Wednesday, March 23, 2011

ம.தி.மு.க. - தே.மு.தி.க.பற்றி அ.தி.மு.க. கணித்தது என்ன?


ம.தி.மு.க. - தே.மு.தி.க.பற்றி அ.தி.மு.க. கணித்தது என்ன?

ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துவிட்டது; 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கும் - ம.தி.மு.க.வுக்கும் இடையில் தொகுதி ஒதுக்கீட்டில் ஒரு நெருடல் ஏற்பட்டது. 22 இடங்களை அளிக்க தி.மு.க. முன்வந்தது. 25 இடங்களில் விடாப்பிடியாக நின்றது ம.தி.மு.க.

இந்த நிலையில், 3 இடங்களுக்காக தி.மு.க. கூட்டணி உறவை முறித்துக்கொண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 35 இடங்களில் தேர்லில் போட்டியிட்டது.



2011 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது.

இன்னொரு பக்கத்தில் காங்கிரசுடனும், அ.தி.மு.க. பேரம் பேசிக்கொண்டு இருந்தது.

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதி என்ற நிலை திட்டவட்டமாகத் தெரிந்த நிலையில், அவசர அவசரமாக தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளை அளித்து ஒப்பந்தம் செய்துகொண்டது அ.தி.மு.க.

மற்ற கூட்டணிக் கட்சிகளோ அ.தி.மு.க. தலைமையைச் சந்திக்க ஊசி முனையில் தவம் கிடந்தன.

இந்த நிலையில் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, அதன் கூட்டணிக் கட்சிகளை அதிர்வுப் பள்ளத் தாக்கில் உருட்டித் தள்ளியது அ.தி.மு.க.

சுயமரியாதை எரிமலைக் கட்டுத் தறியில் இருந்து அறுத்துக் கொண்டு கிளம்பிவிட்டது, அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்கு.

சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட விஜயகாந்த் என்ற தன்னேரில்லாத நடிகர் - தலைவரை நோக்கிப் படையெடுத்தனர்.

இனி அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தோள் தட்டினார் தோழர் தா. பாண்டியன்.

மூன்றாவது அணிபற்றிக் கூடி முடிவெடுப்போம் என்று அவர்கள் சொன்ன தொனியில், நெருப்புத் துண்டுகள் சீற்றத்துடன் வெளிவந்தன.

சுயமரியாதையின் வெப்பம் 24 மணிகள்வரைகூட தாக்குப் பிடிக்கவில்லை. ஜில்லிட்டு விட்டது. இடதுசாரிகளில் சி.பி.எம். கூட்டணித் தலைவரைத் தனியாக சந்தித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைவிடக் கூடுதல் இடங்கள் பெறுவதில் மிகக் கவனமாக இருக்கும். இந்த முறையும் அதுதான் நடந்தது - அது எப்படியோ போகட்டும்!

ம.தி.மு.க. கடந்த 5 ஆண்டுகாலமாக அ.தி.மு.க.வின் நகமும் சதையுமாக உடன்கட்டை ஏறும் உணர்வோடு அ.தி.மு.க.வுடன் கைகோத்து இருந்து வந்திருக்கிறது.
தே.மு.தி.க.வுடன் உறவு என்றவுடன் ஜெயலலிதா அம்மையாருக்கு மற்ற கட்சிகள் எல்லாம் கடுகுகளாகத் தென்பட்டுவிட்டன.

இந்த இடத்தில் மலரும் நினைவு பின் திரையில் ஓடக்கூடிய முக்கியமான தகவல் ஒன்று இருக்கிறது.

2006-களில் தே.மு.தி.க.வுக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஜெயலலிதா அம்மையார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

இந்தத் தேர்தலில் தேசிய முற்போக்குத் திராவிட கழகம் சாதித்துவிட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவிகித இடங்களில்தான் வெற்றி பெற்று இருக்கிறது. இதே 3 சதவிகித இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூடப் பெற்றிருக்கிறது (தினத்தந்தி, 24.10.2006, பக்கம் 2) என்று அறிக்கை வெளியிட்டவர்தான் ஜெயலலிதா.
இதே கருத்தை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக அறிக்கை வாயிலாகத் தெரிவித்தவர் அன்றைய அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரான ஓ. பன்னீர்செல்வம்.
நேற்று தோன்றிய தே.மு.தி.க. முன்னுக்கு வந்துவிட்டதாகவும், தனக்கென வாக்கு வங்கியை உருவாக்கிவிட்டதாகவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு கருத்து விதைக்கப்பட்டு வருகிறது - தே.மு.தி.க. வெறும் 3 சதவிகித இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

இதே வெற்றியை ம.தி.மு.க.வும் பெற்றிருக்கிறது என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் என்னவென்றால், தே.மு.தி.க. 100 சதவிகித இடங்களில் போட்டியிட்டது, வெற்றி பெற்றது 3 சதவிகிதமாகும். ஆனால், ம.தி.மு.க.வோ 17.5 சதவிகித இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. 3 சதவிகித இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதே உண்மை. 100 சதவிகிதம் எங்கே? 17.5 சதவிகிதம் எங்கே? அந்த வகையில் பார்த்தால் ம.தி.மு.க.வின் வெற்றி மகத்தான ஒன்றாகும் (தினத்தந்தி, 27.10.2006, பக்கம் 8).

அடடே, அரசியலில்தான் எத்துணை எத்துணை அந்தர்பல்டி - அசகாய குட்டிக்கர்ணம்!
தே.மு.தி.க.வைவிட ம.தி.மு.க.தான் மக்களிடத்தில் செல்வாக்குடைய கட்சி - வாக்கு வங்கிக் கட்சி என்று அறிக்கை வெளியிட்ட அதே அ.தி.மு.க.தான்-

தே.மு.தி.க.வுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து - பூர்ண கும்பம் கொடுத்துத் தோட்டத்துக்கு அழைத்து 41 இடங்களைத் தூக்கிக் கொடுத்துத் துந்துபி முழக்கத்துடன் வழியனுப்பி வைத்திருக்கிறது.

தே.மு.தி.க.வைவிட மக்கள் செல்வாக்கான கட்சி என்று அ.தி.மு.க. தலைமையாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ம.தி.மு.க.வுக்கோ ஆறில் ஆரம்பித்து பன்னிரெண்டில் முற்றுப்புள்ளி வைத்து அவமானப்படுத்தி - தோட்டத்தின் கதவைத் தடார் என்ற சத்தத்துடன் சாத்திக் கொண்டது.

அரசியலில் ஆயிரம் ஆயிரம் வேறுபாடுகளைக் கூட கலைஞர் அவர்களிடத்தில் காணக் கூடும்.

அதேநேரத்தில், அடுத்தவரை, அடுத்த கட்சியினரை இப்படியெல்லாம் அவமதித்தார் என்று ஒரு விரலை மடக்க முடியுமா?

அ.தி.மு.க.வில் இப்பொழுது நேசக்கரம் நீட்டியுள்ள கூட்டணிக் கட்சிகள் எத்தனை நாள்களுக்கு ஜெயலலிதா அம்மையாருடன் தாக்குப் பிடிக்கும்?
நாடு அறிந்த ஒன்றுதானே!

---------------- கருஞ்சட்டை "விடுதலை” 23-3-2011

No comments: