Thursday, March 06, 2008

சேர, சோழ, பாண்டியர்களால் நமக்கு பயன் உண்டா?

தோழர்களே! இந்த நாட்டில் அரசியல் என்பதாக ஒன்று என்றும் இருந்ததில்லை. புராண காலம் தொட்டு நான் கூறுகின்றேன். எவன் என்ன கொள்கைப் பேரில் மக்களுக்கு நன்மை ஏற்படும் முறையில் ஆட்சி செய்தான் என்று கூற முடியுமா? எல்லாம், அசுரன் ஆள்வதா? தேவர் (பார்ப்பான்) ஆள்வதா? என்ற போட்டி தானே இருந்தது? அசுரர்களை ஒழிக்க நம் கடவுள்கள் என்பவை வேலாயுதம், சூலா யுதம், வில் முதலியன எடுத்து அசுரர்களை ஒழித்ததாகக் கூறப்படுகின்றதே - இதுதான் என்ன? பார்ப்பானை வாழ வைக்கவும், நம்மை அழித்து ஒழிக்கவும் தானே! அடுத்து, சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாகக் கூறப்படுகின்றதே! இந்தடப் பசங்களாவது மக்களுக்கு என்ன ஏதாவது நன்மை ஏற்படும்படி ஆண்டு இருக்கிறார்களா? இந்தப் பசங்கள் வெளிநாட்டுக்குப் போய் வென்றார்கள், அது பண்ணினார்கள், இது பண்ணினார்கள் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்களே! இந்த இராஜாக்களில் எவனாவது மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள் என்று கூற முடியுமா?

இந்த முட்டாள் பசங்கள், பார்ப்பான் படிக்க வேத பாட சாலை, சமஸ்கிருதப் பள்ளிகள் ஏற்படுத்தி, ஓசிச் சோறும் போட ஏற்பாடு செய்து இருப்பார்களே ஒழிய, நமது சமுதாயத்திற்காக என்று எந்தக் காதொடிந்த ஊசி அளவாவது நன்மை செய்தார்களா?
இவர்கள் கோயில், குளங்கள், மடங்கள் முதலியன கட்டி அவற்றின் பேரால் பார்ப் பானைக் கொழுக்க வைக்கவும், நம்மைக் கல்லில் முட்டிக் கொண்டு மடையர்கள் ஆக ஆக்கித் தானே போனார்கள்?

இவர்கள், பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவர்களாகவும், மோட்சம் அடைய வேண்டும் என்று தங்கள் மனைவியைக் கூட விட்டுக் கொடுத்து வாழ்ந்தும் இருக்கின்றார்கள்!

நான் ஒன்றும் விளையாட்டுக்கு ஆகவோ, இவர்களைத் திட்ட வேண்டும் என்பதற்கு ஆகவோ இப்படிக் கூறவில்லை. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் என்ற ஊர்க் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண பாண்டியன் என்ற ராஜன் தன் மனைவியைத்தான் மோட்சம் அடைவதற்காகப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாக கோயில் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது! இவனது சிவ பக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே வரகுண மகா ராஜன் தன் மனைவியினைப் பார்ப்பானுக்கு கொடுத்ததைப் புகழ்ந்து பாடியுள்ளார். இந்தப் பாண்டியன், சேர, சோழர்களை எல்லாம் வென்ற பராக்கிரம சாலி என்று சரித்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்டவன் தான் இப்படிக் கேவலமாக மானமற்று நடந்து கொண்டான்.

அடுத்தாற்போல திருவண்ணாமலை யில் ஓர் அரசன் ஆண்டு உள்ளான். அவன் பெயர் வல்லாள மகாராஜன் என்பது. இந்த மடையனும் தான் மோட்சம் அடையத் தன் மனைவியைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்து இருக்கின்றான்.

இந்த அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது எல்லாம் “இவன் மனு முறை தவறாது ஆண்டவன்” என்றும் புகழ்ந்து கூறப்படு கின்றது!

அடுத்து நாயக்கனோ, மராட்டியனோ, முஸ்லிமோ, ஆட்சி செலுத்தினார்கள் என்றாலும், இவர்களும் மக்களுடைய குறைபாடுகள் மற்றும் தேவைகள் என்ன என்று ஆய்ந்து அதற்காகப் பரிகாரம் தேடியவர்கள் அல்ல. நமது தற்குறி நிலைமையைப் போக்கவும், நம் இழிவுகள் போக்கவும் பாடுபடவே இல்லை.

அடுத்து வெள்ளைக்காரன் ஆண்டான். இவனாவது நமது இழி நிலையினைப் போக்கவும், நமது தற்குறித் தன்மை யினையும் போக்க வேண்டும் என்ற கருத்தை வைத்து ஆண்டார்களா? இல்லையே!

அடுத்து சுதந்திரம் - வெங்காயம் வந்தது என்று கூறிக் கொண்டார்களே - நடந்ததா? காமராசர் முதலமைச்சர் பதவிக்கு வரும்வரை 10, 12 ஆண்டுக் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ததே, இவர்களாவது நமது தற்குறித் தன்மையினைப் போக்க முயன்றார்களா? இல்லையே! காமராசர் ஆட்சியில்தான் இன்றைக்கு 100-க்கு 30 பேர்கள் படித்து இருக்கின்றோம். ஆனால் பார்ப்பான் மட்டும் எந்தக் காலத்திலும் 100-க்கு 100 படித்தவர்களாகவே ஆதிக்கக் காரர்களாகவே இருந்து இருக்கின்றனர்.
எனவே, இந்த நாட்டு மக்களின் குறைபாடுகளைப் போக்க வேண்டும்; இழிவினைத் துடைக்க வேண்டும் என்ற கொள்கையின் பேரில் எந்தக் காலத்திலும் அரசியல் நடைபெறவே இல்லை.

2000 ஆண்டுகளாக எவரும் துணிந்து இறங்கிப் பாடுபட முன் வராத இந்தத் துறையில், இன்றுக் காமராசர்தான் இறங்கி நம் குறைபாடுகளை உணர்ந்து போக்க முன் வந்து இருக்கின்றார்.

நான் 30 ஆண்டுகாலமாகக் காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருபவன். நான் தமிழ்நாடு காங்கிரசில் இருந்து 1925 இல் காஞ்சீபுரத்தில் விலகினேன். அதிலிருந்து காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்று பாடுபட்டவன். ஒவ்வொரு தடவையும் காங்கிரஸ் மந்திரிசபையுடன் எதிர்த்துச் சண்டைப் போட்டு இருக்கின் றோம். 1937 இல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இராஜாஜியை, விட்டு ஓடச் செய்தவன்! மீண்டும் 1954 இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இராஜாஜி தானே விட்டு ஓடச் செய்தவன்.

நான் ஒன்றும் எனக்குக் காங்கிரசில் பதவி கிடைக்காததனால் இப்படிக் கூற வில்லை. நான் தமிழ்நாடு காங்கிரஸ் செக்ரட்டரியாகவும் (செயலாளர்), தலைவனாகவும் இருந்தவன் ஆயிற்றே! அது மட்டுமல்ல, இந்த நாட்டுக் காங் கிரசுக்கே ஒரு முக்கியத் தலைவன் என்று கருதும்படியான - எனது யோசனையினைக் கேட்டுத் தான் நடக்கும்படியான நிலையில் இருந்தவன். ஏன், விட்டு விட்டு அதை ஒழிக்க வேண்டும் என்று வந்தவன் என்றால் காங்கிரஸ் கட்சி, பார்ப்பானுக்கே வாழ்வு அளிக்கும்படியானதாகவும், நமக்குக் கேடு செய்யக் கூடியதாகவும் இருப்பது கண்டு விட்டு வந்தேன். என்னை ஒருவரும் அதை விட்டுப் போகச் சொல்லவில்லை. “நாயக்கரே! நாயக்கரே! வேண்டாம் கொஞ்சம் யோசனைப் பண்ணுங்கள்” என்று ராஜாஜியும் மற்றப் பார்ப்பனர்கள் எல்லாரும் கெஞ்ச விட்டுத்தான் வந்தேன். நான் விட்டு வந்த பிறகு என்னை மந்திரிப் பதவி ஏற்றுக்கொள்ளும்படி ராஜாஜி அழைத்தும்கூட நான் போகவில்லை. அடுத்து என்னை மந்திரிசபை ஏற்றுக் கொள்ளும்படிக் காங்கிரஸ் பதவியை விட்டுவிட்டுப் போனபோது - ஒரு கவர்னரும், இரு கவர்னர் ஜெனரல்களும் என்னை சென்னை மாகாண முதல் மந்திரி பதவியேற்று மந்திரிசபை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தியும்கூட நான் ஏற்றுக் கொள்ளவில்லையே!
இந்த இராஜகோபாலாச்சாரியார் என்னிடம் வந்து கேட்டார், “நாயக்கரே! பேசாமல் ஒத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ நானும் வேண்டுமானால் ஒரு மந்திரியாகத் தாங்கள் கொடுத்தால் - இருந்து சகல காரியத்தையும் நடத்துகின் றேன். காந்தியாரிடம் வேண்டுமானாலும் பர்மிஷன் (அனுமதி) வாங்கித் தருகிறேன்” என்றார்.

நாங்கள் புதிய உலகத்தை உண்டு பண்ண விரும்புபவர்கள். நாங்கள் இதுவரை எவரும் எடுத்துச் சொல்லாத, எடுத்துச் சொல்லப் பயப்படுகின்ற புதிய விஷயங் களைச் (கருத்துகளை) சொல்லுபவர்கள். நீங்கள் எங்கள் புத்தகத்தையோ, பத்திரிகை களையோ படித்திருக்க மாட்டீர்கள். உங்களி டம் வரும் அரசியல்காரர்கள் எங்களைப் போன்று புரட்சிகரமான கருத்துகளை எடுத்துச் சொல்ல மாட்டார்கள்.

மாறாக உங்களுக்கு எது சொன்னால் நீங்கள் ஏமாறுவீர்களோ - எது சொன்னால் உங்கள் காதுக்கு இனிக்கமோ - அதனைச் சொல்லி உங்கள் ஓட்டுகளைப் பெற வருவார்கள்.

ஜோலார்பேட்டை, வேலூர் கூட்டங்களில் தந்தைபெரியார் அவர்கள் பேசியது. ‘விடுதலை’ 29.4.1961
நன்றி: புரட்சி பெரியார் முழக்கம்.

No comments: