கேள்வி : தங்களைப் போல் 95 வயது வரையிலும் வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும்?
பதில் : எப்போதும் ஆக்டிவாக (சுறுசுறுப்பாக) இருக்க வேண்டும்.
கேள்வி : இந்த வயதிலும், தாங்கள் பல மைல்கள் சுற்றுப் பயணம் செய்கிறீர்களே, உடல் நலம் பாதிக்காதா?
பதில் : வயதிற்கும், இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை சும்மா இருக்கப் பிடிக்காது. சுற்றுப்பயணம் செய்தால் தான் நன்றாக இருக்கிறது.
கேள்வி : எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?
பதில் : சாதாரணமாக இரவு, 8, 9 மணிக்குத் தூங்கிவிடுவேன். பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி-கள் இருந்தால், இரவு 11 மணிக்கு, 12 மணிக்கு மேல் தூங்குவேன். எப்படியும், 8 மணி நேரம் தூங்கிவிடுகிறேன்.
கேள்வி : தங்கள் உணவுப் பழக்கம் என்னென்ன?
பதில் : எப்பொழுதும், காலை 6 மணிக்கு எழுந்துவிடுவேன். 8 மணிக்கு 2 இட்டிலி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவேன். முன்பெல்லாம், 4, 3 வாழைப்பழங்கள் சாப்பிட முடிந்தது. ஆனால், இப்போது ஒரு பழத்திற்கு மேல் சாப்பிட முடியவில்லை. அதன் பிறகு, பார்வை-யாளர்களைச் சந்திப்பேன். இடையிடையே சிறிது காப்பி, பால் அருந்துவேன். மதியம் 12--1 மணிக்குள் ஒரு கரண்டி சாதம், சிறிதளவு மாமிசம், தயிர், குருமா, ஒரு வாழைப்பழம் இதுதான் ஆகாரம். மாமிசம் சாப்பிடாவிட்டால் அவ்வளவு திருப்திகரமாக இருக்காது.
நிருபர் : மாமிசம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி பாதிக்கப்படவில்லையா?
பதில் : என்னைப் பொறுத்தவரை, மற்ற உணவுப் பதார்த்தங்களைவிட மாமிசம் சாப்பிட்டால் ஜீரணமாகிவிடுகிறது. அதனால் எந்தவிதத் தொந்தரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால் தான் தொந்தரவு. இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் 2 இட்லி, ஒரு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அத்துடன் சரி. காப்பியும் பாலும் தான் முக்கிய உணவு.
கேள்வி : பொதுக்கூட்டங்கள், மற்ற நிகழ்ச்சிகள் உள்ள நாட்களில் என்ன செய்வீர்கள்?
பதில் : பொதுக்கூட்டங்கள், இரவு 10-11 மணிக்கு முடிந்ததும் அதன் பின்பு தான் சாப்பிடுவேன்.
கேள்வி : ஒரு நாள் பொழுதை எப்படிக் கழிக்கிறீர்கள்?
பதில் : முன்பெல்லாம் நிறையப் புத்தகங்கள் படிப்பேன்; எழுதுவேன். ஆனால் இப்போது படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. எழுதுவதற்குச் சலிப்பாக இருக்கிறது.
யாராவது கட்டுரைகள் கேட்டால் எழுதித் தருவேன். அத்துடன் முன்பு மாதிரி மூளை தெளிவாக இல்லை. கஷ்டப்பட்டுச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ஒன்றைப் பற்றித் தொடர்ச்சியாக வரும். ஆனால் இப்பொழுது நினைவாற்றல் குறைந்து வருகிறது.
கேள்வி : மது அருந்தும் பழக்கம் பற்றித் தங்கள் கருத்து என்ன? தங்களுடைய அனுப-வத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
பதில் : இதுநாள்வரை நான் மதுவை அருந்தியதேயில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை பலருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். மது அருந்துவதால் கெடுதி இல்லை. அளவுக்கு மேல் போனால் தான் எதுவுமே கெடுதலே தவிர, அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை. 100-க்கு 90 பேர் அளவோடுதான் குடிக்கிறார்கள்.
கேள்வி : முன்பெல்லாம் மாலை நேரங்களில் கார் மூலம் உலாவப் போவீர்களே, இப்போது போவதுண்டா?
பதில் : என்றைக்காவது ஒரு நாள் போவேன். முன்புபோல் இப்போது போக முடிவதில்லை. பொழுது போகவே கஷ்ட-மாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் போவதுண்டு.
கேள்வி : கிளர்ச்சி, போராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்களே, அது எப்படி இருக்கும்?
பதில் : என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால் நான் அவற்றில் நேரடியாகவே ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று செய்தால் தானே நன்றாக இருக்கும்? ஒதுங்கிக் கொள்வது என்பது எனக்குப் பிடிக்காது.
கேள்வி : ஒரு குறிப்பிட்ட இனத்தார் மீது தங்களுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம், தாங்கள் அரசியலில் ஈடுபட்ட சமயத்தில் முதல் முதலாக ஒரு விருந்தில் தாங்கள் அலட்சியமாக நடத்தப்பட்டது தான் என்று சொல்லப்-படுகிறதே, அதுதான் உண்மையா?
பதில் : எனக்கு, யார் மீதும் வெறுப்புக் கிடையாது. நான் எதையும் லட்சியம் செய்யாமல், முரட்டுத்தனமாக யதேச்சையாகத் திரிந்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் சமுதாயத்தில் இருந்த மூடப்பழக்க வழங்கங்களும் தான் காரணமே தவிர, வேறு காரணம் எதுவுமில்லை. ஆனால், அந்தக் காலத்தில் விருந்துகளில் கூட நம்மை மிக இழிவாகவும், தரக்குறைவாகவும் நடத்தி ஒதுக்கியே வந்தார்கள்.
----------"மாலை முரசு"-16.9.1973 நாளிதழுக்கு தந்தைபெரியார் அளித்த நேர்காணல்
Friday, March 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment