Tuesday, March 22, 2011

கலைஞர் யார்? ஜெயலலிதா யார்?





கடந்த காலத்தில் என்னென்ன சாதித்தோம்? எதிர் காலத்தில் என்னென்னவற்றை சாதிக்க இருக்கிறோம்? என்று பட்டியல் போட்டுக் காட்டிக் கம்பீரமாகத் தேர்தலில் மக்களைச் சந்திக்கும் திராணி உள்ள கட்சிதான் தி.மு.க. எதிர் அணியில் இருப்பவர்களை இந்தத் தராசில் எடை போட முடியுமா என்றால் அது முடியாது.

மக்களுக்கு நலன் என்பதைவிட, மக்களைத் துச்சமாக பாதிக்கச் செய்து துன்புறுத்தும் போக்குகள்தான் எட்டுப் பங்கு அதிகமாகும்.

பெயரில் அண்ணாவைத் தாங்கி இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் அண்ணா ஏற்றுக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று இருக்கின்றனவா?

கட்சியில் திராவிட என்னும் இன பண்பாட்டுச் சொல் இடம் பெற்று இருக்கிறதே - அதன் அடிப்படையிலாவது காரியங்கள் செய்யப்பட்டுள்ளனவா?

இதுபோன்ற கேள்விகளை ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.இ.அ.தி.மு.க.வை நோக்கிக் கேட்கவே கூடாது.

கட்சியின் அடிப்படையைப் புரிந்து கொண்டு தம்மை இணைத்துக் கொண்டவர் அல்ல அவர்.

அதனால்தான் கட்சியின் வேட்பாளர் பட்டியலை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் சன்னதிக்கு எடுத்துச் சென்று அந்தச் சாமியின் காலடியில் கொண்டு போய் வைத்து விட்டு, வெளியிட்டனர்.

அப்படி வெளியிடப்பட்ட பட்டியலின் கதி என்ன? ஊரே சிரிக்கிறது! ஊருக்கு ஊர் உட்கட்சிப் போராட்டங்கள்; பட்டியலை மாற்ற வேண்டிய அவசியங்கள் எல்லாம் ஏற்பட்டதுதான் மிச்சம். திருவொற்றியூர் அம்மனின் காலடி சக்தியைப்பற்றி இதற்குப் பிறகாவது அம்மையார் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா?

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போதும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போதும்கூட, அங்கு சென்று அம்மனின் காலடியில் வைத்துப் பூசித்துத்தானே பட்டியலை வெளியிட்டார்கள்? பிள்ளை பிழைத்ததா? தோல்வியின் சுமையில்தானே அழுந்திப் போனார்கள்?

ஒரு நிருவாகத்தை நடத்துவதற்கு அதன் அலுவலர் கள் தான் அடிப்படை. அவர்களையே அச்சுறுத்துவதும், அடிமையாக நடத்த ஆசைப்படுவதும் சரியானதுதானா? அந்தக் கொடுங்கோன்மைகளை எதிர்த்து -உரிமைக்காகக் குரல் எழுப்பிய லட்சோப லட்ச அரசுப் பணியாளர்களின் குரல் வளையை நெரிக்கும் வகையில், எஸ்மா டெஸ்மா என்ற ரவுலட் சட்டங்களைக் கொண்டு வந்து, ஒரே ஆணையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்பினாரே, முதல் அமைச்சர் ஜெயலலிதா? அதன் விளைவு என்ன? அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுதான் மிச்சம்.

அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட்டு கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில், பழைய ஆணையைத் தூக்கி எறிந்து, அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தினாரே - ஒரு முதல் அமைச்சர் என்பவர் அரசு ஊழியர்களுக்குத் தந்தை என்ற நிலையில் உள்ளவர் - அந்த உணர்வோடு, ஒரு சிறு போராட்டத் துக்கும் இடமின்றி வேலைகள் வீறு நடைபோட்டு நடக்கின்றனவே, இது அல்லவோ ஆட்சி!

இன்றைக்கு அரசுப் பணியாளர் அவர்தம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஒரு கோடி பேர் உள்ளார்களே. அந்த ஒட்டு மொத்தமான வாக்குகள் தி.மு.க.வுக்கும் அதன் அணிக்கும்தான் கிடைக்கப் போகின்றன என்பதில் எவ்வித அய்யப்பாட் டுக்கும் இடம் இல்லவே இல்லை.

அரசின் மொத்த வருமானத்தில் 90 விழுக்காட்டுக்கு மேல் அரசு ஊழியர் சம்பளத்துக்கே போகிறது என்று சொன்னவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. அதாவது உண்மையா?

சற்றும் நிதானமின்றிச் சீறி எழுகின்ற சினத்தினால் காரியங்கள் சீர் கெட்டுப் போய்விடுகின்றன. ஒவ்வொரு நாளும் எதிரிகளை வருந்தித் தேடிக் கொள்வதில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈடு அவரேதான் - வேறு யாருமிலர்.

முதல் அமைச்சர் என்கிற முறையில் அவரிடம் தேங்கிக் கிடந்த கோப்புகளில் எண்ணிக்கைக்கு அளவேயில்லை. காரணம், எளிதாக அவருடன் தொடர்பு கொள்ள முடியாததுதான். அரசு அலுவலர்களுக்கே இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலை என்ன?

முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்து, சந்திக்க முடியாமையால் மனம் உடைந்து, நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் உண்டு. அப்படி ஒரு பட்டியலைக்கூட தினமணி (23.5.2002) வெளியிட்டதுண்டு.

அத்தகைய ஒரு மாஜி முதல் அமைச்சரைத்தான் தினமணி வகையறாக்கள் விழுந்து விழுந்து கற்பனைச் செய்திகள் என்கிற தூண்களைக்கொண்டு முட்டுக் கொடுத்து நிமிர்த்தப் பார்க்கின்றன.

யார் மறந்தாலும் பழி வாங்கப்பட்ட லட்சோப லட்ச தமிழர்கள் இனவுணர்வோடு அ.தி.மு.க., பொதுச் செய லாளர் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்பதில் அய்யமில்லை

---------------"விடுதலை” தலையங்கம் 22-3-2011

No comments: