Showing posts with label பெரியார்-சுயமரியாதை-கலைஞர். Show all posts
Showing posts with label பெரியார்-சுயமரியாதை-கலைஞர். Show all posts

Thursday, February 28, 2008

பெரியாரின் பரம்பரையினர் நாம்

சுயநலம் என்பது தன்னுடைய நலம். சுயமரியாதை - தன்னுடைய மரியாதை. அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தன் நலத்தைக் காப்பாற்றக்கூடாது, மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மரியாதையைக் காப்பாற்றினால் தான் அவன் பொதுநலவாதியாக இருக்க முடியும். மரியாதையை விட்டு விட்டு, நலத்தைக் காப்பாற்றிக் கொள்கிறவன் சுயமரியாதைக்காரனாக இருக்க முடியாது. எனவேதான் சுயமரியாதை என்பது வேறு, சுயநலம் என்பது வேறு, இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொண்டால், சுயநலத்தை விடுகின்ற மனிதனால்தான் சுயமரியாதையோடு வாழ முடியும். சுயமரியாதை உள்ளவன்தான் வீரனாகச் சாவான்; சுயமரியாதையை இழந்தவன் கோழையாகத்தான் சாவான். நீ கோழையாக இருக்க விரும்புகிறாயா? வீரனாகச் சாக விரும்புகிறாயா? என்று கேட்டால், உண்மையான தமிழன் நான் வீரனாக சாக விரும்புகிறேன் என்று சொல்லுவான். அவன்தான் சுயமரியாதைக் காரன். நான் கோழையாக இருந்தாலும் பரவாயில்லை, நான் வாழ்ந்தால் போதும் என்று சொல்கிறவன் சுயமரியாதைக்காரன் அல்ல. இதைத்தான் நம்முடைய நெஞ்சிலே ஆணித்தரமாகப் பதிய வைத்தார் தந்தை பெரியார். நம்முடைய குருநாதர் அவர். நம்முடைய ஆசிரியர் அவர். நம்முடைய ஆசான் அவர். தமிழ்நாட்டின் பண்பாட்டை, வீரத்தை, வைராக்கியத்தை, நெஞ்சுரத்தை நமக்குக் கற்பித்துத் தந்தவர். நம்முடைய ஊனோடும், உயிரோடும், உணர்ச்சியோடும் கலந்து ஊட்டியவர். அப்படிப்பட்ட பெரியாரின் பரம்பரையினர் நாம். பெரியாருடைய வழித் தோன்றல்கள் நாம். நாம் யாருக்கும் தலைவணங்க மாட்டோம். நாம் வீரர்களாக வாழ்வோம். தீரர்களாக வாழ்வோம். மானம் உள்ள மனிதர்களாக வாழ்வோம். மானத்தோடு வாழ்வோம். மரியாதையோடு வாழ்வோம். சுயமரியாதையோடு வாழ்வோம். சுயமரி யாதையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்போம். அப்படிப்பட்ட ஒரு உணர்வை, அப்படிப்பட்ட ஒரு சூளுரையை இந்த நாளில் ஏற்போம்.

-------டாக்டர் கலைஞர் (முரசொலி 23.2.2008 நாளிதழில் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து)