Tuesday, February 26, 2008

தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

கேள்வி:
அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்திவிட முடியுமா?

பதில்:
நான் ராஜீவ் கொலையை ரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்சே, அவனது கையில், ‘இஸ்மாயில்’ என்று பச்சைக் குத்திக் கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்சேவின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்ததே. அதை காங்கிரசால் என் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்படவில்லை?

இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரசாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.

அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்தபோது, இந்திராகாந்தி படுகொலையின் போது பறிக்கப்பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச் சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா?
மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, ‘உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?’ என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. ‘ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய்விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு’ என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீகாந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை. உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?

-------14-2-2008 "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் அ.தி.மு.க.முன்னாள் அவைத்தலைவர் திரு."புலமைப்பித்தன்" அவர்கள் அளித்த நேர்காணலில் ஒரு பகுதி

No comments: