Tuesday, April 05, 2011

வீட்டுக்கு வீடு ஆடுகளா?

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலைஞர் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டுள்ள கல்விப் புரட்சிபற்றி எடுத்துக் கூறி வருகிறார். அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையாரின் மனப் போக்கையும் வெளிப்படுத்துகிறார்.

வீட்டுக்கு நான்கு ஆடுகள் தருவதாக ஜெயலலிதா கூறுவதன் பின்னணியை அம்பலப்படுத்துகிறார்.

ஆடு, மாடுகள் மேய்த்துக் கிடந்த பஞ்சம, சூத்திர மக்களுக்குக் கல்வி வாய்ப்பும், உரிமையும் சட்டப்படி தேவை என்பதற்காகப் போராடி வருவது திராவிடர் இயக்கம் - நீதிக் கட்சி - திராவிடர் கழகம் தி.மு.க. போன்ற அமைப்புகள்.

காங்கிரசை ஒழித்தே தீருவேன் என்று சூளுரைத்து காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய தந்தை பெரியார் அவர்கள், காமராசரைப் பச்சைத் தமிழர் என்றும், கல்விக் கண்களைத் திறந்த இரட்சகர் என்றும் போற்றிப் புகழ்ந்தார் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் - ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாதாருக்குக் கல்விக் கண்களைத் திறந்து நாடெங்கும் கல்வி ஓடையை அந்தப் பெருமகன் திறந்து விட்ட ஒரே காரணத்துக்காகத்தானே!

உடம்பெல்லாம் மூளை என்று அக்கிரகாரம் போற்றிப் புகழ்ந்த சி.ஆர். ஆச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறை சென்னை மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் எல்லாம் அவர் செய்த முதல் காரியம் என்ன?

1937-1939இல் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952-1954இல் 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படிப்பு, அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற வருணாசிரமக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரே!

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே மனுதர்மம்?
இதனை எதிர்த்துத் துவக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கம் தமிழர்களுக்குக் கல்வி கிட்டச் செய்வதில் எப்பொழுதுமே கவனமாக இருந்து வந்திருக்கிறது.

காமராசர் அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வியை அறிவித்தார் என்றால், அண்ணா அவர்கள் அடுத்த கட்டமாக பி.யூ.சி. வரை இலவசக் கல்வி என்று ஆக்கினார்.

அடுத்த கட்டமாக முதுகலை வரை இலவசக் கல்வி என்னும் பெரும் புரட்சியைச் செய்தவர் நம்முடைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆவார்.

இப்படி மேலும் மேலும் கல்வி வளர்ச்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகள் இலவசமாகத் தருவேன் என்று ஜெயலலிதா கூறுவதன் தாத்பரியம் என்ன?

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில்கூட தி.மு.க. தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக +2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதே தவிர, அதற்கு மேலாக ஒன்றும் அறிவிக்கப்பட முடியவில்லையே!

2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் (னுசடியீ டிரவள) 3.81 சதவிகிதமாக இருந்தது. 2009-2010 தி.மு.க. ஆட்சியிலோ அது ஒரு சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதே!

இடைநிலைப் பள்ளிகளில் 2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் இடைநிற்றல் 7.58 சதவிகிதமாக இருந்தது. 2009-2010 தி.மு.க. ஆட்சியிலோ 1.79 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதே!

2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிகளில் படித்தோர் 2 லட்சத்து 82 ஆயிரத்து 802; 2010-2011ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியிலோ அது 6 லட்சத்து 9 ஆயிரத்து 421 ஆக உயர்ந்ததே!

நுழைவுத் தேர்வை ஒழித்ததில்கூட அ.தி.மு.க.வின் அணுகுமுறை காரணமாக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அறிமுகப்படுத்திய நுழைவுத் தேர்வு ரத்து தோல்வி அடைந்து விட்டதே! அதே நேரத்தில் அதே உயர்நீதிமன்றமும் அதற்கு அடுத்து உச்சநீதிமன்றமும் தி.மு.க. கொண்டுவந்த நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று தீர்ப்பு அளித்துவிட்டதே!

காரணம் என்ன? உள்ளார்ந்த உணர்வுடன், சரியான தீர்வைக் காண வேண்டும் என்ற கவலையுடன், உரிய சட்ட திட்டங்களை நுணுகி ஆய்வு செய்து தி.மு.க. செயல் பட்டதுதான்.

ஓர் ஆட்சியை ஆதரிப்பது - எதிர்ப்பது என்பதில் சமூக நீதியில் - கல்வி அளிப்பதில் ஓர் ஆட்சி எப்படி நடந்து கொள்கிறது என்பது திராவிடர் கழகத்திற்கு முக்கியமான பார்வையாகும்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் பற்றியெல்லாம் ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜெயலலிதா; திராவிடர் கழகத் தலைவரின் அணுகு முறையாலும், நிர்பந்தத்தாலும், அரசியல் சூழலாலும்தான் ஜெயலலிதா அம்மையார் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்னும் பாட்டைக்கு வந்தார் என்பதை மறக்கக் கூடாது.

ஜெயலலிதா மறுபடியும் ஆடு, மாடுகளை வீட்டுக்கு வீடு இலவசமாக அளிப்பேன் என்று கூறுவது ஒரு வகையான பிற்போக்குத்தனமான பார்வை என்பதில் அய்யமில்லை.

----------------”விடுதலை” தலையங்கம் 5-4-2011

No comments: