Tuesday, March 11, 2008

பெரியாரின் தொலைநோக்கு

போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியான உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக்கூடிய உணவு ஏற்பட்டுவிடும்.

மனிதனுடைய ஆயுள் நூறு வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.

பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பது கூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப் பட்டுவிடும்.

அநுபோகப் பொருள்களும் வெகுதூரம் மாற்ற மடைந்துவிடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்றமடைந்துவிடும்.
ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஒரு அந்தர் வெயிட்டுக்கு வரலாம். பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.

மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக் கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும் - பெருகும், விஞ்ஞானம் வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன்படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவர்களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல் சகல மக்களும் சவுகரியம் தருகிற பொதுச் சாதனங்களாக அமையும்.
இவ்வளவு மாறுதல்களோடு இனி வருங்காலம் இருக்குமாகையால், இன்றைய உலக அமைப்பிலே உள்ள அரசு, உடைமை, நீதி, நிர்வாகம், கல்வி முதலிய பல துறைகளிலும் இப்போது எவையெவைப் பாதகாக்கப்பட என்னென்ன முறைகள் கையாளப்பட்டு வருகின்றனவோ, அம்முறைகளுக்கெல்லாம் அவசியமில்லாமல் போய்விடும் என்பதோடு அவை சம்பந்தமாக இன்று நிலவும் பல கருத்துக்கள் அர்த்தமற்றதாகவும் போய்விடும்.
மக்கள் பிறப்பு கட்டுப்பத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்.


- 'இனிவரும் உலகம்' நூலில் பெரியார்

No comments: