Wednesday, March 30, 2011

இடதுசாரிகளின் பரிதாபம்!

இடதுசாரிகள் என்ன சொல்லுகிறார்கள்? என்ன வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள்? தி.மு.க. ஆட்சியை அகற்றி விட்டு அதற்குப் பதில் எந்த ஆட்சியை அமர வைக்கப் போகிறார்கள்? 2001 முதல் 2006 வரை தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த ஜெயலலிதா அம்மையாரை அரசுக் கட்டிலில் அமர வைக்கப் போகிறார்கள்.

இந்த 2001-2006 ஜெயலலிதா ஆட்சியின்மீது இந்த இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? கணிப்பு என்ன? அவற்றை ஒரே ஒரு முறை ஆய்வு செய்தால், இந்த இடதுசாரிகளின் இயலா மையை, கருத்துக் குழப்பத்தை, விமர்சனச் சீர்கேட்டை - மலிவான அரசியல் பரிதாபத்தைப் பச்சையாகவே பட்டவர்த்தனமாகவே புரிந்துகொள்ளலாம்.

தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் இந்தக் கம்யூனிஸ்டுகள் என்று நிலப்பிரபுத்துவ மனப்பான்மையில் கேலி செய்தவர் இந்த ஜெயலலிதா அம்மையார்தான்.

எஸ்மா, டெஸ்மா என்ற சட்டங்கள் மூலம் ஒரே உத்தரவில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஆட்சி - அரசு ஊழியர்களை ஆறலைக் கள்வர் போல நள்ளிரவில் கைது செய்து சிறைக் கொட்டடியில் நெட்டித் தள்ளிய ஆட்சி - அத்தகைய ஓர் எதேச்சதிகாரப் போக்குக் கொண்டவரை மீண்டும் முதல் அமைச்சர் சிம்மாசனத் தில் அமர்த்தி அழகு பார்ப்பதுதான் இடதுசாரி களின் நிலைப்பாடா?

பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை - அந்த அடித்தட்டு மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை அந்தப் பணியிலிருந்து சீட்டுக் கிழித்து அனுப்பிய அம்மையார் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; அந்தப் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்த கலைஞர் தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் வர்க்கப் பார்வையா?

இந்தியக் கம்யூனிஸ்டுக் (மார்க்சிஸ்டு) கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதிலும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்திடம் மீண்டும் ஒப்படைக்கக் கட்சி போராடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் ஜெயலலிதா சிறுதாவூரில் ஆக்கிரமித் துள்ள தலித் நிலங்களைப் பறிமுதல் செய்யும் போராட்டம் என்னாயிற்று என்று வாக்காளர்கள் கேட்க மாட்டார்களா? தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க மாட்டார்களா? அந்தப் போராட்டத் தின் அடுத்த கட்டத்தில் இவர்கள் எகிறிக் குதிக் காதது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் செங்குத்தாக எழாதா?

தேர்தல் அறிக்கையில் காணப்படும் இந்த வரிகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கவனத்தில் எட்டாத வரைக்கும் சி.பி.எம். கட்சிக்கு நல்லது.

தேர்தல் அறிக்கையில் சி.பி.எம். குறிப்பிட்டுள்ள ஒரு தகவல்:

வேலையின்மை பெருகி இளைஞர்கள் எதிர் காலம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு மற்றும் பொதுத்துறைப் பணிகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரப்பவும் கட்சி பாடுபடும்; வேலை யில்லாத காலத்திற்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கக் கட்சி வற்புறுத்தும் என்று சி.பி.எம். கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இவர்கள் ஆதரிக்கும் - மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்கத் துடிக்கும் - அந்த அம்மையார் தானே 5 ஆண்டு காலத்திற்கும் வேலை நியமனத்தடை ஆணை பிறப்பித்தவர்? அரசு ஊழியர்களை ஒரே ஆணை என்னும் குண்டாந் தடியால் மண்டையை உடைத்து வீட்டுக்கு அனுப்பியவர். என்.ஜி.ஜி.ஓ. சங்கப் பொறுப்பாளர்கள் சிவ. இளங்கோ, சு. அறிவுக்கரசு போன்றவர்களின் மண்டை பிளக்கப்பட்டது ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக் காலத்தில்தானே - இவை எல்லாம் இடதுசாரிகளுக்கு வசதியாக மறந்து போன சமாச்சாரங்களா?

அதே நேரத்தில் 2006-2011 தி.மு.க. ஆட்சிக் கால கட்டத்தில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 169 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் - 60 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 13 அரசாணைகள் வெளியிடப்பட்டு, 41 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 13 தொழிற் சாலைகள் திறக்கப்பட்டது, இந்தத் தி.மு.க. ஆட்சியில் தானே?

படித்து வேலை வாய்ப்பற்ற 4 லட்சத்து 704 இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கியதும் கலைஞர் ஆட்சிதானே?

இவற்றையெல்லாம் மறந்துவிட்டோ அல்லது மறைத்து விட்டோ - இவற்றிற்கெல்லாம் எதிரான ஓர் ஆட்சியைக் கொண்டு வரத் துடியாய்த் துடிப்பது இடதுசாரிகளுக்கு அழகல்ல!

------------------”விடுதலை” 29-3-2011

No comments: