Wednesday, February 20, 2008

கிராமங்களில் சாதி ஒழிய

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதிரி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.


------------ வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964 அன்று தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை

No comments: