பா.ம.க நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுதியுள்ள பதில் குறித்து `தமிழ்ஓசை (10.2.2008) ஏட்டில் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
அதற்கான பதிலைப் பொறுப்போடு தெரிவிக்க வேண்டியது நமது கடமையாகும்.
1. ``சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதுதான் நமக்கு முக்கியம் என்றும் எந்த வழியாக என்பது முக்கியமல்ல என்றும் கருத்து வெளியிட்டார் மருத்துவர் இராமதாசு. இந்தக் கருத்தை அவர் வெளியிட்டபோது, இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல என்றும், முதலமைச்சர் கலைஞரும், இத்தகைய கருத்தை ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார் என்றும் விளக்கமளித்திருக்கிறார். இதனை முதலமைச்சர் கலைஞர் மறுக்கவில்லை.
இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியபோது, இந்தக் கருத்தை, தான் வெளியிட்டது உண்மைதான் என்றும் ஆனாலும் இப்போது 60 விழுக்காடு அளவுக்குத் திட்ட வேலைகள் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு வழிபற்றி சிந்திப்பது சாத்தியமல்ல என அதிகாரிகள் கூறுகிறார்கள் என்ற விளக்கத்தையும் கலைஞர் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் வெளியிட்ட கருத்தையே நான் எதிரொலித்தேன் என்று பா.ம.க, நிறுவனர் சொன்னதற்குக் கலைஞர் இவ்வாறு விளக்கம் அளித்துவிட்டதற்குப் பின்னர் இந்த விவகாரம் முற்றுப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தேவையில்லாமல் வெளியிட்ட ஒரு கருத்தும், அதைத் தொடர்ந்து அவரை ஆசிரியராகக் கொண்ட விடுதலை நாளேடு தீட்டிய தலையங்கமும் இப்போது, சேதுக் கால்வாய்த் திட்டத்தைவிட பெரும் விவாதப் பொருளாக மாறி விட்டிருக்கிறது. இதற்கான முழுப் பொறுப்பையும் வீரமணியே ஏற்க வேண்டும் என்று தோழர் பாலா எழுதியுள்ளார்.
இந்தப் பகுதியில் தன் முரண்பாடும், காலப் பிழையும் கட்டுண்டு இருப்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
வேறு வழியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி முதலில் தாம் தெரிவித்த கருத்தினை பிறகு மாற்றிக் கொண்டு விட்டதாகவும், வேறு பாதையில் நிறைவேற்ற சாத்தியமில்லையென்றும் முதல் அமைச்சர் தெளிவாகக் கூறியிருப்பதை கட்டுரையாளர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விவரம் மருத்துவர் இராமதாசு அவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்ததாகவே வைத்துக் கொள்வோம். அப்படியிருக்கும்பொழுது வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றிக் கூற வேண்டிய அவசியம் என்ன? அதுவும் மதவாதச் சக்திகள் வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் நேரத்தில், உச்சநீதிமன்றம் வரை செல்லும் சமயத்தில், அவர்கள் விரும்பும் - வலியுறுத்தும் கருத்துக்குத் துணை போவது போல பா.ம.க., நிறுவனர் கருத்துக் கூறலாமா? என்பதுதான் திராவிடர் கழகத் தலைவரின் கேள்வியாகும். அவர் தெரிவித்த கருத்து சரியானதுதான் என்பதற்குச் சாட்சியம் - தமிழக பா.ஜ.க.,தலைவர் திரு.இல. கணேசன் அவர்கள் எங்கள் கருத்தை ராமதாசும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறியிருப்பதாகும்.
(தினத்தந்தி, 6.2.2008, பக்கம் 9).
கடைசியாக முதல்வர் தெரிவித்த கருத்தினைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு கட்டத்தில் முதல் அமைச்சர் சொன்ன கருத்தைத் தாம் குறிப்பிடுவதாக மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் குறிப்பிட்டு இருப்பது தேவையற்றதும் காலப் பிழையுமாகும். 2007 செப்டம்பரில் முதல் அமைச்சர் கூறிய கருத்தை மாற்றிக் கொண்டு 2007 அக்டோபரிலேயே மாற்றிக் கூறிவிட்டார்.
என்.டி.டி.வியில் ஒரு படிமேலே சென்றுகூட கருத்தினை திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சேகர் குப்தா (என்.டி.டி.வி. சார்பில்) வாஜ்பேய் ஒப்புதல் அளித்தார் என்று சொல்கிறீர்கள். இப்போது அது மதப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் ஏராளமானவர் இந்தப் பாலத்தை ராமர் கட்டினார் என்று நம்புகிறார்கள். அந்தப் பாலத்தை உடைத்து பாதை அமைக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
கலைஞர் பதில்: அது தேவையே இல்லை. அதை உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. உடைப்பது ராமர் கட்டிய பாலம் அல்ல. நான் இன்னும் சொல்கிறேன். அப்படியே இருந்தாலும் என்ன, அதனை அகற்றக் கூடாதா? நாட்டு மக்களின் நலனுக்காக அதை அகற்றிவிட்டு புதுப் பாலம் கட்டக் கூடாதா?
(`முரசொலி 29.10.2007 பக்கம் 1)
``வேறு அய்ந்து பாதைகளும் ஏற்கத்தக்கதல்ல என்று விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது என்ற கருத்தையும் முதல்வர் கலைஞர் வரையறுத்தும் கூறி விட்டாரே!
(ஆதாரம்: `முரசொலி 2.10.2007 பக்கம் 12)
இவ்வளவுக்குப் பிறகும் முதல் அமைச்சர் சொன்னதைத் தான் நான் சொல்கிறேன் என்று ஒரு கட்சியின் நிறுவனர் கூறுவது பொருத்தமானது தானா - சரியானதுதானா என்பதை மீண்டும் மக்கள் முன் வைக்கிறோம்.
`தமிழ் ஓசை கட்டுரையாளர் தோழர் பாலாவின் கூற்றுப்படியே கூற வேண்டும் என்றால் 2007 அக்டோபரிலேயே முடிந்து விட்ட ஒன்றை, 2008 பிப்ரவரியில் கிளப்பி விவாதப் பொருளாக ஆக்கியதற்காக மருத்துவர் ச. இராமதாசு அவர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் விவாதப் பொருளாக ஆக்கப்படாதது போலவும், வீரமணி அவர்கள் பதில் சொன்னதன் மூலமாகத்தான் அது அவ்வாறு ஆக்கப்பட்டுள்ளதாகவும் எழுதியிருப்பது சரியான நகைச்சுவைப் பகுதியாகும்.
இன்னும் அதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர் என்பதெல்லாம் ஒரு பத்திரிகையாளருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?
2) பெரியாரின் சீடர் இராசாராம் மறைந்துவிட்டதைப் பொருட்படுத்தாமல் சென்னையில் செய்தியாளர்களை அவசர அவசமாக அழைத்து வீரமணி பேட்டி கொடுத்து விட்டாராம் - இப்படி ஒரு குற்றச்சாற்று.
82 வயது நிறைந்த ஒருவர் மறைந்த நிலையில், அதற்குரிய இரங்கல் அறிக்கை கொடுத்து, நேரில் சென்று மரியாதையும் செய்து, செய்தியாளர் கூட்டத்தைத் தொடங்குமுன் இரங்கலும் தெரிவித்துதான் கருத்தினைக் கூறத் தொடங்கினார் திராவிடர் கழகத் தலைவர் என்கிற செய்தியை முதலாவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் மறைந்து விட்டார் என்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடாது, கருத்துகளைக் கூறக் கூடாது, ஒப்பாரி வைத்து மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பது நூறு சதவிகித மூடநம்பிக்கையாகும். திரு. இராசாராம் அவர்கள் மறைவைக் காரணம் காட்டி ``தமிழ் ஓசைக்கு விடுமுறை அளித்துத் துக்கம் கொண்டாடினார்களா என்று தெரியவில்லை.
அவசர அவசரமாகச் செய்தியாளர் கூட்டம் கூட்டப் பெறவும் இல்லை. 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே அழைப்புக் கொடுத்துத்தான் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. எதிலும் அரைகுறையாக - அவசர அவசரமாக எழுதக் கூடாது.
3) எங்களுக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை. உங்களது ஆலோசனைகள் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை என்று மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் எழுதியுள்ளார்.
அதற்குப் பதில் அளிக்கும் வகையில்தான் நீங்கள் மட்டும் நாள்தோறும் அறிக்கைகள், பேட்டிகள்மூலம் மற்றவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே. அறிவுரை கூறும் மொத்தக் குத்தகையையும் தாங்கள் மட்டும் ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டுள்ளீர்களா? என்று திராவிடர் கழகத் தலைவர் பதில் எழுதியிருந்தார். அதற்குத் தோழர் பாலா என்ன பதில் கூறுகிறார் - நாள்தோறும் அறிக்கைகள், பேட்டிகள் வீரமணியை நோக்கியா? அவரது திராவிடர் கழகத்தை நோக்கியா? அல்லது மற்ற அரசியல் கட்சிகளை நோக்கியா? என்று கேள்வி கேட்கிறார்.
அப்படியென்றால் அவர் பேட்டிகளும், அறிக்கைகளும் அண்டார்டிகாவைப்பற்றியா? - கோழி வளர்ப்பைப் பற்றியா? ஒன்றும் விளங்கவில்லையே!
இப்படி எழுதிவிட்டு அவரே அடுத்து எழுதுகிறார்.
அரசின் திட்டங்களையும், அரசு வெளியிடுகின்ற அறிவிப்புகளையும் விமர்சிப்பதற்கும், தேவைப்பட்டால் கருத்துகளையும், அறிவுரைகளையும் கூறுவதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் பா.ம.க.விற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று எழுதுகிறார்.
இதைத்தான் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி கேட்கிறார். அடுத்தவர்களை விமர்சிக்கவும், அறிவுரைகள் கூறவும் பா.ம.க.வுக்கு மட்டும் அனைத்து உரிமைகளும் உண்டு; மற்றவர்களுக்குக் கிடையாது என்றால் -
அறிவுரை கூறும், விமர்சிக்கும் அத்தனை உரிமைகளையும் பா.ம.க. மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துள்ளது என்பதுதானே இதன் பொருள். ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக அல்லவா பதில் இருக்கிறது.
அதுவும் மிக முக்கியமான சேது சமுத்திரத் திட்டம் என்பது பொதுப் பிரச்சினையல்லவா - அதுபற்றி சொல்லப்படும்போது, விமர்சனம் வரத்தானே செய்யும்?
பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களைத் தாங்கும் சக்தி வேண்டாமா? அவ்வளவு பலகீனமா?
`இதே மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் பெரியார் வழி நடக்கும் தொண்டர்களுக்கு (தினப்புரட்சி 22.2.1991) என்று பகிரங்கக் கடிதம் எழுதவில்லையா?
தி.க. தலைமைக்கு மூளை வீரியம் குறைவு எனும் அளவுக்குக்கூட எழுதி இருந்தாரே!
திராவிடர் கழகத் தலைவர் தக்க முறையில் பதில் எழுதினாரே தவிர, ஆத்திரப்படவில்லையே! யாருக்கு மூளை உண்டு, வீரியம் குறைவு என்பதை அறிவோடு மக்கள் தெரிந்து கொள்வார்கள் - அவ்வளவுதான். மானமிகு வீரமணி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று மருத்துவர் பேசியது எல்லாம் உண்டே! மூளை வீரியத்துடன்தானே பேசியிருப்பார்?
திமுகவில் உள்ள சுயமரியாதை உள்ளவர்கள் பா.ம.க.வுக்கு வர வேண்டும் என்றுகூட அவர் எழுதியதுண்டே! இது என்ன உரை? அறிவுரையா? ஆசி உரையா? அருள் வாக்கா? தமிழ்ஓசை எழுத்தாளருக்குத்தான் வெளிச்சம்.
மருத்துவரின் விமர்சனங்களை அறிவுரைகளை நடுநிலையாளர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்களாம் - மனம் புழுங்கிப் போயிருப்பவர்களில் வீரமணியும் ஒருவராம்! இப்படியும் தமிழ் ஓசையில்!
இத்தனைப் பேர் பாராட்டிப் பேசியிருக்கும்பொழுது வீரமணி ஒருவர் மட்டும் மாறுபட்டுச் சொல்வதால் குடியா மூழ்கிப் போகும்? அனைவருமே தன்னை மட்டும் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வகையான பலகீனம் தானே!
தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது வாடிக்கைதானே என்று திராவிடர் கழகத் தலைவர் எழுதி விட்டாராம்! யார்தான் அப்படி அணி மாறவில்லை? கூட்டணிக்குக் கொள்கையெல்லாம் தேவையில்லை என்று விளக்கம் அளிக்க முன் வந்துள்ளார்.
எனக்கு இவர் பேட்டி கொடுக்கவில்லை, அதனால் அணி மாறுகிறேன்; இவர் தனது தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்தும் பேசச் சொல்லியிருக்கிறார் - அதனால் இவருடன் தான் கூட்டு; அவர் 20 இடங்கள்தான் தருவேன் என்கிறார். இவரோ 25 இடங்கள் தருகிறார். அதனால்தான் இவருடன் கூட்டு என்பது எல்லாம் எவ்வளவு பரிகசிப்புக்கு உரியது!
ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு இருக்கிறார். யாரிடம் தான் கொள்கை இருக்கிறது எங்கள் கட்சி உட்பட என்று பட்டவர்த்தனமாக ஒரு முறை ஒப்புக்கொண்ட (ஆனந்த விகடன் 13.9.1998) வெள்ளை மனம் மருத்துவருடையது என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம் - ஏன் பாராட்டக் கூடச் செய்யலாம்!
இப்பொழுது கூட்டணிக்குக் கொள்கை தேவையில்லை என்று எழுதுகிறாரே - தேர்தல் கூட்டணி பற்றி மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் நிலைப்பாடு என்ன? இதோ மருத்துவர் பேசுகிறார்.
``தேர்தல் கூட்டு, முற்போக்குக் கூட்டணி என்று அரசியல் கட்சிகள் கூறுவதெல்லாம் சுத்த கயவாளித்தனம், மக்களை மோசடி செய்யும் வேலை. தேர்தலில் கூட்டு ஏன்? ஒரு கட்சிக்கும், அதன் கொள்கைக்கும் எவ்வளவு மக்கள் ஆதரவும், நம்பிக்கையும் உள்ளதோ, அவர்கள்தான் அரசு அமைக்க வேண்டும். இதைக் கண்டுபிடிக்க நடத்தப்படுவதுதான் தேர்தல். இதைத் தெளிவுபடுத்த கட்சிகள் தனித்தனியாக நின்றால்தான் யாருக்கு உண்மையான மக்கள் ஆதரவு என்பது தெரியும். தனித்துப் போட்டியிட முடியாத கட்சிகளை அதன் தலைமைகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது அல்லது கட்சியைக் கலைத்துவிட வேண்டும். மற்ற பெரிய கட்சிகளின் தயவில் சட்ட சபைக்குள்ளும், பார்லிமெண்டுக்குள்ளும் நுழைய மட்டுமே இந்தத் தேர்தல் கூட்டு பயனளிக்கிறது. இந்தத் தேர்தல் கூட்டு என்கிற மோசடியை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்கிறது. வெற்றி வாய்ப்புப் பறிபோனாலும் தேர்தல் கூட்டணியை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
(பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான
`தினபுரட்சி 9.6.1990) இப்படியெல்லாம் தேர்தல் கூட்டணி பற்றி சொன்னவர்தான் பா.ம.க. நிறுவனர். இருந்தும் இதுபோன்ற பிரச்சினையில் ஒரு தலைவருக்குப் போய் வக்காலத்து வாங்கி எழுதுகிறாரே - தோழர் பாலா? பரிதாபகரமாக இருக்கின்றது.
1967-இல் இருந்துதான் தமிழ்நாட்டில் கூட்டணி வந்தது என்று எழுதியுள்ளார். அதுவும்கூட தவறு 1952-ஆம் ஆண்டிலேயே அய்க்கிய முன்னணிகள் உருவாகி விட்டன. தேர்தல் கூட்டணியில் கொள்கைக்கு இடமில்லை என்றால் மதச் சார்பற்ற கூட்டணி என்கிற சொல்லாடல்கள் எல்லாம் எங்கிருந்து குதித்தன? இனி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டு இல்லை என்று மருத்துவர் கூறியுள்ளதன் தாத்பர்யம் என்ன? தோழர் பாலா விளக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற உயர்ந்த பொருள் உள்ள கருத்தினைத் தம் குறுகலான இடத்திற்குக் கொண்டு செல்வது வருந்தத்தக்கது.
அந்த மாறுதல் என்பது அறிவியல் ரீதியானது. சிந்தனையானது. முற்போக்குத் திசையைக் கொண்டது. பிற்போக்குக் குட்டையில் வீழ்வது அல்ல! எடுத்துக் கொண்ட வழக்குக்கு வாதாடுவது வக்கீல் தொழிலுக்கு லாயக்கே தவிர அறிவார்ந்த சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது.
பா.ம.க.,மீது அத்தனை வெறுப்பு; மனப் புழுக்கம் வீரமணிக்கு இருக்கிறது என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவை நிதானமற்றவை என்பது சிந்திப்பவர்களுக்குத் தெரியும்.
என்ன புழுக்கம் - என்ன வெறுப்பு? திராவிடர் கழகத்துக்கும் பா.ம.க.வுக்கும் பதவிப் போட்டியா - பா.ம.க.வுக்கு இத்தனை இடம் கொடுக்கும்பொழுது தி.க.,வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு குறைவான இடங்கள் என்ற ஏமாற்றமா?
ராமன் பாலத்தைக் காப்பாற்றும் சக்திகளுக்குத் துணை போகாதீர்கள் என்ற வேண்டுகோளுக்காகவா இவ்வளவு ஆத்திரம் - எரிச்சல் மொழிகள்?
இதே மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் திராவிடர் கழகம் பற்றியும் பா.ம.க. பற்றியும் சொன்ன கருத்துகளைக் கூறித் தூக்கத்தைக் கலைக்க விரும்புகிறோம்.
``திராவிடர் கழகத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இது ஓட்டுப் பொறுக்குகிற கட்சி. அவ்வளவுதான். ஓட்டுப் பொறுக்குகிற வேலையையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, திராவிடர் கழகத்தின் பின்னாலே வருவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம்.
(6.11.1993 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூகநீதி ஆதரவு - மதவெறி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் ஆற்றிய உரை)
இப்பொழுது மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் - மத்தியில் அமைச்சர்கள் என்கிற அதிகாரத் தொனியில் பேசியிருந்தாலும், ஓட்டுப் பொறுக்குவதை ஒதுக்கி வைத்து விட்டு, ஏதோ ஒரு கால கட்டத்தில் திராவிடர் கழகத்தின் பின்னாலே வரக் கூடியவர்தான் என்கிற எண்ணத்தில், சமாதானத்தில் அவரின் கோபம் கொப்பளிக்கும் - முன் - பின் - மறந்த வார்த்தைகளைப் பொருட்படுத்தப் போவதில்லை! அத்தகையவர்களை நம்பி நண்பர்கள் பேனா தூக்குவதை நிறுத்திக் கொள்வது நல்லது!
----------- "விடுதலை" 11-2-08 இதழில் "மின்சாரம்" எழுதிய கட்டுரை
Wednesday, February 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment