Sunday, February 24, 2008

அவர் பெரிய ரிஷி….ஈசுவரன் மாதிரி!

தந்தை பெரியாரும் தலைவர் கலைஞரும் நீண்ட தூரம் கார்ப்பயணம் செய்தவர்கள். நிறைய மைல்கள் பயணம் செய்த இந்தியத் தலைவர்கள் வரிசையில் முதல் மூவர் என்ற இடத்தில் இருப்பார்கள்.

காந்தியாரைத் தவிர்த்து வேறெந்த இந்தியத் தலைவரும் இவ்வளவு நீண்ட தூர சாலைப் பயணத்தை மேற்கொண்டிருப்பார்களா என்பது அய்யமே!

பெரியார் இந்தியாவிற்குள் தில்லி வரையிலும் கூடச் சீருந்தில்தான் பயணம் செய்தார்.

தந்தை பெரியார் இப்படி எழுபது ஆண்டுகளும், கலைஞர் அறுபது ஆண்டுகளும் பயணம் செய்துள்ளனர்.

இருவருடனும் பயணம் செய்வது இனிய பெருமைக்குரிய அனுபவம் மட்டுமன்று, அஃது ஒருவகைப் பாடசாலை -பயிற்சி வகுப்பு, இதுவரை இருவரும் மேடையில் சொல்லாத - எழுதாத பல செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் இடம்.

இருவருமே இரவுப் பயணங்களில் அனேகமாய்த் தூங்க மாட்டார்கள். காரோட்டியை விட வழிதடத்தில் கவனமாய் இருப்பார்கள். இருவருக்கும் தமிழ் நாட்டின் முக்கிய வழித்தடங்கள் அத்துபடி. வண்டியின் வேகம் சற்று அதிகமாய் கூடினாலும் குறைந்தாலும் ஓட்டுநரை முறைப்படுத்திக் கொண்டே வருவார்கள்.

நீண்ட பயணங்களில் கையில் கொண்டு வரும் நொறுக்குத் தீனியை வண்டியில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொண்டு தாமும் சாப்பிடுவார்கள்.

சாப்பிடும் முன்னும் பின்னும் கை கழுவுவது - பரிமாறுகிறவர்கள், பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதிலெல்லாம் கலைஞர் ரொம்பவும் கவனமாய் இருப்பார். பெரியாருக்குத் தூய்மையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். வண்டியை வழியில் நிறுத்தி யார் எதைக் கொடுத்தாலும், பெரியார் - தூய்மையாய் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யமாட்டார். பெரியார் அடிக்கடி சொல்வார் “என் நாக்கும், மூக்கும், ஏற்றுக் கொள்ளும் எதையும் -எங்கேயும் சாப்பிடுவேன்.” என்பார்.

கலைஞரின் மகிழுந்து புறப்பட்டால் அனாவசிமாய் எங்கும் நிற்காது. பெரியார் அப்படியல்ல; வழியிலுள்ள நெருக்கமான நண்பர்களின கடைகள்-வீடுகள் இருந்தால் நின்று பேசிவிட்டுத்தான் போவார். வ்ண்டியில் மணியம்மை இருந்தால் நிற்குமிடங்களின் எண்ணிக்கை சற்றுக் கூடும். வண்டியில் பாரமும் சற்று அதிகமாகும்! (ஆங்காங்கே தோழர்களின் கடைகளில் பொருள்களை ஆர்வத்துடன் விலை விசாரிப்பார், பொருள்கள் வண்டிக்கு வந்துவிடும். பெரியார் விரும்பாமல், என்னதான் தடுத்தாலும் அது நடக்கும்!)

பெரியாருக்குக் கண் மிகவும் கூர்மை; மூக்கு அதைவிடக் கூர்மை?

தென் மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது வண்டி ஒரு சிற்றூரைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. பெரியார் திடீரென “வண்டியை நிறுத்து…. வண்டியை நிறுத்து இங்கே வடை சுடுகிறான்… நல்ல வாசனை வருது.. ” என்றார்.

இமயவரம்பன் பெரியாரின் காதுக்கு கேட்காமல் ஓட்டுநரிடம் “பேசாம ஓட்டய்யா.. கண்ட எடத்திலே எதையாவது தின்று ஏதாவது கோளாறாயிடும்” என்றார். பெரியார் ஒரு சின்னக் குச்சியால் வண்டி ஓட்டுநரின் தலையில் தட்டினார்.

“நிறுத்து..நிறுத்து” என்றார்.

வடை வாங்கி வரும்படி விரட்டினார். இது போன்ற நேரங்களில் வண்டி சில நிமிடங்கள் நிற்கும். வழியில் வரும் புகை பிடிக்கின்ற தோழர்களுக்கு இஃது ஒரு வாய்ப்பு.

ஒரு புளிய மரத்தினடியில் ஒரு வயதான பெண்மணி வடை சுட்டுக்கொண்டிருந்தார். வடை பெரியாருக்குதான் என்று தெரிந்தவுடன் தானே அப்பெண்மனி வடைகளை எடுத்துக்கொண்டு அருகில் வந்து பெரியாரிடம் தந்தார். பெரியார் ஒரு வடையைச் சுடச்சுடச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டினார்.

“ரொம்ப நல்லா இருக்கு.. ரொம்ப…ரொம்ப… ” என்றார். வடைக்காரப் பெண்மணி “அய்யா வெல்ல ஆப்பம் சாப்பிடுறீயளா… காலையிலே சுட்டது..கொஞ்சம் ஆறி இருக்கும்” என்றார்.

“பரவாயில்லை… கொண்டாங்க..கொண்டாங்க….”என்றார்.

கொண்டு வந்தார். நல்ல, தண்ணீர் கலக்காத தேங்காய்ப்பால் ஆப்பத்தைத் தொட்டுச் சாப்பிட பெரியார் ருசித்து இரண்டு மூன்று ஆப்பங்களைச் சாப்பிட்டார். அதையும் பாராட்டினார். அந்தப் பெண்மணியிடமே, “இவங்க எந்தக் கலப்படமும் செய்ய மாட்டாங்க.. பாவம் இவங்களுக்கு அந்த நுட்பமெல்லாம் தெரியாது” என்று சிரித்துக்கொண்டார்.

இமய வரம்பன் முனகிக்கொண்டே இருந்தார். பெரியார் இமயவரம்பனின் முனகலுக்குப் பொதுப்படையாய்ப் பதில் சொன்னார்.

“இவுங்க செய்யுறது ‘ஹோம்லி’ யா இருக்கும் ஆறிப்போனாலும் ரொம்ப சுவையா இருக்கு” என்றார்.

பணத்தை கொடுக்கப் போனோம். அவர் வாங்க மறுத்துவிட்டார். உடன் வந்த நண்பர் சற்று அதட்டலாகச் சத்தம் போட்டார். “இந்தா கிழவி… சும்மா பந்தா பண்ணாம வாங்கிக்க..” என்றார்

ஆப்பக்காரப் பெண்மணி தீர்க்கமாயப் பதில் சொன்னார் “தம்பி…. பேசாமப் போங்க… அவருகிட்டேயெல்லாம் பணம் வாங்கப்படாது…அவரு பெரிய ரிஷி மாதிரி… ஈஷ்வரன் மாதிரி.. உனக்கெல்லாம் அவரப் பத்தி ஒண்ணும் தெரியாது” என்றார்.

நாங்கள் விக்கித்துப்போய்விட்டோம். பெரியாரோடு ‘அணுக்கமாய் ஆண்டுக்கணக்கில் இருக்கும் அன்பர்கள்’ என்ற எங்கள் ‘ஆணவம்?’ அடிப்பட்டு போய்விட்டது.

தோல்வியோடு அய்யாவிடம் போனோம். வாங்க மறுத்ததை மட்டும் சொன்னோம். அய்யா ‘வற்புறுத்திக் கொடுத்துவிட்டு வர வேண்டியது தானே ‘ என்று கடிந்து கொண்டார்.

நடந்ததை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே சொன்னோம்.’ரிஷி..ஈஸ்வரன் .. என்கிறாரா’ பெரியார் சில நிமிடங்கள் வெட்ட வெளியையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘உம்..இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ..’ என்றவர் சரி..சரி…புறப்படு’ என்றார்.

----------- நன்றி: www.thanthaiperiyar.org

No comments: