Sunday, March 23, 2008

ஏன் வேண்டும் தமிழிசை?

தமிழன் தான் நுகரும் இசையை, தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிசயமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் - தமிழ் மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்படவேண்டு மென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக் கேட்-பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.
தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக் கூடாது என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, தமிழில் பாடவேண்டும் என்பது பொதுநலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு என்று சொல்ல வந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர் - தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களா?, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா? என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக் கொள்ளக்கூடுமா? காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லாருக்கும் ஒன்றுபோல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

தமிழில் பாடு! என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே, தமிழ் இசை இயக்கம் வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது.

இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழரல்லாதவர்களின் பத்திரிகைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகேதான் இது ஒரு இயக்கமாக விளங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்களை நிர்ப்பந்தப்டுத்தி, பயமுறுத்தித் தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்காரர்கள் சில இடங்களுக்குப் போகும்போது பந்தோபஸ்துக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டு போகவேண்டியதாயும் ஏற்பட்டுவிட்டது. பாட்டுப் பிழைப்புக்காரனான சிலர்மீது தமிழர்களுக்கு வெறுப்புக்கூட ஏற்படும்படியாக நேர்ந்துவிட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக் கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்களை விட்டு விலகினாலும் விலகிவிடலாம்; அல்லது, அவர்களே அதை விட்டு விலகினாலும் விலகிவிட நேரிடலாம் என்றுகூடக் கருத-வேண்டியதுமாகிவிட்டது.

பொதுவாகச் சொன்னால், இந்த நிலையானது நாட்டின் நலத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை தமிழன் அன்னிய மொழியைக் கற்கவேண்டும் என்று சொல்லுவது தேசாபிமானமும் நாட்டு முற்போக்கு இயல்கலை அபிவிருத்தியாக ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டுக்கேட்க வேண்டும்; இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்! மற்றும், தமிழனுக்குத் தமிழ் வேண்டும்; தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும், கலைத் துரோகம் வகுப்புத் துவேஷம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம், பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும், கற்பு நூலும் எழுதுவதுபோல் - தமிழனுக்குத் தமிழனல்லாதவன் - தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் - தேசாபிமானம், மொழியபிமானம், கலையபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய்விட்டதேயாகும்.

அறிஞர்களே! நமக்குப் பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூடப் பயன்படாது என்றும் சொன்னால், இந்த இழிமொழி - நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகிறேன். தமிழ்த் துரோகத்தால் வாழவேண்டியவனும், வள்ளுவர் சொன்னதுபோல் - குலத்திலே அய்யப் படவேண்டியவனுமான தமிழ் மகன்-களுக்கு, இது எப்படி இருந்தாலும் அவர்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவர்-களுக்கு அணியாகவும் அலங்காரமாகவும் முக்கிய இலட்சியமாகவும் இருக்கும். ஏன் - நம் எதிரிகளுக்கு இருக்கும் செல்வாக்கால் நம்மில் துரோகிகள் பெருகிவிட்டார்கள்; இன்னும் பெருகுவார்கள் என்பதும் உண்மைதான். ஏனெனில், மானங்கெட்ட தமிழ்மக்கள் பலர் இப்படிப்பட்ட இனத் துரோகிகளை அறியா-மையாலும், சுயநலத்துக்காகவும் ஆதரிக்கிறார்-கள் என்பதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். ஆனால், நாம் இப்படிப்-பட்டவர்களையும்தான் முதலில் நன்றய் வெறுக்க வேண்டும்; அவர்களைத் தமிழர் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கித் தள்ள வேண்டும்.

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டு-மென்கிறோம்? தமிழ்மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை - கந்த புராணம் என்றும், கிருஷ்ணனை - கிருட்டிணன் என்றும், ஹோம் நமஹா என்பதை - ஓம் நமோ என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை - சிங்கமுகக் கடவுள் என்றும், தசகண்ட இராவணன் என்பதை - பத்துத் தலை இருட்டுத் தன்மையன் என்றும் மொழிபெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா? என்று கேட்கிறேன்.

தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை இந்த உணர்ச்சி வலுத்துக்கொண்டே போகும்.
தமிழிசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படி செய்யவேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்), தமிழில் பாட வேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம், நமக்குத் தமிழினிடம் ஏற்பட்ட உணர்ச்சியாகும். இது ஒரு பெரிய மாறுதல்தான்
.

இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்-படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனத்தில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனத்திற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.

அடுத்தபடியாக இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனு-பவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும் இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை-யில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய் விடுகிறது.

-------------------------------------------------- தந்தைபெரியார்

No comments: