ஆதிதிராவிடர்கள் என்கிற பெயரால் எனக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் அளித்துக் கொடுத்திருப்பதற்கு, இரண்டொரு வார்த்தை சொல்லுகிறேன். நீங்கள் ஆதிதிராவிடர்கள் என்ற ஒரு பெயர் பெற்று இருப்பது, உங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட இழிவை மாற்றிக் கொள்வதற்கு அனுகூலமானதென்று நினைத்திருக்கிறீர்கள். உங்களைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு பறையர்கள், சக்கிலியர்கள், பள்ளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், அவ்வார்த்தைகளுக்கு என்ன பொருளும், தத்துவமும் இருந்தனவோ, அதே பொருள்தான் ‘ஆதிதிராவிடர்' என்ற வார்த்தையிலும் இருக்கிறதேயல்லாமல், எந்த விதத்திலாவது அது மறைவு பட்டதாகக் காணவில்லை.
அதுபோலவே, பறையர் என்கிற பெயர் மாறி, ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததனால், ‘பறையருக்குண்டான' இழிவுத் தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல், ஆதிதிராவிடர் என்றால், பறையன் - இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதையையும் இழிவு படுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதைவிடப் பழைய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம். சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால், எந்தக் குற்றத்தை நீக்குவதற்காகவோ அல்லது எவ்வித இழிவை விலக்குவதற்காகவோ, எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காக நாம் கருதி இருக்கிறோமோ, அந்தக் கருத்தைக் கொண்டதான பெயரை ஒரு பிரச்சாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும்.
எத்தனையோ சமூகத்தார், தங்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென்று கருதி, எவ்வளவோ பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ, அது ஒரு சிறிதும் மறைக்கப்படாமலும், அந்தப் பெயர் ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ - அது போலவேதான் இருந்து வருகின்றார்களே தவிர, புது மாதிரியான மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.
உதாரணமாக, ஆசாரிமார்கள், தேவாங்க சமூகத்தார்கள் முதலியவர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டதாலும், நாயக்கர்மார்கள், படையாச்சிமார்கள், நாடார்மார்கள் தங்களுக்குப் பல்ஜிய சத்திரியர்கள், வன்னிய சத்திரியர்கள், அக்னி குலச் சத்திரியர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார், நகரத்துச் செட்டியார், கோமுட்டிச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தன வைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிய வைசியர், பூவைசியர் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், புராணங்கள் மூலமாக இதற்கு ஆதாரம் கண்டுபிடித்தாலும் மற்றும் எத்தனையோ வகுப்பார் எத்தனையோ மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும், இந்தப் பெயர்களல்லாத ‘சூத்திரர்கள்' என்கிற பெயருக்குண்டான பொருளும், தத்துவமும், உண்மையும் கிரகிக்கப்படுகின்றனவே அல்லாமல், சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு - எந்தக் கொள்கையை உத்தேசித்து இந்தப் பெயரை வைத்துக் கொள்கிறோமோ, அந்தக் கொள்கைகளின் மூலமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும், மற்றொரு கூட்டத்தாரைவிட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டதோடு, அதை நிலைநிறுத்தவும் பாடுபட்டவர்கள் ஆகிறோம்.
ஆகவே, இம்மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வது ‘சப்தம்' மாத்திரத்தில் உயர்வாகத் தோன்றினாலும், தத்துவத்தின் மூலமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக் கொள்பவர்களாகிய நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ ‘அவர்கள்' பெயரை வைத்து ‘அவர்கள் அல்லாதார்' என்பதாக வைத்துக் கொண்டால் - அந்தப் பெயரும், கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு, அதிலிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும், சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்தக் கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை ‘ஒடுக்கப்பட்÷டார்' என்றழைக்கலாம் என்பதாகச் சொல்கிறார். எனக்கு அதுகூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை.
வேண்டுமானால், ‘ஒடுக்கினவர்கள் அல்லாதார்', ‘கொடுமைக்காரர்கள் அல்லாதார்', ‘அயோக்கியர்கள் அல்லாதார்' என்று பெயர் வைத்துக் கொண்டால், அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன், இந்தப் பெயர் மறைந்து விடுவதற்கும் அனுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் சத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று, இம்மாதிரிப் பெயர் வைத்துக் கொள்வதால் - நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, கற்ப கோடிக்காலம் இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய, நாம் கோரும் பலன் ஒரு சிறிதும் அதனால் உண்டாகாது.
-----தந்தைபெரியார் அவர்கள்
20.7.1927 அன்று சிறுவயலில் ஆதிதிராவிட வணிகர் சங்கத்தில் ஆற்றிய உரை
Monday, February 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment