Saturday, March 29, 2008

காந்தீயம்

காந்தீயம் என்பது மகாத்மா காந்தியை மூல புருஷராய் வைத்து அவரது சரித்திரத்தையும், கொள்கையையும், அதன் பலனையும் பற்றியது. எப்படி சைவம் என்பது சிவனை முதன்மை யாகக் கொண்டதோ, வைணவம் என்பது விஷ்ணுவை முதன்மை யாகக் கொண்டதோ, ராமாயணம் என்பது எப்படி ராமரை முதன்மை யாகக் கொண்டதோ அதுபோல் காந்தீயம் என்பது காந்தியை முதன்மை யாகக் கொண்டது. இவற்றில் மக்களுக்காக மகாத்மா காந்தி ஏற்படுத்திய கொள்கைகளும் அதற்காக அவரது சேவையும் அவரது தியாகமும் முதன்மையானது. அதனால் எற்பட்ட பலன்களும் நிகழ்ச்சி களும் இரண்டாவதாகச் சொல்லலாம். நமது தேசத்தில் இவ்விருபதாம் நூற்றாண்டில் ராஜாக்களும், பிரபுக்களும், பெரும்பதவி அதிகார முடையவர்களும் எத்தனையோ பேர் பிறந்திருந்தாலும் மறைந்திருந் தாலும் 33 கோடி பேர்களும் மதிக்கத் தகுந்த மாதிரி மகாத்மா காந்தியைப் போல் மற்றொருவரை சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம் என்ன? காந்தியை மாத்திரம் மகாத்மா என்று சொல்லக் காரணமென்ன? தங்கள் தங்கள் சுயநலத்துக்காக வாழ்கிறவர்கள் எவ்வளவு பெரியவர்களென்று சொல்லிக் கொண்டபோதிலும் அவர் கள் சாதாரண மனிதர்களாகத்தான் உலகத்தினரால் கருதப்படுவார்கள். உலகத்துக்காக வாழ்கிறவர்கள் எவ்வளவு சிறியவர்களாக இருந்த போதிலும் மகாத்மாவாகத்தான் கருதப்படுவார்கள். அப்படியானால் உலகத்துக்காக வாழ்கிறதாகச் சொல்லிக் கொண்டு எத்தனையோ தலைவர்களிருக்கின்றார்களே நாமும் அவர்களை எல்லாம் தலைவர்கள் தலைவர்களென்கிறோமே, ஏன் காந்தியை மாத்திரம் மகாத்மா என்று சொல்லவேண்டும் என்கிறதாக ஒரு கேள்வி பிறக்கலாம். மகாத்மா வைத் தவிர மற்ற தலைவர்களெல்லாம் பிறத்தியாருக்கு சொல்ல மாத்திரம் தெரிந்தவர்களேயல்லாமல் அதுபோல நடக்க முடியாத வர்களும், நடக்க இஷ்டமில்லாதவர்களுமாகவே இருப்பார்கள். ஆனால், மகாத்மாவோ சொல்லுகிறபடி நடப்பவர், நடக்கக் கூடியதையே சொல்லுபவர். இந்தக் குணந்தான் அவரை மகாத்மா வாக்கியது. அவர் கண்ணுக்கு உண்மைதான் வெளிப்படும். அவரு டைய மனமும் வாக்கும் உண்மையைத்தான் நினைக்கும், உண்மையைத்தான் பேசும். அவருடைய நோக்கமெல்லாம் ஏழைகளைப் பற்றியதாய்த்தானிருக்கும். அவருடைய கொள்கைகளெல்லாம் ஏழைகளின் கஷ்டத்தை ஒழிப்பதற்குத்தான் ஏற்படும். அவர் இந்தியாவின் விடுதலை என்பது ஏழைகள் விடுதலையைத்தான் குறிக் கும். மகாத்மாவின் சுயராஜ்யமே ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சுயமரியாதையையும் சமத்துவத்தையுமே அடிப் படையாகக் கொண்டது. அவருடைய சேவை என்பது தியாகத்தையும் கஷ்டமநுபவிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தக் காரணங்களால் அவர் தானாகவே மகாத்மா ஆகிவிட்டார். உபசாரப் பத்திரங்களில்லையே, வண்டியில்லையே, ஊர்வலமில்லையே என்று விசாரப்படுகிறவர்களும், ஊர்வலத்தையும் உபசாரப் பத்திரத்தையும் நாடிக்கொண்டு திரிகிறவர்களும், தங்களைத் தலைவர்களென்று சொல்ல வேண்டுமென்று பணம் கொடுத்து சொல்லச் செய்வோர்களும், பாமர ஜனங்களை ஏமாற்றி தாங்களும் தங்கள் குலத்தார்களும் மாத்திரம் மேன்மையடைய வேண்டுமென்று நினைத்துக் கொண்டு அலைவதையும் தேச சேவை, பொது ஜன சேவை என்று சொல்லிக் கொண்டு திரிவார்களேயானால் அவர்கள் எப்படி மகாத்மாவாகக் கூடும்? பதவிகளையும் பட்டங்களையும் மனதில் குறிப்புக் கொண்டு சுயராஜ்யம் சம்பாதிப்பதற்காக சட்டசபைக்குப் போகிறேன் என்று சொல்லுகிறவர்களும் அதற்கு வோட்டு சம்பாதிப்பதற்காக பணத்தைக் கொடுத்து பலரைக் கூட்டிக் கொண்டு தங்களைத் தலைவர்கள் தலைவர்கள் என்று சொல்லும்படி செய்கிறவர்களும் எப்படி மகாத்மா ஆகக்கூடும்? முதல் முதல் பாமர ஜனங்களுக்கு காந்தியென்று ஒருவர் இருக்கிறார் என்று அறியவே தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் சுயமரியாதைக்காக தானும் தன் குடும்பமும் கூட்டோடு சிறை சென்றதும் அங்கு நினைக்க வொண்ணாத கொடுமைகளையெல்லாம் அநுபவித்ததுந்தான் முக்கியக் காரணங்கள். அதற்குப் பிறகு இந்திய மக்களுக்கு இந்தியாவிலேயே சுயமரியாதை, சமத்துவம் வேண்டு மென்ற சேவையில் இறங்கியதே 2 - வது காரணம். அதற்குப் பிறகு ஏழை மக்களுக்கு வேண்டிய உண்மையான சுயராஜ்யத்தைக் கண்டு பிடித்து அதற்காக அஞ்சாது உண்மைபேசி பதினாயிரக்கணக்கான ஜனங்களைப் பின்பற்றும்படி செய்து தானும் அவர்களுமாய் சிறை சென்றதே மூன்றாவது காரணம். இன்னமும் அவருடைய கருத்தும் உழைப்பும் ஏழைகளையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், ஏழைகள் விடுதலை பெற்றால், தாழ்த்தப்பட்டவர்கள் சுயமரியாதை யடைந்தால், ஒதுக்கப்பட்டவர்கள் சமத்துவமடைந்தால் பிரபுக ளென்போருக்கும் படித்தவர்களென்போருக்கும் உயர்ந்த ஜாதியா ரென்போருக்கும் தனி யோக்கியதை இருக்காது என்கிற காரணத்தினால் இம்மூவர்களும் மகாத்மாவுக்கு எதிரிகளாயிருக்க வேண்டிய அவசிய மேற்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் மகாத்மாவின் கொள்கை கள் கொஞ்சங் கொஞ்சமாய் ஓய்வு பெற வேண்டியதாயிருக்கிறது. காந்தீயமென்னும் ஏழைகளை விடுதலை செய்ய ஏற்பட்ட இயக்கத்தை பரப்ப ஆயுதமாய்க் கொண்ட காங்கிரஸ் என்னும் சபையானது படித்தவர்கள் வசமும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லுகிறவர்கள் வசமும் செல்வவான்கள் வசமும் சிக்குண்டு போய்விட்டபடியால் படித்தவர்களுக்கு உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் மேல் ஜாதியா ரென்போருக்கு தங்களுடைய உயர்ந்த ஜாதித் தத்துவத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளத் தக்கதாய்ப் போய்விட்டதோடு ஏழைகளின் நிலைமை நாளுக்கு நாள் அதோ கதியாய் ஒரு வேளைக் கஞ்சிக்கு 2 - தரம் மூன்று தரம் தங்களுடைய கற்பை விற்க வேண்டிய ஸ்திரீகளையும் ஒரு வேளை சாப்பாட்டிற்காக ஏழை மக்களின் துரோகிகளின் பின்னால் திரிந்து கொண்டு அவர்களை இந்திரன் சந்திரன் என்று பாமர ஜனங்களிடம் புகழ்ந்து அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுக்க தங்கள் மனசாட்சியை விற்கத்தகுந்த ஆண்களையும் லட்சக்கணக்காய் பெருக்கி வருகிறது. இவ்வுண்மை யறிந்த மகாத்மா இவர்களோடிருக்க மனம் பொறாதவராகி தனியே பிரிந்து ஏழைகளுக்கு உழைப்பதற்கென்று ராட்டினமும் கையுமாய் உட்கார்ந்து கொண்டு இரவும் பகலும் ராட்டினத்தைச் சுற்றிக்கொண்டு ஏழைகளிடத்தில் அன்பிருக்கிறவர்களெல்லாம் ராட்டினத்தைச் சுற்றுங்கள், கதரை உடுத்துங்கள், ஏழைகளைக் காப்பாற்றுங்கள், சட்டசபையில் ஏழைகளுக்கான காரியம் ஒன்றுமில்லை; தேச விடுதலைக்கு சட்டசபையினால் ஒரு பலனும் உண்டாகாது; எனக்கு அதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை யென்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதுதான் காந்தீயம் என்பது. காந்தீயம் என்பதைச் சுருக்கமாய்ச் சொல்வதானால் ராட்டினம் சுற்றுவதும் கதர் உடுத்துவதும்தான் என்று சொல்லலாம். மகாத்மாவின் சுயராஜ்யம் என்பதையும் சுருங்கச் சொல்லுவதானால் தீண்டாமையை ஒழிப்பதும் கதர் உடுத்துவதும்தான் என்று சொல்லலாம்.

ஏறக்குறைய 30,40 வருஷங்களாக நமது ஜனங்கள் சட்டசபைக்கு போய்க்கொண்டும் வந்து கொண்டுந்தானிருக்கிறார்கள். சர்க்காரிடமிருந்தும் பல சீர்திருத்தங்களையும் பெற்று அதன் மூலமாய் அநேக பதவிகளையும் உத்தியோகங்களையும் அடைந்துமிருக்கிறார்கள். உதாரணமாய், ராஜப் பிரதிநிதி என்கிற ஒரு உத்தியோகம் தவிர மற்றபடி கவர்னர், நிர்வாகசபை அங்கத்தினர், மந்திரி, ரெவின்யூ போர்டு அங்கத்தினர் முதலிய பொறுப்பு வாய்ந்த உத்தியோகங்களும் கலெக்டர், ஜட்ஜூ, கமிஷனர் முதலிய அதிகாரம் வாய்ந்த உத்தியோகங்களும் இந்தியர்கள் வகித்து வருகிறார்கள். இதுகளினால் ஏழை மக்களுக்கு இதுவரையில் என்ன பலன் கிடைத்திருக்கிறது? சட்டசபை இல்லாத காலத்தில் இருந்ததைவிட சட்டசபை ஏற்பட்டபிறகு மக்களுக்கு நிர்ப்பந்தங்கள் அதிகமாகவும், சீர்திருத்தங்கள் இல்லாத காலத்திலிருந்ததைவிட ஏழைகளுக்கு வரி அதிகமாகவும், தரித்திரங்கள் அதிகமாகவும் ஏற்பட்டு இருக்கிறதே யல்லாமல் என்ன தேசத்துக்கு பலன் ஏற்பட்டிருக்கிறது. ஏழைகளின் பிரதிநிதிகள் என்று சொல்லி ஏழைகளை ஏமாற்றி சட்ட சபைக்குப் போனவர்கள் தங்களுக்கும், தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும், தங்கள் ஜாதியார்களுக்கும் பல உத்தியோகத்தையும் நிரந்தரமான பதவியையும் சம்பாதித்துக் கொண்டார்கள். இனியும் அதற்காகத்தான் படித்தவர் களும் உயர்ந்த ஜாதியாரென்பவர்களும் ஏழைகளை ஏமாற்றி வருகிறார் கள். ஆகையால் சட்டசபைப் பயித்தியத்தை மறந்து விடுங்கள்; ஏழைகளைக் கவனியுங்கள்; காந்தியை நினையுங்கள்; ஏழைகள் வாயில் மண்ணைப் போட்டுவிட்டு துணியின் மூலமாகவும் மற்றும் அந்நிய நாட்டு சாமான்கள் மூலமாகவும் அந்நிய நாட்டுக்கு அனுப்பும் பணத்தை நிறுத்துங்கள்; நீங்கள் கட்டியிருக்கும் அந்நிய நாட்டுத் துணியின் ஒவ்வொரு இழைநூலும் கிராம சிறீகளான உங்கள் சகோதரி களைக் கஞ்சிக்கு அலைய விட்டுவிட்டு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலியை அந்நிய நாட்டுக்குக் கொண்டு போய் விட்டது. நீங்கள் 15 ரூபாய் போட்டு வாங்கும் 1 பீஸ் மல் துணியில் ஒன்னரை ரூபாய் பொரும்படியான பஞ்சுதானிருக்கிறது. பாக்கி ஏழை மக்களுக் குக் கிடைக்க வேண்டிய கூலியாகிய 13-8-0 ரூபாய் அந்நிய நாட்டுக்குப் போய்விட்டது. இந்த 13-8-0 ரூபாயில்லாமல் நம் நாட்டில் எத்தனை குடும்பம் பட்டினி இருக்கிறதென்பதை நினைத்துப் பாருங்கள். இந்த மல் துணிக்குப் பதிலாய் கதர் துணியை வாங்கிக் கட்டியிருப்பீர்களானால் அவ்வளவு பணமும் ஏழைத் தொழிலாளர் களுக்கும் விவசாயிகளுக்குந்தானே போய்ச் சேர்ந்திருக்கும். உங்களுக்கு ஜீவகாருண்யம் இருக்குமேயானால் கதரை வாங்கிக் கட்டாமலிருந் திருப்பீர்களா? அன்னதான மென்றாலென்ன? பாயாசத்திற்கு பாதாமிப் பருப்பு போதவில்லை என்று சொல்லித் திரியும் சோம்பேறி களுக்கு சமையல் செய்து போடுவதில்தான் அன்னதானம் என்று நினைக்கிறீர்களே. தவிர பசியால் வாடி தங்களது கற்பையும் தர்மங் களையும் இழந்து திரியும் சகோதரி, சகோதரர்களுக்கு கஞ்சி கிடைக்கும் வழியை கொஞ்சமும் கவனிக்காமலிருக்கிறீர்கள். இனியாவது சட்டசபைப் பயித்தியத்தையும், படித்தவர்களும் உயர்ந்த ஜாதியாரென்பவர்களும் தங்கள் உத்தியோகத்திற்கும், உயர்ந்த தன்மையை நிலை நிறுத்திக் கொள்ளுவதற்கும் கூலி கொடுத்து ஆள் களைக் கூட்டிக்கொண்டு வந்து உங்களை ஏமாற்றுவதையும் மறந்து, மகாத்மா காந்தியையும் ஏழைகளையும் பார்த்து நீங்கள் எல்லோரும் கதர் உடுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். இதுதான் உண்மையான காந்தீயமாகும். காந்தி படத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்வதும் காந்தி பெயரைச் சொல்லிக்கொண்டு சட்ட சபைக்குப் போவதும் ஒருக்காலும் காந்தீயமாகாது என்று உங்களுக்கு நான் வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

(திருவாரூர் தேசாபிமானச் சங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா 24-3-26 லிருந்து 28-3-26 வரை தொடர்ந்து ஐந்து தினங்கள் நடைபெற்றது.இதில் 28-3-26 - ந் தேதி தலைமை வகித்து காந்தீயம் என்பது பற்றி தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

No comments: