Tuesday, March 11, 2008

எல்லாம் கடவுள் செயலா?

திராவிடர் கழகத்தின் தொண்டுபற்றி உங்களிடையே சிறிது சொல்ல ஆசைப்படுகின்றேன். திராவிடர் கழகமானது பகுத்தறிவினை அடிப்படையாகக் கொண்டது. எறும்பு முதல் யானை வரையில் உள்ள ஜீவராசிகளுக்கு இல்லாத உன்னதமான அறிவான பகுத்தறிவு மனிதனுக்குத்தான் உள்ளது. மற்ற பிராணிகளுக்கும், மரம் செடிகளுக்கும் வெறும் உணர்ச்சி அறிவுதான் உண்டு. இவை எல்லாம் சாப்பிடுகின்றன. காற்றையும் சுவாசிக்கிறான், வளர்கின்றன, இனத்தையும் பெருக்குகின்றன. இப்படிப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு எல்லாம் இல்லாத பகுத்தறிவு என்பது நமக்குத்தான் உள்ளது; எது நல்லது கெட்டது என்று சிந்தித்து நடக்கும்படியான அறிவு மனிதனுக்குத்தான் உள்ளது. 1000 ஆண்டுகளுக்குமுன் யானை, குதிரை, மாடு என்ன தின்றதோ, எப்படி வாழ்ந்ததோ அதுபோலத்தான் இன்றும் தின்கின்றன - வாழ்கின்றன. மனிதன் அப்படி அல்ல. காலத்துக்குக் காலம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொண்டு, வளர்த்துக்கொண்டே வருகின்றான்.

இப்படிப்பட்ட பகுத்தறிவு மற்ற நாட்டு மக்களிடையே எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது, எவ்வளவு மேலே போயிருக்கிறார்கள்! நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஏன் வளர்ச்சி அடையவே இல்லை, ஏன் இன்னும் கீழ்நிலையிலேயே இருக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது பகுத்தறிவினை சரியான முறையில் பயன்படுத்தச் செய்யவிடவே இல்லை. தோழர்களே! எங்கள் இயக்கம் இந்த நாட்டில் தலையெடுக்காவிட்டால் கிராம மக்களின் கதிதான் என்ன? உழுவது, விதைப்பது, அறுப்பது, தின்பது, சாவது என்பதைத் தவிர வேறு என்ன இருந்தது?தோழர்களே! மாடு உழைக்கின்றது என்றால் அதற்கு அறிவில்லை. அதனைக் கட்டிவைத்து அடித்து வேலை வாங்குகின்றான். அறிவு படைத்த மனிதன் எதற்காக உழைக்க வேண்டும்? உழைத்து மற்றவனுக்குப் போட்டுவிட்டு சோற்றுக்கு மட்டும் கணக்காக வாங்கி வயிறு வளர்க்க வேண்டும் என்ற நிலை ஏன்? உங்களை கீழ்ஜாதியாக வைத்து இருக்கவே இந்த நிலை.தோழர்களே! பார்ப்பான் உழைக்காவிட்டாலும் அரிசிச் சோறுகாயோடு, பருப்போடு, நெய்யோடு, குழம்பு, ரசம், மோர் ஆகியவற்றுடன் சாப்பிடவும், உழைப்பவன் அரை வயிறு பட்டினி கிடக்கவும்படியான நிலை ஏன்?பார்ப்பானை எடுத்துக்கொண்டால், ஆண் பெண் அத்தனை பேரும் 50 வருஷத்துக்கு முன்பு இருந்தே 100-க்கு 100 படித்தவர்களாக இருக்கின்றார்கள்! உழைக்கின்ற நம் இனத்தில் தானே 100-க்கு 80, 90 பேர்கள் தற்குறி?உழைக்கின்ற குடியானவன் தன் சோற்றுக்கு எடுத்துக் கொண்டு மற்றதை எல்லாம் மற்றவனுக்குத் தானே பயன்படும்படி அளிக்கின்றான்.

இப்படிப்பட்ட மனிதன் கீழ்ஜாதியாக, அரை வயிற்றுக் கஞ்சிக்கும் கஷ்டப்படுகின்றவனாக ஏன் இருக்க வேண்டும்?இதற்குக் காரணம் கடவுள் செயல் என்று முட்டாள்தனமாக மற்றவன் சொல்லுவான். நாங்கள், மக்களுக்கு அறிவு சரியானபடி ஏற்படவில்லை என்றுதான் கூறுவோம். 2,000 ஆண்டாக இந்த சிந்தனை நமக்கு ஏற்படாது செய்து, என்ன இழிவு, கொடுமை ஏற்பட்டாலும் எல்லாம் கடவுள் செயல் என்று நினைக்கும்படி செய்துவிட்டார்கள்.

தோழர்களே! கடவுள் இல்லை, மதம் ஒழிய வேண்டும், சாஸ்திரம் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்கள் நாங்கள்! எங்களை எதிர்க்கத் துணிவில்லாத ராஜாஜி, காமராசரிடம் போய் முட்டிக் கொள்கிறார். காமராசர் எங்களுக்குச் சிநேகமாக இருக்கின்றாராம். அதன் காரணமாக இந்த ஆட்சி நாத்திக அரசாங்கமாக ஆகிவிட்டது; ராமசாமி சொல்லுகின்றபடிதான் ஆளுகின்றார் என்று கூறி காமராசரை மிரட்டுகின்றார்.எங்கள் பக்கத்தில் ஒரு கதை சொல்லுவார்கள். எங்கள் பகுதியில் வேட்டுவக் கவுண்டர் என்று ஒரு ஜாதி, வேளாளக் கவுண்டர் என்று ஒரு ஜாதி உண்டு. வேட்டுவக் கவுண்டர் சற்று முரட்டு சுபாவமுள்ளவர்கள். வேளாளக் கவுண்டர் கொஞ்சம் சாந்தமானவர்கள்.வேட்டுவக் கவுண்டன் ஒருநாள் வேளாளக் கவுண்டன் பிள்ளையார் முன்பு படுத்துக்கொண்டு காலை பிள்ளையார்மீது படும்படி நீட்டிக்கொண்டு இருந்தான். அது கண்டு பிள்ளையார் வேட்டுவக் கவுண்டனை ஒன்றும் கேட்கத் தைரியம் இல்லாமல் வேளாளக் கவுண்டனைப் பார்த்து, கவுண்டா! கவுண்டா! வேட்டுவக் கவுண்டனை காலை எடுக்கச் சொல்கின்றாயா, இல்லையானால், உன் கண்ணை குத்தட்டுமா? என்று கேட்டதாம்! வேளாளக் கவுண்டனோ எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுப் பார்த்தும் அவன் காலை எடுத்தப்பாடு இல்லை.கடவுளுக்குத் தைரியம் இருந்தால் வேட்டுவக் கவுண்டனை, காலை எடுக்கின்றாயா, இல்லையானால், உன் கண்ணைக் குத்திப்போடுவேன் என்று கேட்க வேண்டாமா?ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல வேளாளக் கவுண்டனையா மிரட்டுவது?அதுபோலத்தான், நாஸ்திகப் பிரச்சாரம் செய்வது நாங்கள். எங்களை எதிர்க்கத் தைரியம் இல்லாமல் காமராசரை ஏன் எதிர்க்க வேண்டும்? அவரிடம் ஏன் முட்டிக் கொள்ள வேண்டும்? நான் முன்பு குறிப்பிட்டதுபோல நாம் அறிவையே ஆதாரமாகக் கொண்டு காரியம் ஆற்றுகின்றதனால் எவரும் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாம் கடவுள் செயலா?
--------- 30.4.1963 இல் பெரம்பலூர் - அந்தூரில் தந்தை பெரியார் ஆற்றிய உரை

1 comment:

தமிழன் முழக்கம் - சங்கே முழங்க said...

ஊதுவோம் சங்கை நம்மில் காற்று உள்ளவரை, என்ன செய்வது சொரணையற்ற
சென்மங்களாக நடை பிணமாக உள்ளனரே.