Wednesday, May 21, 2008

வரதராசன் வருத்தமும்-கலைஞர் விளக்கமும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மதிப்புக்குரிய தோழர் வரதராசன் அவர்கள்; அவர் களின் கட்சி ஏடு "தீக்கதிரி"ல் எழுதி யுள்ள "மனம் திறந்து ஒரு வாழ்த்து!" என்ற கட்டுரையைப் படித்தேன்.

"கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை" என்று நான் எனது அறிக்கை ஒன்றில் "குமுறியிருப் பதை"; அவர் தனது கட்சிக்கும் சேர்த்துத் தவறாக எடுத்துக் கொண்டமைக்காக நான் மிகவும் வருந்துகிறேன். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்க வேண்டுமே தவிர; விருப்போ வெறுப்போ அதனை வெளிப்படையாகக் கூறி நயம்பட இடித்துரைத்துத் திருத்துகின்ற நிலை யில் "கூட்டணி தர்ம"த்தை எல்லா கட்டங்களிலும் கலந்துபேசி கடைப் பிடிக்கிற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என் அறிக்கையில் காணும் அந்த வாசகத்திற்குத் தங்களுக்குப் பொருந்தாத பொருளை ஏன் காண வேண்டும் என்பதே என் கவலை!

மற்றபடி; மனம் திறந்து அவர் எழுதியுள்ள என்னைப் பற்றிய வாழ்த்துக் கட்டுரையை (மேற்கண்ட இந்த ஒரு விளக்கத்தைத் தவிர வேறெதுவும் கூறாமல்) வரிக்குவரி அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

- மு.கருணாநிதி

இதோ; வரதராசன் அவர்களின் வாழ்த்துரை:

"தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி, வரும் ஜூன் 3ந்தேதிய தனது 85-வது பிறந்த நாள் தொடர்பாக விடுத்துள்ள இரண்டு அறிக்கைகள் பொருள் பொதிந்தவை.

‘என் மனநிலை கருதியும், உடல்நிலை கருதியும், வாழ்த்துக்களை ஏற்றிடும் பணி யிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டுமென்று உற்ற நண்பர்களையும், உயிரனைய உடன் பிறப்புக்களையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்பது கலைஞரின் முதல் அறிக்கை வாசகம்.

கலைஞர் தலைமையிலான இன்றைய தமிழக அரசு இரண்டாண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நாளில் வெளியான அறிக்கை இது.

அன்றைய தினம் தமிழக சட்டமன்றப் பேரவையில் இந்த ஆட்சிக்கான வாழ்த்துக்களை இதர பல கட்சியினரோடு மார்க்சிஸ்ட் கட்சியும் தனது சட்டமன்றக் குழுத் தலைவர் சி.கோவிந்த சாமியின் உரை வழியாகப் பதிவு செய்தது.

ஆனால், இன்றைய தமிழக ஆட்சியில் ‘இரண் டாண்டு சாதனைப் பட்டியலை விட வேதனைப் பட்டியல்தான் அதிகம்’ என்று ஒரு ‘தீர்ப்பையே’ வழங்கியுள்ள தினமணி நாளேட்டின் தலையங்கம்(மே-15) கீழ்க்கண்ட கேள்விகளை முதல்வருக்கு முன்வைத்து அவர் தெளிவுபடுத்தக் கோரியது:

‘அவரது (முதலமைச்சரது) மனநிலையைப் பாதிக்கும் பிரச்சனை குடும்பத்திலுள்ள குழப்பங்களா, தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது அதிருப்தியா, இல்லை தோழமைக் கட்சிகளின் செயல்பாடா? இதையும் அவரே தெளிவுபடுத்தினால் நலம்!’ என்று அந்தத் தலையங்கத்தை நிறைவு செய்திருக்கிறார் தினமணி ஆசிரியர்.

கலைஞரின் இரண்டாவது அறிக்கை அதே நாளில் ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. தினமணியின் கேள்விகளை எதிர்பார்த்து அதன் கேள்விகளுக்கு விடை பகருவது போலவே இந்த அறிக்கை அமைந்துள்ளதுதான் தற்செயலாக நடந்துள்ள விசித்திரம்!

எனினும் ‘பிறந்த நாள் கொண்டாட வேண்டாம்’ என்ற கலைஞரின் வேண்டுகோளுக்குப் பல்வேறு பிரச்சனைகளால் அவருக்கு எழுந்துள்ள மன உளைச்சல்களே முக்கிய காரணம் - உடல்நிலை அல்ல என்பதை இந்த அறிக்கை தெளிவாக்கி யிருக்கிறது.

‘சேது சமுத்திரத் திட்டம் தொங்கலில் விடப் பட்டிருப்பது; விபரீத தீவிரவாதம் தலைவிரித்தாடி கொண்டிருப்பது’ ஆகிய இரண்டும் கலைஞரின் ஏக்கப் பெருமூச்சுக்கு காரணமாக அமைந் திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சொல்லப் போனால், இந்தப் பிரச்சனைகளில் அவருக்குள்ள ஆதங்கத்தை, மார்க்சிஸ்ட் கட்சி பகிர்ந்து கொள்ளவே செய்கிறது. பெரும்பாலான தமிழ் மக்களும் அதே உணர்வைத்தான் வெளிப் படுத்துவார்கள்.

‘என்னுடன் இருப்போர் தன்னலம் மறப்போர் - தாயக நலத்துக்காக உயிரையும் துறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில் எனக்கு ஏன் பிறந்த நாள் விழா?’ என்று கலைஞரின் அறிக்கை வாசகம் தனது உடன்பிறப்புகளைப் பற்றிய அவரது கவலை. இந்தக் கவலையை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டிய எல்லைக்கு நிலைமை சென்றிருப்ப தாகக் கலைஞர் கருதியிருக்கிறார் என்றால், தி.மு.க நண்பர்கள் இதை ஓர் எச்சரிக்கை மணியொலியாக எடுத்துக் கொள்வது நல்லது.

ஆனால், ‘கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை’ என்று கலைஞரின் அறிக்கை, தோழமைக் கட்சியினரது செயல்பாட்டை - இன்ன கட்சிகள் என்று சுட்டப்படாத நிலையில் பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

‘நாடு வாழ, நலிவு தீர, நானிலம் தழைக்க’ என்ற உயரிய நோக்கங்கள் எல்லா அரசியல் இயக் கங்களுக்கும் பொதுவானவை. இந்த நோக்கங்கள் நிறைவேற வேண்டுமென்றால் ‘யார் ஆட்சிக்கு வரக்கூடாது’ என்ற மதிப்பீட்டின் விளைவாகத் தோழமைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசியல் போராட்டத்தில் - அது தேர்தலின் போதானாலும் சரி, இதர சந்தர்ப்பங்களிலும் சரி - கூட்டணியாக அமைகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மத்திய அரசில் வகுப்புவாத - மதவெறி சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உணர்வோடுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் ஆதரவைத் தொடர்கிறது. அந்த அரசின் - சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட - தவறான கொள்கைகளில் மாற்றம் கண்டிட தி.மு.க.வுடன் தோழமையைத் தொடர்ந்து வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ‘கடந்த கால மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சியைத் தூக்கியெறிய வேண் டும்’ என்ற அறைகூவலோடுதான், தி.மு.க.வுடன் தோழமைக் கரம் கோர்த்துத் தேர்தல் களத்தில் நின்றோம். இந்த ஆட்சியை குறுக்கு வழியில் வீழ்த்திட துடிக்கும் தீய சக்திகளின் முயற்சியை முறியடிப்பதிலும் துணை நிற்கிறோம்.

ஆனால் ‘கூட்டணி’, ‘தோழமைக் கட்சி’ என்பதிலேயே மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கிடை யிலும், பொதுவான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து என்பது அடங்கியிருக்கிறது அல்லவா? அதனால்தானே தோழமை நீடிக்கிற போதும், தனித்தனிக் கட்சிகளாக நாம் அவரவர் செயல் பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்! எனவே, ஆட்சிக்கு ஆதரவும், தோழமையும் ஒரு பக்கம் நீடிப்பதும், மக்கள் பிரச்சனைகளில் சுயேட்சையான நிலைப்பாட்டையும், இயக்கத்தையும் மேற்கொள்ளுவதும், ஒரு ஜனநாயகக் கடமையே என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

எனவேதான், கலைஞரின் இதர பல கவலை களையும், ஆதங்கங்களையும் பகிர்ந்து கொள்கிற போதே ‘கூட இருந்தே குழி பறிக்கும் தோழமை’ என்ற அவரது கூற்றுக்கு அப்பால் நிற்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தமிழ்நாட்டில் தோழமைக் கட்சிகளாக இருப்பதிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது மார்க்சிஸ்ட் கட்சி. இதர மூன்று இடதுசாரிக் கட்சிகளோடு கொண்டுள்ள தோழமை மேற்குவங்கம், திரிபுரா, கேரள மாநிலங்களில் ஒரு பொதுவான இடதுசாரித் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஆட்சியிலேயே நீடிக்கிற தோழமை அது. ஆனால், இந்த இடதுசாரிக் கட்சிகளேகூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சுயேட்சையான நிலைப்பாட்டை எடுத்ததையும், ஏன் கடுமையான விமர்சனக் கணைகளையும் தொடுத்ததையும், நாடறியும் அல்லவா? அதற்காக தோழமை இடதுசாரிக் கட்சிகளை சி.பி.ஐ (எம்) சினந்ததோ, முனிந்ததோ இல்லையே! கருத்து வேறுபாடுகளைக் களைய ஜனநாயக ரீதியில் விவாதம் அல்லவா நடத்துகிறோம்!

இவற்றை நாம் இங்கே எடுத்து வைப்பது, கலைஞரின் அறிக்கைக்கு ஒரு பதிலாக அல்ல.

‘தோல்வி கண்டு துவளாமை;

துரோகம் கண்டு தளராமை’

- என்பதுதான் கலைஞரின் அரசியல் முதிர்ச்சிக்கான அடையாளங்கள்.

எனவே, 85வது பிறந்த நாளில் தளர்வுக்கும், சலிப்புக்கும் இடந்தராமல் மக்கள் தொண்டினைத் தொடருங்கள் என்ற வேண்டுகோளோடு, இந்த மனம் திறந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கு கிறோம். நகுதற் பொருட்டன்று நட்பு என்பது வள்ளுவன் வாக்கு! "

- என். வரதராசன்

மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

----------- நன்றி: முரசொலி

No comments: