Tuesday, March 29, 2011

பார்ப்பனர் சங்கம் யாரை ஆதரிக்கிறது?

தமிழ்நாடு பிராமணர் சங்கம் எனும் பெயரில் மக்கள் குரல் ஏட்டில் (24.3.2011) கீழ்க்கண்ட விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) 13.04.2011 அன்று நடைபெற இருக்கின்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களையும், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு எங்களது மாவட்ட அமைப்புக்களின் வழியாகவும் தமிழகம் எங்கும் இருக்கக் கூடிய எங்களது 500 கிளைகள் வழியாகவும் நடைமுறைப்படுத்தப்படும்.
-எம். நாராயணன், மாநிலத் தலைவர்

- என்று விளம்பரம் வெளி வந்துள்ளது.

இந்தத் தேர்தலில் (2011) மட்டும் அல்ல; 2006ஆம் ஆண்டுத் தேர்தலிலும்கூட இதுபோன்ற ஒரு விளம்பரம் வெளி வந்ததுண்டு.

சென்னை தினமலர் ஏட்டில் (26.6.2006-7ஆம் பக்கத்தில் கீழ்க்கண்ட விளம்பரம் வெளியாகியது.

தமிழ்நாடு பிராமண சகோதரர்களுக்கு ஓர் வேண்டு கோள்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நமது பெருமையையும், கவுரவத்தையும் காக்கும் வகையில், நமது சமூகத்தின் அனைத்து வாக்குகளையும் தவறாமல், அ.தி.மு.க. அணிக்கு ஆதரவாக பதிவு செய்து, தமிழக முதல்வர், டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்

- ஜி.ஆர். ரவிச்சந்திரன் B.Com., B.L., வழக்கறிஞர்

தமிழ்நாடு பிராமண சங்கத்தின் சார்பில் முன்னாள் காங்கிரசாரான முக்தா சீனிவாசன் அறிவிக்கப்பட்டு தாமரைச் சின்னத்தில் பா.ஜ.க. வேட்பாளராக நின்றார்.

பா.ஜ.க.வும் - பார்ப்பனர் சங்கமும் ஒன்றுதான் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி தேவை?

முக்தா - சீனிவாசன் என்ற பார்ப்பன பா.ஜ.க. வேட்பாளர் பேட்டி ஒன்றில் என்ன கூறினார் என்பது முக்கியமானது.

அ.தி.மு.க.வில்தான் பிராமணர்களை வேட்பாளராகப் போட்டுள்ளார். தி.மு.க. போடவேயில்லை. ஜெயலலிதா வைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றார்.

இந்தத் தகவல்களையும், உண்மை நடப்புகளையும் கணக்கில் கொண்டால்தான் வரும் ஏப்ரல் 13 அன்று தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தலின் தன்மை எந்த அச்சில் சுழலுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பச்சையாக ஜெயலலிதா நான் பாப்பாத்திதான்! என்று சட்டப் பேரவையிலேயே ஆணவமாகப் பிரகடனப் படுத்தியதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கும் பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் இந்த அம்மையாரை விழுந்து விழுந்து ஏன் ஆதரிக்கின்றன? சோ ராமசாமி, குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் ஆஸ்தான ஆலோசகர்களாக இருப்பது எந்த அடிப்படையில்?

234 தொகுதிகளில் சிறீரங்கத்தை தேர்ந்தெடுத்து ஜெயலலிதா அங்குப்போய் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன?

சிறீரங்கம் என்பது பார்ப்பனர்கள் அதிலும் குறிப்பாக அய்யங்கார்ப் பார்ப்பனர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள தொகுதியாகும்.

2009ஆம் ஆண்டு நடந்து முடிந்த திருச்சி மக்களவைத் தேர்தலில் (6 சட்டசபைகள் அடங்கிய தொகுதி) 5 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்த நிலையிலும் சிறீரங்கம் சட்டமன்ற ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளர் பெற்ற கூடுதல் வாக்குகள் அவரை வெற்றி பெறச் செய்தன என்றால், இந்த சிறீரங்க ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாமே!

அய்யங்கார் பெண்மணியான ஜெயலலிதா அம்மையார் தலைமையில் இயங்கும் கட்சிக்குத்தான் வாக்கு அளித்துத் தீருவது என்பதில் பார்ப்பனர்கள் எவ்வளவுக் கட்டுப்பாடாக, உறுதியாக இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டால் பார்ப்பனர் அல்லாதார் நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கடமையும், உண்மையும் விளங்காமற் போகாது.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பார் பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார். அது எத்தகைய உண்மை என்பதை நாட்டு நடப்புகள் நல்ல வண்ணம் மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்குள்கூட காமராசர் - ராஜாஜி உள்கட்சிச் சண்டை என்பது இந்த அடிப்படையில்தான் நடந்து வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவற்றை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நடக்க இருக்கும் தேர்தல் என்ற ஆரியர் - திராவிடர் போராட்டத்தில் - தந்தை பெரி யாரும், சுயமரியாதை இயக்கமும் நம் குருதியில் ஊட்டிய அந்தத் தன்மான இனவுணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள் ஆகும்.

No comments: