Wednesday, March 19, 2008

பெண்களுக்கு நகை மாட்டியது ஏன்?

"ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் கருத்தே பெண்களை அடிமையாக்கவும், அடக்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும். காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டி வைத்ததானது மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு, ஆணிகள் திருகி இருப்பதால் ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல், எங்கு காது போய்விடுகிறதோ, மூக்கறுந்து போய்விடுகிறதோ என்று தலைகுனிந்து முதுகை அடிக்கத் தயாராக இருப்பதற்காக அது உதவுகிறது. அன்றியும் நிறைய நகைகளை மாட்டிவிட்டால், மாடுகளுக்கு தொழுக்கட்டை கட்டிய மாதிரி வீட்டை விட்டு எங்கும் தனியே போக மாட்டார்கள். நகை போய்விடும் என்று வீட்டோடு கிடப்பார்கள்."

- தந்தை பெரியார்

“யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?''

தீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.
- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 2.2.2008

2. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தலித்துக்கு சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தலித்துகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தலித்துகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தலித்துகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25.1.2008,

3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தலித் சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008

4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.
- தி இந்து - 10.2.2008

5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.
- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008

6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.
- தினமணி -14.2.2008

7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.
- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08

8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.

‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், “அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார்.
- தி வீக் - 13.1.2008.

9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.
- தி இந்து - 4.2.2008

நன்றி:"தலித்முரசு" -பிப்ரவரி-2008

Tuesday, March 18, 2008

உலகப்பன் பாட்டு

பகுத்தறிவு மன்றத்தில் உலகம் என்ற
பழையமுத லாளியினை நிற்கவைத்து
மிகுத்திருந்த உன்நன்செய், புன்செய் யாவும்
வெகுகாலத் தின்முன்னே, மக்கள் யாரும்
சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்டதுண்டோ?
சொல்!என்றேன்; உலகப்பன் ஆம் ஆம் என்றான்.
வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டுமுண்டோ
வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன். வாய்ச்சொல் என்றான்.

குத்தகைக்கா ரர்தமக்குத் குறித்த எல்லை
குறித்தபடி உள்ளதுவா என்றுகேட்டேன்.
கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம்
கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே
கூலிமக்கள் அதிகரித்தார், என்னசெய்வேன்!
பொத்தல் இலைக் கலமானார் ஏழைமக்கள்.
புனல் நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர்;

அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வமெல்லாம்
அடுக்கடுக்காய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு
சதிராடு தேவடியாள் போல்ஆடிற்று!
தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்;
இதுஇந்நாள் நிலை என்றான் உலகப்பன் தான்!
இந்நிலையி லிருப்பதனால் உலகப்பா நீ!
புதுகணக்குப் போட்டுவிடு, பொருளைஎல்லாம்
பொதுவாக எல்லார்க்கும்நீ குத்தகைசெய்.

ஏழைமுத லாளியென்பது இல்லாமற்செய்,
என்றுரைத்தேன். உலகப்பன் எழுந்து துள்ளி,
ஆழமப்பா உன் வார்த்தை! உண்மையப்பா,
அதற்கென்ன தடையப்பா, இல்லையப்பா;
ஆழமப்பா உன்கருத்து, மெய்தானப்பா,
அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா,
தாழ்வுயர்வு நீங்குமப்பா, என்றுசொல்லித்
தகதகென ஆடினான், நான்சிரித்து,

ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப்பார்!
ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்.
செகத்தப்பன் யோசித்துச் சித்தம்சேர்ந்தான்,
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!

-------------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

கடவுள் எது?

பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டை யும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாத்திகனாகத் தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாத்திகனாக இருந் தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்! ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும், தரித்திரனும் தானாகவே மறைந்து போவார் களா, மாட்டார்களா?
- தந்தை பெரியார் -"குடிஅரசு" 28.10.1944
`

Sunday, March 16, 2008

பொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்

தமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரச்சாரக்காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால், நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொது நலப் பேரை வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் செய்யும் பிரச்சாரம் எல்லாம், ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

லண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது, “உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு, மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டு பாடுபடாமல் ராஜபோகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப்பனர்கள் - இந்த நாட்டுப் பொது உடைமைக்காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தம்என்ன?” என்று கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்!

அதுபோல் பார்ப்பனர்கள் பாடுபடாமலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டு, மற்ற மக்களுக்கு மேலானவர்களாக நடந்துகொண்டும் பொது உடைமைப் பிரச்சாரத்தில் காங்கிரசையும், பார்ப்பனியத்தையும் கண்டிக்காமல் - அவற்றைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், மரியாதைக் கட்சியையும் குறை கூறுகிறார்கள் என்றால், இந்த இரண்டு கட்சிகளும் வர்ணாசிரமக் காங்கிரசுக்கும் பர்ப்பனியத்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.

பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும், என்னவென்றால் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்திவிட்டு, எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வர்ணாசிரமப் பார்ப்பனனிடம் தானாகவே வந்துவிடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமை திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் – அவர்கள் வாழ்க்கை முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.

ஆதலால் பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால், அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது உடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக்காரணமாகும். நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் பார்த்து மயங்கி விடுகிறார்கள். பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் காங்கிரஸ்காரர். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் லட்சாதிபதி. இருவரும் பெரும் பொதுவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்கார பார்ப்பõனுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்கார பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனுடைய, போக போக்கியம் குறைவுபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து – ஜில்லா கலெக்டர், ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும், சங்கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.

இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயானால், தனி உடைமை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்நாட்டில் பொதுவுடைமை கூட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத் தான் பலர் மேன்மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார்கள். இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாக, ஏழைகளாக இருக்கிறார்கள். இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச சாட்சியாகும்.

ஆங்கிலத்தில் ‘கேஸ்ட்’, ‘கிளாஸ்’ என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்லுவதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது ; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்தந்த ஜாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு; பிறக்காதவனுக்கு கிடைக்கவே கிடைக்காது. மேல்நாட்டில் ஜாதி இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்பு சண்டை தொடங்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை தொடங்க வேண்டியதாகும்... பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொது உடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம் தான் போய் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொது உடைமைத் தத்துவத்திற்கு பாலபாடம்.
-----------தந்தைபெரியார் - ‘குடி அரசு’ - 25.3.1944

Friday, March 14, 2008

ஆதிதிராவிடரைத் தடுப்பது நியாயமா?

கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான். விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்விக்கிறாள். குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளவன், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்பவர்கள். ஆலயங்களில் நுழைய முடியாதபடி தடை உண்டா? இல்லை. ஆனால், ஆதி திராவிடரை மட்டும் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தடுக்கிறோம். நியாயமா?

- அறிஞர் அண்ணா (பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு - பக்கம் 312).

Wednesday, March 12, 2008

இராமன் செய்த சம்புகன் படுகொலை

இராமன் ஒரு மன்னன் எனும் நிலையை ஆராய்வோம். நெறிசார்ந்த மன்னன் என இராமன் கருதப்-படுகிறான். ஆனால், அம்முடிவு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதா? உண்மை-யென்னவெனில் இராமன் மன்னனா யிருந்து ஒரு போதும் கோலோச்சவில்லை. பெயரளவில் தான் அவன் மன்னனாய் இருந்திருக்கிறான். ஆட்சிப் பொறுப்பு அனைத்தும் அவன் தம்பி பரதனிடமே ஒப்படைக்கப் பட்டிருந்தது என்று வால்மீகியே சொல்கிறான். அரசாட்சி மற்றும் நாட்டுப் பரிபாலனத்திலிருந்து இராமன் முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறான்.

இராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறான். அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்-பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும், பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடன் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறித் தன் நேரத்தைக் கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக்களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் கழிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான் (உத்தர-காண்டம், சரகம் 43, சுலோகம் 1) இராமன் அந்தப்புரப் பெண்களோடு அனு-பவித்த களியாட்டங்களை வால்மீகியும், மிக விசாலமாகவே விவரிக்கிறான். அசோகவனம் எனும் அழகிய பூங்காவில் இந்த அந்தப்புரம் இருந்தது. அங்குதான் இராமன் சாப்பிடுவது வழக்கம். இராமனின் உணவில் அருஞ்சுவைப் பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றன. மது, மாமிசம், பழவகைகள் அனைத்தும் உட்பட. இராமன் மதுவை அறவே தொடாத-வன் அல்ல. இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். அப்படிக் குடித்துவிட்டு அவன் போடும் கூத்தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான். (உத்தரகாண்டம்:சரகம் 42. சுலோகம் 8) என வால்மீகி குறிப்பிடுகிறான். அந்தப்புரப் பெண்களுடன் இராமன் வாழ்ந்து கழித்ததாய் வால்மீகி சொல்லும் விவரங்கள் அற்பமான-தல்ல. அந்தப்புரத்தில் இயல், இசை, நாட்டியத்-தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்சரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளி-லிருந்தும் பெண்ணழகிகள் எல்லாம் அந்த அந்தப்புரத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். இப்படிப் பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்கள் எல்லாம் இராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு-பட்டனர். பதிலாக இராமன் அப்பெண்களுக்கு மாலை அணிவிப்பானாம், வஞ்சியரின் வளையத்துள் கிடந்த ஆடவருள் இளவரசன் இராமன் முதல்வன் என்கிறான் வால்மீகி. இவைகளெல்லாம் இராமனின் ஒரு நாள் நிகழ்ச்சிகளே அல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளே இவை-களாகும். நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றதில்லை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். நாட்டு மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக்கூட இராமன் ஒரு போதும் கடைபிடிக்கவில்லை. தம்மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்-பத்தைக் குறிப்பிடுகிறான். அதுவும் ஒரு துயர-மான நிகழ்ச்சியாய்த் தெரிகிறது. அக்குறையைத் தாமே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படிச் செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறான் வால்மீகி. இருந்த போதிலும் ஓர் பார்ப்பானின் பையன் ஒருவன் அகால மரணமடைந்ததாய்ச் சொல்லப்-படுகிறது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்-தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனை நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட மாசுதான் மகனின் மரணத்திற்ககுக் காரணம் என்றான். அக்குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான். குற்ற-வாளியைப் பிடித்துத் தண்டித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (உண்ணாவிரதம்) நடத்தித் தற்கொலை செய்துகொள்வேன் என அச்சுறுத்தினான். நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டு மக்களுள் அதாவது இராம இராஜ்யத்தில் யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். இந்து (புனித) சட்டங்களின்படி பார்ப்பான்கள் மட்டுமே தவம் செய்யலாம். பார்ப்பான்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்றும் மேலும், நாரதன் அடுக்கினான். தருமத்திற்கு எதிராய் ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும்பாவம். குற்றம் என்றும் இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்துவரப் புறப்பட்டான். இறுதியில் நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு மனிதன் கடினமான தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். தவத்தை மேற்கொண்டிருக் கிறவன் யார் என்று கூட விசாரிக்க வில்லை. தவத்தில் ஆழ்ந்திருந்தவனோ சம்புகன் என்ற சூத்திரன். மோட்சத்தை அடையும் நோக்கத்துடன் தவம் செய்து கொண்டிருந்தான். விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை-நியாயத்தை அறிந்-திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலை-யைச் சீவிவிட்டான் இராமன். இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த அப்பார்ப்பானின் பிள்ளை மீண்டும் உயிர் பெற்றானாம். கடவுள்க-ளெல்லாம் மன்னன் இராமன் மீது மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டிருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பார்ப்பான் பையனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் ஆராதித்தான்-அந்த பார்ப்பான் பையன் எப்போதோ உயிர்பெற்று எழுந்து விட்டான், என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லிவிட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்திற்குப் போனான். சம்புகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்குப் பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்தியை அடைந்தான். இவன் தான் ராஜாராமன்!.

-------- அண்ணல் அம்பேத்கர்