Tuesday, April 15, 2008

கல்பாத்தி

மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக்கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தேசித்து சென்னை சட்டசபையில், "பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம்" என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியதும் ஞாபகமிருக்கலாம். அத்தீர்மானம் அமுலுக்கு வருவதற்கில்லாமல் "வேலையிருந்தால்தான் போகலாம்" என்று சட்ட மெம்பர் வியாக்யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களுள் பலர் செல்ல முயற்சித்தும் அவர்களுக்கு 144 உத்திரவு போடச் செய்ததும் ஞாபகமிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச்சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டுகளில் விசாரணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம். மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்பனர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட்டதும் ஞாபகமிருக்கலாம். இப்போது இம்மாதம் கல்பாத்தியில் ரதோற்சவமான படியால் மறுபடியும் ஈழவர்கள் எங்கு பிரவேசித்துவிடப் போகிறார் களோ என்பதாக நினைத்து மலையாளப் பார்ப்பனர்கள் இப்பொழு திருந்தே வேண்டிய சூழ்ச்சிகள் செய்து வருவதாய்த் தெரிகிறது.

அங்குள்ள ஒரு பார்ப்பன மேஜிஸ்திரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார். முடிவு என்னவாகு மென்பது தெரியவில்லை. "பார்ப்பனரல்லாதார் நன்மை காங்கிரஸ் மூலம்தான் ஏற்படும்" என்று சொல்லும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இது சமயம் "திருடனைத் தேள் கொட்டியது போல்" மெளனம் சாதிக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் கட்சியும், அவர்களுடைய பொதுமக்கள் உணர்ச்சியும் இவ்வளவு பலப்பட்டிருக்கிறபோதும், சட்டங்களும் அநுகூலமாயிருக்கிறபோதும், தேர்தல் சண்டை இருக்கிறபோதும் தெருவில் நடக்கும் உரிமைகூட இல்லாமல் நம்மைக் கொடுமைப் படுத்த தயாராயிருப்பார்களேயானால் இவர்கள் கைக்கு ராஜ்யமே வந்து விட்டால் நம்மை என்ன செய்யமாட்டார்கள் என்பதை நன்றாய் யோசித்துச் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்குத் தக்க புத்தி கற்பிக்கக் கோருகிறோம்.

-------------- தந்தைபெரியார்- "குடிஅரசு" 31.10.26

Monday, April 14, 2008

இந்து சமூகத்தை நான் ஏன் வெறுக்கிறேன்?

இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் நான் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் கடுமையானது. இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், இன்றுள்ள நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் தோற்றே போகும் என்கிறார் ‘மகாத்மா'. என் அளவுகோலின் தரம் உயர்வானது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவை உயர்வானவையுõ தாழ்வானவையுõ என்பதல்ல பிரச்சனை. அவை சரியானவையுõ என்பதே.

சமூக நீதியின் அடிப்படையிலான சமூக அளவுகோலைக் கொண்டே மக்களையும் அவர்களின் மதத்தையும் மதிப்பிட முடியும். மக்களின் நன்மைக்கு அவசியமானதே மதம் என்று கொள்ளப்பட்டால், வேறு அளவுகோலைப் பயன்படுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் நான் பயன்படுத்தும் அளவுகோலே மிகச் சரியானது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அதைவிட சரியான வேறு எந்த அளவுகோலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் என் அளவுகோலின் முன் தோற்றுப் போகலாம் என்ற கருத்து உண்மையாயிருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, ‘மகாத்மாவை' இந்துக்களின் தானைத் தலைவன் என்பதாகவும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் போய்விடக் கூடாது. அப்படிப் போனால் அதற்கும், ஒரு பைத்தியக்காரன் மற்ற பைத்தியக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பது அல்லது ஒரு குற்றவாளி மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பது என்பதற்கும் வித்தியாசம் இருக்காது. நான் குற்றம் சாட்டும் நிலைமைகள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புக்கு இந்துக்களும் இந்து மதமுமே காரணம்.

இந்த உலகம் மிகவும் குறைபாடுகள் கொண்ட உலகம். இதில் வாழவிரும்புபவன் அதன் குறைபாடுகளை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் இருந்து வாழவேண்டிய இந்த சமுதாயத்தின் குறைபாடுகளைச் சகித்துக் கொள்ள நான் தயார். ஆனால், தவறான லட்சியங்களை வளர்க்கும் சமுதாயத்திலோ, சரியான லட்சியங்கள் இருந்தாலும் அதன்படி சமூக வாழ்வை நடத்தாத சமூதாயத்திலோ எனக்கு சம்மதமில்லை.

இந்து மதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும் தவறான சமூக வாழ்வை நடத்துவதாலும்தான் நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை. அதைவிட அடிப்படையானது. அதாவது அவர்களின் லட்சியங்களைப் பற்றியது.

இந்து சமூதாயத்துக்கு ஒரு தார்மீக மறுமலர்ச்சி தேவைப்படுகிறது. இதைத் தள்ளிப் போடுவது அபாயகரமானதாகுமென்று தோன்றுகிறது. இந்த தார்மீக மறுமலர்ச்சியைத் தீர்மானித்துக் கட்டுப்படுத்தயாரால் முடியும் என்பதே கேள்வி. அறிவு மலர்ச்சி பெற்றவர்களும் தம் அறிவு தெளிவால் பிறந்த முடிவையே துணிவுடன் செயல்படுத்தும் நேர்மை கொண்டவர்களுமே மேற்சொன்ன தார்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

இந்த அளவுகோலின்படி பார்த்தால், இன்றுள்ள முன்னணி இந்து தலைவர்கள் இந்தப் பணிக்கு சுத்தமாக லாயக்கற்றவர்கள் என்பது என் கருத்து. அறிவு மறுமலர்ச்சியின் பாலபாடத்தைக்கூட அவர்கள் கற்கவில்லை. அப்படிக் கற்றிருந்தால், பாமரப் பெரும்பான்மையைப் போலவே எளிமையாக அவர்கள் தமக்குத்தாமே மயங்கி நிற்கவும் மாட்டார்கள். மற்றவர்களின் ஆதிகால அறியாமையில் தங்களுக்கு வசதியாக குளிர்காயவும் மாட்டார்கள்.

மாத்யூ அர்னால்டின் வார்த்தைகளில் சொன்னால், இந்துக்கள் ""செத்துப்போன உலகத்துக்கும் இன்னும் பிறக்க சக்தியற்ற உலகத்துக்கும் இடையில் அல்லாடுபவர்கள்'' அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தங்களின் வழிகாட்டியாக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள "மகாத்மாவோ சிந்தனையை நிம்புபவர் அல்ல. எனவே, அனுபவ சோதனைக்குத் தாக்குப்பிடிக்கும் உருப்படியான உதவியை அவரால் தர முடியாது.

மக்கள் அறிவாளி வர்க்கத்தை உதவிக்கு எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த அறிவாளி வர்க்கத்தினரோ நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்; அல்லது மக்களுக்கு கல்வி தந்து சரியான வழிகாட்டும் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். உண்மையாகவே நாம் ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக இருக்கிறோம். இந்த சோகத்தின் முன்னிலையில் "ஓ இந்துக்களே! இதுதான் உங்கள் தலைவர்களின் லட்சணம்'' என்று அங்கலாய்க்க மட்டுமே நம்மால் முடிகிறது.


----------- பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 1 பக்கம் : 94 96

Saturday, April 12, 2008

யாரை யார் மோசஞ் செய்தார்கள்?

சிறீமான் சீனிவாசய்யங்கார் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது "பார்ப்பனராகிய நான் யாரையும் ஏமாற்றவில்லை, பார்ப்பனரல்லாதாராகிய ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னை ஏமாற்றி விட்டார்" என்று சொன்னாராம். நாயக்கர் எந்த விதத்தில் சிறீமான் அய்யங்காரை ஏமாற்றினார் என்பதையும் கூடவே சொல்லியிருந்தால் கண்ணியமாயிருந்திருக்கும். அப்படிக்கில்லாமல் பொதுப்படையாய்ச் சொல்லுவது விஷமத்திற்காக என்றேதான் சொல்ல வேண்டும். சிறீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் திருச்சியில் கூட்டிய மாகாணக் காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டத்தில் சிறீமான் வரதராஜூலு நாயுடுகாரவர்கள் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஒரு தீர்மானம் கொண்டுவந்த சமயத்தில் நாயுடுகாரைப் பார்த்து "எப்படியாவது இந்த தீர்மானத்தை இதுசமயம் வாபீசு வாங்கிக் கொள்ளுங்கள்; மூன்று மாதம் பொறுத்தவுடன் இதற்கு நான் வகை செய்கிறேன்" என்று சொல்லி நாயக்கரையும் சிறீமான் நாயுடுகாரையும் கெஞ்சி நம்பச் செய்து அதைப் பின்வாங்கிக் கொள்ளும்படி செய்தார்.

காஞ்சீபுரம் மகாநாட்டில் நாயக்கரும், சிறீமான் இராமநாதனும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்த சமயத்திலும் வெளிப்படையாய் மகாநாட்டில் பிரேரேபிக்க அக்கிராசனர் வசம் தீர்மானம் ஒப்படைத்த சந்தர்ப்பத்தில் நாயக்கரை சிறீமான் அய்யங்கார் தனியாய் கூட்டி வைத்து இது சமயம் இதை வலியுறுத்தாதீர்கள். மூன்று மாதத்தில் எல்லாம் சரிபடுத்தி விடுகிறேன் என்று உறுதி கொடுத்தார். இதற்கு சாட்சி சிறீமான் சீனிவாசய்யங்கார் அக்கிராசனராக சிறீமான் நாயுடுகாரால் பிரேரேபித்து ஆமோதித்து நிறைவேறியபின் தீர்மானம் சபையோரால் அங்கீகரிக்கப்பட்டதாய் ஏற்பட்ட பின்பும் சிறீமான் சீனிவாசய்யங்கார் எழுந்து நின்று சபையோரைப் பார்த்து "நீங்கள் எல்லாம் என்னைத் தெரிந்தெடுத்தாலும் சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்னுடைய தேர்தலை ஒப்புக் கொண்டதாக அவர் வாயால் சொன்னால்தான் நான் இந்த ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ளுவேன்" என்று சொன்னார். அதுசமயம் சிறீமான்கள் வரதராஜூலு நாயுடு, முதலியார் முதலியவர்களும் நாயக்கரைப் பார்த்து "ஒப்புக் கொண்டேன்" என்று சொல்லும்படி சொன்னதின் பேரில், நாயக்கர் எழுந்து பேசும்போது தீர்மானம் நிறைவேறிய பின்பு என்னை கேட்பதில் பிரயோஜனமில்லை. ஆனாலும் சிறீமான் அய்யங்கார் தலைவராய் இருப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் சிறீமான் அய்யங்காரை விட உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும் இந்த ஸ்தானத்தில் இருந்திருக்கிறார்கள் என்றும் ஆனால் அய்யங்கார் இடத்தில் இதுசமயம் தனக்கு உள்ள மனவருத்தமெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் அய்யங்கார் வாக்கு தவறி இருக்கிறார் என்பதினாலேயேதான் என்றும், இனியாவது அவர் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதானால் தானும் இத்தீர்மானத்தை ஒப்புக் கொள்ளுவதாகவும் சொல்லியிருக்கிறார். இதிலிருந்து சமயம் வரும்போது வாக்குத்தத்தமும் நம்பிக்கையும் கொடுத்து சமயம் தப்பின வுடன் மோசம் செய்கிறவர்கள் பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

சிறீமான் சி.பி. இராமசாமி அய்யர் சட்டசபைக்கு நிற்கும்போது பார்ப்பனரல்லாதாருக்கு நம்பிக்கை கொடுத்து அவர்கள் ஓட்டுப்பெற்று சர்க்கார் அடிமையாகி 5500 சம்பளமுள்ள உத்தியோகமும் பெற்று பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் நடப்பது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காக ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட போது சில பார்ப்பனரல்லாத இளைஞர்களைப் பிடித்து ஏமாற்றி தங்கள் வசப்படுத்திக் கொண்டுபுவகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைகளை நாங்களும் ஒப்புக் கொள்ளுகிறோம்; ஆனால் ஜஸ்டிஸ் கட்சி சர்க்காருக்கு அனுகூலமாயிருக்கிறது; அதை ஒழிக்க வேண்டும்" என்று சொல்லி அந்தக் கட்சியும் அந்தக் கட்சிப் பத்திரிகையும் செல்வாக்கற்றுப் போகும் படி செய்து அது முடிந்த உடன் வேறு சில பார்ப்பனரல்லாத வாலிபர் களை சேர்த்துக்கொண்டு "நீக்கு பெப்பெப்பே, நீ தாத்தக்கு பெப் பெப்பே" என்று சொல்லி துரோகம் செய்வது பார்ப்பனரா? பார்ப்பன ரல்லாதாரா?

இம்மாதிரி தலைமுறை தலைமுறையாய் வழி வழி வம்சமாய் இனி பிறக்கப்போகும் பார்ப்பனரல்லாதாரைத் துரோகம் செய்வதற்கு இனி பிறக்கப்போகும் பார்ப்பனருக்குக்கூட ஆதாரம் தேடி வைப்பது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

பனகால் ராஜாவிடம் போய் ஜில்லா போர்டு மெம்பர் வேலை வாங்கிக்கொண்டு மூன்றாவது நாளே பனகால் ராஜாவுக்கு விரோதமாய் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஓட்டுக் கொடுத்து அவருக்குத் துரோகம் செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

பார்ப்பனரல்லாதார் கட்டுப்பாட்டைக் கலைப்பதற்காக பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் இருந்த ஒரு கனவானுக்கு நீதி இலாக்காவில் பெரிய உத்தியோகம் கொடுப்பதாய் வாக்களித்து ஆசை காட்டி அவரைக் கொண்டு பனகால் ராஜாவின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஓட்டுப்பெற்று பிறகு அவருக்கு என்று வாக்களித்த உத்தியோகத்தை பார்ப்பனருக்கே கொடுத்து வருவதின் மூலம் பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றி துரோகம் செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

பார்ப்பனரல்லாதாருக்கு சில உத்தியோகம் கிடைக்க வழி ஏற்பட்டவுடன் அரசியலில் இனியும் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பலனாய் ஏற்படும் உத்தியோகங்கள் பார்ப்பன ரல்லாதாருக்கு போய்விடுமே என்கிற குரோத புத்தியோடு எங்களுக்கு சீர்திருத்தமே வேண்டாமென்று சர்க்காருக்கு சொல்லுவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

கல்பாத்தி தெருவில் நடக்க சர்க்காரும் ஜனப்பிரதிநிதி சபை என்னும் சட்டசபையும் ஒப்புக்கொண்ட பிறகுகூட "வேலையிருந்தால் தான் போகலாம்" என்கிற வியாக்கியானம் செய்து பார்ப்பனரல் லாதாரின் சுயமரியாதையை ஒடுக்கி வைத்து அவர்களுக்குத் துரோகம் செய்து வருவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

எல்லைப்புற மகமதிய சமூகத்திற்கு மற்ற பாகத்திற்கு அளிக்கப் பட்டிருக்கும் சீர்திருத்தத்திற்கு சமமாகவாவது பாரபட்சமில்லாமல் சீர்திருத்தம் அளிக்கவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத் திற்கு விரோதமாய் அதை எதிர்த்து தோற்கடித்து அச்சமூகத்திற்கு துரோகம் செய்தது நம் நாட்டுப் பார்ப்பனரா ? பார்ப்பனரல்லாதாரா?

மகமதியச் சமூகத்திற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு அனேக மகமதிய தலைவர்களால் சம்பாதிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை ஒழிப்பதற்காக பொறுப்பற்ற இரண்டு மகமதிய வாலிபர்களை பிரதிப் பிரயோஜனம் கொடுத்து அமர்த்திக்கொண்டு மகமதியர் களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே வேண்டாம் என்று சொல்லும் படி செய்து மகமதிய சமூகத்திற்கும் மதத்துக்கும் துரோகம் செய்வது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

இந்தியா சட்டசபைக்கு கிறிஸ்துவ சமூகத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததால் மகமதியரல்லாத பொதுத் தொகுதியின் பேரால் நிற்கும் சிறீமான் வி.சக்கரை செட்டியார் அவர்களை பிராமண ரல்லாத இயக்கங்களும், ஸ்தாபனங்களும் ஆதரித்தும் இந்தியா சட்டசபைக்கு தமிழ்நாடு சார்பாய் ஏற்பட்டுள்ள ஸ்தானங்கள் 6-ல் 5 -க்கு அய்யங்கார்களாகவே நின்று கொண்டு கிறிஸ்தவர் என்பதைக் கூட பார்க்காமல், ஒரு அய்யங்கார் பார்ப்பனரே அதுவும் கிறிஸ்தவசமூகத்திற்குத் தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமலே அனுகூலம் செய்கிறேன் என்று சொல்லும் தலைவரே நின்று கொண்டு அச்சமூகத்திற்கு துரோகம் செய்வது பார்ப்பனரா? பார்ப்பன ரல்லாதாரா? இந்தக் கொடுமை செய்துகொண்டும் அச்சமூகத்திற்கு விரோதமாய் ஒரு கிறிஸ்தவ வாலிபரை விலைக்கு வாங்கிக்கொண்டு அவர் மூலம் தம் சமூகத்திற்கு வகுப்புவாரி உரிமையே வேண்டா மென்று சொல்லும்படி செய்து அச்சமூகத்திற்கு துரோகம் செய்வது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

தொழிலாளர் சமூகத்துக்கு பாடுபடுவதாய் வேஷம் போட்டு அச் சமூகத்தை பல தந்திரங்களால் சுவாதீனம் செய்து கொண்டு அவர்களை ஏமாற்றி அவர்களுக்குத் தலைவராகியும் அவர்கள் ஓட்டுப் பெற்று பதவி அடைந்தும் கடைசியாய் தொழிலாள ஸ்திரீகள் கர்ப்பவதியாயிருந்து பிள்ளை பெற்ற சமயத்தில்கூட சிலநாள் ஓய்வு கொடுக்கக்கூடாது என்று சட்டசபையில் வாதாடி அந்த நலத்தைக் கெடுத்து தொழிலாள சமூகத்திற்கும் பெண்கள் சமூகத்திற்கும் துரோகம் செய்தது நம் நாட்டுப் பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு நாங்கள் நன்மை செய்கிறோம் என்று வாயால் சொல்லிக்கொண்டு காரியத்தில் அச் சமூகத்தை இன்னமும் தாழ்மைப்படுத்த அச் சமூகத்திலேயே ஒரு பொறுப்பற்ற ஏழையை விலைக்கு வாங்கிக்கொண்டு அவரைக் கொண்டே தங்கள் சமூகத்திற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை வேண்டாம் என்று பிரசாரம் செய்யச் செய்து அச் சமூகத்திற்கு துரோகம் செய்து வருவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

குழந்தைப் பருவத்திலிருந்தே சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வளர்ப்பதற்காக ஒரு குருகுலம் ஆரம்பிப்பதாய் சொல்லி பொது மக்களின் சபையான காங்கிரசை நம்பச் செய்து 10 ஆயிரம் ரூபாய் சாங்கிஷன் செய்யப்பட்டு, பார்ப்பனரல்லாத ஒரு காங்கிரஸ் காரியதரிசி நிபந்தனை எழுதி பணம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்ல, அவருக்குத் தெரியாமல் மற்றொரு பார்ப்பன காரியதரிசியைப் பிடித்து முறைக்கு விரோதமாக இரகசியமாய் 5000 ரூபாய்க்குச் செக்கு எழுதி ரூபாய் வாங்கிக் கொண்டு போய் பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்தால் பாவம் என்று இருசார்பு குழந்தைகளுக்கும் முளையிலிருந்தே வித்தியாசம் கற்பித்து பார்ப்பனரல்லாதாரை நிரந்தரமாய்த் தாழ்த்துவதற்காக அந்தப் பணத்தை உபயோகித்த துரோகத்தை செய்தது பார்ப்பனரா? பார்ப்பன ரல்லாதாரா?

காங்கிரசில் தீண்டாமை ஒழிப்பது என்கிற தத்துவத்தை எல்லாரும் ஒப்புக்கொள்வதாய்ச் சொல்லி பார்ப்பனரல்லாதாரை யெல்லாம் காங்கிரசில் சேர்த்து ஜெயிலுக்குப் போகச் செய்து, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று தீர்மான மூலமாய்ச் சொன்னவுடன் ராஜினாமா கொடுத்து வெளியில் போய் மகாத்மா காங்கிரசையே ஒழித்து பார்ப்பனக் காங்கிரசாக்கி தேசத்திற்கும் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கும் துரோகம் செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை, எல்லோரும் சமம் என்று சொல்லி, பார்ப்பனரல்லாதார் ஓட்டுப் பெற்று இந்தியா சட்டசபைக்குப் போய் பிரயாணச் செலவின் பேரால் ஆயிரக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்துக் கொண்ட பிறகு ஒரு பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்து விட்டால், தான் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன் என்று சொல்லி பார்ப்பனரல்லாதாரை இழிவுப் படுத்தி துரோகம் செய்தது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

மகாத்மா காந்தியடிகளின் கொள்கைக்கு 'இந்து' பத்திரிகையும் 'சுதேசமித்திரன்' பத்திரிகையும் விரோதமாய் பிரசாரம் செய்வதால் காங்கிரசில் ஒரு பத்திரிகை இருக்க வேண்டும் என்று சொல்லி காங்கிரஸ் பணத்திலும் 10000 ரூபாய் பெற்று பார்ப்பனரல்லாதாரிடமும் பதினாயிரக்கணக்கான ரூபாய்க்கு பங்குகள் விற்று பணம் பெற்று 'சுயராஜ்யா' என்ற பத்திரிகை ஆரம்பித்து "அவன் போனால் கலகமாகிவிடும் நான் போனால் செருப்பாலடித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லுவது போல் 'இந்து', 'சுதேசமித்திரனு'க்கு விரோதமாய் பிரசாரம் செய்வதாய் சொல்லி இப்போது அவைகளுக்கு மேலாக பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு விரோதமாயும் மகாத்மா காந்தியின் காங்கிரசை ஆழக்குழியில் போட்டு புதைப்பதற்கும் வேலைசெய்து கொண்டு பங்குக்காரர்களையும் பங்கு சேர்த்துக் கொடுத்தவர்களையும் வைது கொண்டு அச்சமூகத்திற்கே துரோகம் செய்து வருவது பார்ப்பனரா? பார்ப்பனரல்லாதாரா?

"ஆகையால் தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்" என்பது போல் தன்னுடைய சம்பள சிப்பந்திகளை வைத்துக்கொண்டு, தன்னிஷ்டப்படிப் பேசி பத்திரிகையில் பார்ப்பனரல்லாதார் பார்ப்பனருக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று சொல்லுவது எவ்வளவு நன்றி கெட்டத்தனம்? ஒவ்வொரு பார்ப்பன ரும் தனியாய் நின்றுகொண்டு தங்கள் வாழ்வுகளையும் தங்கள் செல்வங்களையும் போக போக்கியங்களையும் நன்றாய்க் கவனித்து இதெல்லாம் யாரை ஏமாற்றி அனுபவிக்கிறோம், யாரை துரோகம் செய்து அனுபவிக்கிறோம், எவ்வித நன்றி கெட்ட தன்மையாய் அனுபவிக்கிறோம் என்று அவர்கள் நிதானமாய் யோசித்தால் விளங்காமல் போகாது.

--------------- தந்தைபெரியார் - "குடி அரசு" 29.8.26

என்னைப் போன்ற மக்களையே நான் உருவாக்க நினைக்கிறேன்

ஏப்ரல் 14 பாபாசாகேப் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.


"ஒரு பள்ளியின் ஆசிரியர், ஒரு ‘மகர்' மாணவனைப் பார்த்து, ‘ஏய் யார் நீ? இந்த ஜாதியைச் சார்ந்தவன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடியுமா? உனக்கு எதற்கு முதல் வகுப்பு? நீ மூன்றாம் வகுப்பிலேயே இரு. முதல் வகுப்பெடுப்பது பார்ப்பனருடைய வேலையல்லவா?' என்று கேட்டால், அந்த மாணவன் என்ன விதமான புத்துணர்வை பெற முடியும்? அவன் எப்படி முன்னேற முடியும்? புத்துணர்வை உருவாக்குவதற்கான அடிப்படை அவனுடைய மனதில் உருவாக்கப்பட வேண்டும். உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக இருந்து அதன் மூலம் துணிவாகவும் தன்னம்பிக்கையுடனும் வெற்றி பெறும்போதுதான் அவன் புத்துணர்வு பெற முடியும். ஆனால், தாழ்வு மனப்பான்மையை இந்து மதம் அவனுள் புகுத்தியிருக்கிறது. அது ஒருபோதும் புத்துணர்வை வளர்க்காது. இத்தகைய தாழ்வு மனப்பான்மையும், புத்துணர்வின்மையும் பல ஆயிரம் ஆண்டுகளாக அவன் மீது திணிக்கக் கூடிய அளவுக்கு சூழல்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் ‘கிளார்க்' வேலைகள் மூலம் தங்கள் வயிற்றைத்தான் நிரப்பிக் கொள்ள முடியும். வேறு என்ன நடக்கும்?

மனிதனின் புத்துணர்வுக்குப் பின்னால் இருப்பது அவனுடைய உள்ளம். ஆலைகளின் உரிமையாளர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் தங்களுடைய ஆலைகளுக்கு மேலாளர்களை நியமித்து, தங்கள் ஆலைகளை நடத்துகிறார்கள். இந்த ஆலை உரிமையாளர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அவர்கள் பண்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். நாம் தொடங்கியிருக்கும் இந்த இயக்கம், உங்கள் மனதில் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பணியை செய்கிறது. அதன் பிறகு கல்வி அளிக்கப்பட வேண்டும். நான் கல்வி கற்கத் தொடங்கியபோது கிழிந்த துணிகளையே உடுத்தியிருந்தேன். பள்ளியில் எனக்கு குடிப்பதற்கு தண்ணீர்கூட கிடைக்காது. பல நாட்கள் தண்ணீர் இன்றி நான் பள்ளியில் இருந்திருக்கிறேன். பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் இதே சூழல்தான் நிலவியது. இத்தகைய சூழலில் வேறு எந்த மாதிரியான நிலைமைகளை உருவாக்க முடியும்? வெறும் கிளார்க்குகளைத்தான் உருவாக்க முடியும்.

நான் டெல்லி வைசிராய் குழுவில் இருந்தபோது லின்லித்கோதான் வைசிராயாக இருந்தார். ‘முஸ்லிம்களுக்கு கல்வி அளிக்க அலிகார் பல்கலைக்கு வழக்கமான செலவுகளோடு கூடுதலாக மூன்று லட்சம் ரூபாய் செலவழியுங்கள். அதேபோல, மூன்று லட்ச ரூபாயை இந்து பனாரஸ் பல்கலைக்கு வழங்குங்கள். ஆனால், நாங்கள் இந்துக்களோ முஸ்லிம்களோ அல்ல. நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு செய்ததைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாக செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு செய்கின்ற அளவுக்காவது எங்களுக்கு செய்யுங்கள்' என்று சொன்னேன். அதற்கு லின்லித்கோ, நீ என்ன சொல்வதாக இருந்தாலும் அதை எழுதிக் கொடு என்று சொல்லிவிட்டார். எனவே, அதை அப்படியே நான் ஒரு கோரிக்கை மனுவாகத் தயாரித்தேன். அந்த நகல் என்னிடம் அப்படியே இருக்கிறது. அய்ரோப்பியர்கள் மிகவும் கருணை உள்ளவர்கள். அவர்கள் என்னுடைய வரைவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால், எந்த வேலைக்காக அந்தப் பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினை. நமது பெண்கள் கல்வி கற்கவில்லை என்பதால், அவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்களுக்கென்று விடுதிகள் தொடங்கப்பட்டன. அதற்காக பணம் செலவழிக்கப்பட்டது. நம்முடைய பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் படித்த பிறகு, வீட்டில் பல்வேறு வகையான உணவுகளை தயாரிப்பது யார்? அவர்களுடைய கல்வியின் ஒட்டு மொத்த விளைவு என்ன? அரசு பல்வேறு பிரிவுகளின் கீழ் பணத்தை செலவழித்தது. ஆனால், கல்விக்காக பணத்தை அவர்கள் செலவழிக்கவில்லை.

எனவே, நான் ஒரு நாள் லார்ட் லின்லித்கோவிடம் சென்று கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்னவாயிற்று என்று கேட்டேன். மேலும் நீங்கள் கோபப்படவில்லையென்றால், நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ‘நான் மட்டுமே அய்ம்பது பட்டதாரிகளுக்கு சமமானவன் இல்லையா?' என்றேன். அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் நான் அவரிடம் கேட்டேன். இதற்கு என்ன காரணம்? ‘எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை' என்றார். என்னுடைய படிப்பு அவ்வளவு மகத்தானது. என்னால் அரண்மனையின் உச்சியில் அமர முடியும். என்னைப் போன்ற மக்களைத்தான் நான் உருவாக்க நினைக்கிறேன். நம்முடைய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் அறிவார்ந்த மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் எழுத்தரால் என்ன செய்ய முடியும்? நான் சொன்ன அந்த நிமிடமே லார்ட் லின்லித்கோ ஒப்புக் கொண்டு, பதினாறு மாணவர்களை உயர் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பினார். இந்தப் பதினாறு பேரில் சிலர் அரைவேக்காடுகளாகவும் சிலர் முழு அறிவாளிகளாகவும் இருக்கக் கூடும். அது வேறு பிரச்சினை. ஆனால், அதன் பிறகு சி. ராஜகோபாலாச்சாரி, இத்தகு உயர் கல்வித் திட்டத்தையே ரத்து செய்து விட்டார்".

15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி பாபாசாகேப் டாக்டர் அண்னல் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரை

Friday, April 11, 2008

விஷமப் பிரச்சாரத்துக்கும், ஏமாற்றுப் பிரச்சாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.

நமது கேவல நிலைமையும், முட்டாள்தனத்தையும், நம்மை பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும் போது, நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா? ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்? நமது இழிவானது நேற்று, இன்று என்று இல்லாமல், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால், நமது ரத்தம் வெட்கப்படுவதற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது.

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும் சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய, சிரிப்பு விளையாட்டில் ஏற்படக்கூடியதல்ல. இதற்காக அநேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டிவரும். அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல், நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைமைக்கும், ஆளாகி வருகிறோம்.

நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல், நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவதென்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும். சமூகத்தில் மேல்ஜாதி, கீழ்ஜாதி, அடிமை ஜாதி என்பவை இருப்பதோடு, ஆண் - பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வும் இருந்து வருகிறது. இவை தவிர, ஏழை-பணக்காரன், முதலாளி - தொழிலாளி தன்மையும் இருந்து வருகிறது. இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும், சில முயற்சியால் செயற்கையாக ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்லவென்றும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல்நிலையில் உள்ளவனும், கீழ்நிலையில் உள்ளவனும் நம்பிக்கொண்டு இருக்கிறான்.

இந்த மூட நம்பிக்கைதான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக் கொண்டு வருகிறது. சாதாரணமாக, மனிதப் பிறவியில் கீழ்ஜாதி, மேல்ஜாதி, அடிமை (பறை) ஜாதி என்பவை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; பல ஆணிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஆக நாளது வரை யாரும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. ஏனெனில், செய்ய முடியாதபடி அவனவன் நம்பிக்கையைச் செய்து கொண்டான். ஜாதி வித்தியாசங்களுக்கும், ஜாதிக் கொடுமைக்கும் கடவுள் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால்தான் பரிகாரம் செய்ய முடியும்? எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றி சந்தேகப்பட்டாலும், தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும், மேன்மையாகவும் கற்பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்தி பெருமையடைகிறான்; சாஸ்திரங்களில், மதங்களில் அவற்றிற்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கிறான்; புராணங்கள் எழுதி வைத்துப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடம் மாத்திரமல்ல; எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகிறது. ஜாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை விபசாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை ஜாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது. அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்பந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம், உண்மையறியாமலும், உலகமொப்புக்கும், தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதி பேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும்படியாகவோ செய்த காரியங்கள் அல்ல. கடவுளும், மதமும் உலகில் ஆயிரம் வருஷத்துக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மறைந்தும் மாறுதலடைந்தும் சீர்திருத்தம் பெற்று இருக்கிறது.

கடவுளால், மதத்தினால் பிழைக்கும்படி வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் தவிர - சமூகம் தவிர, மற்ற இடங்களில் கடவுளும், மதமும் எவ்வளவோ குறைவடைந்து வருகின்றன. உருவமில்லாத, பெயரில்லாத கடவுள்கள் தோன்றிவிட்டன. மத சின்னமில்லாத மதங்கள் தோன்றிவிட்டன. இரண்டையும் பற்றி கவலைப்படாமல் தங்கள் தங்கள் வேலையைக் கவனிக்கும்படியான உணர்ச்சிகளும் தோன்றிவிட்டன. தங்களுக்கு அதைப்பற்றிய கவலையில்லாமல் மற்றவனை ஏய்க்கவும், கட்டுப்படுத்தவும், அடிமையாக்கவும் மாத்திரமே இன்று கடவுளும், மதமும் வெகு மக்களால் கையாளப்படுகிறதே ஒழிய வேறில்லை.

சகல துறைகளிலும் உலகம் முற்போக்கடைவதுபோலவே கடவுளிலும் மதத்திலும்கூட உலகம் முற்போக்கடைந்து வருகிறது. சுயமரியாதை இயக்கம் இந்த க்ஷணமே எல்லோரையுமே கடவுள், மத நம்பிக்கையை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தவில்லை. நமக்கு புரியாததும், நம்மால் அறிய முடியாததும், குணம், உருவம், சலனம் இல்லாததும் ஆன கடவுளைப் பற்றி சுயமரியாதை இயக்கத்துக்கும் கவலையில்லை. மற்றபடி, கடவுளைப் பற்றி தெரிந்துவிட்டதாகச் சொல்லுவதும், அதற்கு உருவம், பெயர், குணம், சலனம் ஏற்படுத்துவதும், அதன்மீது பொறுப்பைச் சுமத்துவதும், மனிதன் மற்றவர்களால் அடையும் கொடுமைக்கும், இழிவுக்கும் பொறுப்பாக்குவதுமான கடவுள் உணர்ச்சியையே சுயமரியாதை இயக்கம் குறை கூறுகிறது. மற்றும், கண்டதெல்லாம், நினைத்ததெல்லாம் கடவுள் என்கின்ற உணர்ச்சியையும், ஆயிரக்கணக்கான கடவுள்கள் உணர்ச்சியையும் ஒழிக்கவேண்டும் என்கின்றது.

இன்று ஒரு இந்துவால் எவை எவை எல்லாம் கடவுள் என்பதாக மதிக்கப்படுகிறது என்றால், மரத்தில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகிறது; புல் பூண்டுகளில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகிறது; மலத்தில் ஒரு கூட்டமும்; பூச்சி புழுக்களில் ஒரு கூட்டமும்; மிருகங்களில் பன்றி, நாய், கழுதை, மாடு முதலிய ஒரு கூட்ட மிருகமும்; பட்சியில் கருடன் காக்காய், கோழி முதலிய ஒரு கூட்டமும்; கல்லுகளிலும், மண்களிலும் ஒரு கூட்டமும்; காகிதங்களிலும், எழுத்துகளிலும் ஒரு கூட்டமும்; மனிதர்களில் ஒரு கூட்டமும் இன்று மனிதனால் கடவுளாகப் பாவிக்கப்பட்டு பூசை, வணக்கம், பலி முதலியவை செய்து, ஏராளமான பொருள்கள் நாசமாக்கப்பட்டு வரப்படுகின்றன.

இந்த முட்டாள்தனங்களையும், மோசக் கருத்துகளையும் முதலில் ஒழிக்கவேண்டுமென்றுதான் சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது. இதைத் தைரியமாய் எடுத்துச் சொல்ல இன்று இந்நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் இருக்கிறது. அது, இந்த மாதிரியான கடவுள் உணர்ச்சிகளை ஒழித்துத் தீருவதென்றே கங்கணம் கட்டிக்கொண்டு உயிர் வாழுகின்றது. நாஸ்திக இயக்கம் என்று சொல்வதாலேயே அது பயந்து கொள்ளப் போவதில்லை. கடைசி வரை அது உழைத்துத்தான் தீரும். மத விஷயத்திலும் இப்படித்தான் இருந்து வருகிறது. ஆகவே, சுயமரியாதை இயக்கம் இன்னது என்றும், காங்கிரஸ் இயக்கம் இன்னது என்றும் உணர்ந்து, உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள். விஷமப் பிரச்சாரத்துக்கும், ஏமாற்றுப் பிரச்சாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.

-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 5.4.1936

பார்ப்பனர்களை விட அறிவற்ற ஒரு காட்டுமிராண்டி உலகத்திலேயே இல்லை

இவ்வளவு தெளிவான காலத்தில் நம் மக்களில் பலருக்கு இன்னும் அறிவு ஏற்படாததற்குக் காரணம், மானங்கெட்ட தன்மையோடு அறிவிற்கு ஏற்காத வகையில் கடவுளையும், மதத்தையும், சாஸ்ரத்தையும், கடவுள் கதைகளையும் ஏற்படுத்தி அதனை நம்பும்படியாகச் செய்து விட்டதாலேயே ஆகும். உலகில் உள்ள மக்கள் தொகையில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே ஆவார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே மற்ற நாட்டு மக்கள் அறிவு வளர்ச்சி பெறுகின்றனர்.

கடவுள் நம்பிக்கையின் காரணமாகவே நம் நாட்டு மக்கள் இன்னும் அறிவு பெறாமல் வளர்ச்சியடையாமல் இருக்கிறார்கள். இந்தக் கடவுளில் நாம் கைவைக்க ஆரம்பித்த பின்தான் இன்று நம் மக்கள் ஓரளவு வளர்ச்சி பெற்று வருகின்றனர்.நம் நாட்டிற்கு வந்த பெரிய கேடு கடவுள்.

கடவுளின் பெயரால் மதம், மதத்தின் பெயரால் சாஸ்திரம் என்பதெல்லாம் ஆகும். ஒரு மனிதன் இராமனை, முருகனை, கணபதியை நம்புகின்றான் என்றால் அவனை விட அடிமுட்டாள் எவனுமிருக்க முடியாது. இவற்றை உற்பத்தி செய்திருக்கின்ற கதைகளைப் பார்த்தால் பார்ப்பனர்களை விட அறிவற்ற ஒரு காட்டுமிராண்டி உலகத்திலேயே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு மடத்தனமாக, காட்டுமிராண்டித் தன்மையுடையதாக அவற்றைக் கற்பித்திருக்கின்றான். அவனால் கற்பிக்கப்பட்ட கடவுள்களைத் தான் நம் மக்கள் ஏற்றுக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.இன்னும் எத்தனை நாளைக்கு மக்கள் மடையர்களாக இருப்பார்கள். இல்லாத சாமியை செருப்பாலடித்தது உன் மனதைப் புண்படுத்துகிறது என்றால், இத்தனை ஆயிரம் மக்களைச் சூத்திரர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் நான் மட்டும் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளக் கூடிய வகையில் நீ ***** வைத்துக் கொண்டிருப்பதும் எங்கள் மனதைப் புண்படுத்துமா இல்லையா? என்று கேட்கின்றேன். எங்களை இழி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கிய கடவுளை செருப்பால் மட்டுமல்ல, வேறு எதனால் வேண்டுமானாலும் அடிக்கலாமே!

இந்து மதக் கொள்கைகளும், சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள்களும் இருக்கின்ற வரை நாம் மனிதர்களாக முடியாது. பார்ப்பனர்கள் சாஸ்திரப்படி எந்தக் கொலையும் செய்யலாம், எந்த அயோக்கியத்தனமான அதருமத்தையும் செய்யலாம்; என்பது தருமமாக இருக்கிற வரை எப்படி மனிதன் யோக்கியனாக இருக்க முடியும். இந்தக் கடவுள் மதம் சாஸ்திரங்களைக் காரித்துப்ப வேண்டும்; தீயிட்டுக் கொளுத்தவேண்டும்.இந்தக் காரியத்தை நான் இன்று செய்யவில்லை. 40 வருடங்களாகச் செய்து வருகின்றேன். திருமதி. இந்திராகாந்தி அம்மையாரே நான் இதை 35 வருடங்களாகச் செய்து வருகிறேன் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மனிதன் ஒரு சிட்டிகை சாம்பலை நெற்றியில் இட்டுக் கொண்டால் அவன் செய்த பாவம் எல்லாம் போகும் என்று சொன்னால், எந்த மனிதன் பாவம் செய்யாமல் இருப்பான்? செம்மண் பட்டையடித்துக் கொண்டால் பாவம் போகும் என்றால், எந்த மனிதன் அயோக்கியத்தனம் செய்யாமல் இருப்பான்?நம் மக்கள் அறிவுள்ளவர்களாக வேண்டும். நம் நாடு மற்ற உலக நாடுகளைப் போன்று வளர்ச்சியடைய வேண்டும். மற்ற உலக மக்களைப் போன்று நம் மக்களும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசையாகும்.

நான் சொன்னதைப் போல் பலர் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருக்கிறார்கள். காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.நான் பார்ப்பனர்கள்ன் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது.

நாம் கெட்டதற்குக் காரணம் நாம் இந்து என்று சொல்லிக் கொண்டதாலேயே ஆகும். இந்து என்பது பார்ப்பானால் உண்டாக்கப் பட்டதே தவிர, எந்தப் புராண இலக்கியத்திலும் இந்து என்பதற்கு ஆதாரமில்லை. பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்கக்கூடாது, மதக் குறியான சாம்பல் மண் பூசக் கூடாது, கோயிலுக்குப் போகக் கூடாது, எதற்காக நீங்கள் கோயிலுக்குப் போக வேண்டும்? அதனால் எவனோ பார்ப்பனர்கள் தின்ன வேண்டும் என்பதோடு நாமெல்லாம் முட்டாளாகிறோம். இதைத் தவிர வேறு பயன் பலன் என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும். நாமெல்லாம் பகுத்தறிவாளர்களாக வேண்டும்.

-------- 13.4.1971 இல் திண்டுக்கல்லில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு

உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு செல்லும்

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

ஆனால், இந்த இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவை (உயர் வருவாய் பிரிவினர்) சேர்க்கக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த கல்வியாண்டில் இந்த சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.

இந்த தடையை நீக்க வேண்டும், வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இடைக்காலத் தடையை நீக்க மறுத்த தலைமை நீதிபதி, அரசியல் சாசன பெஞ்சுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார். இந்த பெஞ்ச் தனது விசாரணையை மேற்கொண்டது. இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி மத்திய அரசின் சட்டம் முறைப்படியானதே என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்தம், அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 93வது திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

----------நன்றி -- தட்ஸ்தமிழ்