Thursday, June 12, 2008

கருநாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மதக் கிறுக்குத்தனம்! வெறித்தனம்!!

ஆட்சியில் அமர்ந்ததும் அமராததுமாக ஆர்.எஸ்.எஸ். வெறிக் கொள்கைகளை அமல்படுத்திட கருநாடக பா.ஜ.க. அரசு தொடங்கிவிட்டது. முதலமைச்சர் எடியூரப்பா பெயரில் தினந்தோறும் கோயில்களில் அர்ச்சனை செய்யப்படுமாம். கொடுமை என்னவென்றால், அரசுக் கட்டுப் பாட்டில் உள்ள எல்லாக் கோயில்களிலும் அரசுச் செலவிலேயே அர்ச்சனை செய்யப்படுமாம். இதற்காக அரசு ஆணையே வழங்கப்பட்ட விசித்திரம் நடந்துள்ளது.

கிருஷ்ணையா செட்டி என்பவர் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். வீட்டு வசதித் துறை எனும் வசதியான துறை அமைச்சர். பிரதியுபகாரமாக முதலமைச்சருக்கு எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தார் போலும்! அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்து விட்டார். அர்ச்சனை செய்தால் மாநிலம் நன்றாக இருக்குமாம்.

இந்து அறநிலையத்துறை ஆணையர் டி.ஷாம் பட் என் பாருக்கு ஆணையிட்டுள்ளார். அரசுக் கோயில்கள் அனைத் திலும் பூஜைகள் முதலமைச்சர் பெயரில் நடத்தப்பட வேண்டும் என்று தாக்கீது பிறப்பித்துள்ளார். அவர் உடனே எல்லாக் கோயில்களுக்கும் அறிவுரை வழங்கி தினந்தோறும் பூஜை செய்யப்பட வேண்டு மெனக் கூறி விட்டார். அதில் முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

34 ஆயிரம் கோயில்களில்

இதனால் மாநிலத்தில் உள்ள 34 ஆயிரம் கோயில் களிலும் அரசு உத்தரவுப்படி பூஜைகள் செய்யப் படுமாம். மாநிலத்தில் சிக்கல்கள் நிலவுவதால் அமைதி நிலவிட கடவுளின் ஆசிகள் தேவை, அதற்குப் பூஜை செய்யவேண்டும் என்றார் மந்திரி கிருஷ்ணையா செட்டி. உரத்தட்டுப்பாட்டுச் சிக்கலில் இருந்து கருநாட காவின் இளம் பா.ஜ.க. ஆட்சி மீண்டு வருவதற்காகவும் கடவுளைத் துணைக்கு அழைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்களையெல்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் செய்தி யாளர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினார். பதவி ஏற்ற நாளன்றும் லட்டு பிரசாதம் வழங்கினார்.
இம்மாநிலத்தின் அரசுக் கோயில்கள் எல்லாவற்றிற்கும் ஆண்டு மானியத் தொகை 6 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. முன்பிருந்த கூட்டணி ஆட்சியில் இத்தொகை கோயில்களுக்குத் தக்கவாறு வேறுபட்டிருந்தது. ஒரு ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அளிக்கப்பட்டது. முந்தைய அமைச்சரவையின் நிதி அமைச் சராக இருந்த எடியூரப்பா கோயில் நிதியை 6. 12 கோடியிலிருந்து 21.48 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவித்திருந் தார்.

பகுத்தறிவாளர் வழக்கு

கருநாடகா மாநிலத்திலுள்ள சமூக நீதிக்கான வழக்கறிஞர்களின் மன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும் சிறந்த அரசியல் சட்ட நிபுணருமான ரவிவர்மகுமார் அவர்களின் மகள் பெல்லி எனும் வழக்குரைஞர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராய (ரிட்) வழக்கு தாக்கல் செய்து எந்தச் சட்டப் பிரிவின் கீழ் உள்ள அதிகாரப்படி இந்த அர்ச்சனை உத்தரவு பிறப்பிக் கப்பட்டது என்று கேட்டுள்ளார்.

பா.ஜ.க. வின்
மதச்சார்புத் தன்மை


ஆட்சியும் மாநிலமும் அமைதியாகத் திகழ ஆண்டவன் அருள் தேவை என்பது மடைத்தனம். இந்த மடைத்தனத்தின் அடிப்படையில், அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது மூடத்தனம். அதிலும் இந்து மதக் கோயில்களில் மட்டும் செய்யவேண்டும் என் பதும் அரசுப் பணத்தை இந்துக் கோயில்களுக்கு மட்டும் செலவு செய்வது என்பதும் இந் திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானதாகும். இந்நிலையில் கருநாடக பா.ஜ.கட்சி அரசு தன் இந்து மதச் சார்புத் தன்மையை வெளிப்படையாகச் செயல் வடிவில் காட்டுவது கண்டிக்கத்தக்கது. கருநாடகப் பகுத்தறிவாளர்களைப் போல பலரும் பல பகுதிகளிலும் இத்தகு போக்குகளை எதிர்த்துக் கிளர்ந்து எழுந்து மதச்சார்பின்மையையும், பகுத்தறிவு மனப்பான்மையையும் வளர்த் திட வேண்டும்.

---------நன்றி: "விடுதலை"12-6-08

No comments: