Thursday, May 29, 2008

வைதீக திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் மு.க. ஸ்டாலின் பேச்சு


வைதீக திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்
சுயமரியாதைத் திருமணங்களில் மட்டுமே கலந்து கொள்வேன்
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு



வைதீகப் புரோகிதத் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன். சுயமரியாதைத் திருமணங்-களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்று நெல்லையில் நடைபெற்ற ஒரு மணவிழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி விளக்கமளித்துப் பேசினார்.


இந்தத் திருமணம் வைதீக முறைப்படி நடந்திருந்தால் நான் கட்டாயம் கலந்து கொண்டு இருக்க மாட்டேன். இங்கு வாழ்த்திப் பேசிய பலர் வாழ்த்திப் பேசி இருக்க முடியாது. இங்கு ஒரு புரோகிதர் இருந்து நெருப்பை மூட்டி புகையை உருவாக்கி அனைவரையும் கண்ணீர் வடிக்கச் செய்து கொண்டிருப்பார். அப்போது சில மந்திரங்களை சொல்வார். அது யாருக்கும் புரியாது. அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டால் அவருக்கே தெரியாது. யாரும் புரியாத நிலையில் தான் அந்தத் திருமணம் நடக்கும்.

ஆனால் சீர்திருத்த திருமணத்தில் மணமக்களை நாங்கள் வாழ்த்துகிறோம். இது எல்லோருக்கும் புரிகிறது. இந்தத் திருமணத்தில் தமிழில் வாழ்த்துகிறார்கள். எனவே இதை தமிழ் திருமணம் என்று அழைக்கலாம். இதனால் தான் தற்போது சீர்திருத்த திருமணம் அதிக அளவில் நடைபெறுகிறது
.

தமிழகத்தில் தற்போது உங்கள் ஒத்துழைப்புடன் சிறப்பான நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளான ரூ.2+க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி, சத்துணவில் வாரத்தில் 2 முட்டை, இலவச கலர் டி.வி. என அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும். இதற்கு நிதிகள் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நினைக்கலாம் நம்ம பக்கத்து கிராமத்தில் உள்ளவர்களுக்கு டி.வி. கிடைத்து விட்டதே, நமக்குக் கிடைக்கவில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. அனைவருக்கும் கலர் டி.வி. கிடைக்கும். ஒரே நேரத்தில் கொள் முதல் செய்து கொடுக்க முடியாது என்பதால் தான் படிப்படியாக கொடுக்கப்படுகிறது. திருமண வீட்டிற்கு ஆயிரம் பேர் வந்திருப்பீர்கள் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

இதனால் பலர் பந்திக்குக் காத்திருக்கிறார்கள். அது போல காத்து இருங்கள். கட்டாயம் அனைவருக்கும் டி.வி. கிடைக்கும். சொன்னதையும் சொல்லாததையும் செய்யும் இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments: