Friday, March 28, 2008

நான் நாத்திகன் - ஏன்?

நான் நாத்திகன் - ஏன்? என்னும் இந்நூல் தோழர் சர்தார் கே. பகத்சிங் அவர்களால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தையார்க்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியின்மீது எழுதப்பட்ட ஒரு கடிதமாகும். அக்கடிதத்தை தோழர் பகத்சிங் அவர்களின் தகப்பனார் லாகூரிலிருந்து வெளிவரும் `ஜனங்கள் என்னும் ஆங்கில கிழமை வெளியீட்டில் பிரசுரித்திருந்தார். அக்கடிதத்தை மொழிபெயர்த்து புத்தக ரூபமாய் வெளியிட வேண்டுமென்று பல தோழர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சென்னை மாகாண நாத்திக சங்க அமைச்சர் தோழர் ப. ஜீவானந்தம் அவர்களால் இனிய தமிழில் மொழிபெயர்த்து நமக்குக் கொடுக்கப்பட்டதாகும்.

அந்த நூலிலிருந்து சில பகுதிகள்: எனது நாஸ்திக உணர்ச்சி இவ்வளவு சமீபகாலத்தில் தோன்றியதன்று பிறர் என்னைத் தெரிந்து கொள்ளாத சாதாரண வாலிபனாக இருந்த காலத்திலேயும் மற்ற எனது தோழர் பலருக்கு கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது என்று தெரிவதற்கு முன்பேயும் தெய்வ நம்பிக்கையை விட்டு விட்டேன். இதை எனது தோழர்கள் அறியார். கல்லூரி மாணாக்கனாக மட்டும் இருக்கும் ஒருவன் நாத்திக உணர்ச்சியைத் தூண்டத் தகுந்த அவ்வளவு மிதமிஞ்சிய அகங்காரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாது. கல்லூரியில் வாசிக்கும்பொழுது நான் சில ஆசிரியர்களால் நேசிக்கப்பட்டேன். சிலரால் வெறுக்கப் பட்டேன். என்றாலும், நான் ஒருபோதும் மிகுந்த சுறுசுறுப் புடைய மாணாக்கனாகவோ, சதா படித்துக் கொண்டிருக்கும் பையனாகவோ இருந்ததில்லை. அந்நாளில் அகங்காரத்தால் தலைகொழுக்கும் உணர்ச்சிகள் ஊட்டும் சந்தர்ப்பங்கள் எனக்கு ஒன்றேனும் வாய்க்கவில்லை. நான் சுபாவத்தில் நாணமும், கூச்சமும் உள்ள பையனாக இருந்ததோடு, பிற்கால வாழ்க்கையில் நம்பிக்கையற்றவனாகவும், குழப்பமுடையவனாகவும் இருந்தேன். அக்காலத்தில் நான் ஒரு பூரண நாஸ்திகவாதியல்ல. என்னைச் சீராட்டி, பாராட்டி வளர்த்த என்னுடைய பாட்டனார் மிகப் பிடிவாதமுள்ள வைதீக ஆரிய சமாஜி. ஆரிய சமாஜி வேறு எதற்கு வேண்டுமானாலும் இடங்கொடுப்பார். ஆனால் நாஸ்திகத் திற்கோ கடுகளவும் இடங்கொடாத பரம விரோதி. எனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு நான் லாகூர் டி.ஏ.வி. கலாசாலையில் சேர்ந்து அங்குள்ள விடுதியில் ஒரு வருஷம் கழித்தேன். அங்கே நான், காலை மாலை பிராத்தனையோடு, காயத்திரி மந்திரத்தை மணிக்கணக்காக ஜெபிப்பது வழக்கம். அக்காலத்தில் நான் ஓர் பரம பக்தனாகவே இருந்தேன். பின்னர் எனது தகப்பனாரோடு வாழ ஆரம்பித்தேன். மத வைராக் கியத்தைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு தாராள நோக் குடையவராகவே இருந்தார். அவருடைய உபதேசங்களால்தான் நான் சுதந்திரத்திற்காக எனது வாழ்க்கையைத் தத்தஞ் செய்ய வேண்டுமென்று உணர்ச்சியும், உறுதியும் கொண்டேன். ஆனால், அவர் ஒரு நாஸ்திகரல்ல. அவர் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கையுடையவர். தினசரி பிரார்த்தனை செய்யும்படியாக அவர் எனக்கு உற்சாகமூட்டுவது வழக்கம்.
இவ்விதமாகவே நான் ஆரம்பித்தில் வளர்க்கப்பட்டேன். ஒத்துழையாமை காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் எல்லா மதங்களைப் பற்றியும் - கடவுளைப் பற்றியும்கூட தாராளமாக எண்ணுவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், தர்க்கிப்பதற்கும் ஆரம்பித்தேன். அப்பொழுதும் கூட நான் பரம தெய்வபக்தனாகவே இருந்தேன். அதுகால பரியந்தம், நான் எனது தலைமயிரைக் கத்தரித்துவிடாமல் (மதாச்சாரப்படி) வளர்த்துக் கட்டிக்காப்பாற்றி வந்தேனானா லும், சீக்கிய மதத்திலும் பிற மதங்களிலுமுள்ள சித்தாந்தங் களிலும் கொள்கைகளிலும் எனக்குக் கிஞ்சிற்றும் நம்பிக்கை கிடையாது. ஆனால், கடவுள் ஒருவர் உண்டு என்பதில் மந்திரம் எனக்குப் பரிபூரண நம்பிக்கையிருந்தது.


பச்சை நாத்திகனானேன்


நமது போராட்டத்திற்குரிய லட்சியம் எது என்று தெளிவாக அறிந்திருக்க வேண்டிதே மிக முக்கியம். நாங்கள் காரியத்தில் காட்டித் தீர வேண்டிய குறிப்பாக திட்டமெதுவும் அப்பொழுது எங்களுக்கு இல்லாதிருந்த காரணத்தால் உலகப் புரட்சி சம்பந்தமான பலதிறப்பட்ட லட்சியங்களை ஆர அமர சீர் தூக்கிப் பார்ப்பதற்குப் போதுமான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான் அராஜகத் தலைவரான பக்குனின் என்பவரின் தத்துவங்களைக் கற்றேன். பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகாச்சக்ராதிபத்திய ஆதிக்க இருள் படர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூற்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி செய்தேன். அவர்கள் எல்லோரும் பச்சை நாத்திகர்களே.
பக்குனின் எழுதிய `கடவுளும் ராஜ்யமும் என்ற நூல் பூர்த்தி செய்யப்படாத துண்டு துணுக்குகளாக இருந்த போதிலும், விசயத்தை வெகு ருசிகரமாக விளக்குகிறது. சில காலத்திற்குப் பின் நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு என்னும் புத்தகத் தையும் படிக்க நேர்ந்தது. அதில் நாத்திக வாதம் தெளிவு படும்படியில்லாமல் ஒரு தினுசாகக் கூறப்படுகிறது. இந்த விசயமானது அந்தக் காலத்தில் எனக்கு மிக ருசிகரமானதாகி, எனது உள்ளத்தை கொள்ளைக் கொண்டு விட்டது. 1926-ஆம் ஆண்டு முடிவில் இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வசக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டு விட்டேன். என்னுடைய இந்த தெய்வ நம்பிக்கையற்ற தன்மையை நாத்திக வாதத்தை பகிரங்கப்படுத்தினேன்.


சில நிபந்தனைகள்


ஒரு நாள் காலையில் சி.அய்.டி. இலாக்காவின் பிரதம சூப்பிரன்டெண்டான மிஸ்டர் நியூமென் என்னிடம் வந்தார். அவர் மிகுந்த அனுதாபத்தோடு நீண்ட நேரம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். பின் முடிவாக, அவர்களால் கோரப்படுகிறபடி நான் எவ்விதமான அறிக்கையும் கொடுக்காவிட்டால், காக்கோரி வழக்கு சம்பந்தமாய், யுத்தம் தொடங்கச் சதியாலோசனை செய்ததாகவும், தசரா வெடிகுண்டு விபத்து சம்பந்தமாய் கொடிய கொலைகள் செய்ததாகவும், என்னை விசாரணைக்கு அனுப்புமாறு தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவோமென்று கூறினார். மேலும் அவர் என்னை குற்றவாளியாக்கவும் தண்டித்துத் தூக்குத் தண்டனை விதிக்கவும் போதுமான சாட்சியங்கள் இருப்ப தாகவும் என்னிடம் கூறினார். நான் முற்றும் குற்றமற்ற நிரப ராதியாயிருந்தேன். ஆயினும், அந்தக் காலத்தில் போலீசார் எதையும் இஷ்டப்பட்டால் இஷ்டப்படி முடித்து விடுவார் களென்று நம்பினேன். அன்றைய தினமே சில போலீஸ் உத்தியோகஸ்தர்கள் என்னிடம் வந்து ஒழுங்காக இரண்டு வேளைகளிலும் கடவுளை பிரார்த்தனை செய்யும்படி என்னைத் தூண்ட ஆரம்பித்தார்கள். நானோ அப்பொழுது ஒரு நாஸ்தி கனாக இருந்தேன். சமாதானமும் சந்தோசமும் குடிகொண்டி ருக்கும்பொழுது மாத்திரம்தான் நான் நாஸ்திகவாதியென்று தற்புகழ்ச்சியடைந்து கொள்வதா அன்றி மிக்க கஷ்ட திசையிலும் யான்கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருப்பதா என்பதைக் குறித்து எனக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்று விரும்பினேன். நீண்ட நெடும் ஆலோசனைக்குப் பின்னர் எனது மனோரதம் கடவுளை நம்பி பிரார்த்தனை செய்யும்படி தூண்டக்கூடாதென்று முடிவு கட்டினேன். அம்முடிவின்படி நான் எவ்விதப் பிரார்த்தனையும் செய்யவில்லை. எனது உண்மையான சோதனைகள் அதுதான். நான் அதில் வெற்றி சூடினேன்.


பழிகள் வரும்


நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருந் தவர்களென்ற காரணத்திற்காக, யாரேனும் ஒருவன் அந்த நம்பிக்கையின் உண்மையை மறுக்கத் துணிந்தால், அல்லது அந்த சர்வ சக்தி பொருந்திய வஸ்துவை மறுப்பதற்குத் திடம் கொண்டால், அவன் மதத்துரோகியென்றும், விசுவாச காதக னென்றும் பழித்துரைக்கப்படுகின்றான். அவனுடைய வாதங்கள் எதிர்வாதங்களால் அசைக்க முடியாதபடி ஆணித்தரமானவை களாயிருந்தால், அவனுடைய உணர்ச்சி பயங்கரமான கஷ்ட நிஷ்டூரங்களாலும் சர்வசக்தியுள்ள கடவுளின் கோபாக்கினி யாலும் சிதறடிக்கப்படாத வன்மையுடையதாயிருந்தால், அவனை அகங்காரம் பிடித்தவனென்றும் அவனுடைய உணர்ச்சியைத் தற்பெருமை கொண்டதென்றும் எள்ளி இழித்துத் தூற்றுகிறார்கள். பின்னர் ஏன் இவ்வாஸ்திக சிகாமணிகள் இந்த வீண் வாதத்தில் காலங்கடத்த வேண்டும்? சகல விஷயங்களையும் பூராச்சங்கதிகளையும் பூரணமாகத் தர்க்கித்துவிட ஏன் முயற்சி செய்ய வேண்டும்? முதன் முதலாக இப்பொழுதுதான் பொது மக்களுக்கு இத்தகைய கேள்விகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. முதன் முதலாக இப்பொழுது தான் பொது மக்களால் இது காரியானுஷ்டானத்திலும் கையாளப்படுகிறது. எனவே, இவ்விஷயத்தை விரிவாக ஆராய்ச்சி செய்ய நேரிட்டிருக்கிறது.
முதல் கேள்வியைப் பொறுத்தவரையில் என்னை நாஸ்தி கனாகும்படித் தூண்டியது எனது அகங்காரமல்லவென்பதைத் தெளிவுப்படுத்திவிட்டேனென்றே கருதுகிறேன். என்னுடைய விவாதத்தின் போக்கைப் பரிசீலனை செய்து பொருத்த முடையதா அல்லவா என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு வாசகர்களைச் சேர்ந்ததேயன்றி என் பொறுப்பன்று. அப்பொழு துள்ள நிலைமையில் கடவுள் நம்பிக்கையானது எனது வாழ்வில் ஆறுதலளித்து பாரத்தையும் குறைக்கும். கடவுள் நமபிக்கையற்ற தன்மையோ, சந்தர்ப்பங்களையெல்லாம் சங்கடத்திற்குள் ளாக்குவதோடு நிலைமையை மோசமாக்கி கடுமையும், கொடுமையும் நிறைந்ததாகச் செய்துவிடும். மதோன்மத்தர் போதம் துளியளவு இருப்பினும் வாழ்க்கை காவிய வர்ணனைக் காண்பதுபோல் நயமுள்ளதாகத் திகழும். ஆனால், எனது முடிவுக்குத் துணை புரிய எந்தவிதமான போதையையும் - மயக்க நெறியையும் - நான் விரும்பவில்லை. நான் ஒரு யதார்த்தவாதி. என்னுள் எழும் உணர்ச்சியைப் பகுத்தறிவின் துணையால் அடக்கியாள முயற்சித்துக் கொண்டு வருகிறேன். இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை. ஆனால் மனிதனுடையே கடமை இடையறாது முயற்சிப்பதே. ஜெயாப ஜெயம் சந்தர்ப்பத்தையும் சுற்றுச் சார்புகளையும் பொறுத்தது.


குருட்டு நம்பிக்கை ஆபத்தை விளைவிக்கும்


முன்னேற்றத்தை நாடும் எந்த மனிதனும் பழைய மதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அலசி அலசி ஆராய்ச்சி செய்து தீர வேண்டும். பழைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் போட்டிக்கழைத்துத் தீர வேண்டும். பிரஸ்தாபத்திலிருக்கும் மத சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றுக்கும் - எவ்வளவு அற்ப சொற்ப மானதாயிருந்தாலும் - காரண காரியங்கள் கண்டுபிடித்துத் தீர வேண்டும். இவ்விதமாக ஆழமாய் ஆராய்ச்சி செய்தபின், ஒருவன் ஏதேனுமொரு கொள்கையை அன்றி, கோட்பாட்டை நம்பும்படி நேர்ந்தால், அவனுடைய நம்பிக்கை தப்பும் தவறுமுடையதாக தவறான வழியில் செலுத்தப்பட்டதாக மயக்கம் நிறைந்ததாக இருக்கலாம். இருந்தபோதிலும் அவன் சீர்திருத்தமடைவதற்கு இடமுண்டு. ஏனென்றால், பகுத்தறிவே அவனுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிர்கின்றது. ஆனால், விருதா நம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் ஆபத்தை விளைவிக்கும். அது மூளையை மந்தப்படுத்தி, மனிதனை பிற்போக்காளனாக மாற்றி விடுகிறது. தான் உண்மை நாடுவோன் என்று உரிமைப் பாராட்டிக் கொள் ளும் எந்த மனிதனும் பழைய நம்பிக்கை முழுவதையும் போட்டிக்கழைத்தாக வேண்டும். பழைய நம்பிக்கையால் ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாவிட்டால், அது நொறுங்கி தவிடுபொடியாகி விடும். எனவேஅவனுடைய முதற்கடமை, அதனைச் சின்னாபின்னமாகச் சிதறியடிப்பதன் மூலம், புதிய தத்துவத்தை நிறுத்துவதற்கான நிலத்தை செப்பனிடுவதாகும். இது அழித்தல் வேலை. இதன் பிறகுதான் ஆக்கல் வேலையின் ஆரம்பம். இந்தத் புனருத்தாரணத்திற்குப் பழையவற்றில் சிலவற்றை சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.


கேள்விகள் எழுப்புகிறேன்


பிரபஞ்சத்தை இயக்கி, தனது ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கும் நன்னறிவோடு கூடிய முழு முதற்பொருள் (கடவுள்) ஒன்று இல்லை என்று நான் உணர்ந்துகொண்டு வந்திருக்கிறேன். நாம் இயற்கையில் நம்பிக்கை வைக்கிறோம். முன்னேற்ற இயக்கம் முழுவதும் மனிதன் தனக்கு ஊழியஞ் செய்வதற்காக இயற்கையை அடக்கி ஆதிக்கம் செலுத்துவதில் குறிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு `சின்மய சக்தி பின்னாலிருந்து இயற்கையை நடத்திக் கொண்டிருக்கிற தென்பதுதான் நமது தத்துவ சாஸ்திரத்தின் சாரம். நாஸ்திகவாதத்தின் சார்பாக நான் சில கேள்விகளை ஆஸ்திகர்களிடம் கேட்கிறேன் (1) நீங்கள் நம்புவதுபோல் சர்வ வியாபியும், சர்வக்ஞனும், சர்வசக்தனுமாகிய ஒரு கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால், அவன் ஏன் இதைப் படைத்தானென்று தயவு செய்து கூறுங்கள். அந்தோ! துன்பமும், துயரமும், கஷ்ட நிஷ்டூரங்களும் நிறைந்த உலகம்! பல திறப்பட்ட சதா இருந்து கொண்டிருக்கிற கணக்கு வழக்கற்ற முடிவுகள். பூரணமாக திருப்தியடைந்த ஜீவன் ஒன்றுகூட இல்லை.
தயவு செய்து, அது தெய்வ சங்கற்பம் - கடவுள் சித்தம் - ஈசன் இட்ட சட்டம் என்று கூறிவிடாதீர்கள். அவன் எந்தச் சட்டத் திலாவது கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், அவன் சர்வசக்தி யுடையவனல்ல; அவனும் நம்மைபோன்ற மற்றொரு அடிமை யாகத்தான் இருக்க முடியும். அது அவனுடைய பொழுதுபோக்கு - தமாஷ் - லீலா வினோதம் என்பீர்களோ? தயவு கூர்ந்து அவ்வாறு சொல்லாதீர்கள். நீரோ என்பவன் ரோமாபுரியை எரித்தான். `நீரோ, கொடுங்கோலன், ஈரமற்ற நெஞ்சினன், கேடு கெட்டவன் என்று பலமாகக் கண்டித்து, கர்ண கடூரமான தூஷணைச் சொற்களால் வசைமாரி செய்திருப்பதால் சரித் திரத்தின் பக்கங்கள் கறைப்பட்டுப் போயின. செங்கிஷ்கான் என்பவன் தனது சந்தோஷத்தையும் இன்பத்தையும் நாடி சில ஆயிரம் பேர்களை பலியிட்டான். நாம் அவனை மிகக் கடுமையாக வெறுக்கிறோம். அவனுடைய பெயரைக்கூட வெகுவாக நிந்திக்கிறோம்.


என்ன தீர்ப்பு சொல்லுகிறீர்கள்?


அப்படியானால் கணக்கு வழக்கற்ற கொலைகளை - துக்கமும் துயரமும் நிறைந்த சம்பவங்களை ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நாழிகையிலும், ஒவ்வொரு நிமிஷத்திலும் செய்து கொண்டிருக்கிற `என்றுமுள நீரோவாகிய முழு முதற் கடவுளுக்கு நீங்கள் என்ன தீர்ப்புக் கூறப் போகிறீர்கள்? செங்கிஷ்கான் தோற்றோடும்படியாக ஒவ்வொரு கணத்திலும் நடைபெறும் அவனுடைய (கடவுள்) தீய காரியங்களை நீங்கள் எவ்வாறு ஆதரிக்க நினைக்கிறீர்கள்? அவன் இந்த உலகத்தை மெய்யான (கண்கண்ட) நரகத்தை - சதாகவலையும், குழப்பமும், சஞ்சலமும் நிறைந்த கசப்புக்குரிய அமைதியற்ற ஸ்தலத்தை - எதற்காகப் படைத்தான்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் தன்னிடமிருக்கும்பொழுது சர்வ சக்தனாகிய அக்கடவுள் மனிதனை, ஏன் இத்தகைய உலகில் சிருஷ்டித்தான்? உத்தமர் களான நிரபராதியான தியாக மூர்த்திகளை, உண்மையின் பொருட்டுக் கஷ்ட நிஷ்டூரங்களுக்கு இரையாகின்றவர்களை மறுமையில் சம்மானிப்பதற்காகவும், துஷ்டர்களை, கொடியவர் களை, மோச நாசக்காரர்களை மறுமையில் தண்டிப்பதற் காகவுமே கடவுள் சிருஷ்டித்தார் என்று கூறுகிறீர்களா? நன்று நன்று! உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். பின்னால் மிக மிருதுவான பஞ்சால் ஒத்தடம் கொடுத்து, அரிய இனிய சிகிச்சையால் நோவைக் குறைத்து நோவை சுகப்படுத்துவதற்காக, தற்பொழுது உடம்பில் படுகாயம் பண்ணுகிறேன் என்று கூறும் ஒரு மனிதனுடைய வாதத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? கிளாடியேட்டர் ஸ்தாபனத்தை ஆதரிக்கிறவர்களும், நிர்வகிக்கிற வர்களும், அகோரப் பசியால் பயங்கரமான கோபாவேசத்துடன் கர்ஜிக்கும் சிங்கங்களின் முன்னால் மனிதர்களைத் தூக்கியெறி கிறார்கள். அவ்வாறு தூக்கியெறிவது எறியப்படுகிறவர்கள் சிங்கங்களோடு போராடி, அந்தக் கொடிய மிருங்கங்களால் ஏற்படும் மரணத்திலிருந்து தப்பித்துக் கொண்டாரானால், அவர்களைப் பின்னால் பாதுகாத்து நல்ல மாதிரியிற் பராமரிப்பதற்காகவேயென்று காரணம் கூறுகிறார்கள்? இந்த நியாயம் பொருத்தமாயிருக்க முடியுமா? முடியாது. இதனாலே தான் அந்த முழுமுதற் கடவுள் எதற்காக உலகத்தைப் படைத்து, அதில் மனிதனைச் சிருஷ்டித்தான் என்றும், தமாஷ் பண்ணி பொழுதுபோக்கவென்றால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசமென்றும் நான் கேட்கிறேன். தரித்திரமும், மூடத்தனமும் தலைவிரித்தாடும் ஒரு தோட்டியின் குடும்பத்திலோ அன்றி, ஒரு சாமர் சாதிக்காரன் (தீண்டக் கூடாதவன்) குடும்பத்திலோ ஒரு மனிதன் பிறந்தால் அவன் கதி என்னாகும்? அவன் பரம ஏழை ஆகையால் படிப்பது அசாத்தியம். சாதித் திமிர் கொண்ட மேல்ஜாதிக்காரர்களால் அவன் வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவனுடைய மூடத்தனம், அவனுடைய தரித்திரம், அவன் நடத்தப்படுகின்ற தன்மை இவைகளெல்லாம் ஒன்றாகி, சமுதாயத்தை வெறுக்கும்படியான நிலைமைக்கு கொண்டு வந்துவிடுகிறது. அதன் காரணமாக அவன் குற்றஞ் செய்கிறானென்று வைத்துக் கொள்ளுவோம்! அதற்கு ஜவாப்தாரி யார்? கடவுளா? அவனா? அல்லது சமுதாயத் தின் படித்த கூட்டத்தாரா? மமதையும், பேராசையும், உச்சி முதல் உள்ளங்கால்வரையில் கொண்ட, குதிக்கும் `பிராமணர்களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக் கும் தாழ்த்தப்பட்ட மக்களின் தண்டனைக்குப் பொறுப்பாளி யார்? உங்களுடைய `பரிசுத்த ஞான நூற்ககளாகிய வேதங் களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும், அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்? அவர்கள் ஏதாவது குற்றஞ் செய்தால் அவர்களுக்காக யார் பொறுப்பேற்று தண்டனைக்குத் தலை கொடுப்பார்? அன்புக் குரிய நண்பர்களே! மேற்கூறிய கோட்பாடுகளெல்லாம் விசேஷ சலுகையடைவோரின் கற்பனைகள். இக்கோட்பாடுகளின் உதவியால் அவர்கள் தாங்கள் பிறரிடமிருந்து பறித்துக் கொண்ட அதிகாரம், அய்ஸ்வர்யம், அந்தஸ்து முதலானவையென்று தீர்மானிக்கிறார்கள்.


நூல்: திராவிடர் கழக வெளியீடு - நன்கொடை ரூ.10

No comments: