திராவிடர்களனு சரிக்க போதித்து, போதுமானத் திரவியங்களைச் சம்பாதித்து வந்த ஆரியர்களது கூற்றதிகமாகி மனிதன் பிறந்து இறக்கும் வரையில் பிரம்மாண்ட வரிகளை வசூல் செய்து ஏமாற்றிய சமத்காரர்களென்போம். மஹா தந்திரசாலிகளாகிய விப்பிரர்கள் இக்கலிகாலத்திலும் கொண்ட மட்டும் திராவிடர்களிடமிருந்து அபிமானிகளை விடுவிக்கப் பொருளையும், சுய காரியங்களுக்காகக் கையொப்பத் தொகைகளையும் பெற வேதியர்களே முன்வருதலைக் காண்க. வேதியர்களுக்குள் அர்ச்சகத் தொழிலாளிகளைக் கேவல மாக்குவதினாலேயேப் பிரதி ஆராதனைகளை மறுக்கப் பட்டதாக விளங்குகின்றது. நிற்க, ஓர் ஓர் விஷ்ணு ஆலயத்திற்குப் பிரவேசித்துத் தரிசித்தபோது அக்கோவில் வைணவ அர்ச்சகர் `சடகோபத்தை எங்கள் சிரசுகளில் வைத்தனர். இதைக்கண்ட சில வைணவவிப்பிரர்கள் அதைத் தடுத்து பிராமணரல்லாதவர் களுக்குச் சடகோபமேற்றலாகாதென வாதாடினார்கள். இவ்திசயத்தை யாம்கவனித்து அப்பிராமணர்களை நோக்கி, ஹே வைணவ! நும் பூர்வாசாரியரது விசிஷ்டாத் வைதப்படி ஜாதி வேற்றுமைகளின்றியிருக்கையில் யாம் வைணவரென்று நீவிர் அறிந்திருந்தும் நும் கொள்கைக்கு மாறுபடுகின்றீர்களென யாம் புகன்றபோது, அசட்டை செய்து தம் பிராமணக் குல வதி காரத்தை மேற்கொண்டனர். இதை வாசிக்கும் திராவிட நண்பர்களே கவனியுங்கள். இவ்வாறு பொது ஆலயங்களிலும் வேளாளத் திராவிடர்களை அவமதிக்கும்படியான சுதந்தரங் களை நாமே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு விழிக்கி றோமல்லவா? இத்தகைய விப்பிரர்களை நாம் நம்பி அவர்கள் கோரும் சுய ஆட்சிக்கு இடந்தருவ தென்றால் எவ்வாறு முடியும்? ஒருக்காலும் நாம் ஏமாறலாகாது. ஏமாந்தாலோ மனுதருமநூல் மானிடத் தன்மையைக் குறைத்து விடும். எப்போது நீதிநூலை நாம் கையாளக் கருதுகிறோமோ அப்போது ஜாதி, மதவேற் றுமைகளொழிந்து! சரியான ஒற்றுமையடைப் நேரிடுமென்க. ஆகவே ஆரியர்களாலியற்றிய ஆசரணைகைள இன்றே வொழித்துத் தந்யர்களா வேண்டும்.


- ----- திராவிடநேசன்
ஆதாரம்: திராவிடன் 17.8.1917

-------------நன்றி-"விடுதலை"

No comments: