Friday, March 28, 2008

அதிகம் பேர் படிக்கவேண்டும்

இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது நல நோக்கத்தையே முக்கியமாகக் கருதி துவக்குவதாகவும் சொன்னார். இதைக் கேட்டு நான் மிகுதியும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் பணியாற்றுகிறவர்கள் நமது நாட்டில் இதுவரை எங்கும் துணிந்து இம்மாதிரி முன் வந்தததில்லை; முன் வந்தாலும் இலாபத்துக்காக அதாவது, ஏதாவது ஒரு இயக்கத்துக்காகவாவது ஏதாவது ஒரு கொம்கைக்காவது, ஏதாவது ஒரு மனிதனுக்காவது செல்வாக்கேற் பட்டால் அந்தப் பெயரைச் சொல்லிக் கொண்டு, அந்தக் கொம்கையைச் சொல்லிக் கொண்டு, அந்த மனிதனைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க முன் வருபவர்களும், தன் வாழ்வை அமைத்துக் கொம்பவர்களும் அந்த இயக்கத்தை, கொம்கையை, மனிதனை வைவதில் செல்வாக்கேற்ப்பட்டால் உடனே வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை நலத்துக்குமாக அவைகளை வைத்துக் கொண்டு வயிறு பிழைப்பவர்களும் அல்லது இந்தக் காரியங்களுக்குக் கூலி பெற்றுக் கொண்டு தொண்டர்களாக இருப்பவர்களும் எங்குமுண்டு என்றாலும் நம்நாட்டில் அதிகம். ஏனெனில், இங்கு மனிதத் தன்மையை உணர்ந்த மனிதத் தன்மையில் கவலைகொண்ட மக்கள் அரிது. அதாவது தங்களுடைய சுய இலா நஷ்டம், பெருமை, சிறுமையே இலட்சியமென்பதில்லாமல் பொதுநலக் கொம்கைகளுக்காக என்று வெளிவந்து தொண்டாற்றும் மக்கள் மிக மிக அருமையாகும்.


பெரிய ஜனக்கூட்டங்களில், அல்லது சந்தைகளில், நாடக இடங்களில் காப்பிக்கடை ஓட்டல்கள், சோடா, லெமன், லட்டுக்கடைகள் வைத்து விற்பனை செய்பவர்கள் பெரிய பொதுநலத் தொண்டர்கள், தியாகிகள் என்றால் முந்திய ஆட்களும், பெரிய பொதுநலத் தொண்டர்களும் தியாகிகளுமாவார்கள் என்கின்ற நிலையில் உள்ளவர்கள் அநேகர். சந்தை, நாடகம் கலைந்தவுடன் காப்பிக்கடை, ஓட்டலை மூடிவிட்டு வேறு வேலைக்குப் போவதுபோல் இந்தக் கூட்டங்களும் இயக்கத்துக்கோ, அதன் கொம்கைகளுக்கோ, தலைவனுக்கோ கொஞ்சம் செல்வாக்குக் குறைந்தவுடன் அவற்றின் மீது ஆளுக்கொரு கல்லை எறிந்துவிட்டு ஓடுபவர்களாவார்கள். அதுபோல் தான் சிலர் இன்று நம் கூட்டங்களிலும் வந்த பகுத்தறிவு நூல்கள் வெளியிடுவதும், சீர்திருத்த நூல்கள் வெளியிடுவதும் விற்பதுமாக இருக்கிறார்கள்.


இந்த நபர்கள் உற்சவம், வேறு பெருங்கூட்ட இடம் முதலியவைகளில் சென்று, அங்கு புராணங்கள், விபூதி, ருத்திராட்சம், துளசிமாலை, சாமி படம் விற்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றும் நாடகக்காரர்களும் இப்படித்தான்; ஒரு ஊரில் சீர்திருத்த நாடகம், புரட்சி நாடகம் என்று ஆடுவார்கள்; மற்றொரு ஊரில் பக்தி நாடகம், கடவும் திருவிளையாடல்கள் நாடகம் என்று ஆடுவார்கள்; சிலர் இரண்டிலும் கலந்துகொண்டு இருகூட்டத்தாரிடையும் செல்வாக்குப் பெற்று, இருகூட்டப்பிரச்சாரகர்களையும் விலைக்கு வாங்கிப் பொதுமக்கள் காசைக் கறந்து கொம்வார்கள். ஆகவே, இப்படி யாவும் வியாபார முறையில் இயக்கம், கொம்கை, நபர்கள் கொண்டாடப்படுவதும், வெறுக்கப்படுவதும், தொண்டாற்றப்படுவதும் அநேகம் காண்கிறோம்.


நூல் வியாபார நிலையங்கள் எந்த மாதிரி நூல் நிலையமானாலும் இனி நஷ்டப்பட வேண்டிய அவசியமேற்படாது. நாட்டில், படிக்கும் மக்கள் அதிகமாகி வருகிறார்கள். படித்த மக்கள் அதிகமாகப் பெருகிவிடவில்லையென்றாலும் படித்த மக்கள் கொஞ்சம் பேரும் எதையாவது படிக்கவேண்டும் என்கின்ற ஆர்வமுள்ளவர்களாக ஆகி வருகிறார்கள்; ஒன்றுமற்ற அத்தான், அம்மாஞ்சி, மன்னி, மதனி ஆரிய பழக்க வழக்க உரையாடல்களும், வெறும் காதல் கதைகளும்; நேரப்போக்கு, போதைக்கேற்ற பித்தலாட்டக் கட்டுரைகளும்; ரிஷிகள், மகான்கள், பாபாக்கள், விளம்பரங்கள் செய்து மக்களை வஞ்சிக்க ஏமாற்றுச் செய்திகளும் இவ்வளவு ஏராளமாய் விற்பனையாகுமா? இவைகளுக்காகவும், கொம்கை இல்லாமல் ஈசல்களைப் போல் பொல பொலவென்று தோன்றுமா? மக்களைப் படிக்கச் செய்யாமல் செய்து வைத்திருந்தார்கள் ஒரு கூட்டத்தார்; அதை மீறிக் கொண்டு எப்படியோ மக்களுக்கும், எதையாவது படிக்கவேண்டும் என்கின்ற ஆர்வம் வந்துவிட்டது. இது யாரால் ஏற்பட்டிருந்தாலும் இந்த ஆர்வத்தை முன் தடை செய்து வைத்திருந்த கூட்டத்தார் மூடநம்பிக்கைக்கும் மானமற்ற தன்மையை விரும்புவதற்கும் பித்தலாட்ட வஞ்சகர்களுக்கு மக்களை அடிமையாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். அதற்கு நாம் இடம் விடுவதென்றால் இது மகாமோசமான காரியமேயாகும். இந்த நாடு, இன்று சிறப்பாக நம் மக்கள் படியாமையைவிட படித்தாலேயே பெரிதும் மானமற்றவர்களாகவும் இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும், அனேகராகி விட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியாது என்பேன்.


படிப்பு எதற்கு? அறிவுக்கு அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காதவனாய் நாணயமாய் வாழ்வதற்கு என்பதல்லாமல் வேறு எதற்கு என்று சொல்லுவோம்? ஆனால், தோழர்களே! இன்று நீங்கள் படித்தவர்கள் என்பவர்களைப் பாருங்கள். 'படித்த கூட்டத்தில்' நான் மேலே சொல்லியபடி பயன்படுகிறது. ஒரு படித்தவனைக் காட்டுங்கள், பார்க்கலாம். இமயம் முதல் குமரி வரை உங்களுக்கு நன்றாய் அனுபவத்தில் தெரிந்த எவனாவது ஒரு படித்தவனை இந்தத் தன்மையில் அதாவது, 'படித்ததால் இந்த தன்மை ஏற்பட்டது' என்று காட்டுங்கள்; சொல்லுங்கள்! சாதாரண மனிதரில் கூட இல்லாவிட்டாலும் பெரிய மகான்கள், பேரறிவாளர்கள் பிரபுக்கள், இராசாக்கள், ஆச்சாரியார்கள், குருமார்கள், ரிஷிகள், மகாத்மாக்கள், தெய்வீக சக்தி பொருந்தியவர்கள், சாமியார்கள், அரும்வாக்காளர்கள், தியாகிகள், வீரர்கள் முதலிய எந்தக் கூட்டத்திலாவது ; ஜட்ஜுகள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், குமாஸ்தாக்கள், வாத்தியார்கள், வித்துவான்கள், வக்கீல்கள் முதலிய எந்தக் கூட்டத்திலாவது காட்டுங்கள் பார்க்கலாம்! ஆனால், இதன் காரணத்தாலேயே மக்களைப் பிறவி அயோக்கியர்கள் என்று யாராவது சொல்லக்கூடுமா? ஒரு நாளும் சொல்லமாட்டார்கள், அப்படியானால் படித்த மக்கள் என்பவர்கள் பெரிதும் 100க்கு 99பேர், ஏன் உபகாரிகளாக இல்லை என்றால் இதற்கு என்னுடைய பதில், 'அவர்கள் படிப்பு அப்படிப்பட்டதாகும்' என்பதைத் தவிர வேறொன்றும் என்னால் சொல்ல முடியவில்லை.


இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்களால் மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள், படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு, நரிக்குப் பயன்படுவதுபோல், படிக்காதவன் படித்தவர்கட்கு உணவாய்ப் பயன்படுகிறான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால், படித்தவன் படிக்காதவனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிர, படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது? அப்படியானால், படிப்பு கூடாது என்று நான் சொல்லுகிறேனா? அல்லது, நான் சொல்லுவதிலிருந்து படிப்பது தப்பு என்று அர்த்தமா? இரண்டும் அல்ல. மற்றென்னவென்றால், நம் நாட்டில் ஆரியர் ஆதிக்கம், வருணமுறை ஏற்பட்ட காலம் முதல் நமக்களிக்கப்படும் படிப்பு - நாம் படிக்க முடிகிற படிப்பு அப்படிப்பட்டது. எப்படிப்பட்டது என்றால், பெரிதும் அயோக்கியத்தனத்துக்கு பித்தலாட்டத்துக்கு, மற்றவனை ஏமாற்றிப் பிழைப்பதற்குத் தூண்டுவது, நடத்துவது தவிர வேறொன்றுக்கும் பயன்படாதது என்றுதான் பொரும் கொள்ள வேண்டும்.


அரசியலில் மூத்த அரசாங்க அதிகாரிகளைப் பாருங்கள். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், அயோக்கியத்தனமாய், ஆணவமாய் நடக்காத ஒரு அதிகாரியைக் காட்டுங்கள். அதிகாரி என்றால் அவர்கள் இலஞ்சம் வாங்கினாலும் மக்களுக்கு எஜமானத்தனம் செய்வதையே பிழைப்பாய்க் கொண்டவர்கள் என்பதல்லாமல் மக்களுக்கு நாணயமாக ஒரு நிலையாகத் தொண்டாற்றுவது, தயவு தாட்சண்யம், அனுதாபம் ஆகியவைகளுடன் மக்களுடன் நடந்து கொள்ளுவது என்கின்ற தத்துவத்தில் நடப்பவர் யார்? அடுத்து படித்தவர் என்பவர்கள், அரசியலில் தலைமை வகிக்கும் வக்கீல்கள் என்பவர்கள். இந்தக் கூட்டத்தார்தான் இப்போது மகாத்மா முதல், அரசியல், தலைமை மந்திரி, அய்கோர்ட் ஜட்ஜ் முதலிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டவர்கள், இவர்களால் மனித சமுதாயத்திற்கு தாசி, வேசி, சூது, கள், சாராயக்கடை, வழிப்பறி, தீவட்டிக் கொள்ளை, பிக்பாக்கெட் முதலியவைகளால் மக்களுக்கேற்படும் கேடுகள், மோசங்கள் ஆகியவைகளைவிட அதிகமாக ஏற்படுகின்றன என்பதல்லாமல் அதில் அவர்கள் பணிகளில் உள்ள பொதுநலம் என்னவென்று சொல்லுங்கள். பார்க்கலாம் வக்கீல்களும், ஜட்ஜுகளும் இல்லாமலிருந்தால் மக்களுக்கும் இவ்வளவு சாந்தியற்ற தன்மை, நாயணக் குறைவாய் நடப்பதால் இன்பம் (என்பவை) ஏற்பட்டிருக்குமா? அடுத்தபடியாகப் படித்தவர்கள், கல்வித்துறையில் வாத்தியார்கள். இவர்கள் வாழ்க்கை எதற்குப் பயன்படுகிறது என்று பார்த்தால், இவர்களிடம் படித்தவர்கள் தாம் அல்லது, இதற்குத் தகுந்த படிப்பை மக்களுக்கும் புகுத்தச் சாதனமாய், ஆயுதமாய் இருந்தவர்கள் தாம் வாத்தியார்கள் என்றால் யார் மறுக்க முடியும்? படித்தவர்களில் பெரும்பாலோர் யோக்கியர்களாய் இல்லையென்றால், வாத்தியார்கள் வாழ்வு, வாத்தியார்கள் தொண்டு எப்படி யோக்கியமானதென்று கூறமுடியும்? இனி, பொதுஜன ஊழிய குமாஸ்தாக்கள் நிலையைச் சொல்லவே வேண்டாம். அவர்கள் கழுகுகள் அல்லது கத்தரிக்கோலால் வாழ்கின்றவர்கள் என்பதல்லாமல் அதில் பொதுநலம் பொதுநல உணர்ச்சி என்பது என்ன இருக்கிறது!


இனி, பண்டிதர்கள். இவர்கள் ஒழுக்க இயலைச் சேர்ந்தவர்கள். இவர்களை எதற்குச் சமமாய்ச் சொல்லலாம்? மலக்குழியைக் கலக்கிவிடுகிறவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மக்களுக்குத் தெரியாத அயோக்கியத்தனத்தை-சுலபத்தில் தெரிந்துகொள்ள முடியாத அயோக்கியத்தனத்தை மூடத்தனத்தை ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்குக் காட்டிக் கொடுப்பவர்கள் என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? பத்திரிகைக்காரர்கள், புத்தகம் எழுதுகிற எழுத்தாளர்கள், மகான்கள், புராணப் பிரசங்கிகள், மதவாத அறிஞர்கள் முதலிய இவர்கள் தொண்டில் இருக்கும் பொது நலம், நாணயம், முன்னேற்றத்தன்மை, அறிவு விரியும்நிலை, நல்ல சங்கதிகள் தெரியும் நன்மை என்ன இருக்கின்றன?


பத்திரிகைக்காரர்கள் - மக்களை முட்டாம்களாக்கவும்; அவர்கள் மானம் பெறாமல் இருக்கவும்; முன்னைய கூட்டத்தாருக்கு அடிமையாக இருக்கவும்; தாங்கள் கொள்ளை கொள்ளவும்; மனிதனின் மான உணர்ச்சியை, முற்போக்கு உணர்ச்சியை மழுங்க வைத்துப் பொய்யையும், ஏமாற்றத்தையும் அறிவிக்க அறிவுக் களஞ்சியமாக மக்களுக்கும் நிரப்பவுமல்லாமல் - அவர்களது தொண்டால் மக்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன? சயன்ஸ் விஞ்ஞானம் படித்த தனி நிபுணர்கள் என்பவர்களும் மக்களை ஏமாற்றித் தன்னைப் பெரிய மேதாவி என்று கருதிக் கொண்டு, அகம்பாவமாய் மற்றவர்களை முட்டாம்கள் என்று அவமதிப்பதல்லாமல் அவர்களால் ஏற்பட்ட விஞ்ஞான நலம் என்ன? உதாரணமாக, இந்த மேசை மேலிருக்கும் ரேடியோ என்பது 4,5 வருடங்களுக்கு முன்பே 250 ரூபாய்க்கு வாங்கி இருப்பார்கள். இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் கேட்டிருப்பார்கள். கண்டிருப்பார்கள். நமது நாட்டில் இலட்சக்கணக்கான ரேடியோ இருக்கின்றது. அப்படியிருந்தும் இது எப்படி ஒலிகளைக் கொண்டு வந்து எப்படிப் பரப்புகிறது என்பது இதுவரை எத்தனைப் பேருக்குத் தெரியும்? கம்பியில்லாத் தந்தி எப்படிச் சேதி சொல்லுகிறது? கிராம போன் எப்படிப் பாடுகிறது. பேசுகிறது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?


புராணம் எழுதி அச்சுப்போட்டு விற்றது எத்தனையோ லட்சப் பதிப்புகளும், கோடி, கோடி ரூபாய்களுமிருக்கும். அதில் ஏற்பட்ட நல்லறிவை நல்ல படிப்பை (அதில் இல்லை; இருந்தால்) தெரிந்து கொண்டவர்கள் எத்தனைப்பேர் இருக்கிறார்கள்? தோழர் திரு.வி.கல்யாணசுந்தர (முதலியார்) டி.கே.சிதம்பரநாத (முதலியார்), நாமக்கல் இராமலிங்கம் (பிள்ளை), மகா மகோபாத்தியாய கதிரேசன் (செட்டியார்) மீனாட்சி சுந்தரம் ( பிள்ளை) போன்ற திராவிடர்கள் பலர் - பார்ப்பனர்களால் புலவர்கள் என்று மாபெரும் விளம்பரம் பெற்றவர்களாவர். இவர்களால் இதுவரை ஏற்பட்ட மூட நம்பிக்கையில்லாத மானமற்ற தன்மை அல்லாத அறிவு நூல் ஒன்றைக் காட்டுங்கள். உயர்ந்த கலைகள் என்பவை மக்களை எச்சில் கலையாக ஆக்குகின்றன. மற்ற எழுத்தாளர்கள் பகுத்தறிவை மனித முன்னேற் றத்தை மானத்தைக் குறியாகக் கொண்ட வீரத்தைக் கிளப்பும் புத்தகம் ஒன்றைக் காட்டுங்கள்! படித்தவர்கள் கூட்டத்திலுள்ள திராவிடன் கதியே இப்படியிருந்தால், இனி ஆரியன் எழுதும் பத்திரிகை, பிரசுரிக்கும் புத்தகம், பாடும் பாட்டு, ஆடும் நாடகம், எழுதும் நாவல், கதை எப்படியிருக்கும்? கடவுளையும், காதலையும் இன்னது என்று புரிந்து கொள்ளாதவர்களே கலை உலகில் புகுந்து கொலை செய்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் காரணம், 'இவர்கள் படித்த படிப்பு அப்படிப்பட்டது' என்று தான் நான் சொல்லுவேனேயொழிய, இவர்கள் மேல் குற்றம் சொல்லவில்லை.


இன்றைய படிப்பின் தொல்லைகளின் மாபெரும் தொல்லை 'சம்பளம் போதாது' என்பது. இது மகா அக்கிரமம். ஏனெனில், உழைப்புக் கணக்குப் பார்த்துச் சம்பளம் கேட்பதில்லை. படித்தால், படிப்பைப் பார்த்து சம்பளம் கேட்கப்படுகிறது; மாதம் 15 ரூபாய்காரரும் சம்பளம் பற்றாது என்கிறார்; 30 ரூபாய்க்காரரும் பற்றாது என்கிறார். 100 ரூபாய்க்காரரும் அதற்கு மேற்பட்டவரும் பற்றாது என்கிறார். இதற்கு அர்த்தம் என்ன? படித்தால் மேல் வாழ்வு வாழவேண்டும்; படித்திருக்கும் குடும்பத்துக்கு அதிகச் செலவு செய்யவேண்டும். ஆதலால் அதிகச் சம்பளம் வேண்டும் என்பதல்லாமல் வேறு என்ன? மற்றவன் படிக்காதவன் - அவனுக்கு மேல் வாழ்வு தேவையில்லை; அவன் குடும்பத்துக்கு அதிகச் செலவு தேவையில்லை - 20 அல்லது 30 ரூபாய் போதும்; அதுவே கொடுக்கக்கூடாது என்பது போலத்தானே - குறைந்த சம்பளத்துக்குக் காரணம் சொல்லப்படுகிறது. சம்பளப் போராட்டம், படித்தவர்களிடையே இப்படியிருக்க லஞ்சம், கொள்ளை, லாப வியாபாரம், புரட்டு இத்தனையும் படித்தவர்கள் என்பவர்களிடையில்தான் இருக்கின்றன.


சம்பளம் உயர வேண்டுமானால், சர்க்கார் பொக்கிஷத்துக்கு வரியின் மூலம்தான் பணம் வரவேண்டும்; வரியென்றால் அது பெரிதும் படிக்காத உழைப்பாளி மக்களின் உழைப்பில் இருந்துதான் கசக்கிப் பிழியப்பட வேண்டும். அந்த உழைப்பாளியின் வாழ்க்கைத்தரம், துணிமணி செலவு, பிள்ளைகுட்டி படிப்பு, சினிமா, டிராமா, பெண்டு பிள்ளை அலங்காரம், காபி, உப்புமா, சீர் ஆகிய ஒன்றைப் பற்றியும் கவலைப்பட்டு சம்பளத் திட்டம் போடுவதில்லை. ஏன்? உழைப்பாளி படியாதவன். உழைக்காமல் பேனாவில், பாட்டில், கூத்தில், பிரசங்கத்தில், கவியில் வாழ்வு நடத்துகிறவன் படித்தவன். இது தவிர, இரு கூட்டத்துக்கும் வேறு வித்தியாசம் என்ன சொல்லமுடியும்?


எனவே, இன்றையப் படிப்பு வர்ணாசிரம தர்மத்தை அனுசரித்து ஏற்பட்டது என்பதோடு, ஒருவன் உழைக்க வேண்டும்; ஒருவன் உழைக்காமல் ஏமாற்றி வாழ வேண்டும்; இதற்காக ஒரு கூட்டம் இதற்கேற்ற படிப்பு படித்திருக்க வேண்டும்; ஒரு கூட்டம் படியாமல் முட்டாம்களாக- அப்பாவிகளாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவும் படிப்படியாய் வருணாசிரம தர்மம்போல் இருக்க வேண்டும் என்பதையே அடிப்படையாய்க் கொண்டு இருக்கிறது.


ஆகையால், இப்போது உண்மையாகப் பொது நலத்துக்கு ஏதாவது உழைக்க வேண்டும் என்பவர்கள் - இந்தப் படிப்பு மாறும்படியான காரியத்துக்கு - இந்தப் படிப்பால் ஏற்பட்ட கேடுகள் மாறும்படியான காரியத்துக்கு ஏற்ற படிப்பினை உண்டாக்க வேண்டும். அதற்கேற்ற பிரசுரங்கம் ஏற்பட வேண்டும்; அவை எப்படியாவது மக்களுக்கும் பரப்பப்பட வேண்டும். இவையெல்லாம் பிரசங்கத்தாலேயே முடிந்துவிடாது. இவற்றிற்கு உதவும் படியான பிரசுரம் தெளிவாகக் குறைந்த விலையில் சவுகரியமாக யாருக்கும் கிடைக்கும்படிச் செய்யப்பட வேண்டும். இப்போதுள்ள பிரசுரம் / 100க்கு 99பேர் மோசடிக்கும் கொள்ளையடிப்பதற்குமே பயன்படுகிறது.


இது சமயத்தில் பொதுமக்களுக்கு ஒரு வார்த்தை அறிவியக்க நூல்கள் - சீர்சிருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ளவேண்டுமென்பது அர்த்தமல்ல. வாங்கிப் படித்துவிட்டு, படித்து முடிந்தவுடன் முக்கால் விலைக்கு அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க வேண்டும். புத்தக வியாபாரியும் தான் விற்ற புத்தகத்தை அரை விலைக்குக் கொண்டு வந்து கொடுத்தால், நலுங்காமலிருந்தால் வாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான், மேலைநாடுகளில் புத்தகம், பிரசுரம் முதலியவை விஷயங்களில் இருந்துவரும் பழக்கம். வாங்கினால் படிக்க வேண்டும்; படித்தவுடன் விற்றுவிட வேண்டும்; 'முக்கிய புத்தகம்' 'கிடைக்காது' என்றிருந்தால் வைத்துக் கொள்ளலாம். அதிகம் பேர் படிக்கவேண்டும் என்பது தான் யோக்கியமான பொதுநல ஆசிரியர்களின், பொதுநல வியாபாரிகளின் இலட்சியமாய் இருக்கும்.


------ ஈரோட்டில் 22.1.1947 ல் நடந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்க விழாவில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு

No comments: