மைசூர் இராஜ்யத்தை அரசாண்ட திப்பு சுல்தானுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் 1799 ஆம் வருடம் மே திங்கள் 4 ஆம் தேதி சண்டை நடந்தது. அந்தச் சண்டையில், அன்று சாயங்காலம் திப்பு சுல்தான் குண்டினால் கொல்லப்பட்டு இறந்தார்.
அவர் சண்டைக்குப் புறப்படுமுன் அன்று காலையில் சோதிடர்களை வரவழைத்து சகுனம் கேட்டார். இந்தச் சோதிடர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். அவர்கள், அன்றைய தினம் கெட்ட நாள் ஆகையால் திப்பு சண்டை செய்யக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால், ‘தோஷ நிவர்த்தி’ செய்தால் அந்தக் குற்றம் நீங்கிப் போய்விடும் என்றும், பிறகு சண்டை செய்யலாம் என்றும் சொன்னார்கள். திப்பு சுல்தான் ‘தோஷத்தை’ எப்படி நிவர்த்தி செய்வது என்று கேட்டபோது சுபகாரியப் புலிகளாகிய அந்தப் பார்ப்பன சோதிடர்கள் கறுப்பு நிறமுள்ள எருமை, கறுப்பு எருது, கறுப்பு ஆடு, கறுப்புத் துணி, கறுப்புத் தலைப்பாகை, 90 ரூபாய் (இது மாத்திரம் வெள்ளை நிறம்), எண்ணெய் நிறைந்த இரும்புக் குடம் இவைகளைத் தானம் செய்தால், அந்தக் கெட்டநாள் நல்ல நாளாய் மாறிவிடும் என்று சொன்னார்கள்.
திப்பு சுல்தான் அவர்கள் சொல்லியபடியே மாடு, எருமை, துணி, ரூபாய் முதலியவைகளை அந்தப் பார்ப்பனருக்குத் தானம் செய்தார். எண்ணெய்க் குடத்தை தானம் செய்வதற்கு முன், எண்ணெய் குடத்தில் திப்பு தன் முகச் சாயலைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். அவரும் எண்ணெய்க் குடத்தில் தன் முகச் சாயலைப் பார்த்து தோஷத்தை நீக்கிக்கொண்டதாக நினைத்துக் கொண்டார். பிறகு, பார்ப்பனர்கள் தங்கள் புரட்டு வார்த்தையினால் கிடைத்த வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.
இவ்வளவு சோதிடம் பார்த்தும், தோஷத்தை நீக்கியும் பார்ப்பனருக்கு தானம் செய்தும் அந்தக் கெட்ட நாள் நல்ல நாளாக மாறவே இல்லை. கெட்ட நாள் கெட்ட நாளாகவே இருந்து விட்டது. எப்படி என்றால் சோதிடம் பார்த்து தோஷத்தை நீக்கிக் கொண்ட அன்றைய தினம் சாயங்காலமே திப்பு குண்டுபட்டு இறந்து போனார். இங்கிலீஷ்காரர்கள் அன்றைய தினமே திப்பு ராஜ்யத்தையும், சொத்துக்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ஜோதிடப் புரட்டர்களின் வார்த்தை பொய்யாகிவிட்டது. சோதிடப் புரட்டர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகக் கெட்ட நாள், நல்ல நாள், தோஷம், பரிகாரம் என்று ஜனங்களை மயக்கி தங்களுக்குப் பெரும் பழியைத் தேடிக் கொள்கிறார்கள். இவைகைள எல்லாம் பாமர ஜனங்கள் நம்பி கைப்பொருளை இழந்து நஷ்டமடைகிறார்கள்.
திப்பு சுல்தான் மகமதியராய் இருந்தும் இந்தச் சோதிடப் புரட்டர் வார்த்தைக்கு ஏமாந்தார் என்றால், மூட நம்பிக்கை நிறைந்த இந்துக்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்த ஜோதிட நம்பிக்கை, ஜனங்களிடமிருந்து என்றுதான் ஒழியுமோ?
------------- “குடிஅரசு” 8-5- 1932 இதழில் திரு.மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதியது
Thursday, February 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment