தேசீயப் பிராமணர்களென்போரும், தேசீயப் பிராமணப் பத்திரிகைகளென்பதுவும் பிராமணரல்லாதாரை எவ்விதத்தில் அடக்கியாள்வது என்னும் விஷயமாய் பெரிய சதியாலோசனைகள் செய்து, பிராமணரல்லாதார் சிலவிலும், பிராமணரல்லாதார் உழைப்பிலும் தங்கள் காரியத்தை நடத்தி வருகிறது. பிராமண ரல்லாதார்களில் பாமர ஜனங்களும் (தங்களது அறியாமையினாலும்) சோற்றுப் பிரசாரகர்களும் இவர்களுக்கநுகூலமாயிருந்து தங்கள் சமூகத்தின் சுயமரியாதையையே பாழாக்கி வருகின்றார்கள். தன்னு டைய சாமர்த்தியத்தினால் பிராமணரல்லாதாரில் பெரும்பாலோர் தன்னை நம்பும்படி செய்து அவர்களுக்குத் தலைவருமாகி அச்செல் வாக்கால் மகாத்மாவின் பிரதம சீடராகி ஒரு நிலையான நல்ல பெயரை ஏற்படுத்திக் கொண்ட சிறீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் இப்பொழுது தமது சுயரூபத்தைக் காட்டத் துணிந்துவிட்டார். ஒவ்வொரு நாளும் சட்டசபைத் தேர்தலுக்கு சுயராஜ்யக் கட்சியாருக்கே வோட் செய்யுங்கள்; மதுவிலக்குச் செய்ய அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று விளம்பரம் போட்டு வருகிறார். சுயராஜ்யக் கட்சியாரால் எப்படி மது விலக்குச் செய்யக்கூடும் என்பதைப் பற்றி அநேக தடவைகளில் இவரே மறுத்துப் பேசியிருக்கிறார். சுயராஜ்யக் கட்சி காரியதரிசியாகிய சிறீமான் சத்தியமூர்த்தியும் சுயராஜ்யக் கட்சியின் மூலம் மதுவிலக்குச் செய்ய முடியாதென்று சொல்லியிருக்கிறார். சுயராஜ்யக் கட்சியின் ஆதிக்கத்தால் காங்கிரஸ் காரியதரிசியாகிய சிறீமான் ரெங்கசாமி ஐயங்காரும் தமது பத்திரிகையின் மூலம் தினமும் சாராயம் விற்றுப் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறார். கோயமுத்தூர் ஜில்லா சுயராஜ்யக் கட்சித் தலைவராகிய சிறீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரோ இன்னமும் தமது மரங்களில் கள்ளுற்பத்தி செய்வதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறார். சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கோ இன்னமும் மது இல்லாவிட்டால் ஒரு காரியமும் செய்ய முடியாது.
இவ்வளவும் ஒருபுறமிருக்க சிறீமான் ராஜகோபாலாச்சாரியாரே சட்டசபைக்குப் போவதைப் பற்றிப் பேசுகையில் வெளியில் சட்ட மறுப்பைச் செய்து கள்ளை நிறுத்துவதென்றும், காசிக்குப் போக முடியாவிட்டால் சட்டசபைக்குள் போய் கள்ளைக் குடிக்க வேண்டு மென்று சட்டம் செய்வதற்கு அநுகூலமாயிருக்கிற சட்டசபையாகிய கள்ளுக் கடைக்குப் போவதாவென்று பேசியிருக்கிறார். இவ்வார்த்தை சொன்னதற்காக, இவர்பேரில் குற்றப் பத்திரிகை படிப்பதற்கு ஒரு தீர்மானத்தை சிறீமான் சத்தியமூர்த்தி கொண்டுவந்து சிறீமான் ராஜகோபாலாச்சாரியார் சட்டசபையைக் கள்ளுக்கடை எனச் சொன்னது தப்பிதமென்றும் அளவுக்கு மிஞ்சிக் கண்டித்து காரியக்கமிட்டியில் பேசியிருக்கிறார். இதை சிறீமான்கள் எம்.கே ஆச்சாரியாரும், டி. ஆதிநாராயண செட்டியாரும் ஆதரித்து வைது பேசினார்கள். அது சமயம் சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் இதை எதிர்த்து (சட்டசபையைப் பற்றி) நிர்மாணத் திட்டங்களையும், விடுதலை யையும் பொறுத்த வரையிலும் சிறீமான் ராஜகோபாலாச்சாரியார் சொன்னதுபோல் சட்டசபைகள் கள்ளுக்கடைகள்தானென்றும் பேசித் தீர்மானத்தைத் தோற்கடித்தார்.
இப்படியெல்லாமிருக்க இப்பொழுது சட்டசபையில் கள்ளை ஒழிப்பதற்கு அநுகூலமிருக்கிறது; சென்ற வருஷம் கள்ளுக்கடை யாயிருந்த சட்டசபையானது இவ்வருஷம் காசிக்குச் சமானமாகி விட்டது. ஆதலால் மேல்கண்ட கள்ளு உற்பத்திக்காரரும், கள்ளு விற்பனைக் காரரும், கள்ளு குடிப்பவர்களும், கள்ளு குடிப்பவர் களினால் ஜீவனம் செய்பவர்களும், சட்டசபையால் கள்ளை நிறுத்த முடியாதென்கிற தீர்மானமுள்ளவர்களுமான சுயராஜ்யக் கட்சியாருக்கே வோட் கொடுங்கள் என்று உபதேசம் செய்ய வந்து விட்டார். இதையும் பிராமணப் பத்திரிகைகள் கரைகட்டி விளம்பரம் செய் கின்றன. இதில் எவ்வளவு சதியாலோசனைகள் இருக்கின்ற தென் பதையும் பிராமணரல்லாதாரை ஒழிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமென்று இத்தேசீய பிராமணர்களும், அவர்கள் பத்திரிகை களும் கங்கணங் கட்டிக்கொண்டு இருக்கின்றன வென்பதையும் பொது மக்கள் உணர்ந்து ஏமாந்து போகாமலிருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
-------------- தந்தைபெரியார்- "குடிஅரசு" -7.2.26
Monday, April 07, 2008
Sunday, April 06, 2008
நம்பிக்கை துரோகம்
தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமரணல்லாதார் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப் படுத்திக்கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல.
சரித்திர காலம் எப்படியிருந்தாலும், நம் கண்ணெதிராகவே சென்ற 10 வருஷங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர் நாயர் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் சிறீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமாக சாட்சியம் சொல்லும்படி செய்ததுமில்லாமல், ஜஸ்டிஸ் கட்சியார் பிராமணரல்லாத வர்களுக்குப் பிரதிநிதிகளல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச்செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட பல பிராமணரல்லாதாரை தங்களிஷ்டம்போல் ஆட்டுவித்துவரும் சூழ்ச்சிகளையும் நாம் நேரிலேயே பார்க்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரஸைப் பின்பற்றுவது. தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது. பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகியவைகளே.
இக்கொள்கைகளே தென்னாட்டு தேசீய பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்த தோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாயிருப்பதாகச் சொல்லி நமது கூடவேயிருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு, இப்போது " மீக்கு பெப்பப்பே, நீவு தாத்தாக்கு பெப்பப்பே" என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று, ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு, இதற்கும் சில பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களை சுவாதீனமாக்கிக் கொண்டு, அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனசாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்து விட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காக சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் உட்பட பல தேசிய பிராமணர்களுக்கு அவசியமாயும் நாட்டுக்கு நன்மை பல பயப்பதாயும் பட்டது.
ஆனால், சென்னை மாகாண சங்கத்தின் மூலமாய் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்டவுடன், நமது பிராமண சகோதரர்களுக்கு, இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது நாட்டுக்குக் கேடு விளைவதாய்ப் போய்விட்டது.
ஈரோட்டில், சென்னை மாகாண சங்க மகாநாடு நடைபெற்ற காலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் உட்பட சகல தீர்மானங்களும், விஷயாலோசனைக் கமிட்டியில் சிறீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரியாரவர்களாலும், திரு.வி.கலியாண சுந்திர முதலியாராலும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவாலும், வி.ஓ. சிதம்பரம் பிள்ளையாலுமே முக்கியமாய் தயார் செய்யப்பட்டது. அடுத்த நாள் மகாநாட்டிலும் சிறீமான் வரதராஜுலு நாயுடுவாலேயே பிரேரேபிக்கப்பட்டு நிறைவேறியது.
சிறீமான்கள் முதலியாரும், நாயுடுவும்தான் சென்னை மாகாணச் சங்கத்தின் பிரமுகர்கள். இவர்களை நம்பித்தான் பிராமணரல்லாதாரில் பலர் ஜஸ்டிஸ் கட்சியை விடுத்து சென்னை மாகாணச் சங்கக் கட்சியில் சேர்ந்தது.
பிராமணரல்லாத பாமர ஜனங்களும், தங்களது முன்னற்றத்திற்கு இவர்களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். இப்படியிருக்க இன்றையதினம் இவர்களின் நிலை என்னமாயிருக்கின்றதென்று யோசித்துப் பார்த்தால் எழுதவே கை நடுங்குகின்றது. தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது ஜாண் போனாலென்ன ? என்கிற தைரியம் நமது முதலியாருக்கு வந்துவிட்டது.
சிறீமான் நாயுடு அவர்களாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்க்காவிட்டாலும், அதை எதிர்க்காமல் சும்மாவாவது இருக்கிறார்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது மார்க்கமுண்டாவென்று யோசிக்கிறார். வேறு மார்க்கம் கிடைக்கா விட்டால், முடிவாய் அவர் என்ன செய்வாரென்கிற விஷயம் நமக்குத் தெரியும்.
நமது முதலியாரோ, துணிந்து " வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தார் தற்கால நிலைக்கென கேட்டார்கள்; அந்தப் படியே கிடைத்தது. அதன் பயனை நாடு அடைந்து வருகிறது; தற்கால நிலைக்கென கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமாகுமா?" என்று சிலம்பொலியில் தர்மநியாயம் பேசுகிறார்.
சிறீமான் முதலியார் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் கேட்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைத்துமாய் விட்டது போலும். நாம் அதை அனுபவித்தாய்விட்டதுபோலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதை உத்தேசித்துக் கேட்டோமோ, அவைகள் சரிப்பட்டாகிவிட்டதுபோலும், இன்னமும் அது இருந்தால் நாட்டுக்குக் கெடுதி விளைவிக்குமென்பதுபோலும், ஆதலால் அதைக் கேட்கக் கூடாதென்பது போலவும் உபதேசிக்கிறார்.
இவ்வுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் விடுதலை யுரிமையையும் அடைய உத்தேசங் கொண்டு ஆரம்பித்த "தேசபக்தன்" ஆசிரியரும், தொழிலாளர் நன்மைக்கென்று ஆரம்பித்த "நவசக்தி" ஆசிரியருமான சிறீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்குத் தகுமா ? இது தருமந்தானா ? என்று கேட்கிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டியதற்கு மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியிருந்தது. இப்போது வேண்டாமற் போய்விட்டது! இவ்வித நம்பிக்கைத் துரோகத்தில் நமது திரு.வி.கலியாண சுந்திர முதலியாரவர்களுக்கு ஏன் பங்கு இருக்க வேண்டும்?
பிராமணர்கள் சம்மதித்தால் தனக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தனக்கு வேண்டாம் என்கிற கொள்கை நமது முதலியாருடைய கொள்கையாகலாமா ?
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதில் நமது முதலியாருக்கு இப்போது உள்ள ஆட்சேபனைகள் அதற்கெனவே ஓர் சங்கத்தை ஸ்தாபித்த காலத்தில் எங்கே மறைந்து கிடந்தது? இவற்றையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், உரிமைப் போருக்கு விரோதமென்று சொல்கிறார். அவனவன் உரிமை, அவனவனுக்கு வழங்கப்படாமல் வஞ்சித்துக் கையில் பலத்தவன் காரியமாக்குவதுதான் உரிமைப் போரின் தத்துவம் போலும்.
சிறீமான் முதலியாரவர்களே இந்துக்களுக்குள் இதுபோழ்து மூன்று பிரிவுகள் இருக்கிறதாகவும், அவை பிராமணர், பிராமணரல்லாதார், ஆதி திராவிடர் ஆகிய இவர்களென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவ்வகுப்புகள் அதனதன் உரிமையை ராஜரீகத்திலாவது, சமூக விஷயத்திலாவது, பிரஜா தர்மத்திலாவது சமமாய் அடைந்திருக்கிறதா ? என்று முதலியாரை வணக்கத்துடன் கேட்கிறோம். இவைகளுக்கில்லாத உரிமைப்போர் வேறு எதற்கு? மற்றும் யாருக்கு ?
துறவறத்திற்கு காவி வேஷ்டி உடுத்தி கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ, அதுபோல் ராஜீயத்திலும் உரிமை - சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும், மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் மற்றும் பல காரியங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய சாதனமாகப் போய்விட்டது.
இப்பொருள் கொண்ட சாதனங்களை சிறீமான் முதலியார் ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? இவற்றை நினைக்கும் போது நமது நாட்டின் பிற்கால வாழ்விலும், பிராமணரல்லாத சமத்துவத்திலும் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையே வலுத்து வருகிறது.
ஆனால், நமது கடமையை நினைக்கும்போது சும்மாயிருக்க முடியவில்லை.
------------- தந்தைபெரியார் எழுதிய கட்டுரை : "குடி அரசு" 20.12.1925

கடவுளும் மதமும் இரட்டைப்பிள்ளைகள் அல்ல
மதம் என்னும் வார்த்தைக்குப் பலவித அர்த்தங்களும், கருத்துகளும் சொல்லப்படுகின்றன.
உதாரணமாக ஒருவர், என்னுடைய மதம் யார் மனத்தையும் புண்படுத்தாமலிருப்பதும், யாருக்கும் என்னால் கூடிய நன்மை செய்வதும்தான் என்று சொல்லுகிறார்.
மற்றொருவர், என்னுடைய மதம் கடவுளைப் பற்றிக் கவலைப்படாத நாஸ்திக மதம் தான் என்கின்றார்.
மற்றொருவர், என்னுடைய மதம் கடவுள் இல்லை; ஆத்மா இல்லை. ஆனால், அதற்குத் தகுந்த பலன் உண்டு என்பதுதான் என்கிறார்.
மற்றொருவர், நான் கருதி இருக்கும் மதம் திமிர் அல்லது கொழுப்பு என்கிறார்.
மற்றொருவர், மதம் என்னும் வார்த்தைக்குக் கொள்கை அல்லது கடமை என்பது அர்த்தம் என்கிறார்.
மற்றொருவர், என்னுடைய மதம் விஞ்ஞானம் என்கிறார்.
மற்றொருவர், என்னுடைய மதம் மனித ஜீவ அபிமானம்தான் என்கிறார்.
மற்றொருவர், என்னுடைய மதம் பொதுவு-டைமைக் கொள்கை என்கிறார்.
இப்படியே இன்னும் பலவிதமாய், மதம் என்னும் வார்த்தைக்குத் தனித்தனிக் கருத்துகள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவைகளைப் பற்றி எல்லாம் விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம்.
ஆனால், முகப்பில் கூறிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதங்களின் அஸ்திவாரம் ஒன்றுபோலவே இருந்தாலும், அதன்மேல் கட்டப்பட்ட கட்டடங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம்.
ஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக் கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர்வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால், எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும்; மற்றபடி மதக் கொள்கைகள் எவை, எப்படி இருந்தாலும் தான் இலட்சியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின் மீதே தனக்குள் எவ்விதக் கொள்-கையும் இல்லாமல், ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏதோ ஒரு மத வேஷத்தைப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.
மற்றும் பலரும் அதுபோலவே மதங்களுக்கு உள்ள செல்வாக்குக்குப் பயந்து கொண்டு மத வேஷக்காரர்களாய் இருக்கிறார்கள். பரத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதி-களாய் இருப்பது போலவே, இகத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருக்கிறார்கள்.
பொதுவாகப் பார்க்கப்போனால், கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்குப் பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய, கடவுளும் மதமும் இரட்டைப் பிள்ளைகள்போல் பிறந்தவை அல்ல.
எப்படி இருந்தாலும், மதங்களானவை இன்று சடங்காகவும், வேஷமாகவும் இருக்-கின்றனவே ஒழிய, கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்கவில்லை; புத்தகங்-களில் பல கொள்கைகள் இந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில் அக் கொள்கைகள் பெரிதும் அமலில் இல்லை.
ஆகவே, அமலில் இல்லாத கொள்கை-களைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ வாதிப்பதானது, ஆகாயத்-தில் தொங்கிக் கொண்டிருக்கும் கோட்டை-களில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்குச் சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும்.
முதலாவதாக, ஒரு மதத்துக்குக் கொள்கைகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது, அவை எல்லா மக்களுக்கும் ஒன்று-போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக்-கூடியனவாக இருக்கவேண்டும். அதோடு கூடவே அக் கொள்கைகள் எல்லா மக்-களாலும், எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் தாமாகவே பின்பற்றித் தீர வேண்டியதாகவும் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட தத்துவங்களைக் கொண்ட கொள்கையை இதுவரை எந்தப் பெரிய வரும் கண்டு பிடிக்கவுமில்லை; எந்த மதமும் கொண்டிருக்கவும் இல்லை.
அது செய்தால் பாவம், இது செய்தால் மோட்சம் என்றும்; அது செய்தால் தண்டனை, இது செய்தால் தூக்கு என்றும் இப்படியாகப் பல நிர்ப்பந்தங்கள், பயம், தண்டனை, தண்டனை ஆகியவைகளின் பாதுகாப்பில் ஏற்படுத்தப்பட்ட கொள்கையாகவும், அமலில் கொண்டு வர எப்போதுமே முடியாதனவாகவும், அமலில் கொண்டு வர மிகவும் கஷ்டப்பட வேண்டியவையாகவும், மனிதனால் சாதாரணமாகச் செய்யக் கூடியதும், செய்வதற்கு ஆசையுண்டாக்கக்கூடியதும் அல்லாதவையாகவும் இருக்கக்கூடிய கொள்கைகளையேதான் எந்த மதமும் கொண்டிருக்கிறது.
எந்தக் கொள்கையாவது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகவோ அல்லது கடவுளு-க்கு இஷ்டமானதாகவோ இருந்திருக்குமானால், அது மக்களுக்கு மிகவும் இஷ்டமானதாகவும், செய்வதற்கு மிகவும் ஆசையுடையதாகவும், சுலபத்தில் செய்து முடிக்கக்கூடியதாகவும் இருந்திருக்க வேண்டாமா? கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்குக் கசப்பான-தா-கவும், பெரும்பான்மையோருக்குச் செய்வதற்கு முடியாததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?
ஆகவே, கடவுளின் பேரால் மதத்தின்மூலம் மத கர்த்தாக்களால் சொல்லப்பட்ட கொள்-கைகள் என்பவை, சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித் திறமையும், அக்காலத்துக்குச் சரி என்று பட்ட கருத்துகளையும் கொண்டவையே தவிர, எந்தக் கொள்கையும் எந்தக் கடவுளாலும் சிருஷ்டிக்கப்பட்டதல்லவென்றே சுயமரியாதைக் காரர்கள் எழுதுகிறார்கள்.
இன்று மதமானது மக்களின் கூட்டு வாழ்க்கையின் அவசியத்துக்கு ஏற்ற கொள்கை-களைக் கொண்டது என்பதுடன் அவை பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்ளக் கூடியதாகவும் சகல மக்களுக்கும் பலன் ஒன்று போல் உண்டாகக்கூடியதாகவும் இருக்கத்தக்க கொள்கைகள் கொண்டது என்றால், அதை சுயமரியாதைக்காரர்கள் மறுப்பதற்கு முன் வரமாட்டார்கள்.
------தந்தைபெரியார் "பகுத்தறிவு" கட்டுரை மார்ச் 1936

Friday, April 04, 2008
ஆதி திராவிடரும் சுயராஜ்யக் கட்சியும்
" சுதேசமித்திரன் " என்னும் பிராமணப் பத்திரிகை ஆதி திராவிடர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் ஒன்றும் செய்யவில்லை என்றும், தங்கள் கூட்டத்தார் ஆதி திராவிடர்களுக்கு சுவர்க்க வாசலை திறந்து விடப்போவதாகவும், இனியாவது தங்களை வந்து சரணடை யும்படி உபதேசிக்கிறது. ஜஸ்டிஸ் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்தார்களோ, இல்லையோ ? அதைப் பற்றி அதிக கவலை வேண்டாம். அது ஆதி திராவிடர்களுக்கே தெரியும். ஆனால் காங்கிரசின் ஆதிக்கத்தை அடைந்த சுயராஜ்யக் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? என்ன பதவி கொடுத் தார்கள்? என்ன உத்தியோகம் தந்தார்கள்? இந்தியா சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரை நிறுத்தினார்களா? நிறுத்த ஆளில்லாமல் திண்டாடும் சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரையாவது நிறுத்தினார்களா? சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலுக்கு ஆதி திராவிட வகுப்பில் பிறந்த ஒருவரையாவது நிறுத்தினார்களா? வேறு வகையில் இவர்கள் மட்டிலும் என்ன சாதித்து விட்டார்கள்? ஒரு சமயம் ஆதி திராவிடர்களில் எவராவது; ஒருவருக்கு அதுவும் தன்னோடு கூடத்; தன்னைத் தலைவர் என்று சொல்லித் திரிய - அதுவும் வீட்டில் பட்டினி, சுத்தமாய் செலவுக்கில்லை என்று கேட்கும்போதும் - நீ கொடுக்கிறாயா ஜஸ்டிஸ் கட்சியில் சேரட்டுமா என்று மிரட்டும் போதும் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் பிச்சை போடுவதுபோல் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள்? அல்லது ஆதி திராவிடர்களுக்கு வகுப்புவாரி உரிமை வாங்கித் தர சம்மதிக்கிறார்களா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொன்னாலே, சொல்பவனை, " ஜஸ்டீஸ் கட்சியில் சேர்ந்து விட்டான், பாவி, துரோகி " என்று சொல்லுகிறார் கள். இவர்களை நம்பி என்ன பலனை அடைய முடியும்? காஞ்சீ வரத்தில் கூடிய பிராமணரல்லாதார்களாவது எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து ஏகமனதாய் ஆதி திராவிடர்களுக்கு, அவர்கள் எண்ணிக்கைக்குத் தகுந்த அளவுக்கு மேலாகக் கூட சட்டசபை, கார்ப்பரேஷன், உத்தியோகம், பதவி எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவம் கொடுப்பதாய்த் தீர்மானித்தார்களே; அதைக் கெடுத்தவர்கள் யார்? சுயராஜ்யக் கட்சியின் "மாபெரும் தலைவரான" சிறீமான் சீனிவாசய்யங் காரும் "காந்தி சிஷ்யரும் ஒப்பற்ற தலைவருமான" சிறீ மான் சி.ராஜ கோபாலாச்சாரியாரும் கூட சதியாலோசனை செய்து சிறீமான் கலியாணசுந்தர முதலியாரையும் கெடுத்து இத்தீர்மானம் காங்கிரஸ் மகாநாட்டிற்கே கொண்டுவரக் கூடாது என்று தடுத்துவிட்டார்கள். தீர்மானம் கொண்டுவரக்கூட சம்மதிக்காத காங்கிரஸ் தலைவரும் தீர்மானத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்களா? என்பது ஆதி திராவிடர் களுக்குத் தெரியமுடியாமல் போகாது. ஜஸ்டிஸ் கட்சியாராவது ஆதி திராவிடர்கள் கேட்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சரியான தென்றும், அதற்காக தாங்கள் போராடியும், அதை தங்கள் கட்சியின் முக்கியக் கொள்கையாகவும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கூச்சல் போட்டதன் பலனாய்த்தான் சிறீமான்கள் எம்.சி.ராஜா, வீரய்யன் முதலிய மணிகள் ஆதி திராவிட வகுப்பில் இருக்கிறார்கள் என்றாவது பிறத்தியாருக்குத் தெரியும்படியாய் இருக்கிறது. அது இல்லாவிட்டால் இவர்களுக்கு சட்டசபை ஏது? கான்பரன்ஸ் ஏது? தீர்மானம் ஏது? "எங்கள் கட்சியில் வந்து சேருங்கள், நாங்கள் சாதித்து விடுகிறோம்" என்று பிராமணர்கள் கூப்பிடுவது ஏது? சிறீமான் சீனிவாசய்யங்கார் பணம் ஒன்றிரண்டு ரூபாய்கூட ஆதி திராவிடர்களுக்காவது கிடைப்பதேது?
------தந்தைபெரியார்- "குடிஅரசு"-23.5.26
------தந்தைபெரியார்- "குடிஅரசு"-23.5.26
ஒவ்வொரு மாகாணத்திலும் தேவஸ்தான சட்டம் தேவை
ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பனகல் ராஜா கொண்டுவந்த சென்னை இந்து தேவஸ்தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ் நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான வழியில் காரியங்கள் நடந்து வருகின்றன என்பது நேயர்கள் அறிந்த விஷயம். திருப்பதி தேவஸ்தான நிதியிலிருந்து சந்திரகிரியில் ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்தப் போவதாக பனகல் ராஜா சமீப காலத்தில் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டதைக் கேட்டதும், இச்சட்டத்தின் விரோதிகள் அவர் மேல் சீறி விழ ஆரம்பித்துவிட்டார்கள். 63 வது சட்டம் இப்படிச் சொல்லுகிறது, 76 வது சட்டம் அப்படிச் சொல்ல வில்லை என்றவாறு சிற்சில பத்திரிகைகளின் நிரூபங்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டிருக்கின்றன. சர்வகலாசாலை ஏற்படுத்துவதைக் காட்டிலும், முதலில் திருப்பதி கோயில் கோபுரத்தையும் ஏழுமலைப் படிகளையும் ஏன் பழுது பார்க்கவில்லையென்ற கேள்விகளை இதுசமயத்தில் சிலர் கிளப்பி விடுவது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த விதண்டாவாதக்காரர்கள் இவ்வளவு நாள் எங்கு பதுங்கிக் கிடந்தார்களோ தெரியவில்லை. திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சுமார் 17 - 1 8 லட்சம் ரூபாய் வருஷ வரும்படி இருப்பதாகத் தெரிகின்றது. இதில் 7 அல்லது 8 லட்ச ரூபாய் செலவாகிறபடியால் வருஷா வருஷம் பத்து லட்சம் ரூபாய் மீதப்படுகிறது. இந்த மீதிப் பணம் சிற்சில ஆடம்பரச் செலவுக்கும், சிற்சில பள்ளிக்கூடங்களை நடத்தவும் செலவு செய்யப்படுகிறது. அப்படியிருந்தும் இன்னும் நாற்பது லட்சம் ரூபாய் மொத்தமாக மீதியிருக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்தப் போவதை கல்கத்தா பாபு ராமானந்த சாட்டர்ஜி அவர்கள் "மாடர்ன் ரெவ்யூ " என்ற தம் சஞ்சிகையில் மனப்பூர்வமாய் ஆதரித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சென்னையில் இருப்பது போல ஒவ்வொரு ராஜதானியிலும் தேவஸ்தானச் சட்டம் ஏற்பட வேண்டுமென்றும் அப்பெரியார் அபிப்பிராயப்படுகிறார். அவரது அபிப்பிராயத்தைச் சந்தோஷத்துடன் ஆமோதிக்கிறேன். பனகல் ராஜாவின் நல்ல யத்தனத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யும் சுயநலப்புலிகள் ஒரு பக்கமிருக்க, சிறந்த தேச பக்தர்களில் ஒருவராகிய ராமானந்தபாபுவின் பாரபட்சமில்லாத அபிப்பிராயத்தை பொதுமக்கள் கவனிக்க.
------------ சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய கட்டுரை : "குடி அரசு" 12.7.1925

Wednesday, April 02, 2008
சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுசீந்திரம் என்னுமிடத்தில் சத்தியாக்கிரகம் நடைபெறும் விஷயத்தைப் பற்றி இதற்கு முன் நமது பத்திரிகை மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதை வாசகர் களறிவார்கள். அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் விஷயத்தையும் இந்த இதழ் 3-வது பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.
வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடைந்து வெகுநாட்களாகிவிட வில்லை. அதற்குள்ளாக மற்றோர் இடத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட தோன்றியுள்ள சத்தியாக்கிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். அநீதியும், அக்கிரமமும் தொலைய வேண்டு மானால் வெறும் சட்டங்களாலும், எழுத்தாலும், பேச்சாலும் முடியா தென்றும், சத்தியாக்கிரகமும் தியாகமுமே உற்ற சாதனமாகுமென்றும் பல தடவைகளில் வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் ஜாதிக் கொடுமையும், பிறவியினால் உயர்வு - தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலைய வேண்டியது அவசியமாகும். இக்கொடுமைகளை ஓர் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஜம்பமாக தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுதுவதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவதும் தன் மனசாட்சி அறியச் செய்யும் மகத்தான அக்கிரமமேயன்றி வேறல்ல.
மேலும், இவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு பொது .ஜனங்களை ஏமாற்றுவதும், எலெக்ஷன் பிரசாரம் செய்வதும் மிக மோசமான செய்கையாகும். தாங்கள் பிழைக்க வேண்டும், தங்கள் மக்கள் நன்றாயிருக்கவேண்டும், தங்கள் சமூகத்தார் மேன்மையான ஸ்திதியிலிருக்க வேண்டும், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாய் சாஸ்திரங் களையும், புராணங்களையும், இதிகாசங்களையும், மனு தர்மசாஸ்திரம் என்னும் அயோக்கிய நூலொன்றையும் காட்டிக்கொண்டு வயிறு வளர்ப்பதுடன், தங்கள் கட்சியைப் பலப்படுத்திக்கொள்ள சுயமரியாதையற்ற ஆண்மையற்ற சிலரைச் சேர்த்துக்கொண்டும் செய்யும் சூழ்ச்சிகளெல்லாம் நொறுக்கப்படவேண்டுமாயின், பொதுமக்கள் சர்வ ஜாக்கிரதையுடனிருந்து விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவைகளையெல்லாம் சுட்டிக் காட்டவல்லது சுயமரியாதையும், சத்தியாக்கிரகமும், உண்மையான தியாகமுமே என்று கூறலாம்.
நமது நாட்டிலேயே பிறப்பால் மனிதர்களாயிருந்தும், தாழ்த்தப் பட்டவர்கள் - கண்ணில் தென்படக் கூடாதவர்கள் - தங்கள் தெய்வங்களைத் தரிசிக்கக் கூடாதவர்கள் - தங்கள் வேதத்தைப் படிக்கக் கூடாதவர்கள் என எத்தனையோ லட்சம் பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கொடுத்துள்ள உரிமையைக்கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம். இந்நிலையில் நமக்கு சுயராஜ்யமும், விடுதலையும் அத்தியாவசியமா? அல்லது முன் கூறியவர்களின் முன்னேற்றமும், சுயமரியாதையும் அத்தியாவசியமா வென்பதை பொது ஜனங்களே சிந்திக்க வேண்டும்.
சமத்துவம், சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள மக்களனைவருக்கும் ஏற்பட்டாலன்றி, அதற்கு முன்னர் கிடைக்கும் சுயராஜ்யம் ஓர் ஜாதியார் பிழைப்பதற்கு ஆதாரமாயிருக்குமேயல்லாது வேறல்ல. சுயராஜ்யம் கிடைக்கும் முன், நம்மவர்களுக்குள் எவ்விஷயத்திலும் ஒற்றுமை , சமத்துவம், சுயமரியாதை ஏற்படக்கூடிய விதமான வேலைகளைச் செய்து கொள்ளவேண்டியது மிக்க அவசியமாயிருக்கின்றது. சமத்துவம் ஏற்படுமானால் பிராமணர்கள் பாடு திண்டாட்டமாகிவிடுமென்பது உண்மையே. முன்னர் கூறிய நூல்களைக் காட்டிக்கொண்டு பிராமணர்கள் வயிறு வளர்ப்பது நின்று போய்விடும். சுயமரியாதை உண்டாகிவிடுமானால் பிராமணர்கள் நிலைமை இப்போதிருப்பது போலிராமல் கீழ் நிலையடையலாம். இங்ஙனம் நேரிடுமென்பதைக் கருத்தாகக் கொண்டே ராஜீய பிராமணர்களாகட்டும், சில சர்க்கார் உத்தியோக பிராமணர்களாகட்டும் அவர்கள் மிதவாதிகளோ, சுயேச்சைக் கட்சியோ, ஆச்சாரியாரோ, ஐயங்காரோ, ஐயரோ, பந்துலுவோ எவராயிருந்தபோதிலும் சரி ஒன்றுகூடிக்கொண்டு பிராமணரல்லாதாரை - தமிழர்களை எதிர்த்து நிற்கிறார்கள்.
நிற்க, பிராமணர்கள் அநியாயம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; திருவிதாங்கூரிலும் அதிகமாக இருக்கின்றதை வைக்கம்சத்தியாக்கிரகத்தின் மூலியமாய் யாவரும் அறிவார்கள். திருவாங்கூர் கவர்மெண்டார் இவ்வநியாயங்களுக்கு உடந்தையாயிருக்கிறார் களோவெனச் சிலர் சந்தேகிக்கக்கூடும். திருவிதாங்கூர் ராஜ்யத்திலுள்ள பொது ரஸ்தாக்களும், பொதுக் குளங்களும் ஜாதிமத வித்தியாச மில்லாமல் பொது ஜனங்கள் அநுபவிக்கலாம் என சில வருஷங் களுக்கு முன்னரே உத்தரவு போட்டிருக்கின்றனர். ஆக கவர்மெண்டார் பேரில் குற்றமில்லை. பிராமணர்கள் தவிர்த்த ஏனைய ஜாதியர்களான நாயர் முதலானவர்கள் தங்கள் சமூக மகாநாடுகளில், பொது ரஸ்தாக் களிலும், பொதுக் குளங்களிலும் ஜாதி மத வித்தியாசங் காட்டலாகாது எனத் தீர்மானம் செய்திருக்கின்றனர் - செய்து வருகின்றனர். ஆக பொது ஜனங்களின் சமத்துவத்துக்கும் - சுயமரியாதைக்கும் இடைஞ்சலா யிருப்பவர்கள் பிராமணர்களேயாகும். இதிலும் மலை யாள நம்பூதிரிப் பிராமணர்களைவிட அங்கு பிழைக்கவும் அங்குள்ள கோவிற் சோற்றைச் சாப்பிடவும் சென்றுள்ள தமிழ்நாட்டுப் பிராமணர் களே அதிக இடைஞ்சல் செய்பவர்களென்று கூறத் தகுந்த ஆதாரமுண்டு.
இவர்களின் இடைஞ்சல்களும், தொந்தரவும் தொலைய வேண்டுமானால், சத்தியாக்கிரகந்தான் சிறந்த வழி. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்.
தமிழ்நாட்டினர், வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும், ஆட்கள் உதவியும், ஒத்தாசை செய்தார்களோ அவ்வாறே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும், தாங்கள் நன்கொடை யளித்து ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறோம்.
பிராமணர்கள் பலரும், மற்ற வகுப்பைச் சார்ந்த சில சுயநலக் காரர்களும் இச்சத்தியாக்கிரகத்திற்கு எதிரிடையாயிருப்பார்களென்பது உண்மையே. இத்தகைய குறுகிய நோக்கமுடையோர் வெகு சிலரேயானபடியால் பொதுமக்கள் இவர்களைப் பற்றிக் கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை. தங்கள் கடமை எதுவோ; எது நியாயமென தங்கள் மனதில் படுகிறதோ அதை மாத்திரம் கெட்டியாக பிடித்துக்கொண்டு இப்பேர்ப்பட்ட சமயத்தில், இத்தகைய சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம். தமிழ்நாட்டு தேசீய வாலிபர்களானாலும் சரி, மற்றும் எந்தக் கட்சியைச் சேர்ந்த எவரேயானாலும் சரி அனைவரும் சத்தியாக்கிரகத்திற்குத் தொண்டு செய்ய அவசியமேற்படும் போது தயாராயிருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
தமிழ்நாட்டார் சுசீந்திரத்தில் உரிமைப் போர் நடப்பதற்கு தங்களால் இயன்ற நன்கொடையைக் கொடுக்கவும் தயாராயிருக்க வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.
சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெறுமாக !
---------தந்தைபெரியார்- "குடிஅரசு" - 31.1.26

Tuesday, April 01, 2008
பெண்களை விபசாரிகளாய் படைத்த கடவுள்
ஆஸ்திகப் பெண்: என்ன அய்யா, நாஸ்திகரே! மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப்பற்றிய ஆட்சேபனைகள் எப்படி இருந்தாலும், பெண்களை கடவுளே விபசாரிகளாய் பிறப்பித்து விட்டார்; ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன்.
நாஸ்திகன்: அம்மா, அப்படி தாங்கள் சொல்லக்கூடாது. மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆ.பெண்: அதென்ன அய்யா, நீங்கள்கூட அப்படிச் சொல்லுகின்றீர்கள்! இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை? எல்லாப் பெண்களுமா விபசாரிகள்?
நா: ஆம் அம்மா! எல்லோருமேதான் "விபசாரிகள்", இதற்காக நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை.
ஆ.பெண்: என்ன அய்யா, உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா நீங்கள் விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள்?
நா: ஆம். ஆம். ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்ல; மேல் உலகத்தில் உள்ள பெண்களையும்கூடத்தான் நான் "கற்பு உள்ளவர்கள்" என்று சொல்லுவதில்லை.
ஆ.பெண்: இப்படிச் சொல்லுவது தர்மமாகுமா?
நா: கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமான மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவது எப்படிப் பொய்யாகும், அதர்மமாகும், சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால் அது சரியென்று நான் ருஜூப்படுத்தவும் தயாராயிருக்கிறேன்.
ஆ.பெண்: என்ன ருஜூ, நாசமாய்ப் போன ருஜூ; சற்று காட்டுங்கள் பார்ப்போம்.
நா: நம் பெரியவர்கள் கற்பைப் பரீட்சிக்கத் தக்க பரீட்சைகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.
ஆ.பெண்: என்ன பரீட்சை அய்யா அது?
நா: சொல்லட்டுமா; கோபித்துக் கொள்ளக்கூடாது!
ஆ.பெண்: கோபமென்ன அய்யா! மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்! தாராளமாய்ச் சொல்லுங்கள். நா: தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுவாள் பெய்யெனப் பெய்யுமழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா?
ஆ.பெண்: ஆம் கேட்டிருக்கின்றேன்.
நா: கற்புடைய மங்கையர்கள் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேதவாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?
ஆ.பெண்: ஆம் கேட்டிருக்கின்றேன்.
நா: சரி... ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது; குடிக்கத் தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உழவு (2 அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆ.பெண்: இது நம்மாலாகின்ற காரியமா? தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடியும். இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால் இந்த பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.
நா: எந்தப் பாவி எப்படித் தவித்தாலும், நீங்கள் கற்புள்ளவர்களாயிருந்தால் மழை பெய்யென்றால் பெய்துதானே ஆக வேண்டும் அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீர வேண்டும். எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ, அப்போதே, பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்ல, "விபசாரிகள்" என்று ருஜூவாகவில்லையா? பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். ஆகையால் இனிமேல் சாஸ்திரங்களைப்பற்றி சந்தேகப்படாதீர்கள்! அதிலும் ரிஷிகளும், முனிவர்களும் சொன்ன வாக்கியமும், கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்து மதத்திற்கு ஆதாரமானதும், மோட்சத்திற்கு சாதகமானதுமான மனுதர்ம சாஸ்திரம் பொய்யாகுமா அம்மா! அதனால்தானே நான்கூட கல்யாணமே செய்து கொள்ளவில்லை! ஆ.பெண்: எதனால்தான்?
நா: பெண்களைக் கல்யாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள், அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டுமென்றிருக்கின்றதனால்தான்.
ஆ.பெண்: பின்னை என்ன செய்கின்றீர்கள்?
நா: கடவுளோ பிறவியிலேயே பெண்களை விபசாரிகளாய்ப் பிறப்பித்து விட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய் விட்டது. ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. ஆதலால், எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும்; கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்பதாகக் கருதி சிவனே என்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா என்கின்ற தைரியம் உண்டு.
ஆ.பெண்: அப்படியானால் நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்தததில் ஒன்றும் குற்றமில்லை இந்த மனுதர்ம சாஸ்திரமும், வேதமும், பொய்யாமொழியும், நீதியும், இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக்கொண்டதோ ஆன கடவுள்களும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நமது எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.
சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,
("குடி அரசு", 2.3.1930).

Subscribe to:
Posts (Atom)