பகுத்தறிவு மன்றத்தில் உலகம் என்ற
பழையமுத லாளியினை நிற்கவைத்து
மிகுத்திருந்த உன்நன்செய், புன்செய் யாவும்
வெகுகாலத் தின்முன்னே, மக்கள் யாரும்
சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்டதுண்டோ?
சொல்!என்றேன்; உலகப்பன் ஆம் ஆம் என்றான்.
வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டுமுண்டோ
வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன். வாய்ச்சொல் என்றான்.
குத்தகைக்கா ரர்தமக்குத் குறித்த எல்லை
குறித்தபடி உள்ளதுவா என்றுகேட்டேன்.
கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம்
கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே
கூலிமக்கள் அதிகரித்தார், என்னசெய்வேன்!
பொத்தல் இலைக் கலமானார் ஏழைமக்கள்.
புனல் நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர்;
அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வமெல்லாம்
அடுக்கடுக்காய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு
சதிராடு தேவடியாள் போல்ஆடிற்று!
தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்;
இதுஇந்நாள் நிலை என்றான் உலகப்பன் தான்!
இந்நிலையி லிருப்பதனால் உலகப்பா நீ!
புதுகணக்குப் போட்டுவிடு, பொருளைஎல்லாம்
பொதுவாக எல்லார்க்கும்நீ குத்தகைசெய்.
ஏழைமுத லாளியென்பது இல்லாமற்செய்,
என்றுரைத்தேன். உலகப்பன் எழுந்து துள்ளி,
ஆழமப்பா உன் வார்த்தை! உண்மையப்பா,
அதற்கென்ன தடையப்பா, இல்லையப்பா;
ஆழமப்பா உன்கருத்து, மெய்தானப்பா,
அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா,
தாழ்வுயர்வு நீங்குமப்பா, என்றுசொல்லித்
தகதகென ஆடினான், நான்சிரித்து,
ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப்பார்!
ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்.
செகத்தப்பன் யோசித்துச் சித்தம்சேர்ந்தான்,
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!
-------------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
Tuesday, March 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment