Tuesday, May 27, 2008

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்

உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன. அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன. அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார். உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

----------தந்தைபெரியார் - "குடிஅரசு" -6-12-1947

No comments: