Sunday, February 03, 2008

கும்பாபிசேகத்தின் ரகசியம்

நடேசக் குருக்கள்: ஏண்டா சுப்பா, இந்த 4, 5 மாதமாய் நம்ம கோயிலுக்கு அபிஷேகம் வர்றதில்லை; பிரார்த்தனை வர்றதில்லை; முன்னைப் போல அதிக ஜனங்கள் அர்ச்சனை செய்ய வர்றதில்லையே, என்ன சங்கதி?சுப்புக் குருக்கள்: சங்கதியா! ஈரோட்டிலே ராமசாமி நாயக்கன் இருக்கான் அல்ல, அவன் குடிஅரசு எண்ணு ஒரு பேப்பர் போட்றான்; அதில் சும்மா இதையே எழுதுறான். பாப்பானுக்கு பணம் கொடுக்காதே; பாப்பான் காலில் விழாதே; பாப்பானைக் கொண்டு சடங்கு செய்யாதே; கோயிலுக்குப் போனால் நீயாகவே சாமி கும்பிட்டு விட்டு வந்துடு; அவன் தீபார்த்தனை காட்ட நீ கும்பிடாதே; அவன்கிட்ட பிரசாதம் வாங்காதே என்று இப்படியெல்லாம் எழுதியும், போற பக்கம் எல்லாம் பேசியும் நம்ம தலையில் கை வெச்சுகிட்டு வர்றான். அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த சூத்திரன்கள், தானே வர்றது; தானே கும்பிடறது; பேசாமல் போயிடறது, இப்படி பண்ணுராங்கடான்னா.நடேசக் குருக்கள்: அப்படியா! அடடா! அவனுக்கு என்ன கேடு வந்தது? அவப்பா ரொம்ப பிராமண விசுவாசியாச்சுதே! எத்தனை சமாராதனை, எத்தனை கோயில் எத்தனை சத்திரம், சாவிடி, தண்ணிப் பந்தல், உச்சவம், உபநயனம், கல்யாணம் இதெல்லாம் செய்திருக்க, அப்படிப்பட்ட வயிற்றில் இப்படி பிள்ளையா பிறக்கனும்? அய்யய்யோ! கர்மம் உடுமா? அவன் இன்னம் கொஞ்சநாளில் என்ன கெதி ஆகப் போறான் எண்ணு பாரு. முன்னே மூணு நாலு தரம் ஜெயிலுக்குப் போயிம் அவனுக்குப் புத்தி வல்ல; இப்ப சீக்கிரத்தில் ஜெயிலுக்குப் போகப் போறானா இல்லையா எண்ணு பார்த்துகிட்டு இரு. ராஜத்து வேஷம், பிராமண துவேஷம் யாரை சும்மா விட்டது, இவனை விடுறதுக்கு? ஆனாலும், இதனாலே இப்ப நமக்கு இந்த 2, 3 மாசமாய் சுத்தமா வரும்படி இல்லையே; அதுக்கென்ன பண்ணறது? இப்ப வரவர தெவசத்துக்குக் கூட எந்த சூத்திரனும் நம்மைக் கூப்பிடறது இல்லை; நமக்கு முன்னையெல்லாம் ஒரு இடை இழுத்துவிட்டு அரிசி, பருப்பு, காசு எவ்வளவு தாராளமாகக் குடுப்பாங்கோ, இப்ப அதுகூட இல்லையே; இதென்ன சங்கதி? இந்த வருஷம் பிராமணன் மேலே சங்கராந்தி வந்துட்டதா என்ன? ஒண்ணும் தெரியவில்லையே!


சுப்புக் குருக்கள்: வரும்படியைப் பத்தி கவலைப்படாதே, நான் ஒரு வழி சொல்லுறேன்; அப்படிக் கேக்கறையா?


நடேசக் குருக்கள்: சொல்லித் தொலையப்பா! சோத்துக்கில்லாத பார்ப்பான் சொன்னபடி எல்லாம் கேப்பான் எண்ணு நீ கேட்டதில்லையா? சொல்லு, சொல்லு!


சுப்புக் குருக்கள்: சொல்லுகிறேன், வெளியில் சொல்லாதே!


நடேசக் குருக்கள்: இது வேறே கர்மமா? நான்தான் சுத்த சுத்தமா சோத்துக்கு சாகறேன்; இன்ன இதை வெளியில் சொல்றது வேறையா? கொஞ்சம் சொல்லப்பா சட்டுண்ணு!


சுப்புக் குருக்கள்: சுத்திமுத்தியும் பார்த்துக்கோ, ஆராவது வந்துடப் போறாங்கோ!


நடேசக் குருக்கள்: ஒருத்தரும் இல்லை; சொல்லித் தொலை!


சுப்புக் குருக்கள்: அது என்னான்னாக்கா, கோயிலில் சாமி இருக்குதல்ல, அதை ஆட்டிப் பிடுங்கி, கீழே தள்ளி படுக்க வெச்சிடு; காத்தாலெ கோயிலைப் போய் நீ பாத்ததாகவும்," கோயில் கதவு ஒடச்சி எவனோ உள்ளே போயி சாமியை ஆட்டி கீழே தள்ளிப் போட்டு, அதிலே இருந்த தங்கம், வெள்ளி, நவரத்னமெல்லாம் எவனோ எடுத்துக்கிட்டுப் போயிட்டான்; கும்பாபிஷேகம் பண்ணவேணும், இல்லாவிட்டால் ஊருக்கு ஆகாது; தர்மகர்த்தாவுக்கு தோஷம்; கமிட்டி யாருக்கு பாவம்!" அப்படிண்ணு சொல்லிப் போடு; கமிட்டியார் கும்பாபிஷேகம் பண்ற வரைக்கும் சாமிக்குக் கீழே போட்டு இருந்த தங்கம், வெள்ளிக்காசு, நவரத்னம் இதை வித்து சாப்பிட்டுகிட்டு இரு; இது தெரியாத உனக்கு?


நடேசக் குருக்கள்: இது நல்ல யோசனை தான்! நானும் இதற்கு முன்னாலேயே சாமியை ஆட்டித் தள்ளி, அதுக்குக் கீழே இருந்ததை எடுத்துக்கிட்டு, சாமியை சும்மாதான் நிக்கவச்சி இருக்கிறேன்; அர்ச்சனை பண்ற பூ பெலமா சாமி மேலே பட்டாலே சாமி ஆடும்! அது மாத்தரமா? எங்க கோயிலில் இருக்கிற எந்த சாமியைத் தொட்டாலும் சட்டுண்ணு படுத்துக்கும்! எல்லாம் ஆட்டிப் பிடுங்கி, அதிலிருந்ததை முன்னையே எடுத்துத் திண்ணு போட்டோம். ஆனதனாலே சாமியை பாடுபட்டு ஆட்டி கீழே தள்ள வேண்டியதில்லை; தொட்டால் போதும், தானே கீழே விளுந்துடும்!


சுப்புக் குருக்கள்: அப்படியானாக்கா, இன்னைக்கு ராத்திரியே சாமியை தள்ளிப்போடு; இருட்டு காலம் தானே, யாரு பாப்பாங்கோ! கும்பாபிஷேகம் பண்ணினாக்கா உனக்கும் கிடைக்கும், எனக்கும் கிடைக்கும், இன்னம் மத்த பிராமணாளுக்கும் தச்சனை, வேட்டி, சமாராதனை இதெல்லாம் கிடைக்கும். ஒரு வாரம் எப்படியும் தாட்டிக்கிலாம். தச்சனை, வேட்டி, குடம், சொம்பு முதலானதும் மாசக்கணக்கா வரும். அப்பரம் இதை மாதிரி ஒவ்வொரு ஊரிலேயும் பண்ணச் சொன்னாக்க இந்த வருஷத்து சங்கதி முடிஞ்சுபோகும்; மேலேக்கு பாத்துக்கலாம். அதுக்குள்ளே அவனும் ஜெயிலுக்கு போய்ட்டாக்க மத்தவனுங்கொ இந்த புத்தி வுட்டுடுவானுங்கோ.


நடேசக் குருக்கள்: சரி சரி, ராத்திரிக்குப் போய் தள்ளிப் போட்டே வந்துடுறேன்; நீ எங்கயும் போயிடாதே; தருமகர்த்தாகிட்ட சொன்ன உடனே அவன் ஒரு முட்டாளு ஆனதனாலே கும்பாபிஷேகம் உடனே பண்ண வேணும் எண்ணு சொல்ற தர்மகர்த்தா, அவன் உடனே ஏற்பாடு பண்ணராப்லெ இருந்தா உடனே உன்னை வந்து கூப்பிடுறேன் தெரியுமா!


சுப்புக் குருக்கள்: ஆமா, ஆமா, உங்க தர்மகர்த்தாகூட ஒரு பயித்தியக்காரன்தான். அவனுக்கு சும்மா மேலும் கீளும் சாம்பலைப் பூசத்தான் தெரியும். அரகரா சிவசிவ எங்கத்தான் தெரியும். மத்தபடி நீ சொல்லரதுதான் வேதவாக்கு. உடனே செய்வான். நானும் சத்திரத்திலேயே படுத்திருக்கிறேன். காலமே நேரத்திலேயே வந்து சொல்லு தெரியுமா!

நடேசக் குருக்கள்: சரி போயிட்டு வா; நீ நல்லா இருக்கணும். நல்ல கஷ்ட காலத்திலே சரியான யோசனை சொன்னே; சரி, சரி.
சொன்னே; சரி, சரி.

---------------தந்தைபெரியார்-"குடிஅரசு"-29-05-1927

No comments: