சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றுவதில் மாற்றுப்பாதை குறித்து பா.ம.க.நிறுவனர் திரு. இராமதாசு சொன்ன கருத்து குறித்து தி.க.தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் (5-2-08) மாற்றுப்பாதை சரியான முடிவல்ல.6 ஆவது வழித்தடம் தான் சரியானது.இராமதாசு அவர்களும் இதையே வலியுறுத்த வேண்டும் என்று கூறுயிருந்தார்.இதற்கு மறுமொழியாக மருத்துவர் இராமதாசு அவர்கள் 8-2-08 தமிழ் ஓசை இதழில் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு தைலாபுரத்தில் செய்தியாளர்களைக் கூட்டி கலைஞர் அவர்களையும், கி.வீரமணி அவர்களையும் சகட்டுமேணிக்கு திட்டி பேட்டி அளித்துள்ளார். எங்களைப்போன்றவர்கள் மருத்துவர் இராமதாசு அவர்களின் பேட்டியைப் படித்து மிகுந்த மனவேதனைக்கு உள்ளானோம். ஏனெனில் சேதுசமுத்திரத்திட்டம் நிறைவேறுவதற்கு யாரையும் விட பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, இதுகுறித்து பல நூல்களையும், மாநாடுகளையும் நடத்தியது, நடத்தி வருவது திராவிடர்கழகமும் அதன் தலைவர் கி.வீரமணி அவர்களும் என்பதை நாடு நன்கு அறியும்.
நிலைமை இப்படியிருக்க மருத்துவர் இராமதாசு அவர்களோ இவர் யார் நமக்கு ஆலோசனை சொல்ல என்று "பெரியண்ணன்"பாணியில் பேட்டி அளித்த விதம் நடுநிலையாளர்களின் மனதை வேதனைப்படுத்தியதோடு அவர்களிடமிருந்து ஒருவிதமான வெறுப்பு கிளம்பியுள்ளது என்பதுதான் தற்போதைய உண்மை நிலை.
அந்தப்பேட்டியில் புதிதாக மானமிகு கி.வீரமணி அவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டு சொல்லியுள்ளாரா என்றால் அதுவும் இல்லை. ஏற்கனவே சொல்லியுள்ள அதே குற்றச்சாட்டுக்களை மீண்டும் சுமத்தியுள்ளார்.அதெற்கெல்லாம் விரிவாகவும், விளக்கமாகவும் விடையளித்து வெளிவந்துள்ள நூல்களின் பட்டியலை கீழே தந்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்து உண்மை நிலையை அறிய வேண்டுகிறேன்.
சான்று நூல்கள்:
1.கி.வீரமணி அவர்கள் எழுதிய "டாக்டர் ராமதாசுக்கு பதில்" (1991)
2.மின்சாரம் அவர்கள் எழுதிய "டாக்டர் இராமதாஸ் அவர்களுக்கு மீண்டும் ஒரு மடல்" (1993)
3.மின்சாரம் அவர்கள் எழுதிய "டாக்டர் இராமதாசுக்கு தேவை வைத்தியம்!" (1999)
தமிழ் ஓசை இதழில் மருத்துவர் இராமதாசு அவர்கள் அளித்த பேட்டிக்கு தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் அளித்த பதில் இதோ.
மதவாதச் சக்திகளுக்குத் துணை போகக்கூடாது மருத்துவர்
இராமதாசு என்பதுதான் எங்கள் அறிக்கையின் நோக்கம்
மருத்துவரின் அறிக்கையை பா.ஜ.க., மாநிலத் தலைவர் இல. கணேசன்
துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளாரே!
நாங்கள் சுட்டிக்காட்டியது நடந்துவிட்டதே! ஆத்திரப்படாமல் நிதானமாகச் சிந்திக்கட்டும்!
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் விளக்கம்
பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் கூறி யுள்ளதற்குப் பதில் அளித்தார் செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்
மருத்துவர் இராமதாசு அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தோடு நில்லாமல், செய்தியாளர்களிடமும் அதுபற்றி தெரிவித்துள்ளதால், அவருக்கு நாங்கள் எழுதிய கடிதத்தையும் வெளியிட நேர்ந்தது என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
முதலமைச்சருக்கு அவர் கடிதத்தின் நகலை அனுப்பியதால், இப் பொழுது ஒரு வழிப் பாதையாக அமைந்துவிடக்கூடாது என்பதால், நானும் நகல் ஒன்றை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளேன் என்றார்.
கடிதம் வருமாறு:
மதிப்பிற்குரிய பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு
வணக்கம்.
தங்கள் 6.2.2008 நாளிட்ட மடல் கிடைத்தது. நன்றி.
"விடுதலை"யில் எழுதப்பட்ட அறிக்கை, தலையங்கம் குறித்து அதிக அளவு உணர்ச்சி வயப்பட்டுள்ளீர்கள் என்பதை தங்கள் கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.
சற்று நிதானமாகப் படிந்திருந்தால் அதில் ஆத்திரப்படுவ தற்கோ, உணர்ச்சி வயப்படுவதற்கோ ஒன்றுமில்லை.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நீண்ட காலமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் ஒரு முக்கியமான திட்டமாகும். அந்தத் திட்டத்தை தற்போதுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றும்போது அதனைத் தடுக்க பல்வேறு சக்திகள் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. ராமர் பாலம் என்ற ஒரு கற்பனையை எடுத்துக் கொண்டு ஆறாம் வழித் தடத்திற்குப் பதில் வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறுக்குச் சால் ஓட்டுகின்றன. வேறு வழிகள் ஆய்வு செய்யப்பட்டு சாத்தியமற்றவை என்று வல்லுநர்களால் முடிவு செய்யப்பட்டன; மேலும் இப்பொழுதுள்ள வழித் தடத்தில் 60 சதவீதப் பணிகள் முடிந்து விட்டன.
துணைப் போகக்கூடாது
இந்த நிலையில் பா.ம.க., நிறுவனர் இதற்குத் துணை போகலாமா என்று விடுதலையில் குறிப்பிட்டிருப்பதன் நோக்கம்- எந்த வகை யிலும் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தாங்கள் துணைப் போகக் கூடாது என்பதுதான்.
திட்டத்தின்மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாக நல்லெண்ணத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தாகும் இது.
தங்கள் சொன்ன கருத்தை எடுத்துக்காட்டி, நாங்கள் சொல்லுவதை டாக்டர் ராமதாசும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார் என்று தமிழக பா.ஜ.க., தலைவர் இல. கணேசன் கூறியிருப்பதையும் இந்த நேரத்தில் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். துணைபோகலாமா என்று நாங்கள் எழுதியதற்கு இது தான் முக்கிய காரணமாகும்.
இந்தத் திட்டம் நடக்கக் கூடாது என்று கருதுபவர்கள் அரசியல் காரணங்களுக்காகக் கூறும் நிலையில் மாற்று வழித்தடம் தேடலாம் எனக் கூறுவது ஏமாற்று வழித்தடமே ஆகும். மதிப்பிற்குரிய மருத்துவர் இராமதாசு அவர்களும் இந்த நிலையைக் கூறலாமா? விடுதலை அறிக்கை வரிகளில் காணப்படும் சாரத்தினைச் சிந்தித்தால், ஏமாற்று வழித் தடம் பற்றிக் கூறுவோரின் கருத்துக்கு எந்த வகையிலும் பலம் சேர்த்து விடக் கூடாது என்பது தெரிய வரும். இதனைக் குற்றச்சாற்றாக எடுத்துக் கொள்ளாமல் ஆக்க ரீதியாக எடுத்துக் கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தோம்; ஆனால் தங்கள் கடிதம் ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது.
முதலமைச்சர் கடைசியாகக் கூறியது என்ன?
முதல் அமைச்சர் கலைஞர் 2007 செப்டம்பரில் கூறியதைத்தானே நானும் கூறியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மை தான்; அதன்பின் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு முதல் அமைச்சர் வெளியிட்ட கருத்தை நீங்கள் ஏன் வசதியாக மறந்து விட்டீர்கள் அல்லது மறைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
உறுதியான நிலைப்பாடு எனக் கூறவில்லை என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நிலைப்பாட்டில் என்ன உறுதியான நிலைப்பாடு, உறுதியற்ற நிலைப்பாடு?அரசியலில் தங்கள் அளவுக்கு அனுபவம் பெறாததால் இது எனக்கு விளங்கவில்லை என்று கருதுகிறேன்.
கோபப்படுவானேன்?
"இனிமேலாவது மருத்துவர் இராமதாசைப் போன்றவர்கள் இத்திட்டத்தினை உடனடியாக முடித்து வைக்க ஆறாம் வழித் தடத்தினை மாற்றாத அரசியல் வழித் தடத்தில் நடைபோடுவார் - போட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று எழுதி யுள்ளதற்கு மிகவும் கோபப்பட்டுள்ளீர்கள். அரசியலில் உங்களது ஆலோசனை எதுவும் தேவையில்லை என்றெல்லாம் அனல் பறக்க எழுதியுள்ளீர்கள்.
ராமர் பாலம் என்று கூறி ஆறாம் வழித் தடத்தில் திட்டத்தை நிறை வேற்றக் கூடாது என்று கூறும் அரசியல் கட்சிகளின் வழித் தடத்தில் தாங்கள் நடைபோட வேண்டாம் என்று கூறுவதில் என்ன பிழை இருக்கிறது?
அப்படியே பார்த்தாலும் தேர்தலுக்குத் தேர்தல் தாங்கள் அணிமாறுவதும் வாடிக்கைதானே!
எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று அருள்வாக்கு கூறி யுள்ளீர்கள். அரசியலில் திராவிடர் கழகத்தின் பங்கு என்ன என்ற எல்லை எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். தந்தை பெரியார் அவர்கள் நீதிக் கட்சி காலத்திலிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் சரியாகவே வழிகாட்டிச் சென்றுள்ளார்.
எந்தக் காலத்திலும் திராவிடர் கழகம் பா.ஜ.க., இருக்கும் அணியை ஆதரிப்பது கிடையாது எனவே எங்கள் கொள்கை தெளி வானது - செயல் முறையும் ஆரோக்கியமானதே!
அதே நேரத்தில் அரசியலில் தங்கள் நிலை என்ன?
"எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது?"
"இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உட்பட எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை" என்று பேட்டி கொடுத்தீர்கள். ('ஆனந்தவிகடன்' 13.9.1998)
இப்படி அரசியல் நடத்தும் நீங்கள் கொள்கைகளைப் பற்றி பேசுவதுதான் வேடிக்கை! இத்தகைய தங்களுக்கு அரசியல் வழியைப்பற்றி எடுத்துக் கூற எங்களுக்குத் தகுதியில்லைதான் ஒப்புக் கொள்கிறோம்.
பெரியாரின் பாதையில் தொடர்ந்து நாங்கள் பயணிக்க வேண் டும் என்று தாங்கள் அறிவுரை கூறியுள்ளதற்கு நன்றி. அதனை யார் சொன்னாலும், சொல்லா விட்டாலும் திராவிடர் கழகம் செய்யும் - செய்து கொண்டு தானிருக்கும். பெரியார் பாதையில் செல்வதால் தான் ராமன் பாலம் பிரச்சினையில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம். அதே நேரத்தில் அரசியலில் யார் ஆட்சிக்கு வந்தால் என்ன, வரா விட்டால் என்ன என்று பொறுப்பில்லாமல் திராவிடர் கழகம் நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் சொல்லுவது பெரியார் பாதை அல்ல - சரியான கருத்தும் ஆகாது!
மதச் சார்பற்ற ஓர் அணியை உருவாக்குவதில் எங்கள் பங்கு என்ன என்பது ஊருக்கே தெரிந்த ஒன்றே!
இப்பொழுது வேண்டுமானால் தங்களுக்கு மறந்து போயி ருக்கலாம்.
அன்று பாராட்டவில்லையா?
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்ததையும் குறை கூறி யுள்ளீர்கள்.
69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது திராவிடர் கழகம் தயாரித்துக் கொடுத்த திட்டத்தின்படி புதிய சட்டம் இயற்றி, அதனைக் காப்பாற்றியதற்காகத்தான் அந்தப் பட்டம்! அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டதால்தான் இன்றைக்கும் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அதற்குமுன் எம்.ஜி.ஆர். ஆட்சியில் 9 ஆயிரம் வருமான வரம்பை எதிர்த்தும் போராடியதனால் வந்த 50-இல் இருந்ததுதான், 30, 20 என்பது பிரிக்க முடிந்தது. அந்தக் காலம் (1979-80) தாங்கள் அரசியலுக்கே வராத காலம்! அந்த நிலையை இங்கு உருவாக்கிக் கொடுத்ததால்தான் 30 சத விகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் 20 சதம் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு என்பதை மறந்து விட்டீர்களே!
இதில் வேடிக்கை என்னவென்றால் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் உரிய நேரத்தில் எடுத்துச் செல்வதற்கு மறந்து விட்டது அன்றைய அதிமுக அரசு. இந்த முக்கிய கடமையிலிருந்து தவறிய ஆட்சிக்குத் தலைமை தாங்கிய அம்மையாருக்கு சமூகநீதிக் காத்த வீராங்கனை என்று தஞ்சையில் பட்டம் வழங்கி மகிழ்ந்த நீங்கள் கடந்து வந்துள்ள பாதையும் தெரிய வந்தது என்று எழுதியுள்ளீர்கள். அப்படியென்றால் இந்த மிகப் பெரிய குற்றத்தைச் செய்த அந்த அம்மையாருடன் அதற்குப் பிறகு 2001-இல் கூட்டணி வைத்துக் கொண்டது எப்படி? ஏன்? எல்லா முடிவுகளையும் சகோதரியிடத்திலேயே விட்டு விட் டேன் என்று சரண் அடைந்தது - ஏன்? எத்தனை சகோதரியை, எத்தனைப் புரட்சித் தலைவியைப் போட்டு அழைத்தீர்கள் அந்தக் கால கட்டத்தில்?
" திமுக உயர்த்தி பிடித்த கொள்கைகள் என்ன? அதிமுக உயர்த்தி பிடிக்காத கொள்கைகள் என்ன? சொல்லுங்கள், இதைப்பற்றி கருணாநிதியிடம் நேரடியாக ஒரே மேடையில் பேசத் தயாராக இருக்கிறேன். 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றி பல காரியங்கள் செய்திருக்கிறார் ஜெயலலிதா" என்று நீங்கள் பேட்டி கொடுக்கவில்லையா? (நமது எம்.ஜி.ஆர். 18.1.1998) இப்படிப்பட்ட நீங்கள் சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் பற்றி இப்பொழுது பேசலாமா?
பட்டம் கொடுத்த கால கட்டம் வேறு. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட கால கட்டம் வேறு - இரண்டையும் குழப்பலாமா?
பட்டிமன்றம் நடத்தத் தயாராக இல்லை
பழைய தகவல்களை எல்லாம் எடுத்துக் காட்டி பட்டிமன்றம் நடத்த நாங்கள் தயாராக இல்லை.
ஈழத் தமிழர் பிரச்சினையிலிருந்து, ஜாதிப் பெயரைச் சொல்லி சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களை வீட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு புறக்கணிக்கச் சொன்னதிலிருந்து, கலைஞர் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் என்ன என்னவெல்லாம் பறிபோகும்? தேர்தல் என்றால் என்ன, அரசியல் கட்சிகள் என்றால் என்ன என்று தாங்கள் திருவாய் மலர்ந்ததை எல்லாம் பட்டியல் போட ஆரம்பித்தால். அது உங்களுக்குத் தேவையில்லாத மன உளைச்சலை மேலும் அதிகமாக ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதனை விவரிக்க விரும்பவில்லை.
மற்றபடி உங்களுக்குள்ள பொது வாழ்க்கையின் கடல் போன்ற அனுபவமும்; முதிர்ச்சியும் எங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்; அதனால் தான் நீங்கள் யார் எங்களுக்கு அறிவுரைகூற என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள். அது சரி, தினம் தினம் அறிக்கைகள்மூலம், பேட்டிகள்மூலம் மற்றவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே, அது எப்படி? அறிவுரை கூறும் மொத்தக் குத்தகையையும் தாங்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டுள்ளீர்களோ!
தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களாகிய எங்களுக்கென்று கொள்கைப் பார்வை ஒவ்வொன்றிலும் உண்டு. அதனைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதை மட்டும் அடக்கத்தோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
அன்புடன்
தலைவர்,
திராவிடர் கழகம்
------------------------- "விடுதலை" 9-2-08
இது ஏதோ மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு எதிராக எழுதியது என்று நினைக்க வேண்டாம் கொள்கைவழியில் மருத்துவர் இராமதாசு அவர்களும் செயல்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment